தீபச்செல்வனுடன் நேர்காணல்
தீபச்செல்வனை சந்தித்து உரையாடவேண்டும் என வெகுநாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.அவர் சென்னையில் இருந்தபோது அது முடியாமல் போய்விட்டது.ஒரு நாள் திடீரென்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உங்களைச் சந்திக்கமுடியுமா? திருநெல்வேலியில் இருக்கிறேன் என்றார்.உடனே சென்றுவிட்டேன். நிறைய உரையாடவேண்டும் என சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே! மனோன்மணியம் பல்கலை.யில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்த அவர் அதற்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனாலும் இரண்டு மணிநேரம் அவரோடு உரையாடிவிட்டுத் திரும்பினேன். அவரைப் பற்றி வாசகர்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பதுங்குகுழியில் பிறந்த குழந்தை தொடங்கி எனது குழந்தை பயங்கரவாதி வரை ரத்தமும், கண்ணீரும் சொட்டும் கவிதைகளோடு நம் இதயங்களில் அவர் எப்போதும் வசிக்கிறார். ஈழத்தின் இதழ்களிலும், குமுதம், தீராநதி, ஆனந்தவிகடன், உயிர்மை இதழ்களிலும், குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணைய இதழிலும் தொடர்ச்சியாக தனது கவிதைகளையும், ஈழ மக்களின் தற்போதைய நிலை குறித்து காத்திரமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.
கேள்வி : உங்களை மஹாகவியின் வாரிசு அப்படின்னு சொல்லலாமா?
பதில் : (சிரிப்பு)..மஹாகவியின் வாரிசு சேரன் இருக்கிறார்.(சிரிப்பு). இன்றைய சூழலில் வேறுசில கவிஞர்களும் களத்தில் இருக்கிறார்கள். நான் சில ஆபத்தான விடயங்கள் குறித்து விஷயங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது மஹாகவி என்ற இடத்தை அடைவதற்கான முயற்சி கிடையாது. கவிஞன் என்ற அடையாளத்தை அடைவதல்ல முக்கியம். ஒரு கவிஞன் தனக்கான பணியையே செய்வதே முக்கியம். என்னுடைய நிலத்தை, வாழ்க்கையை அடைவதற்கான முயற்சி. எங்கள் சந்ததி நாளை நாங்கள் வாழ்ந்தது போன்ற கொடும் காலத்தில் வாழக்கூடாது என்பதற்காக ஒரு கவிஞன் செய்யக்கூடிய பணி.
கேள்வி: ஈழத்தின் தற்போதைய நிலைகுறித்து மிக விரிவாக எழுதி வருகிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்.
பதில்: அங்கு நடக்ககூடிய விஷயங்களை பதிவு செய்யவேண்டும். அங்கு இருக்கக்கூடிய வேறு சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கைக்கேற்றவாறு அங்கு இருக்கக்கூடிய நிலைமைகளை மறைத்து தங்களது சவுகரியங்களுக்கு ஏற்றவிதத்தில் கருத்து சொல்லலாம் என்று இருக்கிறார்கள். முற்றிலும் கருத்து சொல்ல இயலாதவர்களின் குரலாக நான் எழுதுகிறேன்,பேசுகிறேன்.அங்கிருக்கும் நண்பர்கள் “நாங்கள் சொல்ல விரும்பியதை நீ எழுதுகிறாய்” என்று என்னிடம் அடிக்கடி சொல்வார்கள். முகநூலில் அதை போடும்போது அதற்கு லைக் போடுவதற்கோ அல்லது அது பற்றிக் கருத்துப் பதிவதற்கோ அவர்களுக்கு பயமாக இருக்கிறது.அதனால் தங்களுக்கு பிரச்னைகள் வரும் என்று பயப்படுகிறார்கள்.
அப்படி மிகமிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய விஷயங்களைத்தான் நான் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் பதிவுசெய்து கொண்டு வருகிறேன். இப்போதைய என்னுடைய செயல்பாடு என்பது ஈழத்தில் ஒடுக்கப்படும் எனது இனமக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர்வதும் பதிவு செய்வதுமே.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஈழத்தமிழர்களுக்கு எந்தப்பிரச்னையுமில்லை என்னும் தோற்றத்தைத்தான் இலங்கை அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்னமும் நாங்கள் அங்கே தொடர்ந்து அழிக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம். இனப்படுகொலைகள் முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறவில்லை. இன்னமும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆயுதப்போராக இருந்தாலும் சரி அல்லது இன்றைக்கு நடக்கும் உளவியல் யுத்தத்திலும் சரி ஈழமக்களை அழிக்கவேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் கொள்கை. அந்த முழு நாட்டையும் சிங்களவர்களுக்கு உரிய நாடாக மாற்றவேண்டும் என்பது அவர்கள் கொள்கை. அதுதான் இன அழிப்பு.
இன்று நடக்கும் உளவியல் போர் என்பது மிகமிக ஆபத்தானது. கத்தியில்லாமல்,ரத்தம் சிந்தாமல் நடக்கும் இந்த உளவியல் போர். ஏற்கனவே ஆயதப்போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தை உளவியல் ரீதியாக தாக்குதலுக்கு ஆட்படுத்தும்போது அது இன்னமும் மிக மோசமான பாதிப்புக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கும். அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகின் கவனத்திலிருந்து மறைக்கப்படுகிறது. அங்குள்ள அரசியல்வாதிகள் நிறைய விஷயங்களைப் பேச மறுக்கிறார்கள். ஊடகங்கள் முழு உண்மையையும் வெளிப்படுத்துவதற்கு உகந்தசூழல் இல்லை. இப்பொழுது வன்னியில் மிகப்பெரும் நிலப்பரப்பை ராணுவம் வேலியிட்டுள்ளது. அதற்குள் என்ன நடக்கிறது என்பது வெளியில் யாருக்கும் தெரியாது.
மக்களுக்கோ, ஊடகங்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எதுவும் தெரியாது. அங்கே வரலாறு சார்பான பல புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. அங்கு மிகப்பெரிய சிங்களக் குடியேற்றத்தை நடத்தலாம்.அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இலங்கையில் இன முரண்பாடுகள் வெளிப்படையாக வருவதற்கு முன்னரே நில அபகரிப்புகள் தொடங்கிவிட்டன. சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழர்கள் உரிமை கேட்டுப் போராடும்போதெல்லாம் சிங்களவர்கள் வன்முறையையும், நில அபகரிப்பையும்தான் கையிலெடுத்தனர்.முள்ளிவாய்க்காலின் முக்கிய நோக்கம் 1.தமிழர் நிலத்தை அபகரித்தல்,2.தமிழ்மக்களைப் படுகொலை செய்தல்.
கேள்வி: செல்வா-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை ஐக்கிய இலங்கைக்கான நம்பிக்கையாகவே இரு தரப்பாலும் பார்க்கப்பட்டது. அவ்வொப்பந்தம் கிழித்துப்போடப்பட்ட பிறகு அதற்கான சாத்தியமும் இல்லாது போயிற்று. சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் ஆட்சியாளர்களை புத்தபிக்குகள்தான், பௌத்த மதவாதிகள்தான் கட்டுப்படுத்துகிறார்களா?
பதில்: முதலில் இலங்கையில் இருக்கும் புத்ததுறவிகளாகச் சொல்லப்படுபவர்கள் புத்ததுறவிகளே அல்லர். அங்கிருக்கும் மார்க்கம் பௌத்த மார்க்கமே அல்ல. உண்மையான பௌத்தத்தை அவர்கள் தழுவியது கிடையாது. தங்கள் அரசியலுக்கு, தங்கள் நடவடிக்கைகளுக்கு புத்தரை ஒரு ஆயுதமாக உபயோகித்துக் கொள்கிறார்கள். புத்தரின் பெயரை அம்பாக்கி எய்துகிறார்கள். அவர்களிடம் பௌத்தம் அல்ல, இனவாதம் மட்டுமே எஞ்சியுள்ளது.
கேள்வி: ‘புத்தரின் படுகொலை’ என்னும் கவிதையில் நுஃமானும் கவிதை வழியே உங்கள் கருத்தைதான் சொல்லியிருப்பார்.
பதில்: ஆமாம்.யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த புத்தரின் நூல்களையும் சேர்த்துதான் எரித்தனர். சிங்கள மக்களிடம் சிங்களப்பேரினவாதத்தை எடுத்துச் செல்லும் செயலுக்கு அவர்கள் புத்தரின் பெயரை உபயோகித்துக் கொண்டார்கள். இலங்கையில் இருக்கும் பொதுபலசேனா, ராவணபாலய அமைப்புகளைச்சேர்ந்த பிக்குகள் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் கத்தியில்லாமல், ரத்தமின்றி யுத்தம் நடத்தக்கூடிய ஆட்கள். இலங்கையின் உளவியல் யுத்தத்தில் முன்னரங்கில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள்.
அவர்கள்தான் ஈழத்தமிழர்களை வந்தேறியகுடிகள் என்கின்றனர். தமிழர்களை அழிக்கவேண்டும் என ராஜபக்ச வெளிப்படையாக சொல்லமாட்டார். பிக்குகள் எல்லாம் இனவாதிகளாக வெளிப்படையாகப் பேசுவார்கள்.இன்றும் தமிழர்களுக்கு மிகப்பெரும் தீங்கினை இழைத்துக்கொண்டிருப்பவர்கள் பௌத்த,சிங்களப் பேரினவாதிகள். அரிதாக ஒருசில புத்ததுறவிகளை நாம் பார்க்கலாம். ஆனால் அவர்களால் இலங்கை அரசியலை மாற்றமுடியாது.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்ற விசாரணை,ஒரு சர்வதேச விசாரணை தேவை என்கிற விஷயத்தையே சோபிததேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவர் மட்டுமே ஏற்றுக்கொண்டார். ராஜபக்சவைக் காப்பாற்றவே அவர்கள் விரும்புவார்கள். இலங்கை என்பது பௌத்த-சிங்கள பூமி என்று சொல்லக்கூடியவர்கள்தான் இருக்கிறார்கள். இன்று இந்த பௌத்ததுறவிகள் முஸ்லீம்களுக்கு எதிராக தெருவுக்கு தெரு இறங்கி நின்று வேலை செய்கிறார்கள்.ஹலாலை எதிர்க்கிறோம் என்னும் போர்வையில் முஸ்லீம் மக்களை ஒடுக்கிறார்கள்.
கேள்வி: சிங்களமொழி அடிப்படைவாதத்திற்கும்,பௌத்தமத அடிப்படைவாதத்திற்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடுகள் ஏதும் உண்டா?
பதில்: இல்லை.இரண்டும் பிண்ணிப் பிணைந்தது.தமிழர் நிலங்களில் ராணுவம் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளைப் பார்த்தீர்களென்றால் அவர்கள் முதலில் சிங்கள் மொழியில் அறிவிப்புப் பலகையும் கூடவே புத்தர் சிலையையும் வைப்பார்கள். இப்படியாகத்தான் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பிணைந்திருப்பதை தமிழர் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் பார்க்கலாம்.
கேள்வி: நீரூற்று போன்ற உங்கள் கவிதைப் பிரவாகத்துக்கு மூல ஊற்று எது?
பதில்: சிறிய வயதிலிருந்தே கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளிப்புத்தகங்களில் கவிதை எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. 2005 வாக்கில்தான் பத்திரிகைகள், ஊடகங்கள் எனக்கு அறிமுகம். அந்தச்சூழலில்தான் 2005-2006 காலக்கட்டத்தில்தான் எழுதினேன். 2006க்குப் பிறகு போர் மீண்டும் ஏற்படுகையில் அதன் தாக்கம் என்னை எழுதத் தூண்டியது. நான் வாழ்ந்த சூழல் எங்கள் இனம் எதிர்கொண்ட போர் முதலானவற்றை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. அச் சூழலில் மிக மிக பாதிக்கப்பட்டே ஒவ்வொரு கவிதைகளையும் எழுதினேன்.
கேள்வி: சகோதரர் இறந்தபிறகு புலிகள் இயக்கத்தில் சேராமல் போனதற்கு காரணம் உங்களுக்கு விருப்பமில்லையா அல்லது எழுத்தா?
பதில்: அண்ணா போராடி வீரச்சாவு அடைவதற்கு முன்பான காலகட்டத்தில் போராட்டத்தின்மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கவில்லை. அப்பா, அண்ணன் இல்லாத, அம்மாவோடும் தங்கையோடும் நான் இருந்த சூழல். அண்ணன் இறந்தபிறகு அண்ணாவின் டயரிக்குறிப்புகள், அவரது கனவுகள் என் மீது பாதிப்பை ஏற்படுத்தின. அதன்பிறகுதான் நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் போராட்டத்தில் ஒரு புலியாக என்னை இணைத்துக்கொள்ளவேண்டும் என விரும்பியிருக்கிறேன். இணையாமல் இருக்க வீட்டுச் சூழ்நிலைதான் காரணம்.
நான் எழுத்தை மிகச்சிறந்த ஆயுதமாகக் கருதினேன். ஆயுதக்களத்தில் துப்பாக்கியை தூக்குவதைவிடுத்து அதைவிட ஆபத்தான எழுத்துக்களத்தில் நான் நுழைய ஆரம்பித்தேன். முழுக்க முழுக்க நான் புலிகளின் கட்டுப்பாட்டில் பிறந்து வளர்ந்தபோதும் யாழில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் இராணுவத்தின் ஆட்சிக்குள்ளேயே நான் எழுதிக்கொண்டிருந்தேன். நான் போராட வேண்டிய காலம் என்பது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலமாகவே இருந்தது. யாழ்ப்பாணப் பல்ககலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் மாணவத் தலைவராக செயற்பட்டது நான் ஒரு யுத்த களத்தில் யுத்தம் செய்வதையும்விட உக்கிரமான களம்.
கேள்வி: புலிகளின் நிலப்பகுதியில் வசித்துக்கொண்டு நீங்கள் எழுதும்போது இயக்கத்திற்கு எதிராக எழுதவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏது வந்ததா? புலிகளுடன் கருத்து முரண்பாடுகள் ஏதும் ஏற்பட்டதுண்டா?
பதில்: நான் ஆரம்பம் முதல் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவன். எனக்கும், புலிகள் இயக்கத்துக்கும் எந்தவொரு கருத்து முரண்பாடும் ஏற்பட்டது கிடையாது. புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல. எங்கள் வீடுகளிலிருந்து சென்றவர்கள்தான் புலிகள் இயக்கம். அவர்கள் போராடியது எங்களுக்காகவே.
போர்ச்சூழலில் எழுதப்பட்ட என்னுடைய கவிதைகள் போர்க்களத்தில் புலிகளுக்கு மத்தியிலும் படித்துக்காட்டப்பட்ட நிகழ்வுகள் உண்டு. புலிகள் நடத்திய போரில் எங்களுக்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்கு நியாயாமான காரணம் இருக்கிறது. ஆயுதப்போராட்டம் எங்கள்மீது திணிக்கப்பட்டது. என்னுடைய எழுத்து என்பதே அந்த நியாயத்தை வலியுறுத்துவதுதான். அதில் தான் எங்கள் விடுதலை தங்கியிருக்கிறது.
கேள்வி: புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் நீங்கள் பணி செய்திருக்கிறீர்கள்.?
பதில்: ஊடகத்துறைக்கு வருவதற்கு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிதான் காரணம். எனக்கு சிறிய வயதிலிருந்தே வானொலித் துறையில் பணியாற்ற விருப்பம். சிறுவயதில் வானொலிப் பொட்டி ஒன்றோடே அலைவன். கையில் ஒரு ஆட்டுக்குட்டியும் வானொலிப்பெட்டியும்தான் இருக்கும். தேசிய தொலைக்காட்சியில் யுத்தத்தினால் பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வந்தேன். போராளிகளும் பிற கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய சூழல். ஊடகத்துறை சார்ந்த பல புதிய அனுபவங்களை அங்கு கற்றிருக்கிறேன்.
கேள்வி: போர் ஏராளமான போராளிக்கவிஞர்களையும்,போராளி எழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளது…
பதில்: அந்தப் போரிலக்கியத்துக்கென்றே தனி வரலாறு உண்டு.அதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1.எதிர்ப்பிலக்கியம், 2.மக்களால் படைக்கப்படும் இலக்கியம், 3.போராளிகளால் படைக்கப்பட்ட இலக்கியம். இந்த மூன்றாம் வகைப்பட்டது. மிக விரிவானது. போராடிக்கொண்டே இலக்கியம் படைத்தவர்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள். புதுவை இர்ததினதுரை, வானதி, கஸ்தூரி, மலரவன், அம்புலி இப்படி நிறைய பேர் எழுதியுள்ளார்கள். எழுத்து, புகைப்படம், ஆவணப்படம், இசை, நடனம், நாடகம் எனப் பலதுறைகள் உண்டு. போராளிகளின் கவிதைகள் உணர்வுப்பூர்வமான, வலிமையான கவிதைகள். ஈழப்போர் வாழ்வின் அனுபவத்தை சொல்லும் செறிவான பிரதிகள்.
கேள்வி: கவிஞர் புதுவை ரத்தினதுரை பற்றி ஏதும் தகவல்?
பதில்: ஏதும் இல்லை.அவர் சரணடைந்தது உண்மை. அவர் இருக்கிறார் என்று அவரது குடும்பம் நம்பிக்கொண்டிருக்கிறது. அவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். அவரைப்பற்றி பல செய்திகள் உலவுகின்றன. மருந்தே கொடுக்காமல் சாகடிக்கப்பட்டார் என்றும், இல்லை இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்றும் செய்திகள் உலவுகின்றன.
கேள்வி: ஈழத்திலிருந்து தொடர்ச்சியாக செய்திகளையும், போருக்குப்பின்னரான மக்களின் அவலங்களையும் வெளி உலகுக்கு தருகிறீர்கள். அச்சூழலில் இயங்குவது தங்களுக்கு ஆபத்தாக இல்லையா?
பதில்: என் எழுத்துப் பயணம் ஆரம்பம் முதலே ஒரு நெருக்கடியான பயணந்தான். அதற்காக நான் சவுகரியங்களையும், பாதுகாப்பையும் தேடவில்லை. எழுதும் விடயங்களைளோ, முறைகளையோ மாற்றிக்கொள்ளவில்லை. கடினமான சூழலிலும் நேர்மையாக எழுதவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு எழுதுவதைவிடவும் எழுதாமல் இருப்பதுதான் நெருக்கடியாக இருக்கிறது. அதனால்தான் எழுதுகிறேன்.
கேள்வி: அரசுத்தரப்பிடமிருந்தும், அரசு சார்ந்த தமிழ்த்தரப்பிடமிருந்தும் நெருக்கடிகள் வந்துள்ளதா?
பதில்: வந்துள்ளது. 2008ல் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மாணவத் தலைவராக போருக்கு எதிராக செயற்பட்டபோது ராணுவத்தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்திருக்கிறது. போரை நிறுத்தி சமாதான பேச்சுக்களில் ஈடுபடவேண்டும், தமிழர் தேசத்தை விட்டு இராணுவம் விலகவேண்டும், வடக்கு கிழக்கை தனி ஈழமாக அங்கிரிக்க வேண்டும் இவைதான் எங்கள் கோரிக்கை. அந்தக் கால கட்டத்தில் இராணுவம் என்னுடன் சேர்த்து 14 பேருக்கு கொலை எச்சரிக்கை விடுத்தது. சுமார் ஒரு வருடமாக இரவு பகலாக என்னை அச்சுறுத்தினார்கள். நான் கொல்லப்பட்டு விடுவேன் என்றே நினைத்திருக்கிறேன். ஆனாலும் என் பணியை தயங்காது செய்தேன். அக்கால கட்டத்தில் தீபச்செல்வன் நான்தான் என்பது பலருக்குத் தெரியாது. மாணவத் தலைவர் என்ற முறையிலேயே எனக்கு கொலை எச்சரிக்கை. மிக மிக மறைந்திருந்து நான் எழுதிய கால கட்டம் அது.
மக்கள் மீள்குடியேற்றம்,நில அபகரிப்பு பிரச்னைகளைப்பற்றி எழுதும்போது அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் ஆட்கள் இவர்களிடமிருந்தும் நெருக்கடி வந்துள்ளது. நான் அந்நெருக்கடிகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எதையும் கண்டு அஞ்சிப்போகவில்லை. தீபச்செல்வனும் நான்தான் பிரதீபனும் நான்தான் என்று தெரியவந்த காலத்தில் என்னைப் பற்றி சிலரிடம் இராணுவத்தரப்ப விசாரித்திருக்கிறது. எக்காலத்திலும் நான் சோர்வடையவில்லை. என் எழுத்துக்களால் ஈழத்தில் பல பகுதிகள் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் நடந்த நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முதல் முதலில் அடையாளம் கண்டு வெளிக்கொணர்ந்திருக்கிறேன். இதையே இன்று நான் செய்யவேண்டிய அவசிய பணியெனக் கருதுகிறேன்.
கேள்வி: நாடுகடந்த தமிழீழ அரசில் பலதீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஈழத்தின் இஸ்லாமியப்பிரச்னையும் அதில் ஒன்று. இஸ்லாமியர்களின் தனித்தன்மை ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதோடு அவர்கள் விரும்பினால் பிரிந்துசெல்லக்கூடிய உரிமையும் அத்தீர்மானங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வுதான் இன்னமும் தமிழர்- இஸ்லாமியர் நெருக்கத்திற்குத் தடையாக இருக்கிறதா?
பதில்: சிலபேர் அதைத்தான் இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 2002க்குப்பிறகு, ஒரு பெரிய நிலப்பரப்பை புலிகள் தங்கள்வசம் வைத்துக்கொண்டு உலக அளவில் ஒரு சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அச்சூழலில் புலிகள் இயக்கம் இஸ்லாமியர்களை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்டது. இஸ்லாமியர்கள் தங்கள் தாயகத்திற்கு எந்நேரமும் திரும்பி வரலாம் என்று தலைவர் பிரபாகரன் சொன்னார்.
ஆனால் அதற்குப்பிறகும் முஸ்லிம்கள் ஏன் குடியேறவில்லை என்பதுதான் பிரச்னை. முஸ்லிம்களைக் குடியேற்றுவதில் அரசாங்கத்திற்குத்தான் விருப்பமில்லை. ஏனென்றால் முஸ்லிம்களும், தமிழர்களும் ஒன்றுசேரக்கூடாது என்று இலங்கை அரசு விரும்பியது. அரசின் திட்டத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் பலியானார்கள்.மு ஸ்லிம் அரசியல்வாதிகள் எப்போதும் ஒடுக்கப்படும் முஸ்லிம்களின் பக்கம் இருந்தது இல்லை. ஒரு சிலர் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். அவர்கள் தங்களுடைய அமைச்சு பதவி, தங்களின் சொந்த நலன் சார்ந்துதான் இயங்கியிருக்கிறார்கள்.
தேர்தல் சமயத்தில்தான் தேசியவாதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.தேர்தல் முடிந்ததும் இலங்கை அரசின் அமைச்சராக மாறிவிடுவார்கள். தமிழ்மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது அரசாங்கமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும்தான். இப்போது விடுதலைப்புலிகள் இல்லை, இப்பவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்களோடு கூட்டணி வைப்பதற்காக கடைசிவரை காத்திருந்த சம்பவங்களும் உண்டு. வடமாகாணத்தில் ஒரு போனஸ் ஆசனமும் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின்மீதான நல்லிணக்கத்தை தமிழ்த்தரப்பு புலிகள் காலம் முதல் இன்றுவரை வெளிக்காட்டிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.
ஆனால் இவ்விருவரும் ஒன்று சேர்ந்தால் தங்களுக்கு எதிராக மாறிவிடுவார்கள் என்று எண்ணும் அரசாங்கம் திட்டமிட்டு இவ்விருவரையும் பிரிக்கக்கூடிய வேலையைச் செய்கிறார்கள். இன்றுவரை முஸ்லிம் மக்கள் தங்கள் தாயகத்தில் வந்து குடியேற எவ்விதத்தடையுமில்லை. அரசாங்கம் அதை ஊக்குவிக்கவில்லை, செய்யவில்லை என்பதுதான் பிரச்னை.
கேள்வி: வடக்கு மாகாணத்தில் நடக்கும் தமிழ்மக்களின் நில அபகரிப்பிற்கு தற்போதைய விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அரசு எப்படி முகம் கொடுக்கிறது?
பதில்: அவர்கள் வெறும் செய்தியாளர்கள் போல செய்திகளைச் சொல்கிறார்களே தவிர,அறிக்கை விடுகிறார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. செயல்படவும்முடியாது. ஏனென்றால் அவர்களிடம் காணி அதிகாரம் இல்லை.தான் ஒரு நிர்வாகி என விக்னேஸ்வரன் சொல்கிறார். நிர்வாகம் கூட அவர் செய்யவில்லை. நிர்வாகம் என்பதை ராணுவம் செய்கிறது.ராணுவ ஆட்சி நடக்கக்கூடிய ஒரு பகுதியில் எப்படி பொதுமக்கள் நிர்வாகம் செய்யமுடியும்? இதுதான் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம். முப்பதாண்டுப் போராட்டத்திற்காக, ரத்தத்துக்காக அவர்கள் தந்துள்ள பரிசுதான் இது.
கேள்வி: தற்போதைய சூழலில் அதை ஏற்றுக்கொள்ளும் சூழலில்தானே தமிழர்கள் இருக்கிறார்கள்?
பதில்: தமிழ்மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அது இலங்கை அரசால் திணிக்கப்பட்ட ஒரு விஷயம். தமிழ்மக்களைப் பொறுத்தவரை இது ஓடாது, இது சரிப்படாது என்று தெரியும். ஆனால் இது ஓடிப்பார்க்கட்டுமே என்று விட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு இதுவும் உடையும் என்னும் பார்வைதான் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. முதலில் விக்னேஸ்வரனுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர் சொல்லத்தொடங்கிவிட்டார்.
மக்கள் பெருவாரியாக வாக்களித்தது ஏனெனில் எதிர்தரப்பில் ராஜபக்ச போட்டியில் இருக்கிறார். இவர்களுக்கு வாக்களிக்காமல் போனால் ராஜபக்ச வேறுசில ஆட்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்து விடுவார். அவரை முற்றாகத் தோற்கடிக்கவேண்டுமென்பதினால் தான் மக்கள் விக்னேஸ்வரனுக்கு வாக்களித்தார்கள். வடக்கு மாகாண சபையில் நம்பிக்கைகொண்டு அதனால் எதுவும் வரும் என்று மக்கள் இல்லை.
கேள்வி: ஈழத்து மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்களின் போராட்டங்களை விக்னேஸ்வரன் விமர்சித்திருந்தார். ஒட்டுமொத்த ஈழத்துமக்கள் தமிழக மக்களின் ஈழ ஆதரவுப்போராட்டங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?
பதில்: விக்னேஸ்வரனின் பல அறிக்கைகளை எதிர்த்து நான் என் கட்டுரைகளில் பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு அவரை கொழும்பில் சந்தித்தபோதும் நீங்கள் இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்.தமிழக மக்களின், ஈழத்தமிழ்மக்களின், புலம்பெயர்ந்த தமிழர்களின் என எவருடைய இதயங்களையும் உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புரிந்து கொண்டிருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள். நீங்கள் ஒரு கொழும்பு தமிழர் என்றும் சொன்னேன். எனக்கு எல்லாம் புதுசு என்றார் அவர். என்ன பிரச்னையெனில் அவருக்கு நிறைய விஷயம் விளங்குவதில்லை. எங்களுடைய இனப்பிரச்னையை கணவன்-மனைவி பிரச்னை என்று சொல்கிறார். ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை, போர்க்குற்றத்தை கணவன்-மனைவி உறவென்று சொல்லலாமா? முடியாது. தொடக்கத்திலிருந்தே அவரிடம் நிறைய முரண்பாடுகள். கொழும்பு மனோநிலையிலிருந்துதான் அவர் கருத்து சொல்கிறார். இது வடக்கு,கிழக்கு மக்களின் மனோநிலை சார்ந்த கருத்தல்ல. தனக்கெந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது எப்பதற்காகத்தான் இப்படி கதைக்கிறார்.
கேள்வி: விக்னேஸ்வரன் முதல்வராகியது ஒரு விபத்தா?
பதில்: இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருந்தன. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரின் முடிவுதான் இது. கூட்டமைப்பில் உள்ள அனைவரையும் சம்மதிக்க வைக்கப்பட்டனர். தமிழ்மக்களைப் பொறுத்தவரை விக்னேஸ்வரனை அல்ல ஒரு பொம்மையை வைத்திருந்தாலும் அதற்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்னும் சூழல் இருந்தது.அதனால் வாக்களித்தார்கள். விக்னேஸ்வரன் தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கதைத்துவிட்டு பின்னர் பிரபாகரன் மாவீரர் என்பார். அழிக்கப்பட்ட மாவீரர் துயிலகங்களை மீண்டும் கட்டுவோம் என்றார். தேர்தல் முடிந்ததும் இது பற்றிக்கேட்டபோது தடுமாறி விலகினார். தேர்தல் அரசியல்வாதிகளுக்குரிய பண்பை விக்னேஸ்வரன் பெற்றிருக்கிறார். பிரபாகரனைப்பற்றி பேசினால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று விக்னேஸ்வரனுக்குத் தெரியும்.
கேள்வி: தமிழர் நிலம் அபகரிப்பது பற்றியும்,தொடர்ச்சியாக எலும்புக்கூடு புதையல்கள் கண்டுபிடிக்கப்படுவது பற்றியும் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா இவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
பதில்: ஒரு நிலைப்பாடும் இல்லை.அரச நிலைப்பாடுதான்.அரசில் அமைச்சராக இருக்ககூடிய ஆட்கள் அரசாங்கம் என்ன சொல்லுதோ அதைத்தான் கிளிப்பிள்ளைபோல திருப்பிச் சொல்லுவார்கள். அரசாங்கம் சந்திரிகா மீது குற்றம் சாட்டும் அல்லது விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டும்.அவர்களும் நாளை இதையே செய்வார்கள்.
இப்பொழுது மன்னார் புதை குழியை புராதன மயானம் என்று இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களம் சொல்லிவிட்டது. இனி திருகோணமலை, முல்லைத்தீவு முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளையும் மயானம் என்பார்கள். ஏனெனில் தமிழீழமே மயானமாகிவிட்டதே?
கேள்வி: புலிகள் விமர்சனங்களையும்,சுயவிமர்சனங்களையும் அனுமதித்திருக்கிறார்களா?
பதில்: புலிகள் சுயவிமர்சனங்களை நிராகரிக்கவில்லை. விமர்சனம் என்ற போர்வையில் சிலர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அவதூறுகளைப் பரப்பினார்கள். இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு ஒத்துழைத்தார்கள். விமர்சனம், சுயவிமர்சனம் தேவை. ஆனால் டக்ளஸ் தேவானந்தவையும்,கருணா அம்மானையும் விமர்சனத்திற்கான, சுய விமர்சனத்திற்கான அடையாளங்களாக எடுத்துக்கொள்ளமுடியாது. அவர்கள் உண்மையிலேயே எங்களுடைய போராட்டத்தை அழிப்பதற்காக சுயவிமர்சனம் என்ற பெயரில் செயல்பட்டார்கள். எல்லா வகையான விமர்சனங்களையும் கடந்து வளர்ந்த இயக்கம்தான் புலிகள் இயக்கம். அது விமர்சனத்தை நிராகரித்து வளர்ந்த வளரச்சியல்ல.
இதுபோல இலக்கியப்புலத்திலும் கருணாக்களும் டக்ளசுகளும் உண்டு. இவர்கள் விமர்சனம் என்று சொல்லிக்கொண்டு,போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து அப்போராட்டத்தின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். பாலச்சந்திரன் போன்ற பிஞ்சு முகங்களையெல்லாம் நகைச்சுவையாக கொச்சைப்படுத்தக்கூடிய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் செய்வதையெல்லாம் சுயவிமர்சனம் என்று சொல்லமுடியாது. விமர்சனம் என்பது எங்களது போராட்டத்தை வளர்த்தெடுப்பதாக,மக்களின் கனவை மெய்ப்பிப்பதாக இருக்கவேண்டும்.அப்படி வந்த விமர்சனங்கள் மிகமிக அரிது என்று சொல்லலாம்.
பிரபாகரன் சொந்த நலத்துக்காக களத்தில் நிற்கவில்லை.அவர் தன் குடும்பத்தையே அர்ப்பணித்துள்ளார். ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசோடு சேர்ந்திருந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று சொல்கிறார்:”நாங்களெல்லாம் தமிழீழ லட்சியத்திலிருந்து தவறிச்சென்றவர்கள். பிரபாகரன் மட்டுமே தமிழீழ லட்சியத்திற்காக இறுதிவரை போராடியவர்”. இதுவே விடுதலைப்புலிகளின் வெற்றி, பிரபாகரனின் வெற்றி. என்னைப் பொறுத்தவரை புலிகள் இயக்கத்திடமிருந்த ஒழுக்கம், நேர்மை, கட்டுக்கோப்பு இம் மாதிரியான விஷயங்கள் என்னைக் கவர்ந்தவை. மற்றபடி விடுதலைப் புலிகளின்மீதான நேர்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.
கேள்வி: புலிகளின் அரசியல் உத்தியும், ராணுவ உத்தியும் தோல்வி அடைந்ததன் விளைவுதான் முள்ளிவாய்க்காலா?
பதில்: அப்படி சொல்லமாட்டேன். இலங்கையில் யார் ஆட்சி செய்திருந்தாலும் ஈழப்போராட்டத்திற்கான முடிவை உலகம் இப்படித்தான் உருவாக்கியிருக்கும். ரணிலும், ராஜபக்சவும் வேறு வேறு ஆட்கள் இல்லை.
கேள்வி: இருந்தாலும் இவ்விருவரின் ராஜதந்திரம் வேறு வேறாகத்தானே இருந்திருக்கும். அதற்கேற்ப வரலாற்றின், போரின், சமாதானத்தின் இயல்பும் மாறியிருக்குமல்லவா?
பதில்: விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இதுபோலத்தான் நடக்கப்போகிறது என்பது தெரியும். கடைசி மாவீரர் உரையைப் பார்த்தீர்களென்றால்(2008) அதில் பிரபாகரன் சொல்லியிருப்பார்” விடுதலைப்புலிகளையும், மக்களையும் அழித்துவிட்டு முடிவில் எதுவும் கொடுக்காமல் செய்வதுதான் இந்த சிங்கள உலகத்தின் நோக்கம்”. சமாதானம், ஜனநாயகம், நல்லிணக்கம், போர்நிறுத்தம் எல்லாவற்றிற்குமான விடுதலைப்புலிகள் செய்த வெளிப்பாட்டிற்கு ராஜபக்ச தந்த பரிசுதான் முள்ளிவாய்க்கால். தமிழ் மக்களிடம் ஜனநாயகத்தை வெளிப்படுத்திய எந்தவொரு சிங்கள அரசையாவது நீங்கள் காட்டமுடியுமா? எப்படி இருந்தாலும் ஒரு முள்ளிவாய்க்கால் பேரழிவை -இனப்படுகொலையை நடத்துவதில் சிங்கள அரசும் உலகமும் உறுதியோடு இருந்தது. அதற்கான முன் முயற்சிகள் ஈழத்தில் பல பத்து ஆண்டுகளாக நடந்திருக்கின்றன.
நாங்கள் தோற்றுப்போக முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டபோதும் இன்னமும் நிலத்தில் எஞ்சியிருக்கிறோம். நாம் வாழும் நிலம் எமக்கு தேவை என்பதும் எமது இனத்திற்கு பாதுகாப்பு தேவை என்பதற்கும் அதற்கான உரிமையை எக்காலத்திலும் நாம் போராடிப் பெற வேண்டும் என்பதையும் முள்ளிவாய்க்கால் படுகொலை மாத்திரமல்ல அதற்குப் பின்னரான இன்றைய காலமும் உணர்த்துகிறது.
எங்கள் போராட்டம் உலக அரங்கிற்கு வந்திருக்கிறது. புலிகள் பற்றிய எல்லா குற்றச்சாட்டுக்களுடனும் போராட்டத்தை அணுகியவர்கள் இன்று நடந்ததை பற்றிய சாட்சியங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். புலிகள் தங்களை இந்த போராட்டத்திற்காக மெய்யாக அர்ப்பணித்தவர்கள். தமிழ் ஈழ மக்களின் தேச மனித விடுதலையை தவிர அவர்களுக்கு வேறு எந்தக் கனவும் இல்லை. எங்கள் போராட்டம் இன்று உலக அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதை புலிகள் தங்கள் தியாகப் போராட்டத்தால் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.
கேள்வி: போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசு கொடுத்த பலகோடி ரூபாய் என்னவானது?
பதில்: அதில் பெரிய குழப்பங்கள் இருக்கிறது. தமிழ்மக்களுக்கு அந்நிதி ஒழுங்காகப் போய் சேரவில்லை. போரினால் எவ்வித பாதிப்பையும் அடையாத சிங்கள மக்களை இவ்வீடுகளில் குடியேற்றுகிறார்கள். இதனை அங்கிருக்கும் இந்தியத் தூதரகங்கள் கண்டுகொள்வதில்லை. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்குச் சென்று நீங்கள் பார்த்தீர்களானால் இவ்வுண்மை புரியும்.
கேள்வி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சிங்கள மக்களுக்கான சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளனவே?
பதில்: சிங்கள மக்கள் தொடர்ச்சியாக வந்து பார்க்கிறார்கள்.அவர்களைப் பொறுத்தவரைக்கும் தங்களது படைகள் விடுதலைப்புலிகளை எப்படித் தோற்கடித்தார்கள் என்கிற பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.ஆனால் அங்கு காயம்பட்ட மக்களை,உடைந்துபோன பள்ளிக்கூடங்களை,வீடில்லாத மக்களை,குடிசைகளை எல்லாம் அவர்கள் பார்ப்பது கிடையாது.
அதைப்பார்த்து தமிழ் மக்களின் துன்பங்களையும் கேட்பார்களென்றால் இரு இன மக்களுக்கிடையில் உறவு மலரும்.அரசும் இதை விரும்புவதில்லை.அரசைப் பொறுத்தவரை உண்மையான நல்லிணக்கம் வந்துவிடக்கூடாது.அங்கு ஒரு இனமுரண்பாடு இருந்தால்தான் நாட்டில் இனவாத ஆட்சியைத் தக்கவைக்கமுடியும்.இனவாத ஆட்சியை வைத்திருந்தால்தான் தமிழர்களைத் தொடர்ச்சியாக ஒடுக்கமுடியும்.சிங்கள மக்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாக வந்து பார்க்கிறார்கள். எங்கள் படைகள் ரத்தம் சிந்தி உங்களுக்கு விடுதலை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். போரில் பாதித்த எங்கள் மக்களுக்கு இது எவ்வளவு பெரிய துன்பமாக இருக்கும்?
கேள்வி: பெரும்பாலான சிங்கள நடுநிலையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்களே?
பதில்: அவர்களும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான். சில கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அரசு அவர்களை சிங்களப் புலிகளாக்கி விடுகிறது. விக்கிரமபாகு கருணரட்ன கூட ஒரு அளவோடுதான் பேசுவார். அதுவே அவருக்கு பெரிய இழப்பு.சிங்கள அரசியலில் அவரால் முன்னுக்கு வரமுடியாது கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன ஈழத்திற்காக குரல் கொடுத்தமைக்காக நாட்டைவிட்டுச்சென்றவர். பாஷண அபேவர்த்தன போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்தவர். இப்போது அவரும் நாட்டில் இல்லை. தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்று சொல்லக்கூடிய சிங்கள நண்பர்களே நாட்டைவிட்டுப் போகவேண்டும் அல்லது படுகொலை செய்யப்படுவார்கள்.
கேள்வி: எலும்புக்கூடு புதையல் எடுத்தபிறகு ஜே.வி.பி., சிங்கள அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்தது என்று சொல்கிறது.ஆனால் இனப்படுகொலை நடந்தபொழுது ஜே.வி.பியும் அரசோடு கூட்டணியில் இருந்தது.இது ஜே.வி.பியின் சந்தர்ப்பவாதமா?
பதில்: ஆம். சந்தர்ப்பவாதம்தான்.அவர்கள் நிறைய முயற்சி செய்து பார்க்கிறார்கள் தமிழ் மக்களின் மனத்தில் இடம்பிடிக்கவேண்டுமென்று. மாவீரர் தினத்தைக் கொண்டாடலாம். விளக்கு வைக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.இதில் நேர்மை,நியாயம் இல்லை.அவர்களிடம் நேர்மை இருக்குமானால் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்கவேண்டும்,அவர்களது வரலாற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லவேண்டும்.ஆனால் அப்படி செய்யமாட்டார்கள். தமிழ் மக்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என ஏற்றுக்கொள்வதில் ஜே.வி.பியில் எவரும் இல்லை. எல்லோருமே தமிழர்களுக்கு பிச்சை கொடுங்கள் என்றுதான் குரல் கொடுக்கிறார்களே தவிர தமிழ் மக்களின் உரிமையைக் கொடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
கேள்வி: கம்யூனிசம் என்னும் தளத்தில் இரு இனங்களையும் மீண்டும் இணைக்கும் முயற்சியை ஜே.வி.பியினர் செய்கிறார்களா?
பதில்: இல்லை.அவர்களிடம் நேர்மையான இடதுசாரித்துவம் என்பது இல்லை.பௌத்த பிக்குகள் எப்படி புத்தரை ஆயதமாக்குகிறார்களோ அதுபோல ஜே.வி.பியினர் இடதுசாரி அரசியல் தத்துவத்தை தங்களது இனவாதத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். சிங்கள நாடாக இருந்தாலும் தமிழ்த்தேசியகீதம் படிக்கலாம் என்று வாசுதேவ நாணயக்கார சொல்லியிருக்கிறார். அங்கேயே இனவாதம் வெளிப்படுகிறது. இவர்கள்தான் இடதுசாரிகள். அதன்வழி தமிழர்களின் உரிமையை,நியாயத்தை மறைத்து தமிழர்களின்போராட்டத்தை ஒடுக்குவ தே அவர்களின் நோக்கம்.
கேள்வி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்வியின் நிலைமை எப்படி உள்ளது?
பதில்:ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் போர் உட்பட எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பதுங்குகுழிகளில் உட்கார்ந்து படிக்கக்கூடியவர்கள். உடைக்கப்பட்ட பள்ளிக்கூடங்களிலும் படிக்கக்கூடியவர்கள்.கரும்பலகை இல்லாவிட்டாலும் சுவரிலும் எழுதிப் படிக்கக்கூடியவர்கள். கடந்த உயர் பருவத்தேர்வில் இலங்கை முழுவதற்கும் எடுத்துக்கொண்டால் வடக்குமாகாணத்தில்தான் அதிகத்தேர்ச்சி விகிதம்.
எங்களது மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியை ஒரு மூலதனமாக, ஆயுதமாகப் பார்க்கக்கூடியவர்கள். எந்த ஒரு துயரச்சூழ்நிலையிலும் கல்வியைக் கைவிடமாட்டார்கள். போரில் அம்மா,அப்பா,சொந்தங்கள் இழந்தபின்பும் கூட கல்வியில் முன்னணி வகிக்கிறார்கள். போரினால் நடுத்தெருவுக்கு வந்த சிறுவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கல்வியைக் கைவிடமாட்டார்கள். உண்மையில் எங்கள் மக்களுக்கு உரிமைகள் கிடைத்து எங்கள் தேசம் விடுதலை அடையுமென்றால் எங்களது மாணவர்கள் கல்வியில் பெரியதோரு இடத்தை அடைவார்கள்.
கேள்வி: கல்வி தரப்படுத்தலின் இன்றைய நிலை என்ன?
பதில்: இன்னமும் அந்த ஒடுக்குமுறைகளும், பாரபட்சங்களும் அப்படியே உள்ளன. பல்கலைக்கழக வேலை வாய்ப்புகளிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. எங்கள் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் வேலைவாய்ப்பிலும், பல்கலைக்கழக சேர்க்கையிலும் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுகிறது.
கேள்வி: மக்கள் பிரச்னைகளுக்கு முகம் கொடுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் குரல் இப்போது எங்கே போயிற்று?
பதில்: போர் முடிந்ததும் அவர்களது வேலைகளும் முடிந்துபோய்விட்டது. அவர்களில் ஒருவரான ரட்னஜீவன் என்பவர் மனித உரிமை பேசியவர்.ஆனால் துணைவேந்தர் பதவிக்கு மனித உரிமைகளை கொன்றுபோட்டவர்களான டக்ளஸ் தேவானந்தவிடமும்,ராஜபக்சவிடமும் சென்றவர். எதுவுமே கிடைக்கவில்லை என்றதும் பின்னர் நாட்டைவிட்டுப் போய் இப்பொழுது மறுபடியும் பதவிக்காக வந்திருக்கிறார். இப்படித்தான் மனிதஉரிமை மீதான அவர்களது அக்கறை.
கேள்வி: உலகின் பல நாடுகளில் பல தேசியஇனங்களைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து வசிக்கிறார்கள். அது சாத்தியமா?
பதில்: சாத்தியமில்லை.
கேள்வி: இது இந்தியாவுக்கும் பொருந்துமா?
பதில்: எங்கள் பிரச்னையை இந்தியாவோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு மாபெரும் இனப்படுகொலை, மாபெரும் போர்க்குற்றத்தை சந்தித்திருக்கிறோம். எக்காலத்திலும் நல்லிணக்கத்தை அது இல்லாமல் செய்துவிட்டது. ராஜபக்சவைப் பொறுத்தவரைக்கும் அவரது இன ஒடுக்கல் நடவடிக்கைகள் இன்று வரையிலான அவரது வெளிப்பாடுகள் இன நல்லிணக்கத்துக்கு வருவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிட்டன.
பாதிக்கப்பட்ட நாங்கள் நல்லிணக்கத்துக்குப் போக முடியாது. இனநல்லிணக்கம் என்பது, பகை மறுப்பு என்பது அடங்கிப்போவது , ஒடுக்குமுறையைத் தாங்கிப்போவது, அழிந்துபோவது அல்ல. அது பரஸ்பரம் உரிமைகளைப் பரிமாறிக்கொள்ளும் நிலை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளக்கூடிய நிலை. அந்த நிலைமை வராது. இரண்டு இனங்களுக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரிதாகி விட்டது. சிங்களத்தரப்பிடம் பழிவாங்கும் உணர்ச்சி இன்னமும் இருக்கிறது. தமிழ்மக்களிடம் இன்னமும் தோல்வியுணர்வும்,பழிவாங்கப்பட்ட தன்மையும் இருக்கிறது.
ஒன்றரை லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து வாழலாம் அல்லது மக்கள் மறந்துவிடுவார்கள் என்று சொல்லமுடியாது. இது சந்ததி சந்ததியாக தொடர்ந்து தொடரப்போகும் பழியும் பாவமும். இந்தப்பழியுணர்ச்சியை தீர்ப்பதற்கும், இனங்களிடையே இடைவெளியை குறைப்பதற்குமான தீர்வு எங்கள் மக்களுக்கான உரிமையைக் கொடுப்பதுதான். அது என்னைப் பொறுத்தவரைக்கும் தனிநாட்டில்தான் சாத்தியம். ஆனால் அதைப் பொதுசன வாக்கெடுப்புக்கு விட்டு மக்கள் தீர்மானிக்கவேண்டும். இன்றைய உலகத் தமிழ் மக்களின் குரல் என்பதே ஈழப் பிரச்சினையில் பொதுசன வாக்கெடுப்பு நடத்து என்பதுதான். ஈழமக்கள், உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் அனைவரும் இவ்வாக்கெடுப்பில் பங்குபெறவேண்டும்.
கேள்வி: ஈழப்பிரச்னை வைத்து அரசியல் நடத்தும் தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: எங்களுக்கு தமிழகத்தின் குரல் தேவை. எங்களுக்கு ஜெயலலிதாவும், கருணாநிதியும் குரல் கொடுக்கவேண்டும். ஆனால் அது நேர்மையானதாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்மக்களுக்கு அநீதி இழைத்தவர், தன் கடமைகளைச் செய்ய தவறியவர் என்னும் பார்வை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மீது தமிழ்மக்களுக்கு இருக்கிறது.
ஆனால் ராஜபக்சவைப் பொறுத்தவரைக்கும் கருணாநிதியும் ஒன்றுதான், ஜெயலலிதாவும் ஒன்றுதான். இவர்கள் நேர்மையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை தமிழக உறவுகள்தான் கவனித்துக் கொள்ளவேண்டும். தனிப்பட்ட, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எங்களுடைய பிரச்னைகளைக் கையாள்வது உண்மையில் எங்களுக்கு வேதனை தரக்கூடிய விஷயம். ஆனால் சிலர் எங்களுக்காக தங்கள் அரசியலை அர்ப்பணித்தார்கள்.
சமீபகாலங்களில் தமிழகத்தின் அரசியல் சூழல், தமிழக முதல்வரின் சமீபத்திய முடிவுகள் எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தங்களது குறுகிய சுயநலங்களை மறந்து தமிழக அரசியல் கட்சிகள் ஈழ மக்களுக்குக்காக ஒரே குரலில் பேசும்போது அது ஈழ மக்களுக்கு மிகப்பெரும் பலத்தைக் கொடுக்கும். இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும், இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும், தனித்தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியது ஈழவிடுதலைக்கு மிகப்பெரும் ஒரு பங்காக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
(குமுதம் தீராநதி, ஏப்ரல், 2014)