பேராசிரியர் G.N. சாய்பாபா கவிதைகள்

1. நான் மரணிக்க மறுக்கிறேன்
நான் மரணிக்க மறுத்தபோது
என் விலங்குகள் விடுபட்டன..
பரந்த புல்வெளிக்குள்
நுழைந்தபோது
புல்லின் இதழ்களைப் பார்த்து
நான் புன்னகைக்கிறேன்…
என் புன்னகை அவர்களுக்கு
சகிப்பின்மையை ஏற்படுத்தியது
நான் மீண்டும் தளைப்படுத்தப்பட்டேன்.
நான் திரும்பவும்
மரணத்திற்குப் பணிய மறுத்தபோது
என் வாழ்வின் சோர்வைக் கண்டு,
என்னை சிறைப்படுத்தியவர்கள்
விடுவித்தனர்
சூரிய உதயத்தின் கீழ்
பசுமையானப் பள்ளத்தாக்கில்
நான் நடந்தேன்
வீசும் புல் இதழ்களை நோக்கி
புன்னகை செய்தேன்
என் அழியாப் புன்னகையால்
கோபம் கொண்டவர்கள்
மீண்டும் என்னை
தளைப்படுத்தினர்
நான் இன்னும் பிடிவாதமாக
மரணிக்க மறுக்கிறேன்
என்னை எப்படிக் கொல்வது என்று
அவர்களுக்குத் தெரியவில்லை
என்பதுதான் வேதனையானது
ஏனென்றால் வளரும் புல்லின்
ஒலிகளை
நான் மிகவும் நேசிக்கிறேன்.
( 1917 அக்டோபர் எழுச்சியை நினைவுகூர்ந்து, தன் துணைவியார் வசந்தாவுக்கு 26.10.2017 அன்று பேராசிரியர் சாய்பாபா எழுதிய கவிதைக்கடிதம் இது )
2. என் அன்பே! என் சுதந்திரமே!
இந்த அவமானங்கள், கண்டனங்கள், வதந்திகள்
அடக்குமுறை, தாங்கமுடியா வலி மற்றும் கண்ணீர் –
இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்
இந்தக் கொடுங்கோன்மையின் நிழல்
நம்மை ஆட்கொள்வதற்கு முன்பு
உன் மனம் எவ்வளவு சுதந்திரமாகவும்,
உன் எண்ணங்கள் எவ்வளவு பாரமற்றதாகவும் இருந்தன
நான் அறிவேன்
உன் கருப்பு இமைகளில்
சுதந்திரத்தையும்,
உன் அழகான புருவங்களில்
சுயமரியாதையின் பெருமையையும்
நீ எப்படி அணிந்திருக்கிறாய் தெரியுமா?
எதிர்காலத்தில் நமக்கு ஒரு வாழ்க்கை உண்டு
அதற்குமுன் உன்னை இப்படிப்பட்ட இருளுக்குள்
இழுக்கப்பட்டதற்காக என்னை மன்னிப்பாயாக…
முதலில் நம் சுதந்திரத்தைத் திருட வந்தார்கள்,
பிறகு நம் தைரியத்தைப் பறிக்க வந்தார்கள்..
நாம் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டோம்,
நம் உணர்வுகள் தளையிடப்பட்டன.
அன்பு சிறையிடப்பட்டது
எண்ணங்கள் விலங்கிடப்பட்டன
நம்முடைய வார்த்தைகள்
சங்கிலியால் பூட்டப்பட்டன
நம் மொழி நம்மிடமிருந்து
திருடப்பட்டது
இப்பிரிவின் வலியிலும்
ஏதும் செய்ய இயலா நிலையிலும்
உன் இதயத்தின் கனத்த ஓசையை
நான் உணர்கிறேன்.
கொஞ்சம் பொறுமையாக இரு.
நம் துணிவு மட்டுமே
ஒரு பிரகாசமான விடியலுக்குள் நம்மை
கொண்டு சேர்க்கும்
என் அன்பே, என் சுதந்திரமே,
உன் கையில் தவழும் சுடரை
இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்து.
(துணைவியார் வசந்தாவுக்கு பேராசிரியர் சாய்பாபா, 02.01.2018 அன்று எழுதிய கவிதைக்கடிதம்)
3. இப்போது எங்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்துள்ளது
‘என்னை ஒருஅடையாளமாகச் சுருக்கிவிட முடியாது’
என்று பிரகடனம் செய்துவிட்டு ரோஹித் வெமுலா
தூக்கிட்டுக் கொண்ட அன்று
என் இதயம் துடிப்பதைத் தவறவிட்டது
‘என்னுள் இருந்த எழுத்தாளன் இறந்துவிட்டான்’
என பெருமாள் முருகன் அறிவித்த அன்று
நான் தூக்கத்தில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டேன்
‘ஆதிவாசிகள் ஆட மாட்டார்கள்’ என்று
எழுத்தாளர் ஹன்ஸ்தா சௌவேந்திர சேகர்
உச்சரித்த அன்று
என் தசைகள் சுருங்கிப்போயின
‘எனக்கு சுதந்திரம் வேண்டும்’ என ஹாதியா
நீதிமன்றத்தில் மன்றாடியபோது
சிறை அறையில் மூச்சுவிடுவதை
நான் நிறுத்திக் கொண்டேன்.
(மகள் மஞ்சீராவுக்கு 25.12.17 அன்று பேராசிரியர் எழுதிய கவிதைக்கடிதம்)
(மேற்கண்ட மூன்று கவிதைகளும் பேராசிரியர் சாய்பாபாவின் Why Do You Fear My Way So Much? Poems and Letters from Prison என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மொழியாக்கம் : செ. சண்முகசுந்தரம்)