அக்னி பாதை – தீமிதி!
எல்லா பாதைகளும் ரோம் நகர் நோக்கி என்பது போல பாஜக அரசு கொண்டு வந்த கொண்டுவரும் எந்த ஒரு அரசு திட்டத்தினையும் இந்துத்துவ கொள்கை சார்ந்தவற்றுக்கு முன்னுரிமை அல்லது முற்றுரிமைக் கொடுத்து செயல்படுவதையே தமது இலக்காகக் கொண்டிருக்கிறது. எட்டாண்டு ஆட்சியை நிறைவு செய்திருப்பதை பெருமையுடன் கொண்டாடும் பாஜக அரசு சகல அரசு துறைகளிலும் இந்துத்துவாவையே அரசு திட்டங்களாக்கியிருக்கிறது. அல்லது அரசுத் திட்டங்களை இந்துத்துவா ஆக்கியிருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது சூளுறைத்தப் பிரதமர் மோடியை இந்தியாவின் ஆற்றல் மிகு தலைவனாக ஒளிவட்டம் பொருந்தியத் தலைமகனாக பாஜக ஊதுகுழல்கள் எக்காளமிட்டன. ஆனால் எட்டாண்டு நிறைவில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்ன ஆயிற்று என்றுதான் தெரியவில்லை. 2 கோடி இளைஞர்களின் மூளையில் கனவை விதைத்து அது முளைத்துத் தலையைப் பிளந்துக் கொண்டு வந்ததுதான் மிச்சம்.
ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கூட வேலையை உறுதி செய்ய முடியவில்லை. மாறாக அரசு துறையைத் தனியாரிடம் விற்று இருந்த வேலையையும் பறித்தாயிற்று.
அரசு வேலை தனியார் வேலையாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டும் இரண்டு கோடி இளைஞர்கள் இன்னும் வெளியில்தான் நிற்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேர் என்பது அதானியா அல்லது அம்பானியா. அந்த இரண்டு கோடி பேருக்கு ஒர் அதானியும் அம்பானியும்தான் சமாந்திர மானவர்களா. சமபங்காளர்களா. இளைஞர்களிடம் வேலையை ஒப்படைப்பதாகச் சொன்னவர்கள் பெருமுதலாளிகளிடம் ஒப்படைத்திருப்பது இளைஞர்களுக்கு வேலைவழங்கும் கனவில், திட்டத்தில் எந்த வகை?
அரசு துறைகள் தனியார் வசமாக்கப்படும் பகுதி திட்டத்தில் தற்போது படைத்துறை சேர்ந்து கொண்டுள்ளது. நீண்ட நெடிய வலிமை பொருந்திய படையணியை அதன் தொடர் கட்டமைப்பை மரபை உடைக்கும் வேலையை அக்னி சோதனையை மோடி அரசு மேற் கொண்டிருக்கிறது.
படைத் துறையை ஒப்பந்த அடிப்படையில் சிறு சிறு குழுவாக்கும் முயற்சி இது. முப்படைகளையும் கூலிப்படையாக மாற்றிவிடக்கூடும். படையின் நிலைத் தன்மையை இது குலைத்துவிடும். போர்க் காலங்களில் அக்னிபத் வீரர்களின் நிலை தெளிவாக்கப்படாத நிலையில், இது போன்ற திட்டங்கள் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையும்.
அக்னிபாத் என்று பஜக அரசு விவரிக்கும் இளைஞர்களை படையணியில் சேர்க்கும் திட்டமானது மெய்யாகவே இளைஞர்களையும், இந்தியப் படையணியையும் வளர்தெடுக்குமா என்றால் இல்லை யென்றுதான் சொல்ல வேண்டும். அக்னி பத் மெய்யாகவே போகாத ஊருக்கான வழியே என்றாலும் அது போய்ச் சேருமிடம் தெளிவானதாகவே இருக்கிறது.
17.5 லிருந்து 23 வயது இளைஞர்களைக் குறிவைத்துச் செல்லும் அக்னி பாதை, கண்ணுக்குத் தெரியாத நெருப்பு வலையைப் பின்னுகிறது.
4 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு. பணிக்கால ஊதியம் முதலாண்டில் 34 ஆயிரமாகவும் 2 ஆம் ஆண்டில் 36 வும் அதுவே 4 ஆம் ஆண்டில் 40 ஆயிரமாகவும் வழங்கப்படும்.
தெரிவு செய்யப்படும் இளைஞர்களில் 25% சதவீதம் பேர் படையணிகளில் நிரந்தரமாகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் மீதமுள்ளோருக்கு கட்டய ஓய்வு அளிக்கப்படும் என்று திட்டம் விவரிக்கிறது.
4 ஆண்டுப் பணி நிறைவுக்குப் பிறகு சேவை நிதித் தொகுப்பாக தலா 11.71 இலட்சம் வழங்கப்படும் என்கிறார்கள்.
பணியின் போது இறக்கும் அக்னிவீரனுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அக்னி வீரன் குடும்பத்திற்கு ஆசை காட்டுகிறது அக்னிபத்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது பட்டுக் கம்பளமாகக் கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும் அது பாதையல்லப் படுகுழி என்பது ஒன்றிய அரசின் இன்னபிற திட்டங்கள் போன்று வெளிச்சத்திற்கு வரக்கூடும்.
அக்னிபாத் திட்டத்தின் ஒவ்வொரு கண்ணியும் சதியால் இழைந்துள்ளது. நிறைந்துள்ளது. இளைஞர்கள் மீதோ படைத்தரப்பு மீதோ கொஞ்சமும் அக்கறையற்ற உள்நோக்கம் கொண்டது என்பது மெய்யாகும்.
வேலைவாய்ப்பற்ற கோடிக் கணக்கான இந்திய இளைஞர்களின் கனவுடன், எதிர்காலத்துடன் வறுமையுடன் ஏய்த்து விளையாடும் விபரீதமான விளையாட்டாகும் இது.
இளைஞர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கும் இது, அக்னி வீரர்களுக்குப் பதில் கூலிப்படைகளையே உருவாக்கும் என்பது தெளிவு.!
புதிய திட்டத்தில் நடப்பாண்டில் 46,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று திட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.
முதலாண்டில் மட்டுமே வயது வரம்பு 23 என்று சொல்லப்படுகிறது. வரும் ஆண்டுகளில் அது 21 ஆகக் குறைக்கப்படும்.
ஒப்பந்த அடிப்படை என்பதால் ஓய்வூதியம் போன்றவைக் கிடையாதாதாகையால் பணி முடிந்து வீரர்கள் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருக்கும்
வழக்கமான படைவீரர் சேம நலத் திட்டங்கள் எவையும் இந்த கூலி இளைஞர்களுக்கு கிடைக்கப்போவதில்லை. மேலும் வழமையான மரபான படை வீரர் அல்லர் இவர்கள். போர் மற்றும் அவசரகாலத் தேவைக்கு முன்கள வீரர்களாகவே நிறுத்தப்படுவோருக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. பலியாடுகள் என்று சொன்னாலும் தவறில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் 80% வீரர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. மீதமுள்ள 20% தொகையில்தான் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த வேண்டியிருக்கிறது என்று ராஜ்நாத் சிங் கைவிரிக்கிறார்.
இந்திய அரசியல்வாதிகள் அயல் நாட்டு வங்கிககளில் ஆண்டுதோரும் சேர்க்கும் கறுப்புப் பணத்தை மீட்டாலே தாராளமாகப் படைவீரர்களுக்கு செலவிடமுடியும் என்று சிங்கிற்கு தெரியாததல்ல.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி கறுப்புப் பண ஒழிப்பு என்ற அடுத்ததாக பாஜகவின் வெற்றி நடவடிக்கைகளாக அறிவிக்கப்படும் இவற்றில் சேரும் கனிசமானத் தொகையைக் கொண்டு அக்னி வீரர்களுக்கு உதவுமுடியும்.
இளைஞர்களின் வறுமையை முதலீடாக்கி, கனவுகளைப் பலியிடத்தூண்டும் அக்னிபாத் பின்னால் பாஜக அரசிற்கு உறுதியானக் கனவுத்திட்டம் ஒன்றிருப்பதை மறந்துவிட முடியாது.
4 ஆம் ஆண்டில் திருப்பி அனுப்பப்படும் அக்னிவீரர்களுக்கனச் செயற்திட்டம் எதையும் அக்னிபாத் கொண்டிருக்கவில்லை என்பதிலிருந்தே இந்தப் பாதை எங்கே செல்லும் செல்கிறது என்பதை ஊகிப்பது எளிது.
ஆனால் படையணியை விட்டு 4 ஆண்டுகளில் வெளியேறும் அக்னி வீரர்களுக்கு பின்னர்தாம் அக்னிச் சோதனைக் காத்திருக்கிறது. குறைந்த கல்வித் தகுதியுடன் படைக்குத் தெரிவாகும் இவர்கள் பாதியில் வகுப்பறையை விட்டு வெளியேறுவதால் அவர்களது மேற்படிப்புக்கு வழியில்லாது போகிறது.
ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி அக்னிபத் திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஓட்டுநர், எலெக்ரிசியன், துணிதுவைத்தல், முடி திருத்துதல் சலவை செய்தல் உள்ளிட்ட திறன் பயிற்சி வழங்கப்படும் என்கிறார். சாதாரணமாக தண்டனையாகவோ, அல்லது வேலைப் பிரிவினையாகவோ படையணிகளில் பயிற்சி பெறும் படைவீரனுக்கான வேலைகளில் ஒன்றாகவே இவைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். சமையல் கூட அப்படித்தான். படைவீரர்களுக்குப் பரிமாறுவது மேசைத் துடைப்பது என இதர நடை முறைகளையும் ஓர் பணியாக்குவதற்கு நமது மக்கள் நல செயற்பாட்டாளர்களாலேயே முடியும்.
விளிம்பு நிலை இளைஞர்களை மீண்டும் வருணாசிரம படிநிலைக்குத் திருப்பி வருணப் பிரிவு வேலைகளில் ஈடுபடுத்தவே இந்த அக்னி வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது மிகையல்ல. நடுவண் அமைச்சரின் கூற்று அதை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.
இரவு காவல் பணியில் ஈடுபடும் வழமையானப் படை முகாம் பணி அக்னிபாத் வீரனுக்கு பணிக்குப் பிறகானக் காலத்திற்கான ’நைட்வாட்ச்’ மேனுக்கானத் தகுதியாக இவர்கள் சொல்லக்கூடும். ஆனால் இவர்களது இலக்கு அவர்களை தனியார் அலுவலகங்களின் வாசல்களில் ஓர் சீழ்கை ஒலிப்பானோடு உக்கார வைப்பதல்ல.
கனிசமான அளவில் படையிலிருந்து வெளியேற்றப்படும் அக்னிவீரன் தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவைப்பபடப் போவதில்லை. பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்யாத முடிதிருத்த மட்டும் தெரிந்தவனுக்கு கணினி பிரிவிலும், நிர்வாகப் பிரிவிலும் என்ன வேலை பெரிததாக இருந்துவிட முடியும்?
படையில் சேரும் கனவுடன் அதற்கான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவில் அக்னிபத் தீவைத்துக் கொண்டுள்ளது.
ஏற்கனவே பலர் உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனைத் தேர்வு ஆகியவற்றை முடித்துள்ளனர். கடந்த ஆண்டே நடைபெற வேண்டியப் படைக்கான ஆள் சேர்ப்புத் தேர்வு தற்போது நடத்தப்பெற உள்ள நிலையில் முன்பு நடைபெற்ற தேர்வு முறை செல்லாது எனவும் புதிதாக அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு கூறுகிறது. 2 ஆண்டு காத்திருப்பும் முயற்சியும் வீணான நிலையில் நாடெங்கும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துக் கொண்டுள்ளனர்.
படையில் சேர்வது மட்டுமே ஒரே வேலை வாய்ப்பாக இருக்கும் வட இந்திய இளைஞர்களுக்கு இது அக்னி பாதையாக அமைந்துவிட்டதில் வியப்பில்லை. அவர்கள் அக்னிபத் திட்டத்திற்கெதிராகப் பிழம்பாக மாறி பேருந்து, தொடர்வண்டிகளுக்குத் தீவைத்து தமது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். குஜராத், பீகார், உத்திரபிரதேசம் என தொடரும் வன்முறை தற்போதுத் தீவிரமடைந்துள்ளது. ஆந்திராவில் போராட்டத்தின் போது இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். தமிழகத்தில் கோவை, சென்னையிலும் இளைஞர்கள் அக்கினபத்திற்கெதிராகத் திரண்டுள்ளனர்.
வட இந்தியாவில் மட்டும் இளைஞர்களின் சீற்றத்திற்கு இதுவரை 200 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.
பீகார், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் படையில் சேரும் அக்னி வீரன், 4 ஆண்டுகளின் பின் வெளியே தள்ளப்படும்போது ஆர்.எஸ்.எஸ். போன்ற மத வன்முறை அமைப்புகளில் சேர்ந்து செயற்படவும், நாட்டுப்பற்று, மதப்பற்று என்கிறப் பெயரில் கடமையாற்ற நன்குப் பயிற்சி பெற்ற இவ்வீரர்கள் திரள்வதற்கு ஓர் முன்னோட்டமாக இது அமையக்கூடும். அக்னிபத் அதற்கானப் பகுதி திட்டமே.
படைப் பயிற்சியில் இணையும் பத்து இலட்சம் பேரில் இரண்டு இலட்சம் பேர் நிரந்தரமாகத் தெரிவாகும் நிலையில் மீதமுள்ளோர் மூளைச் சலவைப் பெற்று ஆா.எஸ்.எஸ் இல் இணைவதாற்கான சகல சாத்தியங்களும் இருக்கின்றன.
நேரடியாகத் தாமே பயிற்சியளிக்காமல், ஒய்வுப் பெற்ற படைவீரர்களைப் பணிக்கு அமர்த்தாமல் ஒன்றிய அரசின் செலவில், படையணிக்குள் ஓர் படையாக வளர்தெடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.க்கு இது ஒரு வாய்ப்பு.
கிராமக் கோவில்களில் தீ மிதிப்பதைத் திருவிழாவாக நடத்துவார்கள். அக்னி பாதையான அந்த நெருப்புக் குழியை அதன் மீதேறி நடப்பவர்கள் அச்சப்படா வண்ணம் இருக்க அந்த நெருப்புக் குழியைப் பூக்குழி என்று அழைப்பார்கள். அப்படித்தான் இருக்கிறது ஒன்றிய அரசின் அக்னிபத்.