மூடநம்பிக்கையும், மகாவிஷ்ணுவும் …

மகாவிஷ்ணுவுக்கு மூடநம்பிக்கைப் பேச்சாளர் என்னும் பட்டம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மிகச்சிறந்த பரிசை மகாவிஷ்ணு பெற்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். கெட்ட பெயரை உடனே எடுத்துவிடலாம். நல்ல பெயர் வாங்குவதற்கு வெகுகாலம் பிடிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள். மிக இளைய வயதில் மூடநம்பிக்கை மனிதன் என்னும் பட்டத்தைத் தானேகவே வலிந்து பெற்றிருக்கிறார். ஒரு பள்ளிக்கூடத்தில் இப்படி தரக்குறைவாக மூடநம்பிக்கைக் கருத்துகளைப் பேசி கைதட்டு வாங்குவது பெருமைக்குரிய செயலா என்ன? அப்படி விதைக்கப்படும் விஷக்கருத்துகளை மாணவப் பிஞ்சு உள்ளங்கள் உடனே கிரகித்துக் கொள்ளும் என்று தெரிந்தேதான் இப்படிப்பட்ட ஆசாமிகள் மிக தைரியமாகப் பேசத் தொடங்குகிறார்கள்.
மூடத்தனமான, அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய அவருடைய பேச்சினை அங்கிருந்த ஒரே ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் மட்டுமே எதிர்த்திருக்கிறார். பதிலுக்கு அவரை மிரட்டும் தொனியில் தொடர்ச்சியாக கேள்வி கேட்கும் மூடநம்பிக்கைப் பேச்சாளர், தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட அந்த ஆசிரியருக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக வெளிப்படையாக அவதூறு பேசுகிறார். மூடநம்பிக்கைக் கருத்துகளை எதிர்த்து கேள்வி கேட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு ஆதரவாக எவரும் பேசவில்லை என்பதுதான் சோகம். ஒருவேளை மகாவிஷ்ணு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்குப் பிறந்திருப்பாரேயானால் அவரும் மாற்றுத்திறனாளியாகப் பிறந்திருப்பதற்கு வாய்ப்பு மிக அதிகம் என அறிவியல் கூறுகிறது. கடந்த காலங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டாத குழந்தைகளுக்கு போலியோ நோய் தாக்கி உடல் ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறிவியல் கூறுகிறது.
இப்பிறவியில் மாற்றுத்திறனாளியாகப் பிறந்ததற்கு, சென்ற பிறவியில் செய்த பாவங்கள்தான் காரணம் என்னும் மூடத்தனப் பேச்சை பேசியிருக்கிறார் மகாவிஷ்ணு. மூடநம்பிக்கை மனிதர்கள்தான் இப்படிப்பட்ட அறிவியல் காரணங்களை மறுத்து, மத நூல்களில் மலிந்து கிடக்கும் புரட்டுகளைத் தேடிக்கொண்டிருப்பார்கள். பாவம். அடிப்படை அறிவற்றவராகப் பிதற்றியிருக்கிறார் மகாவிஷ்ணு. அவரின் கூத்துப் பேச்சை அங்கிருந்த ஒரே ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரைத் தவிர எவரும் எதிர்க்கவில்லை. இதுதான் மிகவும் வெட்கக்கேடானது. இப்போதெல்லாம் ஆசிரியர்கள், வேலைக்கு வந்துவிட்டபிறகு படிப்பதையே மறந்துபோய்விட்டார்கள். நாங்கள்தான் படித்து ஆசிரியராகிவிட்டோமே என்னும் எண்ணமாக இருக்கலாம். தினம் தினம் அறிவை விரிவாக்கும் எண்ணற்ற கருத்துகளும், அவை அடங்கிய புத்தகங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் யூடியூப் வீடியோக்களில் பல்வேறு துறை சார்ந்த அறிவு கொட்டிக்கிடக்கிறது. இக்கருத்துகளைப் பயன்படுத்திக் கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
தீயக் கருத்துகளை மாணவப்பருவத்தில் விதைக்க பல்வேறு அமைப்புகள் இப்போது துடிக்கின்றன. போதைப்பழக்கமும், குடிப்பழக்கமும் மாணவர்களை, இளைஞர்களை வாட்டி வதைக்கும் இச்சூழலில், மகாவிஷ்ணுக்களை அதிகாரப்பூர்வமாகப் பேசவைப்பதையெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொள்வது?. சென்ற தலைமுறை மாணவர்களுக்குக் கிடைத்திட்ட நீதிபோதனை வகுப்புகள் இப்போது இருக்கின்றனவா? இல்லை. அதே நேரத்தில் மகாவிஷ்ணுவின் பேச்சை நீதிபோதனை சொற்பொழிவாக எடுத்துக் கொள்ளும் ஆசிரியர்களும் உண்டு. நாம் முன்பே சொன்னதுபோல, படிப்பறிவு அருகிப்போன ஆசிரியச் சமுதாயத்துக்கு எது நீதிபோதனை, எது மூடநம்பிக்கை எனப் பிரித்தறிவதில் சிக்கல் இருப்பதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. கைகளில் ஆயுதங்களோடு பள்ளிக்கூடத்திற்கு வரும் இன்றைய மாணவர்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு முன் ஜென்ம பாவங்கள் குறித்த கதைகளும், மிரட்டல்களும் இப்போதைய ஆசிரியச் சமுதாயத்துக்கு அவசியம் போலும், ஆனால் இது சரியான வழியாக இருக்கமுடியாது. பாட நேரங்கள் போக மிச்சம் உள்ள குறுகிய நேரங்களிலாவது மாணவர்களிடம் ஆரோக்கியமான உரையாடலை நடத்த ஆசிரியர் சமுதாயம் முன்வரவேண்டும். அதற்கு ஆசிரியர்கள் நிறையப் படிக்கவேண்டும். ஏனென்றால் சமூகப் பொருளாதார நெருக்கடிகளின் கடினமான சூழலில் மாணவர்கள் பள்ளிக்குப் படிக்க வருகிறார்கள். சமுக வலைத்தளங்கள், ஆபாசங்கள், சினிமாக்கள் போதிக்கும் வன்முறைகள் இவைகளைத்தாண்டி மாணவர்கள் பள்ளிக்கு வரவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. மாணவர்களின் இச்சூழலை ஆசிரியர்கள் புரிந்துகொள்வதன் மூலமே அவர்களுடன் ஆசிரியர்கள் ஆரோக்கியமான உரையாடலை நடத்தமுடியும். ஆரோக்கியமான உரையாடலை நடத்திட ஆசிரியர்களுக்குத் துணிச்சல் மிக அவசியம். எளிய பேச்சுகளும், அரட்டைகளும், ஆபாசங்களும் இன்றைய மாணவர்களை எளிதில் ஈர்க்கின்றன. நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் இடையேயான மெல்லியக் கோட்டை ஆசிரியர்களே உணர்ந்துகொள்ள அல்லது உணர்ந்துகொள்ள மறுக்கும் நிலைதான் இன்றைய சமூக, அரசியல் சூழல் ஆக்கி வைத்திருக்கிறது. அறிவியல் பாடங்கள் வகுப்பறைகளோடு முடிந்துபோய்விடுகின்றன. வகுப்பு முடிந்தபிறகு அறிவியல் மனப்பான்மையும் விடை பெற்றுக்கொள்கிறது.
நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும், ஐதீகங்களும், உண்மை வரலாறும் நம் சமூகத்தில் ஏராளம் உள்ளன. பண்பாடு, கலாச்சாரம் போர்வையில் மூடநம்பிக்கைக் குப்பைகளும் ஏராளம் உண்டு. தீமிதியும், அலகுக் குத்துதலும் இப்போதும் உண்டு. நாள்முழுக்க கடும் வெயிலில் பல நாட்கள் நடந்தே சென்று வேண்டுதலை நிறைவேற்றும் கிறித்தவர்களும், இந்துக்களும் ஏராளம் உண்டு. நம்பிக்கையின்பாற்பட்ட செயல்பாடுகளுக்கும், மூடத்தனமான பழக்கவழக்கத்திற்கும் இடையேயான மெல்லிய கோடு மிக முக்கியமானது. கடந்த காலங்களில் நம்பிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்ட சில பழக்கவழக்கங்கள் இப்போது வடிகட்டிய மூடப்பழக்கவழக்கமாக மாறிப்போவதுமுண்டு. சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் அப்படிப்பட்ட ஒன்று. கணவன் இறந்தபிறகு மனைவியும் கணவனின் சிதையில் இறங்கியோ அல்லது அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அச்சிதையில் தள்ளியோ உயிர் துறக்கும் பழக்கம். அக்காலத்தில் இப்பழக்கம் மதத்தின் ஒப்புதலையும் பெற்றிருந்ததை நாம் கவனிக்கவேண்டும். குழந்தைத் திருமணம் கடந்த காலங்களில் நம்பிக்கையான ஒரு பழக்கவழக்கமாக இருந்தது. விதவைத்திருமணம் ஒரு மூடப்பழக்கவழக்கமாக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழ். எனவே நம்பிக்கையும், மூடநம்பிக்கையும் காலத்தால், மக்களின் அறிவியல் மனப்பான்மையால், மனித உரிமைகளால் மாறிக்கொண்டே இருக்கவல்லது.
எல்லா மூடநம்பிக்கைகளும் மதங்களின் இடுக்குகளில் மட்டுமே அடைக்கலம் தேடுகின்றன. மதங்களும் மிகத்தாராளமாக அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்துவிடுகின்றன. மகாவிஷ்ணுவும் திருமூலரைத்தான் மேற்கோள் காட்டுகிறார். எனவேதான் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மனிதர்களை மதப்பழமைவாதிகளும், மதத்தீவிரம் கொண்டோரும் எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சில சமயங்களில் கொல்லவும் கூடத் துணிகிறார்கள். மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில் எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை கிறித்துவப் பழமைவாதிகள் கொடும் தண்டனைக்கு உட்படுத்தினார்கள். வரலாற்றின் பக்கங்களிலிருந்து நிறைய உதாரணம் சொல்லமுடியும். நம்முடைய காலத்தில் மஹாராஷ்டிரத்தில் மூடநம்பிகை ஒழிப்பு இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கரை இந்துத்துவ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற நிகழ்வும் நடந்தது.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மூடநம்பிக்கையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பெரியோர்கள் தோன்றியபடியேதான் இருக்கிறார்கள். மகாவிஷ்ணுக்களின் மூடப்பேச்சுகள் இப்பெரியோர்களின் அவசியத்தை மேலும் அதிகமாக்குகின்றன.
“நம்பிகை என்றால் என்ன?” என்னும் தலைப்பில் நரேந்திர தபோல்கர் எழுதியுள்ள ஒரு கட்டுரையின் சில வரிகளோடு இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.
“மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் முழுமையும் இந்தக் கட்டுரையின் தலைப்பையே சார்ந்திருக்கிறது. நம் மீது வீசப்படும் கற்களும், மலர்க்கணைகளும் இத்தலைப்போடு தொடர்புடையவை. நம்முடைய செயல்பாடுகள் அர்த்தப்பூர்வமானது, அறிவுப்பூர்வமானது மற்றும் உபயோகமானது என சிலர் எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டிருப்போரும் உண்டு. மூடநம்பிகைகளை ஒழிக்கவில்லையெனில் 21 ஆம் நூற்றாண்டில் நாம் வெற்றியடையமுடியாது என சிலர் கூறுவதற்கிடையில், மூடநம்பிக்கை ஒழிப்பு என்னும் போர்வையில், மதம், கடவுள் மற்றும் நம்பிக்கைகளை ஒழிக்கும் முயற்சிதான் இது என வேறு சிலர் நினைக்கக்கூடும். சரி, அப்படியென்றால் மூடநம்பிக்கை என்றால் என்ன? எரியும் கரித்துண்டில் சேரும் சாம்பலை ஒத்ததுதான் மூடநம்பிக்கை. அந்த சாம்பல் துகளை ஊதி அகற்ற அகற்ற அக்கரித்துண்டு மேலும் மேலும் பிரகாசிக்குமல்லவா. சாம்பல் துகளை ஒத்த மூடநம்பிகையை அகற்றும் அதே வேளையில் அக்கரித்துண்டின் நெருப்பை அணைத்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மூடநம்பிக்கையை ஒழிப்பது குறித்து ஏன் இவ்வளவு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன? ஏனென்றால் ஒருவரின் நம்பிக்கையானது இன்னொருவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கலாம், மூன்றாவது நபரின் மூடநம்பிக்கையானது நான்காம் நபரின் மிக வலுவான நம்பிக்கையாக இருக்கலாம். எனவே நம்பிக்கை என்றால் என்ன? மூடநம்பிக்கை என்றால் என்ன? என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகும். ஆனாலும் இப்படிப் பிரித்தறிவது கடினமானதுதான். ஏனென்றால் நாம் முன்பே பார்த்தபடி ஒருவரின் நம்பிக்கை என்பது அவரையும், அவருடைய காலத்தையும் சார்ந்திருப்பது”.
(அம்ருதா, அக்டோபர் 2024 இதழில் வெளிவந்த கட்டுரை.)