மரணிக்க மறுத்த பேராசிரியர் சாய்பாபா

தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாய்பாபா காலமாகிவிட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நிரூபித்த பின்னர், எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு மார்ச் மாதம் விடுதலை பெற்ற சாய்பாபா ஒரு வருடம் கூட அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் போனதுதான் மிகக் கொடுமையானது. இந்த மரணம் நாட்டில் ஏதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதா? தெரியவில்லை. ஒரு சக்கர நாற்காலி இந்திய வானத்தை விட்டுப் பறந்து செல்வதுபோல சமூக ஊடகங்களில் படங்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு ஊரில் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுகூடி இரங்கல் கூட்டம் நடத்தினர். சமூக ஊடகங்களில் எப்போதும் போல சிலரால் பரபரவென பேசப்பட்டு சாய்பாபா மறைந்துபோனார். சாய்பாபா மரணத்திற்கான காரணம் பித்தப்பை கல் அறுவை சிகிச்சை மட்டும்தானா? நாட்டின் மிக மோசமான கொடிய மாவோயிஸத் தீவிரவாதியாக அரசால் சித்தரிக்கப்பட்ட சாய்பாபாவின் திடீர் மரணம் நம்மை அதிர்ச்சி அடையச் செய்யவில்லையா?
ஆந்திர மாநிலம் அமலாபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்து, போலியோ நோயால் பாதிக்கப்பட்டு தனது அன்புத்தாயால் கைகளால் தூக்கிச் செல்லப்பட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் சாய்பாபா. பின்னர் எல்லோரும் வியக்கும் வண்ணம் தில்லிப் பல்கலைக்கழகம் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது சாய்பாபாவைப் பொருத்தவரை சாதாரணமான விஷயமல்ல. இவ்வளவுக்கும் அவர் 2008 ஆம் ஆண்டுவரை சக்கர நாற்காலியை உபயோகித்தது கிடையாது. ஹவாய் செருப்புகளை தன் இரு கைகளிலும் ஏந்தி, தனது உடல் எடை முழுவதையும் தோள்களில் தாங்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து செல்வதுதான் அவருடைய வழக்கம்.
சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் 90 சதவிகித உடல் ஊனத்தோடு வலம் வந்த தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சாய்பாபாவின் வீடு முதன்முதலில் சோதனையிடப்பட்டபோது தேதி 12-09-2013. 50 சாதா உடை போலீஸ்காரர்களாலும், என்.ஐ.ஏ அதிகாரிகளாலும் தில்லிப் பல்கலை. வளாகத்தில் உள்ள அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. லேப்டாப், செல்போன், ஹார்டிஸ்க், பென்டிரைவ் மற்றும் புத்தகங்கள் அவர்களால் எடுத்துச்செல்லப்பட்டன.
தன்னுடைய இளம்வயது தோழியும், காதலியுமான வசந்தாவைத்தான் சாய்பாபா திருமணம் செய்துகொண்டார். பள்ளிப்பருவத்தில் சாய்பாபாவுக்கு கணிதம் சொல்லிக்கொடுத்த வசந்தாவுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார் சாய்பாபா. அமலாபுரம் குக்கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்ற சாய்பாபாவுக்கு சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் தெரிந்தன. சமுகநீதிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணிக்க சாய்பாபாவும், வசந்தாவும் உறுதியெடுத்துக் கொண்டனர். திருமணமும் செய்துகொண்டனர். தில்லிப் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தவுடன் சாய்பாபாவின் உலகம் விரிந்த உலகமாக மாறியது. தலித்துகள், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் நலனுக்கானப் போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்தார். கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது அவரின் உயிர் மூச்சாக இருந்தது. அதனால்தான் 2021 ஆம் ஆண்டு அவர் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டபோது பெரும் வேதனை அடைந்தார்.
09.05.2014 மதியவேளையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது சினிமா பாணியில் அவருடைய கார் சாலையில் வழிமறிக்கப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரைத் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றும் வேகத்தில் அவருடைய இடது கை நரம்புகள் பாதிக்கப்பட்டது. சக்கரவண்டி இல்லாதபோது அவருடைய தவழும் உடல் எடை முழுவதும் அவருடைய இரு கைகளின் மூலம்தான் தோள்கள் தாங்கியது. இடது கை பாதிப்பினாலும், அதற்கு உடனடியான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதனாலும் பிற்காலத்தில் அவருடைய உடலின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்திற்கும், சாய்பாபாவுக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறை கூறியது. சாய்பாபா குற்றவாளி என்பதற்கு இந்த ஆதாரங்கள் போதும் என்று நீதிமன்றமும் கூறியது. ஆயுள் தண்டனை விதித்தது. எட்டு வருடங்கள் நாக்பூரின் முட்டை வடிவ அன்டா தனிமைச்சிறையில் சாய்பாபா வாடியபிறகு, அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சாய்பாபா குற்றம் புரிந்தவர் என்பதற்கு சரியான ஆதாரமாக இருக்கமுடியாது என்று எந்த நீதிமன்றங்கள் எந்த சட்டத்தைப் பயன்படுத்தி அவர் குற்றவாளி என தீர்ப்பளித்ததோ அதே நீதிமன்றங்கள் அதே சட்டத்தைப் பயன்படுத்தி அவர் ஒரு நிரபராதி என்று 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தன. சாய்பாபா எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை பெற்றார். பேராசிரியர் சாய்பாபா வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டபோது அங்கு சாய்பாபாவும் இல்லை, எழுதப்படிக்கத் தெரிந்த வேறு எந்த நபருமில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு நபரை மட்டும் சாட்சியமாக வைத்து காவல்துறை பஞ்சநாமத்தைத் தயாரித்தது என்பது தனிக்கதை. (இந்தியக் காவல் துறை அல்லது சட்ட அமலாக்க முகமைகளால் ஒரு இடத்தை சோதனை செய்யும் போது தேடுதலில் கிடைத்த எழுத்துப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொருட்களின் பட்டியல் பஞ்சநாமம் எனப்படும். காவல் துறையினர் இந்தப் பட்டியலில் பஞ்சநாமாக்களிடத்தில் (சாட்சிகள்) கையொப்பம் பெற வேண்டும். இப்பட்டியலின் ஒரு பிரதியில் யார் இடத்தில் சோதனை நடத்தப்பட்டதோ அவரிடத்தில் கையொப்பம் பெற வேண்டும்.)
என்ன ஆச்சர்யம் தெரியுமா? அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரை சிறையிலிருந்து நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்படும்போதெல்லாம் அவருடைய வாகனத்தைச் சூழ்ந்து கமென்டோ படை வீரர்களின் வாகனங்கள் நாற்புறமும் துப்பாக்கிகளைக் குறிப்பார்த்துக் கொண்டு வருவார்களாம். அவர் ஒரு மிகப்பெரும் தீவிரவாதி என மக்களின் பொதுப்புத்தியில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டது.
சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், ( ஊபா ) வின்படி, சாய்பாபா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டு நாக்பூர் அண்டா செல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட இவ்வாண்டு மார்ச் 15ஆம் தேதி வரை எட்டாண்டுகள் அவர் இச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அவருக்கு சக்கர நாற்காலி மறுக்கப்பட்டது என அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் தன் கைகளின் துணை கொண்டும் சக்கர நாற்காலி கொண்டும் இயங்கிவந்த சாய்பாபா, கைதின்போது காவலர்கள் அவரின் கைகளை இழுத்து உடலை போலீஸ் வேனில் ஏற்றிய வேளை அவருடைய கைகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சையும் அவருக்கு மறுக்கப்பட்ட காரணத்தினால் அவரின் உடல் உபாதைகள் மேலும் அதிகமாகின. உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, கோவிட் தொற்று இப்படி ஒவ்வொன்றாக அவரைத் தாக்கிக்கொண்டே வந்தது. சாய்பாவின் கைதுக்குப் பிறகு மீளாத்துயரில் ஆழ்ந்திருந்த அவருடைய துணைவியார் வசந்தாவுக்கும், மகள் மஞ்சீராவுக்கும் இது மேன்மேலும் துன்பத்தை அதிகரித்தது. ஆனாலும் அவர்கள் உறுதியுடன் சாய்பாபாவின் விடுதலைக்குக் குரல் கொடுத்து வந்தனர்.
சாய்பாபா செய்த குற்றம்தான் என்ன? மாவோயிஸ்ட்களோடு தொடர்பு என்றக் குற்றச்சாட்டைத்தான் அரசு தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறது. ஆனால் இக்குற்றச்சாட்டை அரசால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. அதனால்தான் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் செய்த குற்றம் ஒன்று இருக்கிறது. இக்குற்றத்தை அரசோ, நீதிமன்றமோ வெளிப்படையாகச் சொல்வதில்லை. மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் நக்சல்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பசுமை வேட்டை நடவடிக்கையை எதிர்த்து சாய்பாபா போராடியிருக்கிறார். நக்சல்களுக்கெதிரான நடவடிக்கை என்னும் போர்வையில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தல், நாட்டின் காட்டு வளங்களையும், மலை வளங்களையும், நாட்டின் வளமான கார்ப்பொரேட்டுகளுக்கு ஆதரவாகக் கைமாற்ற வகை செய்யும் நடவடிக்கைகள் ஆகியவற்றை பேராசிரியர் சாய்பாபா, எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் மனித உரிமைப் போராளிகள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தனர் என்பதை நாம் அறிவோம். இதுதான் சாய்பாபா செய்திட்ட மாபெரும் தேசத்துரோகக் குற்றமாகும்.
சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைச் சீர்திருத்தும் பள்ளி என்றெல்லாம் அரசியல்வாதிகள் பேசுவதுண்டு. சிறைகளை நவீனப்படுத்தி வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும் உண்டு. என்றாவது சிறைக்குச் செல்லும் வாய்ப்பு எற்படும்போது அவர்கள் சொகுசாக காலம் தள்ளவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. காலனியக் காலத்தின் கொடுமையான தண்டனைமுறைகள் என்னென்ன என்பதை நாம் படித்திருக்கிறோம். வ.உ.சி செக்கிழுத்தார் என்றும் அந்தமான் சிறைகளில் சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் நிறைய வாசித்திருக்கிறோம். ஆனால் இந்த 21 ஆம் நூற்றாண்டில், உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், 1990 களுக்குப் பிறகு, அதாவது நாடு கார்ப்பொரேட்களுக்கு திறந்துவிடப்பட்ட பிறகு, மனித உரிமைப் போராளிகளுக்கும், வனங்களையும், மலைகளையும் அழித்து இயற்கை வளம் சுரண்டும் நாட்டின் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்களுக்கும் எதிராகத் தொடுக்கப்படும் தாக்குதல்கள் மிகக் கடுமையானவையாக மாறிப்போயிருக்கின்றன. நாட்டின் சீரான வளர்ச்சிக்கு யாரும் தடை சொல்லப்போவதில்லை. ஆனால் கார்ப்பொரேட்டுகளின் கொள்ளை ஆசைக்கும், அவர்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் நாடு கொடுக்கும் விலை மிகப்பெரிதாக இருக்கும். அதன் சமீபத்திய விலைதான் சாய்பாபா என்னும் மானுடன்.
சிறைச்சாலை சீர்திருத்தம் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. சிறைகள் நன்கு செப்பனிடப்படுகின்றன. ஆனால் சிறைக்காவலர்களின் மனங்கள் என்றுமே செப்பனிடப்படுவதில்லை. சிறைச்சாலையே தண்டனையாக அவர்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும் ஒரு கைதியாகவே மாறிப்போகிறார்கள். அவர்களின் உணர்வுகள் மரத்துப்போகின்றன. சிறையின் உயர்மட்ட அலுவலர்களுக்கும், அரசின் உயர் மட்டத்திலிருப்பவர்களுக்கும் சிறைக்காவலர்கள் ஏவலர்களாக மாறிப்போகிறார்கள். நாட்டின் சிறைகள் விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழிகிறது. விரைவான விசாரணையும் இல்லை. விரைவான பிணையும் இல்லை. நாட்டில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. ஒரு சாய்பாபாவின் வழக்கு தீர்க்கப்படுவதற்குள்ளாக அவரின் ஆயுளும் முடிந்துபோய்விடுகிறது. பல்லாண்டுகள் சிறைச்சாலைக் கொட்டடியில் கிடக்கும் ஒருவரை குற்றமற்றவர் என எழுதும் ஒரு வரி தீர்ப்புக்குப் பின்னால் அவர் இழந்த காலத்தையும், அவர் குடும்பம் பெற்ற பேரிழப்புகளையும் எப்படி ஈடுகட்டுவது?
தில்லியில் வசிக்கும் வசந்தாவுக்கும், நாக்பூரின் அன்டா சிறைச்சாலையில் வாடும் சாய்பாபாவுக்கும் இடையேயான தூரம் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல். பள்ளிப்பருவம் முதல் சாயைப் பிரிந்து எந்த நேரமும் வசந்தா இருந்ததில்லை. மேற்படிப்புக்கு சாய்பாபா ஹைதராபாத் சென்றபோதுகூட அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் அன்பு தழுவிய கடிதங்கள் பிரசித்தம். சாய்பாபா அன்டா சிறையில் அடைக்கப்பட்டபிறகு வசந்தாவுக்குக் கடிதங்கள் எழுதத்தொடங்கினார். அதுவும் ஆங்கிலத்தில். ஏன்? அவர்களின் தாய்மொழியான தெலுங்கில் கடிதங்கள் எழுத அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் தெலுங்கில் எழுத சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது. சிறை நிர்வாகத்திற்குப் புரியும்படியான மொழியில் அவர்கள் எழுதிக்கொள்ளும் கடிதங்கள் இருக்கவேண்டும் என்பது கண்டிப்பான உத்தரவானது. தாய்மொழியையும் மறக்கடிக்கும் சிறைத்தண்டனை மிகக்கொடுமையல்லவா? அதைவிடக் கொடுமை சாய்பாபா எழுதும் ஆங்கிலக் கடிதங்களைப் படித்துணர வசந்தா திணறுவது. முன்பே பார்த்தோமல்லவா…சாய்பாபாவுக்கு கணக்கு வெகுதூரம். வசந்தாவுக்கு ஆங்கிலம் வெகுதூரம். ஆனாலும் நண்பர்களின் உதவியோடு ஆங்கிலக் கடிதங்களை வசந்தா படித்தார். தன் மெல்லுணர்வுகளை ஆங்கிலப் பாடல்களாக்கி அதைக் கடிதங்கள் மூலம் தன் நண்பர்களுக்கு அனுப்பினார் சாய்பாபா. இப்படியாகத்தான் அவருடைய ” Why Do You Fear My Way So Much” கவிதை நூல் உருவானது.
சாய்பாபா விடுதலையான பிறகு புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் சாய்பாபா, தன் மீது ஏவப்பட்ட சிறைக் கொடுமைகளையும், தான் பட்ட சிறைத் துன்பங்களையும் விரிவாக விளக்கினார். போலியாவால் 90 சதவிகித உடல் ஊனமுற்றவரான தன்னை, சிறுவயது முதற்கொண்டு தன் தாய் எப்படி பள்ளிக்கூடத்திற்குத் தூக்கிச் சென்று கல்வியறிவு பெற பாடுபட்டார் என விவரித்த சாய்பாபா, தன்னுடைய தாய் இறக்கும் தறுவாயிலும், இறந்தபிறகும்கூட அவருடைய உடலைக் காண தனக்கு பரோல் மறுக்கப்பட்டது என அவர் விவரித்தபோது எவரும் கலங்காமல் இருந்திருக்கமுடியாது.
முதலில் ஸ்டேன் சுவாமியை இழந்தோம். இப்போது சாய்பாபாவை இழந்துவிட்டோம். இனி இதுபோல ஒருவரையும் இழக்க நீதிமன்றங்கள் அனுமதிக்கக்கூடாது. இப்போதும் கூட பீமா கோரேகான் வழக்கில் பதினாறுக்கும் மேற்பட்ட மனித உரிமைப் போராளிகள் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்படாமல் பல்லாண்டுகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியான பிணையையும், மருத்துவ வசதிகளையும் செய்துதர நீதிமன்றங்கள் முன்வரவேண்டும்.
—————————————
(அம்ருதா நவம்பர் 2024 இதழில் வெளிவந்தது)