அறிவுத் திருட்டு
(ஏமாற்றப்பட்ட பெண் அறிவியலாளர்கள்)
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்
தாய்வழிச்சமூகம் தந்தைவழிச்சமூகமாக மாறியபிறகு, உலகம் எங்கிலும், ஆண்கள் பெண்களை அடக்கி ஆள ஆரம்பித்தார்கள். பெண்களை ஒரு பண்டமாகவேப் பார்க்க ஆரம்பித்த ஆணாதிக்கத்தின் விளைவேப் பெண்ணடிமைத்தனம். கல்வி, பொருளாதாரத் தற்சார்பு, சொத்துரிமை, குடும்பத்தில் விருப்பு வெறுப்புகள் என்று அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு மறுக்கப்பட்டன.
பெண்களால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பெண்விடுதலைப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் கல்விபெற வாய்ப்பேற்பட்டது. கல்வி கிடைத்த பிறகும், அக்கல்வி காரணமான வேலைகள் கிடைப்பதில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அவற்றைத் தாண்டிவந்த சில பெண்கள், அறிவியல் உலகில் நிகழ்த்திய சாதனைகளை, கொஞ்சம்கூட கூச்சமே இன்றி, ஆண்கள் திருடி, வெளியிட்டு அவர்களது சாதனையாக்கிக் கொண்ட வேதனை தரும் நிகழ்வுகள் பல உண்டு. அவற்றில், மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமான எட்டுப் பெண்சாதனையாளர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள், என்பதை மட்டுமே இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
மேரி க்யூரி (Marie Curie) மற்றும் ஜேன் குடோ (Jane Goodall) ஆகிய இருவரும், அவரவர் துறையில் சாதனையளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டப் பெண்கள். இவர்கள் விதிவிலக்கானவர்கள். இவ்விரு பெண் சாதனையாளர்களிலும், நோபல் பரிசு பெற்றவரான மேரி க்யூரி ஒரு பெண் என்பதனால் சக ஆண் அறிவியலாளர்களால் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதும், அயின்ஸ்டைன் அவரது பக்கம் நின்று அவருக்கு ஆறுதல் கூறியதும் அவ்வளவாக அறியப்படாத வரலாறு.
ஏலிஸ் பால் (Alice Ball)
1892-இல் சீட்டிலில் (Seattle, Washinton) பிறந்த ஏலிஸ் பால், ஹவாய் (Hawaii) பல்கலைக்கழகத்தில் வேதியல் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்று, பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும்பெற்ற முதல் அமெரிக்க கருப்பினப் பெண்மணி.
சால்மூங்ரா என்னும் எண்ணை (Chaulmoogra oil ) அந்த காலகட்டத்தில், தொழுநோய் தீர்க்கும் மருந்தாகப்பயன்பட்டது. ஆனாலும், அந்த எண்ணையின் கட்டமைப்பு (structure) காரணமாக, அதனை நேரடியாகப் பயன்படுத்தமுடியாமல் இருந்தது. ஏலிஸ் பால், அந்த எண்ணையில் இருந்த உறுத்தும் மூலக்கூறுகளை நீக்கி, ஊசிவழியே உடலில் ஏற்றும் வகையில் அந்த எண்ணையை மாற்றியமைத்தார்.. திடீரென வந்த அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு ஏலிஸ் பால் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 24 மட்டுமே.
அவர் இறந்த பிறகு, அவரது அந்தக் கண்டுபிடிப்பைத் திருடி, தானே கண்டுபிடித்ததாகச் சொல்லி வேறு ஒரு ஆண் அறிவியலாளர் புகழ் தேடிக்கொண்டார். இந்த உண்மையை, அறிவியல் உலகம் அறிவதற்கு 90 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 90 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹவாய்ப் பல்கலைகழகம் அந்தப் பெருமையை ஏலிஸ் பாலுக்குக் கொடுத்ததோடு, பிப்ரவரி 29-ஐ ‘ஏலிஸ் பால் நாளாகவும்’ (Alice Ball Day) அறிவித்தது. அவர் கண்டுபிடித்த அந்த மருத்துவமுறை, அவர் பெயரால், ‘பால் முறை’ (Ball Method) என்றும் அழைக்கப்படலாயிற்று
மரியா மெரியன் (Mariya Merian)
1647-இல் ஜெர்மனியில் பிறந்தவர். பறக்கும் பூச்சிகளைப் (insects) பற்றி அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக, பலருக்கும் அப்போது ஒவ்வாமையை ஏற்படுத்திய வண்ணத்துப்பூச்சிகளை ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி கவனமாகக் கவனித்து ஆய்வுசெய்து, பல பக்கங்கள் அவற்றைப்பற்றிய குறிப்புகளை எழுதிவைத்தார். என்றாலும்,. மெரியன் தனது ஆய்வு முடிவுகளை ஜெர்மன் மொழியில் எழுதியிருந்தார் என்ற காரணத்தினால், அவை நிராகரிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், இலத்தின்.மொழிதான் அறிவியல் மொழியாக இருந்தது, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட நியூட்டன் தனது ‘ப்ரின்சிபியா மேதமேடிகா’ வை (Principia Mathematica – 1687) இலத்தின் மொழியில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
1699-இல் மரியா மெரியன் தென்-அமெரிக்காவிற்குச் சென்று, அங்குள்ள பூச்சிகளையும், தாவரங்களையும் கண்டு, அவதானித்து, ஆய்ந்தறிந்து குறிப்புகளைப் பதிவுசெய்தார். அவற்றில் பல பூச்சிகளும், தாவரங்களும் அதுவரை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. அந்தவகையில், மெரியன் ஒரு அதிர்ச்சியை அறிவியல் உலகில் ஏற்படுத்தினார்.
பின்னாளில், அவர் தனது கண்டுபிடிப்புகளை, ‘Metamorphosis Insectorum Surinamensium என்று வெளியிட்டார்.. மெரியனின் இயற்கை உலகைப்பற்றிய அவதானிப்புகளும், ஓவியங்களும், அவரை ‘பூச்சியியலில்’ (entomology) முன்னோடியாக ஒப்புக்கொள்ளவைத்தது.
மேரி அன்னிங் (Mary Anning)
1799-இல் இங்கிலாந்தில் பிறந்தவர். அவரது சிறு வயதில், குடும்பத்திற்கு வருமானம்வேண்டி, ‘உயிரி-எச்சங்கள்’ (fossils) தேடி எடுக்கும் பெண்ணாக இருந்தார். அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மலை உச்சிகளில், பல எச்சங்களைத் தேடிக்கண்டடைந்தபோது, அவருக்கு வயது 12.
டினோசர் காலத்தில் இருந்து அழிந்துபோன, இரண்டு நீர்வாழ் ஊர்வன வகையைச் சேர்ந்த எலும்பு எச்சங்களை மேரி கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புகள், இயற்கை பற்றிய அறிவியலாளர்களின் வரலாற்றுப் பார்வையை மாற்றியமைத்தது. ஒரு விதத்தில், மேரியின் கண்டுபிடிப்புகள், சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு முன்னோடியாக இருந்தது என்றும் சொல்லலாம்.
வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களின் உடற்கூறு பற்றியும், எச்சங்கள் பற்றியும் ஐரோப்பா முழுவதும் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் மேரியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். ஆனாலும், மேரி அன்னிங் பெண் என்னும் ஒரு காரணத்தினால் மட்டுமே, கல்விக்கூடங்களில் அறிவியல் படிக்கவோ, லண்டன் நிலவியல் கூட்டமைப்பில் (London Biological Society) உறுப்பினராக் சேரவோ அனுமதிக்கப்படவில்லை.
இதனை, மேரியே மிகவும் மனவேதனையுடன் பதிவுசெய்கிறார். “இந்த உலகம் என்னை மிகவும் கொடூரமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதன் விளைவாக, எல்லோரையும் சந்தேகிக்க வைத்துவிட்டது” என்று பதிவுசெய்கிறார்.( “The world has used me so unkindly, I fear it has made me suspicious of everyone,”)
1847-இல் மேரி மரணமடைந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் அறிவியல் உலகில் சாதனையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
நெட்டி மரியா ஸ்டீவன்ஸ் (Nettie Maria Stevens)
1861-இல் அமெரிக்காவில் பிறந்தவர், மரபணு ஆய்வாளர் (geneticist). வண்டுகளின் (beetles) வாழ்வுமுறையைப் பற்றிய ஆய்வில் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தவர்.
1905-இல் ஆண் வண்டுகள் இரண்டுவிதமான விந்தணுக்களை (sperm) உற்பத்தி செய்வதாகவும், அவற்றில் ஒன்று பெரிய குரோமசோம்களையும் (Chromosomes), மற்றது சிறிய குரோமசோம்களையும் கொண்டிருப்பதாகவும் கண்டுபிடித்தார். பெண்வண்டின் கரு-முட்டையுடன் சேரும் பெரிய குரோமசோம் பெண் குஞ்சையும், சிறிய குரோமசோம் ஆண்குஞ்சையும் உற்பத்திசெய்வதாகக் கண்டுபிடித்தார்.
இந்த அவதானிப்பை மரியா ஸ்டீவன்ஸ் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பொருத்திப்பார்க்கும் X-Y முறையை (X-Y determination system) உருவாக்கினார். இவற்றில் X-குரோமசோம் பெரியது, Y-குரோமசோம் சிறியது. இரண்டு பெரிய குரோமசோம்கள் (XX) இணந்தால் பெண் குழந்தையும், ஒரு பெரிய குரோமசோமுடன், ஒரு சிறிய குரோமசோம் (XY) இணைந்தால் ஆண் குழந்தையும் உருவாகுவதாகக் கண்டுபிடித்தார்.
அதே காலகட்டத்தில், எட்மண்ட் பீச்சர் வில்சன் (Edmund Beecher Wilson) என்பவரும் அப்படி ஒரு கொள்கையைக் கண்டடைந்தார். பெண் என்னும் ஒரே காரணத்தினால், மரியா ஸ்டீவன்ஸ் புறக்கணிக்கப்பட்டு, அந்தக் கண்டுபிடிப்பிற்கான முழுப் பெருமையும் வில்சன் என்னும் ஆண் ஆய்வாளருக்கே வழங்கப்பட்டது. மரியா ஸ்டீவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி நேர் செய்யப்படவே இல்லை.
ஹென்ரிட்டா லீவிட் (Henrietta Leavitt)
1868-இல் அமெரிக்காவின் மெசாச்சூசெட்சில் (Massachusetts) பிறந்தவர். ரெட்கிளிஃப் கல்லூரி (Redcliff College) மாணவர். விண்வெளி ஆய்வாளர். ஹார்வார்ட் கல்லூரி விண்-ஆய்வகத்தில் (Harvard College Observatory), வாடகைக்கு எடுக்கப்பட்டுப் பணியமர்த்தப்பட்டவர். விண்வெளித் தரவுகளை ஆய்வுசெய்வதுதான் அவரது பணி. அவரது துறைத்தலைவர் எட்வர்ட் சால்ஸ் பிக்கெரிங் (Edward Charles Pickering) , குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிச்செறிவு வருவதும், இல்லாமல் போவதுமாக இருக்கும் விண்மீன்களைப்பற்றிய தரவுகளை அளந்து பதிவுசெய்யுமாறு பணித்திருந்தார்.
2,400 விண்மீன்களைப் பட்டியலிட்ட பிறகு, பொலிவிற்கும் (luminosity), குறிப்பிட்ட மின்னும் விண்மீன்களுக்கும் (stars) இடையில் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தார். இது விண்வெளி ஆய்வுத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
லீவிட் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, லீவிட்டின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி அண்டம் தொடர்ந்து விரிவடைந்துகொண்டிருக்கிறது என்னும் கோட்பாட்டை (expanding universe) , ‘ஹபில் விதி’ (Hubble’s Law) என்று வெளியிட்டார், விண்ஆய்வாளர் எட்வின் ஹபில் (Edwin Hubble). லீவிட் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
லைஸ் மெய்ட்னர் (Lise Meitner)
1878-இல் வியன்னா-வில் பிறந்தவர். ஜெர்மனியில், கல்விப்புலத்தில் பணி அடையாளம்பெற்ற முதல் பெண்மணி. இயற்பியலாளர். அவரது பெரும்பாலான பணி ஜெர்மனியில் நிகழ்ந்தது. ஜெர்மனியில், ஆட்டோ ஹான் (Otto Hahn) மற்றும் ஸ்ட்ராஸ்மேன் என்னும் அறிவியலாளர்களுடன் இணைந்து அணுக்கரு ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார். கனமான இயற்கைத் தனிமமான யுரேனியும் அணுக்கருவை நியூட்ரானால் தாக்கி சோதனை செய்தபோது, அது பேரியம் மற்று கிரப்டான் என்னும் இரண்டு அணுக்கருக்களாக உடைந்தது.
அந்நிகழ்வில் உருவான ஆற்றலைக் கணக்கிட்டு, அந்த நிகழ்விற்கு, ‘அணுக்கருப் பிளவு’ (Nuclear fission) என்று பெயர் வைத்தவர் லைஸ் மெய்ட்னர்.
1930-இல், ஹிட்லரின் யூத எதிர்ப்பு காரணமாக, மதிப்பு மிகுந்த பல கல்வி நிலைகளை இழந்தார். இறுதியில், உயிர் பிழைக்க, ஸ்வீடன் நாட்டுக்குத் தப்பிச் சென்று, இரட்டைக் குடியுரிமை பெற்றார்.
1944-இல், அணுக்கரு பிளவு கண்டுபிடிப்பிற்காக, ஆட்டோ ஹானுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு பெண் என்பதால், மெய்ட்னர் பெயரை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள். இன்றுவரை அது அறிவியலாலர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது
ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (Rosalind Franklin)
1920-இல் இலண்டனில் பிறந்தவர். வேதியியலாளர், எக்ஸ்-கதிர் படிக ஆய்வாளர் (X-ray crystllographer), சிறந்த மூலக்கூறு உயிரியலாளர்.(Leading molecular biologist) மரபணுக்கட்டமைப்பைக் (structure of DNA) கண்டுபிடித்தவர்.
1951-இல் ஃப்ராங்ளின், இலண்டனில் உள்ள கிங் கல்லூரியில் (King’s College), உதவி ஆய்வாளராகப் (Research Associate) பணியில் சேர்ந்தார். மரபணு ஆய்வில், எக்ஸ்-கதிர் படிகத்தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தினார். ஓராண்டிற்குப் பிறகு, மரபணுவின் கட்டமைப்பின் பிம்பத்தைப் (image of DNA) பதிவு செய்தார். அதனை அவர் நிழற்படம் -51 (Photo-51) என்று அடையாளப்படுத்தினார்.
கிங் கல்லூரியில், ரோசலிண்ட் ஃப்ராங்க்லினுடன் பணியாற்றிக்கொண்டிருந்த சக ஆண் ஆய்வாளர் மாரிஸ் வில்கின்ஸ் ( Maurice Wilkins) என்பவருடன் அடிக்கடி வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அதன் காரணமாக, கிங்க் கல்லூரியிலிருந்து விலகி, பிர்க்பெக் (Birkberk College) கல்லூரியில் பணியில் சேரவேண்டியதாகிவிட்டது.
இந்தச்சூழலில்,கொஞ்சம்கூட மனசாட்சியற்ற மாரிஸ் வில்கின்ஸ், ரோசலின் ஃப்ராங்க்ளினின் அரிய கண்டுபிடிப்பான மரபணு படம், போட்டோ-51-ஐத் திருடி, ஃப்ரான்சிஸ் க்ரிக் (Francis Crick) மற்றும் ஜேம்ஸ் வாட்சன் (James Watson) ஆகியோரிடம் பகிர்ந்துவிட்டார். அவர்கள் 1953-இல் மரபணுவின் ‘இரட்டை ஹெலிக்ஸ் கொள்கை’ யை வெளியிட்டனர்.
அதனைக் கண்டு பதட்டமடைந்த ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின், தனது கையெழுத்துப் பிரதிகளுடன் முறையிட்டார். ஆனாலும், அவரது முறையீடு நிராகரிக்கப்பட்டது. அதற்கு அப்போது நிலவிய பாலியல் வேற்றுமை முதன்மையான காரணமாக இருந்தது.
1958-இல் கர்ப்பப்பைப் புற்றுநோய் காரணமாக ரோசலிண்ட் மரணமடைந்தார். அவரது கண்டுபிடிப்பு திருடப்பட்டது என்னும் உண்மை தெரியாமலேயே அந்த அப்பாவிப் பெண்-அறிவியலாளர் மரணமடைந்தார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கண்டுபிடிப்பிற்காக, வில்கின்ஸ், க்ரிக், மற்றும் வாட்சன் ஆகிய மூவருக்கும் மரபணுக் கட்டமைப்புக் கொள்கையைக் (Double helix theory of DNA) கண்டுபிடித்தமைக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால், ரோசலிண்ட் மரணமடைந்த பிறகும், வில்கின்ஸ், ரோசலிண்ட் மிகை உணர்ச்சிக்கு ஆட்படுபவர் என்றும் அவர் ஒரு ‘வெறுப்பாளர்’ (antogonist) என்றும் பொதுவெளியில் குறைகூறினார்.
எஸ்தர் லெடெர்பெர்க்: (Esther Lederberk)
1922-இல் அமெரிக்காவில் பிறந்த பெண் நுண்-உயிரியியலாளர் (microbiologist) மரபணுத்துறையில் (genetics) சாதனைகள் நிகழ்த்தியவர். பாக்டீரியத்தொற்று லேம்ப்டாவைக் (bacterial virus – λ ) கண்டறிந்தவர்.
இவருக்குப் பகையாக வந்தது, அவரது முதல் கணவர் ஜோசுவா லெடர்பெர்க். (Joshuva Lederberk) இருவரும் கூட்டாக செய்த ஆய்வுகளுக்கும், எஸ்தர் தனித்து செய்த ஆய்வுகளுக்கும், கணவர் ஜோசுவா லெடர்பெர்க்கே உரிமைகோரி, பெருமையும் அடைந்தார்.
எஸ்தருக்குக் கூடுதல் கல்வித்தகுதி இருந்தபோதும், அவர் அன்று அமெரிக்காவின் அறிவியல் உலகில் நிலவிய பாலியல் கீழ்மைக்குத் தப்பவில்லை. ஒரே கல்வி நிறுவனத்தில், எஸ்தர் பணியிறக்கம் செய்யப்படுகிறார். ஆனால் அவரது கணவர் ஜோசுவா பதவி உயர்வு பெறுகிறார். இறுதியாக மரபணுத்துறையின் தலைமைப் பொறுப்பும் ஜோஸ்வாவிற்குக் கிடைக்கிறது.
பாலியல்பேதக் கொடுமையின் உச்சமாக, ஜோசுவாவும், எஸ்தரும் இணைந்து கூட்டாக செய்த ஆய்விற்கு , 1958-இல் கணவர் ஜோசுவா லெடர்பெர்க்கிற்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டது
“திருமணம் செய்துகொண்டுவிட்டால் அவன், அவளை நயமாக மரணமடையச் செய்கிறான். அவளுடைய முழுச்சொத்து, அவளுடைய சம்பளம் என்று அனைத்தையும் தனதாக்கிக்கொள்கிறான்” என்று ரோசலிண்ட் மைல்ஸ் (Rosalind Miles) சொல்வது இங்கே முழுமையாகப் பொருந்திப் போகிறது.
“மனிதகுலத்தின் வரலாறு என்பதே, பெண்ணின் உரிமைகளைப்பறித்து, அவளுக்கு மீண்டும்மீண்டும் காயங்கள் ஏற்படுத்திய ஆணின் கொடுங்கோன்மையை நிறுவுவதே ஆகும்.” என்று ரோசலிண்ட் மைல்ஸ் கூறுவது எத்தனை வலி மிகுந்த உண்மை என்பதை இந்த எட்டுப் பெண்-ஆய்வாளர்களின் சோக வரலாறு நமக்கு உணர்த்துகிறது.