கல்குதிரையின் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ்
தஸ்தயேவ்ஸ்கி குறித்தும், அவருடைய படைப்புகள் குறித்தும் வாசிக்கும்போதெல்லாம் நம் மனம் எழுச்சி கொள்ளாமல் இருந்ததில்லை. தீவிர வாசிப்புக்குச் சொந்தக்காரர்கள் எல்லோரும் அவருடைய ஏதோ ஒரு படைப்பை வாசித்திருப்பார்கள். கடந்த 150 ஆண்டுகளில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இந்த உலகை மெஸ்மரிசம் செய்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். அவருடைய இறுதிப் படைப்பான கரமசோவ் சகோதரர்கள் இதுவரை இவ்வுலகில் படைக்கப்பட்ட படைப்புகளுள் உச்சக்கட்டமானது. அதற்கான ஒரே சாட்சி டால்ஸ்டாய். தன் இறுதிக்காலத்தில் அவர் தன்னோடு வைத்துக்கொண்டிருந்த ஒரே நூல் பைபிள் அல்ல, கரமசோவ் சகோதரர்களைத்தான். உள்மன விசாரணையை இறக்கும்வரையிலும் நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்கு ஒரே உதாரணம் டால்ஸ்டாய். அதனால்தான், அவர் தான் இறக்கும் தருவாயிலும் கரமசோவ் சகோதரர்கள் கூடவே வாழ்ந்தார். தமிழ்ச்சூழலில் தஸ்தயேவ்ஸ்கி தீவிர வாசகர்களால் விரிவான வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். நன்கு உள்வாங்கப்பட்டிருக்கிறார். 1990 களில் தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ் ஒன்றை கோணங்கியின் கல்குதிரை இதழ் வெளியிட்டதை நாம் அறிவோம். சு.ரா., எஸ்.வி.ஆர், முத்துமோகன், சா. தேவதாஸ், கோபி கிருஷ்ணன், தேவதச்சன், சி. மோகன், கோமதி விநாயகம், குறிஞ்சிவேலன், நகுலன், பிரமிள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் இச்சிறப்பிதழில் பங்களித்துள்ளார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் ஆளுமை மிக விரிவாகவே இவ்விதழில் அலசப்பட்டிருக்கிறது.
இவ்வுலகில் துன்பத்தை ஏற்று வாழ்வதே மறுமையில் நம்மை உய்வித்துக் கொள்ள ஒரே வழி என்னும் கிறித்துவத்தின் இறையியலை ஒட்டியே தன் வாழ்க்கையை வாழ்ந்தவர் தஸ்தயேவ்ஸ்கி. அன்றைய ஜார் ஆட்சி மீதான வெறுப்பின் விளைவாக இளம் வயதில் புரட்சிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அரசினால் தண்டிக்கப்பட்டார். முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் சைபீரியாவில் நான்கு ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை அனுபவிக்கும் விதமாக அது மாற்றப்பட்டது. சிறை வாழ்க்கையிலும், அதன் பிறகும் தன்னுடைய முந்தைய புரட்சி எண்ணங்களிலிருந்து விடுபட்டு, கிறித்துவ இறையியலை முழுவதுமாகக் கைகொள்ள ஆரம்பிக்கிறார். அவர் கூடவே பைபிளும் இருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி வாழ்வின் துன்ப துயரங்களின் அடிமுடிக்குச் சென்று பின் மீண்டெழுகிறார். சிறை வாழ்வுக்குப் பிறகு, ருஷ்யாவின் தேசியத் தன்மைக்கு தன்னை முழுமையாக ஒப்புவித்துக் கொண்டார்.
‘கொல்லப்பட வேண்டிய தந்தைகள் ஏராளமாக இருக்கிறார்கள்’ என்னும் வாக்கியத்தை கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வாசித்த நினைவிருக்கிறது. தந்தையின் மூலம் அவர் குடும்பம் அடைந்த துன்பமும், துயரமும்தான் தஸ்தயேவ்ஸ்கியின் அடிமன ஆழத்தில் போடப்பட்ட பெரும் சவுக்கடி. தாயின் நடத்தை மீது சதா சந்தேகம் கொண்டு அவரை சித்திரவதை செய்து கொண்டே இருந்தார் தஸ்தயேவ்ஸ்கியின் தந்தை. ஏழு குழந்தைகளுக்குத் தாயான பின்னரும்கூட அவரின் சந்தேகச் சித்திரவதை ஓயவில்லை. தஸ்தயேவ்ஸ்கியைக் குறித்துப் பேசும்போதெல்லாம், படிக்கும்போதெல்லாம் தந்தைகளின் நினைவுகள் யாருக்கும் வராமல் இருந்ததில்லை. தஸ்தயேவ்ஸ்கி என்னும் ஆளுமையை வடிவமைத்ததில் அவருடைய தந்தையின் பங்கு அளப்பரியது. நேர்மறையான பங்கு அல்ல, எதிர்மறையானது. தன்னுடைய தாய் மரணமடைந்து இரு வருடங்களில் தந்தையும் படுகொலை செய்யப்பட்டவுடன் தன்னுடைய தங்கைகளின், தம்பிகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து ஏங்கியபோது அவருடைய ஆழ்மனம் பாதிக்கப்பட்டு உடன் வலிப்பு நோய் வருகிறது. தந்தையின் மரணம் குறித்து அவர் எங்கும் பேசியதோ அல்லது எழுதியதோ கிடையாது. தந்தையின் இல்லாமையை உணர்ந்த நேரத்தில் அவரது உடலை நோய் தாக்குகிறது. இதுவரை தந்தையின் மீது இருந்துவந்த கோபம் மறைந்துபோய் விடுகிறது. தந்தையின் படுகொலைக்கு தானும் (தன் தந்தையை வெறுத்ததன் மூலம்) ஒரு காரணமாகிவிட்டோமோ என்று மனத்துன்பம் அடைகிறார்.
அறியப்படாத தஸ்தயேவ்ஸ்கி என்னும் தலைப்பில் அறிஞர் முத்துமோகன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கி குறித்த ஒரு சிறப்பான அறிமுகமாக இக்கட்டுரை அமைந்திருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கியின் தாய் படும் வேதனையை அத்தாயின் வார்த்தைகளால் எடுத்துரைக்கிறார்: “இப்போது நான் வயிற்றில் ஏந்தியிருப்பது ஏழாவது முறையாக நம் இருவரின் நேசத்தில் விளைந்தது. சத்தியம் செய்கிறேன். திருமண நாளிலிருந்து நான் உங்கள் மீது கொண்ட பரிசுத்தமான, புனிதமான, உணர்ச்சி மயமான, நிலைத்த, குறைபாடில்லாத காதலில் விளைந்தது அது”. அத்தாயின் எப்படிப்பட்ட மன்றாடுதல்களும் கேட்பாரற்றுப் போய்விடுகிறது. இறுதியாக தஸ்தயேவ்ஸ்கியின் தாய் 1837 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 இல் இறந்துபோகிறார். தஸ்தயேவ்ஸ்கியின் தந்தையும் அடுத்த இரு வருடங்களில், 1839 ஜூன் 8 அன்று கொலை செய்யப்படுகிறார். தஸ்தயேவ்ஸ்கி தன் முதல் நாவலான ‘பாவப்பட்ட ஜனங்கள்’ மூலமாக ரஷ்ய இலக்கிய உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து பின், எழுத்தாளர் துர்கனேவின் எதிர்மறையான விமர்சனங்களால் மனமுடைகிறார். தன்னை குறுக்கிக் கொள்கிறார். அத்துடன் தஸ்தயேவ்ஸ்கியின் முதலாம் கட்ட இலக்கிய வாழ்வும் முற்றுப்பெறுகிறது.
‘காலத்தின் குழந்தை’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் சா. தேவதாஸ் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் தஸ்தயேவ்ஸ்கியைப் பேசவேண்டியதன், வாசிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதில் ஆரம்பிக்கும் கட்டுரை, தஸ்தயேவ்ஸ்கியை எதிர்மறையாக விமர்சனம் செய்திட்ட மாக்சிம் கார்க்கியை கடுமையாக எதிர் விமர்சனம் செய்வதோடு கட்டுரை முடிகிறது. தஸ்தயேவ்ஸ்கி என்னும் கலைஞனின் பணி மகத்தானது என விளக்கும் சா. தேவதாஸ், ஒரு மனிதன் ஒரு நேரத்தில் நல்லவனும் ஆவான், பிறிதொரு நேரத்தில் கெட்டவனும் ஆவான். அவனுடைய ஒரு தன்மையைக் கொண்டு மட்டும் அவனின் குணாம்சத்தை நிறுவ முயல்வது அபத்தமானது என தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் வழி சொல்கிறார். கரமசோவ் சகோதரர்கள் படைப்பில், கரமசோவ் சகோதரர்களின் தந்தை கொலையுறுவதும், மூத்த சகோதரர் திமித்ரி அக்கொலையைச் செய்யாவிட்டாலும், சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் அக்கொலைக்கான பழி திமித்ரி மீது விழுவதும், நீதிமன்றம் திமித்ரிக்கு தண்டனை வழங்குவதும் நாம் அறிந்ததுதான். தஸ்தயேவ்ஸ்கி சொல்லவரும் மையச்சரடு என்ன தெரியுமா? ஒரு கொலையை ஒருவன் செய்திருந்தபோதிலும், அதற்கு முழுப்பொறுப்பும் அந்தச் சமுதாயமே ஏற்கவேண்டும் என்பதே. ஒரு கொலைக்கான தோற்றுவாய் என்பது அந்தச் சமூகத்தில்தான் வேரூன்றி இருக்கிறது. கொலையைச் செய்தவன் ஸ்மெட்ரியாகோவ்தான். ஆனாலும் தந்தையைக் கொல்ல திட்டம் தீட்டியவன் மூத்த சகோதரன் திமித்ரி என்பதாலும், கொலைக்கான திட்டங்கள் வகுத்துக் கொடுத்தவன் என்னும் முறையில் அடுத்த சகோதரன் இவானும், கொலைக்கான மௌன சாட்சியாக இருக்கும் இளைய சகோதரன் அல்யூஷாவும் இக்கொலைக்கு காரணகர்த்தாக்களாகவே தஸ்தயேவ்ஸ்கி காட்டுகிறார். எல்லோருக்கும் நீதிமன்றம் சரிசமமான தண்டனை வழங்குகிறதா என்ன?
நம்பிக்கை – நம்பிக்கையின்மை என்னும் இருமை நிலையை தஸ்தயேவ்ஸ்கி கொண்டிருந்ததை சா. தேவதாஸ் குறிப்பிடுகிறார். எல்லாம்வல்ல இறைமை (இயேசு கிறித்து) மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கி, சமூகத்தில் நடக்கும் சில கொடும் செயல்களைக் கண்ணுற்ற பிறகு, இறைமையின் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறார். யதார்த்தத்தின் அனைத்து அம்சங்களையும் மிகத் தீவிரத்தோடு வெளிப்படுத்துவதே தஸ்தயேவ்ஸ்கியின் சிறப்பம்சம். எதையும் மதிப்பீடு செய்வது எழுத்தாளனின் வேலையல்ல. தஸ்தயேவ்ஸ்கி முற்றும் முழுதாக இதற்குப் பொருந்திப் போகிறார். கார்க்கி தஸ்தயேவ்ஸ்கியை விமர்சனம் செய்ததற்கும் தேவதாஸ் பதில் தருகிறார்:
‘கார்க்கி, தாஸ்தாயெவ்ஸ்கியை விமர்சிக்கும்போது இப்பிரச்சனை தான் எழுகின்றது. இருண்ட பக்கங்களை எடுத்துரைத்த தாஸ்தாயெவ்ஸ்கி மனித எழுச்சிக்காக ஒன்றும் கூறவில்லை என்பதுதான் கார்க்கியின் வருத்தம். படைப்பாளியாகவும் இருந்த கார்க்கி சோசலிச யதார்த்த வாதத்தை தூக்கிப்பிடித்த காலத்தில் இப்படி எழுத முடிந்தது எத்தகைய முரண்பாடு! வாழ்வின் ஆதர்ச விஷயங்களையும், உற்சாகமும் ஊட்டக்கூடியவற்றையும் மனிதனுக்குக் கூறுவது கலைஞனின் பணியில்லையா? மனிதனிடம் நேசம் கொண்டு, அவனது அவலத்தைக் கண்டு புழுங்கி பொறுக்கமாட்டாமல் தானே எழுதத் தொடங்குகிறான். பிரச்சனையை அதன் வீர்யம் குன்றாத வகையில் உணர்த்திவிட்டாலே போதும். அது விளைவைத் தொடங்கி வைத்துவிடும். பிரச்சனையைத் தீர்க்க என்ன செய்யவேண்டும், எப்படிச் செயல்படவேண்டும் – என்பவற்றையெல்லாம் மக்கள் தாங்களே வகுத்துக் கொள்வர். மேலும், தீர்வு என்பது காலதேசவர்த்தமானங்களுக்கு ஏற்ப அப்போதைக்கப்போது தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம். அதனை முன்கூட்டியே கூறுவது சரி யில்லாதது. இதனைக் கலையின்பால் சுமத்தி கலையின் ஜீவனை நசுக்கி விடுவது அழகல்ல. அரசியல்வாதியின் பணியை கலைஞனிடம் சுமத்தக் கூடாது. கலைஞன் செயல்வீரனாகவும் பொங்கி எழலாம். அது அவனது அடுத்தகட்டப் பணியே தவிர கலைஞனாக நின்று கலைக்குள் ஆற்றும் பணியல்ல. ஒவ்வொரு சாதனம், ஒவ்வொரு வடிவம் – இவற்றின் வரம்பு களை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டாலே அதனதன் வெற்றி சாத்தியம்.
நூற்றாண்டுகளாக ருஷ்ய ஆன்மா பட்ட பாடுகளை, சித்திரவதைகளை வெளிப்படுத்தி நசிந்துவரும் அய்ரோப்பா முழுவதையுமே மீட்டெடுக்கும் ஆற்றல் ருஷ்ய ஆன்மாவுக்கு உண்டு என்று நம்பியவரை, “வாழ்வின் இருண்ட அம்சங்களை வலியுறுத்தி அவநம்பிக்கைக்கும் அநுபூதி போன்றவற்றிற்கும் இட்டுச் செல்லக் கூடியவர்” என்று மதிப்பிடுவது எப்படிச் சாத்தியமாயிற்று? சக மனிதன் பாலான நேசம், தான் சார்ந்த சமூகம், பின்னர் தான் சார்ந்த நாடு, பின்னர் இப்பிரபஞ்சம் முழுமைக்குமாக விரிவு கொண்டு பிரபஞ்ச இணக்கம் காண வேண்டும் என்று கருதியவரை அவநம்பிக்கைவாதி என்று முத்திரை குத்துவது சரியாகுமா?. “இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையே மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நான் நம்பமாட்டேன்” என்று கூறியவரை எதிர்மறை விமர்சனத்திற்குள்ளாக்குவது சரியாகுமா?. “அங்கே மாதாகோவில்கள் இல்லை. ஆனால் அவர்கள் பிரபஞ்சத்தின் ஆகமொத்தத்திலும் உயிர்த் துடிப்பான, நெருக்கமான, தொடர்ச்சியான தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களிடம் கோட்பாடுகள் இல்லை; ஆனால் அதற்குப் பதிலாக, இவ்வுலக வாழ்க்கையெனும் பேரின்பம் அதன் இவ்வுலகத் தன்மையின் முடிவான அளவுக்கு நிறைவு பெறும்பொழுது அவர்கள் அனைவரும் – வாழ்பவர்களும் மரணமடைந்தவர்களும் – பிரபஞ்சத்தின் ஆக மொத்தத்துடன் இன்னும் மிக நெருக்கமான தொடர்பை அடைவார்கள் என்ற அசைக்க முடியாத அறிவைக் கொண்டிருந்தார்கள். (அப்பாவியின் கனவு, “ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி – சிறு கதைகளும் குறுநாவல்களும்,” ராதுகா பதிப்பகம், மாஸ்கோ, பக். 370) என்றவாறு பிணக்கற்ற இணக்கத்தை மானுடம் அடையவேண்டும் என்று கனவுகண்ட கலைஞனை விரல் நுனியில் ஒதுக்கிவிடுவது துரோகமாகும்.’
இனங்கள் சேர்ந்துவாழ்வது முடியாதுபோய், விடுதலைக்குரல் எழுப்பும் இனத்தை நசுக்கி எறிந்துவிட கூர்நகங்கள் நீள்வதும்,
சாதியின் பெயரால் சமயத்தின் பெயரால் அரசியல் சாயத்தின் பெயரால் கடவுளின் பெயரால் மனிதர்கள் வதைப்படுவதும்,
சித்தாந்தங்கள் பெயரால் மனித விடுதலை ஒடுக்கப்படுவதும்,
நிராசையும் தோல்வியும் கசப்புணர்வும் வாழ்க்கையின் போக்காக இருப்பதும்–
இன்றைய நிலையாக இருக்கிறது. தாஸ்தாயெவ்ஸ்கி பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம். இதுதான் தகுந்த நேரம். அது தாஸ்தாயெவ்ஸ்கி பற்றிய புரிதலுக்கு மட்டுமல்லாது வாழ்வின் அடிநாதம் பற்றிய விளக்கத்திற்கும் வழிகோலும்.
என்று முடிக்கிறார் தேவதாஸ்.
ருஷ்யாவின் தேசியக்கவி புஷ்கின் குறித்து தஸ்தயேவ்ஸ்கி ஆற்றிய உரையின் தமிழாக்கம் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மிக அருமையான படைப்பு. புஷ்கினை தேசிய நாயகனாக்கி மாஸ்கோவில் முதல்முறையாக சிலை நிறுவி மாபெரும் இலக்கிய நிகழ்வை 1880 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள், ரஷ்ய இலக்கிய நேசர்கள் மாஸ்கோ சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தஸ்தயேவ்ஸ்கி உரையாற்றுவதற்கு முதல்நாள் துர்கனேவ் உரையாற்றினார். தனது வாழ்வின் பெரும்பாலான காலத்தை ஜெர்மனியில் கழித்த துர்கனேவால், புஷ்கினை ஒரு தேசியக் கவியாக அங்கீகரிக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்தார். மறுநாள் உரையாற்றிய தஸ்தயேவ்ஸ்கி, தனது பேச்சின் தொடக்கத்திலேயே புஷ்கினை ருஷ்யாவின் தேசியக் கவியாக அங்கீகரித்தார். உலகம் தழுவிய மானுட ஒருமைப்பாட்டினை இந்த உரையில் தஸ்தயேவ்ஸ்கி பிரகடனம் செய்தார். புஷ்கினின் இந்த உரை ஒட்டுமொத்த ருஷ்யர்களின் ஆன்மக் கிடக்கையை வெளிப்படுத்தியது. ஒட்டுமொத்த ருஷ்யர்களும் தஸ்தயேவ்ஸ்கியைக் கொண்டாடினர். தஸ்தயேவ்ஸ்கியின் உரையைக் கேட்ட மாத்திரத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் எதிர்த்துருவமாக இருந்த துர்கனேவ் ஓடிவந்து தஸ்தயேவ்ஸ்கியை ஆரத்தழுவிக்கொண்டார். இருபது வருட பகைமை பாராட்டிய இருவரும் நண்பர்களாயினர்.
18 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ருஷ்யாவில் பிரபு குலத்தவரிடையே வெகுவாக ஆதிக்கம் செலுத்திய ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை வெறுத்த ருஷ்ய மக்கள், தங்களின் ஸ்லாவானிய ருஷ்ய மொழியை நிலைபெறச்செய்ய முயற்சி செய்த வேளையில்தான் அலெக்சாண்டர் புஷ்கின் நவீன ருஷ்ய இலக்கியத்தின் மேதைமைக்குத் தலைமை தாங்கினார். உறங்கிக்கிடந்த ருஷ்ய ஆன்மாவைத் தட்டி எழுப்பினார். புஷ்கினை ருஷ்ய மக்கள் கொண்டாட காரணம் இருந்தது. முதலாவதாக, மக்களிடமிருந்து விலகியிருப்பதையும், அதன் காரணமாக வந்த ஆணவத்தை பெருமிதமாகவும் கருதிக்கொண்டிருந்த கல்வி கற்ற பிரபுக்குலத்தவர்களின் போலித்தனத்தை அவரால் தோலுரிக்கமுடிந்தது. தங்களையும், ருஷ்ய சமூகத்தையும் நிராகரித்து தங்களுக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்த மேட்டுக்குடிகளின் எதிர்மறையான நிலைப்பாட்டை புஷ்கின் தனது படைப்புகளின் வழி பதிவு செய்தார். The Gipsies படைப்பில் புஷ்கினின் பாத்திரமான அலெகோவும், யூஜின் ஒனிஜீன் படைப்பில் ஒனிஜீனும் மேற்கண்ட வகைமாதிரிகளாகக் கொள்ளலாம். இரண்டாவதாக புஷ்கினின் படைப்புப் பாத்திரங்கள் அனைத்தும் ருஷ்ய மண்ணின் வகை மாதிரியானவை. தாதியானா அப்படிப்பட்ட ஒரு படைப்பு. மேல்தட்டு நாகரிகத்திலும், ஐரோப்பிய வகை நாகரிகத்திலும் காணக்கிடைக்காத ருஷ்யாவின் ஆன்ம வேரிலிருந்து சத்துகளைக் கிரகித்து தன் பாத்திரங்களை புஷ்கின் படைத்தார். மூன்றாவதாக உலகம் முழுமைக்குமான முரண்களுக்கு இணக்கம் காணுதலின் முயற்சியில் தன்னுடைய படைப்புகளின் வழியே புஷ்கின் ஈடுபட்டார். நாடோடிகள் போன்று அலைந்து திரிதலை அடிப்படையான ருஷ்யப் பண்பாக புஷ்கின் தனது படைப்புகளில் குறிப்பிடுகிறார்.
ருஷ்யாவின் மாபெரும் எழுத்துகளை ‘பிற்போக்குக் குப்பைகள்’ என புரட்சிக்குப் பிந்தைய சோவியத் ருஷ்ய கம்யூனிச அரசுகள் ஒதுக்கித் தள்ளிய போதிலும், புஷ்கினின் எழுத்துகளை மட்டும் உச்சியில் வைத்துக் கொண்டாடவே செய்தன. தன் இளம் வயதிற்குள் தன் படைப்பாற்றலின் உச்சியில் இருந்தபோது, அந்த மாபெரும் கவி அகால மரணத்தைத் தேடிக்கொண்டவன். அம்மாபெரும் கவி குறித்துதான் தஸ்தயேவ்ஸ்கி சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்துகிறார். அவரது உரை முழுவதும் புஷ்கினின் முக்கியமான காவியமான ‘ஈஜின் ஒனிஜின்’ குறித்துத்தான் அமைகிறது.
ஒனிஜீன் பீட்டர்ஸ்பர்க் நகர பிரபுக் குலத்தின் சிறு குழுவைச் சேர்ந்தவன். அக்குழுவின் பிறரைப் போலவே பொறுமையின்றியும், இறுமாப்புடனும் நடந்து கொள்பவன். மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, குடியானவர் உழைப்பை அடைப்படையாகக் கொண்டு, அய்ரோப்பியக் கல்வி சார்ந்து இயங்கியது இக்குழு. இறந்துபோன தன் மாமாவின் சொத்துகளுக்கு அதிபதியாகியவன். சமூகத்திலிருந்து அந்நியத்தன்மையை விரும்பியவன். தன் சொந்த மண்ணில் உழைப்பது சாத்தியமற்றது என்று எண்ணியவன். தான் பங்கேற்கும் ஒரு கிராமப்புற நிகழ்வில் தாதியானாவை சந்திக்கிறான். அவள் அழகும், அறிவும் அவனுக்குப் பிடித்திருக்கிறது. தாதியானாவும் அவனை விரும்புகிறாள். தன் காதலைத் தெரிவிக்கிறாள். ஆனால் ஒனிஜீன் அக்காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. “மறைந்திருக்கும் சோர்வின் அரக்கத்தலைவனால்” பாதிக்கப்பட்டுள்ளான் என தஸ்தயேவ்ஸ்கி ஒனிஜீன் குறித்து குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமானதே.
தாதியானாவின் காதலை நிராகரித்து விட்டதோடு தன் நண்பன் லென்ஸ்கியையும் கொலை செய்கிறான் ஒனிஜீன். பின்னர் ஒனிஜீன் நாடோடியாக ருஷ்யாவைச் சுற்றுகிறான். சில ஆண்டுகள் கழித்து பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கும் நிகழ்வொன்றில் பீட்டர்ஸ்பர்க்கே புகழும் ஒரு அழகு மங்கையைக் கண்ணுறுகிறான். அவள் வேறு யாருமல்ல. தாதியானாதான். இப்போது அவள் சற்றே வயதான ஒரு ராணுவ ஜெனரலின் மனைவி. ஒனிஜீன் அதிர்ச்சி அடைந்தாலும் இப்போது தாதியானா மீது காதல் வசப்படுகிறான்.
தன் காதலை தாதியானாவிடமும் தெரிவிக்கிறான் ஒனிஜீன். அவனுடைய அன்பை ஏற்றுக்கொள்ளும் தாதியானா, அவனுடன் கூட வர மறுக்கிறாள். செல்வச் செழிப்பும், இளமையும், தன் மீது அளவிலா காதலும் கொண்டுள்ள ஒனிஜினைப் பின் தொடர்ந்து செல்ல தாதியானா விரும்பவில்லை. தான் இளமையில் அவன் மீது காதல் கொண்டது உண்மைதான். ஆனால் அதை அவன் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு குடும்ப சூழலில் தாயின் மன்றாடுதலின்பேரில் சற்றே வயதான ராணூவ ஜெனரலை அவள் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறாள். இப்போது அந்த வயதான மனிதன் அவளுக்கு கணவன். அக்கணவனின் மூலம் செயின்பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு செல்வாக்கான சீமாட்டியாக அவள் வலம் வருகிறாள். ஒனிஜீன் பின் செல்ல மறுப்பதற்கு அதுதான் காரணமா? இல்லை. இப்போதும் அவள் பழைய தாதியானாதான். தன் கிராமத்து நினைவுகளில் வாழும் அதே பழைய தாதியானாதான். ஆனால் இப்போது அவள் வேறொருவரின் மனைவி. தாதியானாவை மனைவியாகப் பெற்றதன் மூலம் பீட்டர்ஸ்பர்க் சமூகத்தில் அந்த வயதான ராணுவ ஜெனரலின் ஆன்ம பலமும், கம்பீரமும் உயர்ந்திருக்கிறது. அவர் தாதியானாவை உயர்வாக மதிக்கிறார்.
தன்னுடைய இன்பத்திற்காக, பிறிதொருவர் துன்பம் அடையுமாறு விட்டுச் செல்வது எப்படி அறமாகும் என்பதே தாதியானாவின் ஆன்மாவிற்குள் எழும் கேள்வியாகும். இதுதான் ருஷ்ய ஆன்மா. திருமண உறவு குறித்த, ஆண் பெண் உறவு குறித்த முரண்பாடுகள் தன் மனதில் சூறாவளி ஏற்படுத்த தாதியானா கிஞ்சித்தும் இடம் கொடுக்கவில்லை. ஒனிஜினைப் பின் தொடர்ந்து செல்ல மறுத்துவிடும் தாதியானா, மக்களின் உண்மைக்கேற்ப, ரஷ்ய பாணியில் நடந்து கொண்டாள் என தஸ்தயேவ்ஸ்கி தன் உரையில் குறிப்பிடுகிறார். ஒரு ருஷ்ய ஆன்மா இப்படித்தான் முடிவெடுக்கும் என அறிவிக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. அதனால்தான் தாதியானாவையும், ஒனிஜீனையும் படைத்திட்ட புஷ்கினை ருஷ்ய இலக்கியத்தின் தீர்க்கதரிசனமிக்க, அசாதாரணமான ஒரு புதிராக தஸ்தயேவ்ஸ்கி கொண்டாடுகிறார். தஸ்தயேவ்ஸ்கியின் முழு உரையை அரபிந்தகோஷ் தமிழில் தந்திருக்கிறார். அவருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
கல்குதிரை சிறப்பிதழில் இடம்பெற்றிருக்கும் மற்றுமொரு முக்கியமான படைப்பு தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவலான ‘மரண வீட்டின் குறிப்புகள்’ தமிழாக்கம். வி. சா. வெங்கடேசன். இந்நாவல் குறித்த விமர்சனத்தை தனியாகவே தரவேண்டும். அப்படிப்பட்ட சிறப்பான நாவல் இது. ‘தோஸ்தோவ்ஸ்கி : முடிவு பெறாத விவாதங்கள்’ என்னும் தோழர் எஸ். வி. ராஜதுரையின் நீண்ட கட்டுரையும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளது. பிறிதொரு சமயம் வாய்ப்பிருந்தால் இவை குறித்தும் எழுதலாம்.
(அம்ருதா, டிசம்பர்-’24)