அணையாப் பெருநெருப்பின் ஐம்பதாண்டுகள்!
இரா.மோகன்ராஜன்
அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு- கீழ்வெண்மணிக் குறிப்புக்கள் – நூல் மதிப்புரை
நிலம் என்பது வெறும் நிலமல்ல சமூக, மொழி, இனம், சிந்தனை, பண்பாட்டின் பிரதீயிடு என்றுதான் சமூக வரலாற்றியலறிஞர்கள் வரையறுக்கிறார்கள். ஆனால் நிலம் என்பது சகல அதிகாரங்களையும் நுண்மணற் துகள்களாகக் கொண்டது என்பதே மண்ணின் மீதான இதுவரையிலான அக, புற வரலாறுகள் நமக்குச் சொல்கின்றன. நிலம் உடையவன் அதிகாரமுடையவனாகிறான். அதிகாரம் மூலதனத்திலிருந்து வருகிறது. அதன் உபரியிலிருந்து வருகிறது. நிலம் உற்பத்தியின் மூலதனமாக இருக்கிறது எனவே மண் அதிகாரமுடையதாகிறது . நிலத்தின் உடைமையாளன் அதிகாரமுடையவனாகிறான். நிலம் என்பது நிலமாகத்தான் இருக்கிறது. மனிதன் அதை உடைமையாக்கும் போதுதான் சகல அரசியலும் தொடங்குகிறது. மண்ணின் வரலாறு என்பதும், மனிதனின் வரலாறு என்பதும் வேறு வேறு அல்ல. மண்ணுக்கான மனிதனின் போராட்டமே போர்களாக விரிகின்றன.
மண்ணை மனிதனும், மண் மனிதனையும் மீட்கும் இடையறாப் போராட்டமே வரலாறெனப்படுகிறது. மண் உடைமையாளன் மன்னன் ஆனான். மண் மதிப்புமிக்கதாகும் போது மன்னன் மதிப்புடையவன் ஆகிறான். மண் உற்பத்தியால் மதிப்படைகிறது. உற்பத்தி மனிதனால் நடக்கிறது. மதிப்பேற்றப்பட்ட மண்ணும், அதற்கு உரிமையுடைய மனிதனும் மதிப்பு மிக்கவர்களாகிறார்கள். மறுதலையாக மண்ணின் மீது உரிமையற்ற மனிதன் மதிப்பற்றவனாகிறான்.
நிலமற்றவன், நிலத்தின் மீது உரிமையற்றவன் தன் வாழ்வின் மீதும், இருப்பின் மீதும் உரிமையற்றவனாகிறான். உரிமை என்பது உடைமையிலிருந்து வருகிறது. எது உடைமையோ, அதுவே உரிமையாகிறது. உடைமை இல்லாத ஒன்றை சொந்தம் கொண்டாடுவது, உரிமை கொண்டாடுவது முடியாது. எனவே நிலமற்றவன் தன் மீதே உரிமையற்றவனாகிறான். தன்மீது உரிமையற்றவன் உழைப்பின் மீதும் உரிமையற்றவனாகிறான். உற்பத்தியின் மீதும் உரிமைற்றவனாகிறான். உற்பத்தியின் மீது உரிமையற்றவன் உபரியின் மீது உரிமை கொண்டாட முடிவதில்லை. நிலத்தின் உபரி மூலதனமாகிறது. மூலதனம் அதிகாரத்தை உற்பத்திச் செய்கிறது. ஒரு வகையில் நிலம் அதிகாரத்தின் பிறப்பிடமாக இருக்கிறது. அதிகாரம், நிலமற்றவனை அந்நிலத்திலேயே சிறைவைக்கிறது. சிறைப்பட்டவனிடம் இழப்பதற்கு ஏதுமிருப்பதில்லை கைவிலங்குகளைத் தவிர.
காலந்தோறும் மனிதன் நிலத்தையும், நிலம் மனிதனையும் எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்து வந்திருக்கிறது?. நிலம் மனிதன் மேலும், மனிதன் நிலத்தின் மீதும் செலுத்திவந்த அதிகார அரசியல், முக்கியமாக இந்தியத் துணைக் கண்டத்தில் நிலத்தின் வரலாறு என்ன?, அதன் அரசியல், பொருளியல், சமூக முக்கியத்துவம் என்ன? என்பதுடன் நிலமற்ற மனிதர் மேல் நிலவுடைமைச் சமூக மனிதர்கள் செலுத்திவந்த அதிகாரத்தின் உச்சமானக் கீழத் தஞ்சை மாவட்டம் வெண்மணி எரியூட்டு நிகழ்வில் 44 உழுகுடியினர் படுகொலை செய்யப்பட்டது. இந்தப் படுகொலை நிகழ்வின் வெம்மை தணியாத 50 ஆண்டுகளை நினைவு கூறும் விதமாக எழுத்தாளர் செ.சண்முசுந்தரம் எழுதியுள்ள அரைநூற்றாண்டுக் கொடுங்கனவு கீழ்வெண்மணிக் குறிப்புக்கள் நூல் இன்றுள்ள சூழலில் மீள் முக்கியத்துவம் பெறுகிறது.
கீழத் தஞ்சை என்று அழைக்கப்படும் தஞ்சை, திருவாருர், நாகை, மாவட்டங்கள் அடங்கியப் பகுதிகளில் உழவர்கள், நிலக்கூலிகள், குத்தகைத் தாரர்கள், இவர்கள் மீது நிலவுடைமையாளர்களின் மனிதத் தன்மையற்ற அடக்கு முறைகளுக்கும், சாதி வேறுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அமைப்பு வழியில் திரண்டப் போராட்டங்கள் எப்படி அவர்களை விடுவித்தது என்பதையும், அந்தப் போராட்டத்திற்கு அவர்கள் கொடுத்த குருதிதோய்ந்த விலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும். உழுகுடிகளின் எதிர்ப்பினை அடக்கியொடுக்க நிலவுடைமையாளர்கள் 44 உழுகுடிகளை ஒரே குடிசைக்குள் வைத்து எரியூட்டிய நிகழ்வு, யாரிடமிருந்து யார் விடுதலை பெற வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் அரை நூற்றாண்டு கடந்துவிட்ட அந்நிகழ்வுகளை செ.சண்முகசுந்தரத்தின் எழுத்து சூடு குறையாமல் பதிவு செய்கிறது.
உழவைத் தலையாயதாகக் கொண்ட காவிரி டெல்டாப் பகுதி வளம் கொழித்த உலகின் செழுமையான ஆற்று நாகரிகங்களைப் போலவே எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தது. அங்கெல்லாம் உபரி உற்பத்தி எப்படி செல்வங்களைக் கொண்டு வந்ததோ, அவ்வாறே அதற்குச் சற்றும் குறையாத நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமை முறை இந்தியாவின் கடைக்கோடி காவிரி டெல்டாப் பகுதியிலும் நிலவியது. இன்னும் சற்றுக் கூடுதலாக இந்துத்துவம் விதைத்த அழியாக் களையாக நிலத்தில் ஊறியச் சாதிப்படி நிலையுடன் அதற்கேயுரியப் பண்புகளுடன் வீரியமாக இருந்தது என்பதை இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடக்குமுறையின் சமகாலத்திலேயே அறியாதவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் என்பதை டெல்டா உழுகுடிகளை ஒருங்கிணைத்துப் போராடிய இடதுசாரிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், அன்றையக் காவிரி விவசாயச் சங்கத்தின்(கிசான் சபா) தலைவராகவுமிருந்த பி.சீனிவாசராவ் தனது ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பதென்ன?’ என்ற நூலில் பதிவு செய்திருப்பார்.
“கதிர்கள் பாரம்தாங்காமல் நெளிந்து, குலுங்கிக் கொண்டிருக்கும் செந்நெல் வயல்களை அங்கே காணலாம். மனதிற்கு மகிழ்ச்சியூட்டி, கற்பனை அலைகளைக் கிளப்பிக் கொண்டேயிருக்கும் செழிப்பு மிக்க தென்னந் தோப்புக்களையும் தீஞ்சுவை மிக்க மாஞ்சோலைகளையும், தஞ்சை ஜில்லாவெங்கும் காணலாம். சாலை வழிகளில் மைல் கணக்கில் நடந்து போங்கள் எங்கும் பசுமை பரந்திருப்பதைக் கண்டு உங்கள் கண்கள் மலரும், பசும் வயல்களிலிருந்து புதிது புதிதாய்ப் பிறந்து வரும் இன்னிளங்காற்று உங்கள் மீது மோதுகிறபோது உங்கள் உள்ளம் பூரிக்கும். அப்பொழுது நீங்கள் நினைப்பீர்கள், இன்பம் கொஞ்சும் இந்த ஜில்லாவில் வாழும் மக்கள் பாக்கியசாலிகள், அவர்களுடைய வீடுகளில் தன-தானிய லெஷ்மிகள் தாண்டவமாடுவார்கள், பசி பட்டினி என்ற நினைப்பே இல்லாமல் உல்லாசமாய் வாழ்வார்கள். என்று தஞ்சை ஜில்லாவில் நுழைந்த வெளி ஜில்லா புதுமனிதர்கள் நினைத்துக் கொள்வார்கள்(தஞ்சைஜில்லாவில் நடப்பதென்ன-பி.சீனிவாசராவ் பக்-7)
அதிகாரத்துடன் இணைந்த நிலம் இந்தியாவில் எப்படி அதிகாரவர்க்கத்தின் துணையுடன் வழிவழியாக ஒரு சிலருக்கே கைமாறி வந்திருக்கிறது என்பதை நூலில் ‘நிலம்’ என்கிற தலைப்பில் விவரிக்கப்பட்டிருப்பதில் ஆசிரியரின் தேடல் தாகத்தையும், அதே சமயம் கடுமையான உழைப்பையும் கோரியுள்ளதைப் பார்க்க முடிகிறது. நிலவுடைமையின் அத்தனைக் கொடுமைகளும் அரங்கேறிய தஞ்சை ஜில்லாவின் அன்றைய நிலமற்ற உழைக்கும் கூலிகள், நிலைப்பற்றி பி.சீனிவாசராவ் விவரிக்கிறார். நூலிலும் கூட அது எடுத்தாளப்பட்டிருக்கிறது. ராவ் இப்படி எழுதுகிறார்,
“‘பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே. இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால்1/2 மரக்கால் நெல்தான் அளந்து கொடுப்பர். மிராசுதார்களால் (நிலவுடைமையாளர்) சமீபத்தில்தான் இவர்களுக்குக் கூலி உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு பண்ணையாள் குடும்பம் முழுவதற்கும் வருசத்தில் மொத்த வரும்படி, 160முதல் 170 வரைக் கிடைக்கிறது. இது குடும்பத்தின் மொத்த வருமானம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த 160 ரூபாய்க்காக வருசம் முழுவதும் இந்த பண்ணையாட்களும் அவர்களது மனைவிமார்களும், குழந்தைகளும் பாடுபட வேண்டுமென்பதையும் மறந்துவிடாதீர்கள். ஐந்து வயது நிரம்பாத பச்சிளங்குழந்தைகள், மிராசுதார்களின் மாடுகளை மேய்க்க வேண்டுமென்பதையும் மறந்துவிடாதீர்கள்..(பக்-10)
“..பண்ணையாட்களும், அவர்களுடைய மனைவி மக்களும் நிலத்துடன் பிணைக்கப்பட்டுப் பிறப்பிலேயே அடிமைகளாக இருக்க வேண்டியுள்ளது. பண்ணையாட்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் தினமும் ஒரு வேளைதான் சுடுசோறு கிடைக்கும். சுடுசோறு என்று சொல்வதைவிடச் சுடு கஞ்சி என்றுதான் சொல்வதே பொருத்தம். பருப்பு இல்லாமல் சொத்தைக் கத்திரிக்காயைப் போட்டுக், கழுநீர்த் தண்ணீர் போல தயாரித்திருப்பார்கள். அதற்கு சாம்பார் என்று பெயரிடப்பட்டிருக்கும். மற்ற இரண்டு வேளைகளிலும் பழைய கஞ்சியும், உப்புப்போட்ட நீராகாரமும் தான் சாப்பாடு. எல்லோரும் இறைச்சிச் சாப்பிடுபவர்கள்தான். ஆனால் இறைச்சி வாங்க அவர்களுக்கு சக்தியில்லை. ஏன் மாதத்திற்கு ஒரு தடவை கருவாடு வாங்கக் கூட சக்தியில்லை. அப்படியிருக்க மாமிசத்தைப் பற்றி பேசுவானேன். வருசத்தில் ஒரிரு தடவை தீபாவளியன்றாவது இறைச்சி சாப்பிட்டுவிட்டால் அது அவர்களுக்கு ஆடம்பரமிக்க, ஆர்ப்பாட்டமிக்க விருந்தாகும்.”
“மிராசுதார்கள் எங்களை சைவமாக்கிவிட்டார்கள்!” என்று பண்ணையாட்கள் தமாசாகச் சொல்வதுண்டு!- என்று அவர்களது குடும்ப நிலையை விவரிக்கும் சீனிவாசராவ் ஆண்டைகளால் அக்கூலித் தொழிலாளர் படும் வாதைகளை விவரிக்கும் போது வளம் கொழிக்கும் ஒர் திறந்த வெளிச்சிறைச் சாலைதான் காவிரி டெல்டா என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கும்.
தமது பொருளாதாரத்தைக் காவிரி டெல்டாப் பண்ணைகளுக் குள்ளாகவே சுழலும் வட்டத்தை இந்த நிலவுடைமையாளர்கள் கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் ஆதிகச்சாதிகளைச் சார்ந்தவாகளாகவே இருந்தார்கள். இவர்களிடம் நிலமற்ற கூலி உழவர்களும், குத்தகைதாரர்களும், சிறு மிராசுகளுமே அடிமைப்பட்டுக் கிடந்தனர். அவர்களது உழைப்பைச் சுரண்டி ஏகபோக சுகவாழ்வை ஆண்டைகள் அனுபவித்து வந்தார்கள், இவர்களுக்கு வெள்ளையர் அரசு தொடங்கிப் பின்னர் வந்த இந்திய-தமிழக அரசுகளும் ஆதரித்து வந்ததுதான் கொடுமை.
நிலத்தில் உழும் குடிக்குச் சொந்தமாக இடம் கொடுக்கமாட்டார்கள் ஆண்டைகள். வயலிற்கு ஒதுக்குப்புறமாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் குடிசைக் கட்டிக் கொடுக்கப்படும். அதில்தான் அவர்களுக்கு இருப்பிடம். அவர்கள் கோவணம் மட்டுமே கட்டிக் கொள்ள வேண்டும். மேலாடை அணிவது ஆண்டைகளை அவமதிப்பதாகும். காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக்கூடாது. வெயிலுக்காக நிலத்தில் உழைக்கும்போது கட்டும் துண்டை, ஆண்டைகளைக் கண்டால் கக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டைகளின் மேல் தமது நிழல்படாத தூரத்தில் நின்று கொண்டுதான் பேச வேண்டும் அதுவும் சற்றே முதுகுக் குனிந்த நிலையில் ஆண்டைக்குத் தனது உடல், பொருள், ஆவி என்ற உடல் மொழி வெளிப்பட நிற்கவேண்டும். “ஒரு சிறு குற்றம் செய்தாலும் போச்சு. மரத்தில் கட்டிப்போட்டு ஈவிரக்கமில்லாத மிராசுதார் அடிப்பார். இந்தப் பண்ணையாட்கள் முதுகுத்தோலை உரிப்பதற்கென்றே பிரத்யேகமான சவுக்குகளை வைத்திருக்கிறார்கள் மிராசுதாரர்கள். (பி.சீனிவாசராவ் தஞ்சை ஜில்லாவில் நடப்பதென்ன?)
நிலமற்ற பண்ணைக் கூலிகளின் மனைவிகள் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. ஆண்டைகள் விரும்பும்போது அவர்களது குடிசைக்கு வருவார்கள் அல்லது ஆண்டைகளின் வீட்டிற்கு அவர்களது மனைவி செல்ல வேண்டும். புதிதாகத் திருமணம் முடிக்கும் பண்ணையாட்களின் புது மனைவிகள் ஆண்டைகளுக்கே முதலில் சொந்தம் பிறகே பண்ணையாட்கள் உரிமை கொண்டாட முடியும். மேலும். பண்ணை அடிமைகள் இது பற்றி எதிர்ப்புத் தெரிவித்தால் அவ்வளவுதான் அவர்களை மரத்தில் கட்டி வைத்து சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுப்பதுதான் ஆண்டைகளின் அரச நீதி.
குருதியும், கண்ணீரும் கொண்டு வளர்ந்து வளம் கொழித்தக் காவிரி டெல்டாவின் மண் என்று சொன்னால் இன்றையத் தலைமுறை நம்புவது அரிதுதான் ஆனால் அது இங்கே நமது காலுக்கு கீழே, இன்றைக்குச் செருப்புப் போட்டுக் கொண்டு கொஞ்சம் தலைநிமிர்ந்து நடந்து செல்வதற்கு இதே மண்ணில் நடந்த உழுகுடிகளின், உழுகுடி அமைப்புக்களின் வீரம் செரிந்த, குருதிச் சிந்தியப் போராட்டங்களே காரணம் என்பதைத்தான் சண்முகசுந்தரத்தின் நூல் இந்த 50 ஆண்டு நினைவுகளை ரத்தக் கவிச்சியுடன் எழுதிச் செல்கிறது.
வரலாற்றில் அடிமை முறையானது ஆரியர் வருகையின் பின்னர் வர்ணமாகவும், சாதியாகவும் நீதிப்படுத்தப்படுகிறது. நால்வர்ண முறையில் மன்னர்களானச் சத்திரியர்கள் கைப்பற்றும் நிலங்கள் யாகம் என்கிற பெயரில் அவர்களது ஞான குருக்களானப் பார்ப்பனர்களுக்குப் போகிறது. நிலங்களை மேலும் மேலும் போர்கள் நடத்திச் சத்திரியர்கள் கைப்பற்ற, அவை மேலும் மேலும் பார்ப்பனர்கள் கைகளிலேயே விழுகிறது. மன்னர்கள் ஒரு கட்டத்தில் யாகத்திற்காகப் போரா, போருக்காக யாகமா என்கிற அளவில் மாற்றப்பட்டனர். மக்கள் மீது அடுக்கடுக்கான வரிகளை சுமத்திய அதே சமயம் பார்ப்பனர்களுக்கு அதிலிருந்து விலக்களித்தனர். மக்களின் எதிர்ப்பை மன்னர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில் மன்னர்கள் தமது சுரண்டல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதன் வழி தமது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டனர். அந்த வகையில் மன்னர்கள் பிராமணர்களுக்கும், போர் தளபதிகளுக்கும், இன்னும் அதிகாரத்துடன் தொடர்புடையவர்களுக்குமாக கைப்பற்றி நிலங்களை பகிர்ந்தளிப்பவனாக இருந்தார்கள்.
கௌடில்யரின் அர்த்தசாத்திரம், நிலம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியதும், பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் எனும் இலவச நிலங்கள் வழங்கப்பட்டதும், பெரும் பார்ப்பன நிலவுடைமையாளர்கள் அவர்களுடைய அடிமைகளையும், தினக் கூலிகளையும், வைத்தக் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டுவந்ததையும், இந்திய நிலவுடைமையின் முக்கியமான கட்டங்களாகப் பார்க்க வேண்டும். விவசாயம் அல்லாத நிலவுடைமையாளர்களாக பார்ப்பனர்கள் மட்டுமே இல்லை. மாறாக செட்டியார்கள்(வணிகர்கள்) கிராமங்களையும், வயல்களையும் பெருமளவு தங்கள் வசம் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் விவசாயிகளை, பார்ப்பனர்களும், செட்டியார்கள் எனப்படும் வணிகர்களும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.( அரை நூற்றாண்டு கொடுங்கனவு பக்-17)
ஆரியர்களுக்கும் தசூக்கள் என்ற தமிழ்த் திராவிடர்களுக்கும் நடந்த ஆயிரமாயிரமாண்டு போர்களில், பார்ப்பனர்களுக்கும், செட்டியார்கள் (வணிகர்களுக்கும்), பசுக்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தனர் என்று தமது ‘கங்கை முதல் சிந்து வரை’ நூலில் ராகுலசங்கிருதித்தியன் குறிப்பிட்டுருப்பார். இதை நமது சங்கம் மருவியக் காலங்களிலும், சிலப்பதிகாரம் போன்ற காப்பியக் காலங்களிலும் அதன் விவரங்களைப் பார்க்கலாம். போர்களில் பெண்கள், பசு, பார்ப்பனன், போன்றோர் விலக்களிக்கப்பட்டிருப்பதானது அன்றைய உற்பத்தி சார்ந்தவற்றையும், அரசதிகார பீடத்தின் செல்வாக்குப் பெற்றவர்களையும் பாதுகாப்பதை அதிகாரவர்க்கம் உறுதிப்படுத்தவே அவற்றை கொள்கையாகக் கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அரசதிகாரத்தின் செல்வாக்குப் பெற்றவர்கள், அதிகாரவர்க்கத்தினர் தமது தலைமுறை தொடர்ச்சியாக நிலத்தினைப் பெற்றுவந்தனர் என்பதை நமக்கு பிரமதேயங்களும், சதுர்வேதிமங்கலங்களும், அக்கிரகாரங்களும் இடப்பெயர் சுட்டிக் காலம் கடந்தும் நமக்குச் சொல்லிக் கொண்டுள்ளன.
“‘மிராசு’ எனும் சொல் பெருநிலக் கிழாரைக்குறிக்கும். மிராசு என்னும் சொல்லின் மூலம் பெர்ஷியன் மொழியில் உள்ளது. ஆர்க்காடு நவாப், 1773,1774 களில் தஞ்சையை வெற்றிக் கொண்டப் போது அம்மன்னின் அலுவர்கள் உபயோகித்த சொல்தான் மிராசு. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னரானக் காலத்தில் மிராசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலத்திலிருந்து மேல்வாரம், கீழ்வாரம் என இருவகையான வருவாய் வசூலிக்கப்பட்டுவந்தது. மொத்த உற்பத்தியிலிருந்து 35 முதல் 45 சதவீதம் வரையிலான வருவாயில் அரசனுக்கு சேர்ப்பிக்கப்பட்டது. கீழ்வாரம் என்பது மிராசுகளுக்குச் சேர்வதாகும்(பக்-26)
ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்1889முதல்1893 வரையிலானக் காலத்தில், மிராசு நிலங்கள் அனைத்தும் தனிப்பட்டக் குடும்பங்களின் சொத்தாக மாறிப்போனது..(பக்-27)
1951 ஆம் ஆண்டின் கணக்கீடுகளின் படி தஞ்சை ஜில்லாவின் முழுமையும் ஒரு சில நிலஉடைமையாளர்களிடம் இருந்தன. இந்நிலங்கள் அனைத்தும் மராட்டிய அல்லது விஜயநகர மன்னர்களால் வரிவசூல் செய்யும் உரிமைக்காக இவர்களின் முப்பாட்டன்களுக்கு வழங்கப்பட்டவை அல்லது இம்முப்பாட்டன்கள் அம்மன்னர்களின் ராணுவச் சேவைகளில் சிறந்து விளங்கியமைக்காகத் தரப்பட்டவை என நூலாசிரியர் குறிப்பிடுவதுடன் 1950 களில் தஞ்சை மிராசுாதாரர்களில் பெரும்பாலோர் நேரடி விவசாயத்தில் ஈடுபடாதவாகளாகவே இருந்தனர் என்ற தகவலையும் தருகிறார். இந்த மிராசுகளின் வேலை நிலமற்றவர்களை கசக்கிப் பிழிந்து மூலதனத்தைப் பெருக்கிக் கொள்வது, அதன் வழி எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்று நிலத்துடன் பிணைக்கப்பட்டவர்களை அடிமையாக நடத்துவது. அவர்களது குழந்தைகளையும் கொத்தடிமையாக்குவதுடன், கடும் தண்டனைகளை வழங்குவது. உழுகுடியினப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது என குறு மன்னர்களாகவே வாழ்ந்திருந்தனர். மொத்தத்தில் அவர்கள் கீழத்தஞ்சையின் ஆகப்பெரும் மனநோயாளிகளாக வலம் வந்தனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வரலாற்றை நேர் செய்யும் துணிவு இங்கு ஆட்சி செய்த யாருக்கும் இல்லை(பக்-25) என ஆதங்கப்படும் ஆசிரியரின் அறச் சீற்றமே இந்தக் கீழ்வெண்மணிக்குறிப்புகள் என்றால் மிகையில்லை. ஆக, ஆட்சிகள் மாறினவே ஒழிய மன்னர்கள் மாறவில்லை. மக்கள் ஆட்சியென்றாலும் மன்னர்கள் தொடரவே செய்கின்றனர், உழுகுடிகளின் உரிமைகள் நசுக்கப்பட்டே வருகின்றன. எந்த காட்சியும் முழுமையாக இங்கு மாறிவிடவில்லை என்பதைப் பார்க்கிறோம். அந்த காட்சிகளும் உழுகுடிகள் கொடும் அடக்கு முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் நேருக்கு நேர் சந்தித்து, கண்ணீரும், செந்நீரும் விலையாகக் கொடுத்துப் பெறப்பட்டதே என்பதைப் பக்கங்கள் நெடுக வங்கத்தின் நக்சல்பாரித் தொடங்கித் தெலுங்கான விடுதலைப் போராட்டம், தமிழகத்தின் டெல்டா புரட்சி வரை, இந்தியப் பின்காலனிய நிலத்தின் கலகக்குரல்களை தொகுத்துப் பேசுகிறார் சண்முகசுந்தரம்.
முக்கியமாகக் கீழ்வெண்மணி எரியூட்டு நிகழ்வானது உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. காலம் காலமாக நிலத்தில் சிறைப்பட்டிருந்த உழுகுடிகள் விலங்குகள், தடைகள் பலவற்றைப் படிப்படியாக உடைத்துக் கொண்டு வெளிவர முயன்றக் கொதிநிலைக் காலத்தின் இறுதியாக, அவர்களது போராட்டத்திற்கு வைக்கப்பட்ட நெருப்புச் சோதனைதான் அது. நந்தனுக்கு வைக்கப்பட்டத் தீயின் கங்குகள்தாம் அந்த நாற்பது உழுகுடிகளின் மீதும் வைக்கப்பட்டது.
இதற்கான முதல் விதை, தென்பரையில் விதைக்கப்பட்டது. ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட உத்திராபதி மடத்திற்கு சொந்தமான 130 கிராமங்களில் மன்னார்குடி வட்டம் தென்பரையும் ஒன்று. இங்கு குத்தகைதாரரை மாற்றக்கூடாது, குத்தகைத் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற ஒரு சில கோரிக்கைகளுடன் உழவர்களின் போராட்டம் அமைப்பு வழியில் தொடங்கியது. 1943 சனவரியில் பாரத கிசான் சபா என்ற அவ்வமைப்பு மடத்தின் தலைமைபீடத்திடம் அக்கோரிக்கைகளை முன் வைத்தது.
பாரத கிசான் சபா என்ற விவசாயிகள் சங்கம், காங்கிரசின் லக்னோ மாநாட்டில் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்கிணங்க உழவர்களையும், கிராமப்புற பாட்டாளிகளையும் ஒருங்கிணைக்கும் முகமாகக் கொண்டு வரப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதன் சின்னமாகச் செங்கொடி ஏற்கப்பட்டது. இவ்வமைப்பினை இடதுசாரிகள் வழிநடத்தினர். அவ்வமையின் கிளைதான் தென்பரை புரட்சிக்கும் வழிகோலியது.
தென்பரையில் 1943 ஆண்டு மன்னார்குடி நோக்கித் தொடங்கிய அந்தப் புரட்சிப்படையின் பயணத்தில் அன்றைக்கு 400 ஆண்களும், 150பெண்களும் திரண்டு கலந்து கொண்டனர். தென்பரை விவசாய சங்கம் என்ற பதகையுடன் முன்னேறினர். இராமச்சந்திர நெடுங்காடி, ஏ.ஆர்.இராமாநுஜம் உள்ளிட்டோர் தலைமையில் சென்ற அப்புரட்சிப்படை துணை ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டுத் திரும்பிய பின்னர்தான் மெய்யான பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. மடாதிபதிகளின் ஆட்கள் விவசாய சங்க செயலளர் வீராச்சாமியின் வீட்டைக் கொளுத்தினர். காவல் துறையினர் மடாதிபதிக்கு ஆதரவாக சங்க உறுப்பினர்களைக் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை முற்றுகையிட்டு அவர்களைப் பின்வாங்கச் செய்தனர் மக்கள். மடாதிபதி ஒப்பந்தத்திற்கிசைந்தார் இதனையடுத்துக் கீழத்தஞ்சை முழுவதும் சங்கச் செயற்பாடும், உழுகுடிகள் விழிப்புணர்வு அடைந்ததும் ஓர் புரட்சிக்குரியக் கதைகளாகும். இந்தப் புரட்சிக்குப் பிறகுதான் தெலுங்கானா போராட்டமே தொடங்குகிறது என்பது வரலாற்றின் ஒரு சிறு பொறி எப்படி பற்றிக் கொள்கிறது என்பதை விளக்கப் போதுமானதாகும்.
நிலத்துடன் பிணைக்கப்பட்ட விலங்கு மனிதனால், மனிதனுக்கு பூட்டப்பட்டதாகும். எனினும் இது உடைக்கமுடியாது என்று நினைத்திருந்த மனிதர்களை, உழுகுடிகளை கிசான் சபாவின் அடுத்தடுத்தப் போராட்டங்கள் விதை நெல்லைப்போல் பெரும் நம்பிக்கை விதைகளாக முளைக்கத் தொடங்கின. கிசான் சபாவை வழி நடத்திய பி.சீனிவாசராவ் என்ற ஒப்பற்றதலைவன் அதை சாத்தியப்படுத்தினான். ஆண்டைகள் கடவுள்கள். கடவுள்களிடம் கோரிக்கை வைக்கலாம் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா என்ற மரபான மரத்துப்போன மனங்களில் பி.சீனிவாசராவ், “அவர்களும் மனிதர்கள்தாம், கேடுகெட்ட மனிதர்கள்” என்பதை உழுகுடிகளுக்குத் தமது இடையறா போட்டங்களுக்கும், பயணங்களிடையேயும் பதிலாக நிகழ்த்திக் காட்டினார்.
ராதாநரசிம்மபுரம் பி.வெங்கடேசன், சேரன்குளம் ஆர்.அமிர்தலிங்கம், சோழபாண்டி ஏ.ஆர்.ராமானுஜம் போன்றவர்கள் மலேசியாவில் இடதுசாரிகள் நடத்தியத் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்று தலைமறைவாக இங்குவருகிறார்கள். இவர்கள் துணையுடனே இங்குள்ள உழுகுடிகளின் போராட்டம் நடத்தப்படுகிறது களப்பால்குப்பு, பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, சாம்புவானோடை சிவராமன் போன்ற இடதுசாரி ஆளுமைகள் இவர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறார்கள். போராட்டத்தின் நெருப்பு டெல்டாவின் வளமான பூமியில் பச்சைத் தீயெனப் பற்றிக் கொள்கிறது. நூலில், ‘களம்’ என்ற பகுதியில் இது பற்றி சண்முகசுந்தரம் தனக்கேயுரிய வெளிப்படையான மொழி நடையில் உயிர்க்கசிய விவரிக்கிறார்.
நூலில் பி.சீனிவாச ராவ் என்ற அந்த ஆளுமை குறித்துத் தனி படலமாகவே எழுதப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. திருத்துறைப்பூண்டியில் இருக்கும் அவரது நினைவுச் சின்னத்தைக் கடக்கும்போதெல்லாம் நமக்கு அவரது விடாப்பிடியான வாதப்பிரதிவாதங்களும், நெஞ்சுரம் மிக்க அவரது போராட்டங்களும் நினைவுக்குவரவே செய்கிறது. கேளராவின் முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாட்டிற்கு இடதுசாரி நூல்களை அறிமுகப்படுத்தியதே பி.சீனிவாசராவ் என்பது எவ்வளவு முக்கியமானது. ஒரு தலைவனை உருவாக்கியதன் வழி நாட்டையே இடதுசாரிகளை ஆளவைத்தவர் பி.சினிவாசராவ் என்பது முக்கியமாகத்தானே இருக்க முடியும். தஞ்சை நிலத்துடன் பிணைக்கப்பட்ட விலங்கை அகற்றியக் கிசான் சபா கீழ்தஞ்சையெங்கும் அமைப்பு வழியில் திரளத் தொடங்கியக் காலத்தில் போராட்டங்களின் விளைவாகப் பண்ணையார்கள் பேச்சுக்களுக்கும் உடன்பாடுகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும் இறங்கிவந்தது பெரும் புரட்சியென்றே சொல்ல வேண்டும். அதை வென்று காட்டியவர் பி.சீனிவாசராவ் போன்றவர்களே.
தாழ்த்தப்பட்ட உழுகுடிகள் கொத்தடிமையாக இருந்த அதே நேரம், தீண்டாமையையும் சேர்த்து இரட்டைச் சுமையைச் சுமக்க வேண்டியவர்களாக இருந்தனர். சாதி இந்துக்களின் தெருக்களில் செல்வது தொடங்கிப் பொதுக்கிணறுகளில் நீர் எடுப்பது, கோயில்களில் வழிபாட்டு உரிமை என அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் கூலி உயர்வுப் போராட்டத்தை முன்னெடுத்தது கிசான் சபா. மெய்யாகவே இந்தப் போராட்டம் கூலி உயர்வுக்கானதாக மட்டுமிருக்கவில்லை, உழுகுடிகளின் சுயமரியாதையையும் சேர்த்து மீட்பதுமாகும்.
இதன் பகுதியாக உழுகுடிகளின் கூலி உயர்வு மற்றும் குத்தகை உழவர்க்கு அதிகப் பங்கும் அளிப்பது தொடர்பாக பண்ணையார்களுக்கும் கிசான் சபைக்கு மிடையே மன்னார்குடியில் 1944 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று உருவானது. இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதைப் பண்ணையார்கள் தள்ளிப்போட்டுக் கொண்டு வந்தனர் இதனையடுத்து புகழ்பெற்ற நீடாமங்கலம் ஒப்பந்தம், முத்தரப்புப் பேச்சுவார்த்தை 1946 இல் நடைபெற்றது. நிலப்பிரபுக்களும், தலித் உழுகுடிகளும் சமதையில் உட்கார்ந்துப் பேசிய அந்த மாநாடு அதிகார, ஆதிக்கவாதிகளிடம் பெரும் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது.
ஆண்டைகளை எதிர்த்தும், நீதி வேண்டியும் விவசாயசங்கமும், உழுகுடிகளும் தமது தரப்பைக் கண்ணீரும், செந்நீருமாக எடுத்துவைத்ததை ஆண்டைகள் துடிக்க, அரசு மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அன்றைக்குச் சட்ட அமைச்சராக இருந்த பாஷ்யம் என்பவர் நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டுவர அதிக நேரமில்லை என்று அப்பட்டமாக பண்ணைகளுக்கு ஆதரவாகப் பேசினார். பாஷ்யம் அவ்வாறு கைவிரித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர் பண்ணை ஒன்றின் சட்ட ஆலோசகராக இருந்தவர். எனவே அவர் பண்ணைகளுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டார். இதனையடுத்துத் துணிச்சல் பெற்ற பண்ணையார்கள், களப்பாலில் நடந்த விவசாயசங்க ஊர்வலத்தில் புகுந்து உழுகுடிகளைத் தாக்கினர். உழுகுடி ஆண் ஒருவரைக் கெடூரமாகத் தாக்கிக் கொன்றர். அரசு என்பது தாங்கள்தான் என்று அவர்கள் அந்த கொலைவழி உழுகுடிகளை எச்சரித்தனர்.
நீடாமங்கலத்தில் நடந்த ஒப்பந்தம் தொடர்பான அந்த முத்தரப்பு மாநாட்டில், விவசாயசங்கத்தின் பிரதிநிதியாக பி.எஸ்.ஆர்.(சீனிவாசராவ்) கலந்து கொண்டபோது ஒரு சுவாரசியமான நிகழ்வொன்று நடந்தேறியது. அரசுப் பிரதிநிதிகள் நீதியாக நடந்து கொள்ளாமல் பண்ணையார் சார்பாக நடந்து கொள்வதைச் சுட்டிக்காட்டி வருவாய்துறை அமைச்சர் பாஷ்யத்திடம், பி.எஸ்.ஆர் கேட்க, அதற்கு “அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் வலியுறுத்த முடியாது!“ என்றார். இதைக் கேட்டுச் சீற்றமடைந்த பி.எஸ்.ஆர்., “பிறகு ஏன் இந்த கூட்டத்தை நீங்கள் நடத்துகிறீர்கள்?” என்றார். அடுத்து நடந்ததுதான் யாரும் எதிர்பார்க்காதது.
பண்ணையார், உழுகுடிகள் முக்கியமாகத் தலித்துகள் முன்பாகத் தன்னைக் கேள்விக் கேட்ட பி.எஸ்.ஆரிடம், அடிபட்டப் புலியாக, பாஷ்யம், “நான் யார் தெரியுமா?” என்று உருமினார். பதிலுக்குப் பி.எஸ்.ஆர், அமைதியாக, “ஓ தெரியுமே.. நீங்கள்தான் வருவாய்துறை அமைச்சர் பாஷ்யம்!” என்றார். அதிர்ந்துப் போன அமைச்சர் மிரட்டலாக,
“நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் வந்துவிடும்!”
அதற்கு பி.எஸ்.ஆர்,
“உங்களுக்கு எட்டுமணி நேரம் தேவை..”
“நான், புரட்சி ஓங்குக..! என்று குரல் கொடுத்தால், அடுத்த நிமிடமே சுற்றி வளைக்கப்படுவீர்கள்!” என்றார். (பி.சீனிவாசராவ்-ஜிராமகிருஷ்ணன் பக்-21)
இந்த உரையாடலில், அதிகாரவர்க்கமும், பண்ணைப் பெருமுதலாளிகளும் கதிகலங்கிப்போனார்கள். பி.எஸ்ஆர். இன் இந்த அதிரடியானப் பதிலில் பேச்சு மூச்சற்று ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுக் கலைந்தனர்.
1952 இல் திருத்துறைப்பூண்டியில், பி.எஸ்.ஆர். முயற்சியில், விவசாயசங்கத்தின் சார்பில் நடந்த குத்தகைதாரர் விவசாயிகள் மாநாடு நடந்தது இதில், அன்றைக்கு 60ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எழுச்சிமிக்க அந்த மாநாட்டின் பயனாய்த்தான் அன்றைய முதல் அமைச்சர் ராஜகோபாலச்சாரி, சாகுபடியாளர் மற்றும் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து நிலகொத்தடிமை முறைக்கு முடிவுகட்ட வேண்டியவரானார்.
பி.எஸ்.ஆர். மட்டுமல்ல திராவிட இயக்கத்தின் தனிமனிதப் புரட்சிப்படையானக் கஸ்தூரிரெங்கன் போன்றோரின் சமரசமற்ற போர்குணம் வாய்ந்த முன்னெடுப்புக்கள் உழுகுடிகளை நிலத்திலிருந்து வெகுவேகமாக மீட்டெடுக்காரணமாக இருந்தது. அவர் பற்றியத் தனிப் பதிவொன்றில் பேசுகிறார் சண்முகசுந்தரம்.
உழுகுடிகளின் புரட்சிகர இயக்கங்களால் பண்ணையார் சமூகம் கலகலத்துக் கொண்டிருந்த காலத்தின் இறுதியில்தான் தமது ராஜியத்தைத் தூக்கி நிறுத்த அவர்கள் உழுகுடிகளுக்கு மறக்கவியலாத பாடம் ஒன்றை கற்பிக்கும் திட்டத்தில் இறங்கினர். அது, உழுகுடி வாழ்வின் நெருப்புத் தழும்பாக மாறும் என்று யாரொருவருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அன்றைக்கு உழுகுடிகளின் போராட்டக் களத்தில் அவர்களுடன் துணை நின்றிருந்த விவசாயசங்கம், பொதுவுடைமைக் கட்சியின் ஓர் பகுதி என்றால், திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், திராவிடக் கழகத்தின் சார்பில் நின்றிருந்தனர்.
வெண்மணி நிகழ்விற்கு முன்பாக, உழுகுடிகளின் எழுச்சியைப் பொதுவுடைமையாளர்கள் பொருளாதாரச் சிக்கலாகவும், ஏற்றதாழ்வாகவும் கண்டனர். திராவிடக் கழகம் அது ஒரு சுயமரியாதைக்கானப் போராட்டமாகக் கண்டது. ஆனால் இவை இரண்டையுமேதான் தன்னகத்தே கொண்டிருந்தது உழுகுடியெழுச்சி.
இப்போராட்டத்தில் கீழ்வெண்மணி எரியூட்டில் தொடர்புடையப் பண்ணைாயார்களுக்கு ஆதரவாகப் பெரியார் செயற்பட்டார் என்ற அவதூறுகள் தொடர்பாக அவற்றை மறுத்தும், அக்காலச் சூழலை முன்நிறுத்தியும் பெரியார் என்ற ஆளுமையின், மனிதநேயப் பண்பாளரின் அரசியல், கள செயற்பாடுகளைத் தொகுத்தும், பிரித்தும் செ.சண்முகசுந்தரம் தரும் உளவியல் மற்றும் அரசியல் வழிபட்ட ஆய்வானது பெரியார் மூட்டியத் தீ எது என்பதை உக்கிரமாக நிறுவுகிறது.
நூலின் பின் பகுதிகளில் கீழ்வெண்மணி குறித்த கலை, இலக்கியப் படைப்புகள் குறிப்பாக, இந்திராபார்த்தசாரதியின் குருதிப்புனல், சோலைச்சுந்தரப்பெருமாளின் செந்நெல், பாட்டாளியின் கீழைத்தீ, அண்மைகாலப் படைப்பான மீனா கந்தசாமியின், குறத்தியம்மன் போன்ற நாவல்கள் குறித்தத் தமதுக் காத்திரமானப் பார்வையைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
ஏன் எரித்தனர் அவர்களை?!. கொல்லப்பட்ட அவ்வளவு பேரும் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ணநாயுடு என்ற பண்ணைப் பிரபுவிற்கு எப்படி எதிரியானார்கள், கொல்லப்பட்ட வாசுகி என்ற அந்த சிறுமி உள்ளிட்ட அக் குழந்தைகள் எப்படி பண்ணைகளின் அடக்குமுறைக்கு எதிரியானார்கள். “பண்ணையாட்கள் அறுவடை செய்த அனைத்து நெல் மூட்டைகளுக்கும் சேர்த்து கூலி கேட்டார்கள். கூலி உயர்வுக்கு ஒத்துக் கொண்டப் பண்ணையார்கள் எல்லா மூட்டைகளுக்கும் கூலி என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பாரம்பரிய முறையை மாற்றியது தங்களது சுயகவுரவத்தைப் பாதிப்பதாகக் கருதி மறுத்தனர். செய்த வேலை முழுமைக்கும் கூலிபெறுவது தங்களின் மரியாதைக்கும், உரிமைக்கும் கிடைக்கும் அங்கீகாரமாக தொழிலாளர்கள் முடிவு செய்தனர் இதுதான் கீழ்வெண்மணிப் போராட்டத்தின் அடிப்படை. -கஸ்தூரிரெங்கன்(நூல் பக்-149)
ராமையாவின் குடிசையில் வைக்கப்பட்ட அந்தப்பெருந்தீ குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என 44 பேரையும் எரித்துத் தின்றது. மனிதனின் கீழ்மைக்குணங்களின், ஆணாதிக்கத்தின், அதிகாரத் திமிர்த்தனத்தின் மனவிகாரத்தின் அத்தனைக் கயமைகளும்தான். 1968 திசம்பர் 25 ஆம் திகதி உழுகுடி மனிதர்களின் சுயமரியாதை, அடிப்படை உரிமைகளின் மீது வைக்கப்படுகிறது அத்தீ. ஆனால், நீதி மன்றமோ நிலபிரபுக்கள், ‘இவ்வளவு தொலைவு நடந்து சென்று(!) சேற்றில் இறங்கி(!) அந்தக் குடிசைகளைக் கொளுத்தியிருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை!’ என்று 22 பண்ணையார்களை ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது. அதேசமயம், உழுகுடிகளின் சுயமரியாதையை, அடிப்படை உரிமையை, மனித உரிமையைச் சேர்த்தே விலங்கிட்டது. நீதி செத்த நாட்டில் எது நடக்குமோ அதுவே நடந்தது. நன்றாக நடந்தது. இனியும் நடக்கும். பிழையான நீதிக்குக் கண்ணகி எரித்த நகரம் வரலாற்றில் இருக்கிறது. அநீதிக்கு எதிரானத் தீ எப்போதும் தீத் திறத்தார் பக்கம் மட்டுமே சேரும் என்ற கண்ணகியின் வாய்மொழி கோபலாகிருஷ்ண நாயுடுவுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்டதாகும்.!
அரைநூற்றாண்டுக் கொடுங்கனவு இனியும் கூட மறப்பதிற்கில்லை.