நோபல் விருது: சாதித்துக் காட்டிய நவி பிள்ளை
தென்னாப்பிரிக்காவின் தமிழ் வம்சாவளிப் பெண்மணியான நவநீதம் ( நவி) பிள்ளைக்கு இந்த ஆண்டின் சமாதானத்திற்கான உயரிய நோபல் விருது வழங்கப்பட இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னான சூழலில் உலகம் மிக இக்கட்டான போர்ச்சூழலையும், மோசமான கால நிலை மாற்றத்தையும் கடந்து வந்துகொண்டிருக்கிறது. தடி எடுப்பவன் தண்டல்காரன் என்பது இன்று உலக அரசியல் சூழலுக்கு மிகவும் சரியாகப் பொருந்திப் போகும் நிலையில், உலகில் யாராவது முன்முயற்சி எடுத்து போர் என்னும் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்னும் சூழலில் நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு எனக்குத்தான் கொடுக்கப்படவேண்டும் என நாட்டாமை அண்ணன் ட்ரம்ப் உளறிக்கொண்டே இருக்க, நார்வேயின் நோபல் கமிட்டி நவிப்பிள்ளைக்கு இந்த விருதை அறிவித்ததன் மூலம் மிகச் சரியான, நேர்மையான, துணிவான முடிவை எடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டு வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ, ட்ரம்ப்பால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார். கூடவே அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். உலகமே அதை வேடிக்கை பார்த்தது. ட்ரம்பின் கூட்டாளியும், வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு கடந்த ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் விருது தரப்பட்டது. அந்த விருதை எடுத்துச் சென்று ட்ரம்ப்பிடம் கொடுத்து நற்சான்றிதழ் பெற்றுக்கொண்டார் அவர். அப்போது நோபல் கமிட்டி மீது ஒரு களங்கம் ஏற்பட்டது என்பதும், அது இப்போது நவி பிள்ளையின் வழியாக துடைத்து எறியப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு ஆறுதலான செய்தி.
நவி பிள்ளைக்கு நோபல் விருது தரப்பட்டதானது வெட்கக்கேடான செயல் என்று ட்ரம்ப் கொந்தளித்திருக்கிறார். நவி பிள்ளை யாரென்றே தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆமாம் நவி பிள்ளையை ட்ரம்புக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனவெறி நீக்கப்பட்ட தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையரல்லாத முதல் கறுப்பின பெண் நீதிபதியாக நவி பிள்ளை நியமிக்கப்பட்ட வேளையில், ருவாண்டாவில் டுட்சி இன மக்களுக்கு எதிராக ஹூட்டு இன அரசு இனப் படுகொலை நடத்திய பிறகு ருவாண்டாவில் மனித உரிமைகளை நிலை நாட்ட நவி பிள்ளை கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்த தருணத்தில், ஈழத்தின் இறுதிப் போருக்குப் பின்னான சூழலில் இலங்கைக்கு பயணம் செய்து, அந்த நாட்டின் போக்கிரித் தனத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய காலங்களில், ட்ரம்ப் தன் ரகசியக் கூட்டாளியான எப்ஸ்டீனோடு, தனிமையான தீவுகளில் உல்லாசமாக தன் காலத்தை கழித்துக் கொண்டிருந்தார். அதனால் நவி பிள்ளை யாரென்று ட்ரம்புக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நவநீதம் பிள்ளையின் மீது ட்ரம்புக்கு அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கமுடியும்? நவி பிள்ளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு போட்டியாளரா என்ன? அமெரிக்காவின் களவுக் கூட்டாளியான நேட்டன்யாகுவின் இஸ்ரேல், காஸா மக்களை பச்சைப் படுகொலை செய்தபோது அதை கண் விரிய வேடிக்கை பார்த்தவர் ட்ரம்ப். போரை நிறுத்தச் சொல்லி நேட்டன்யாகுவை கெட்ட வார்த்தைகளில் ஊடகங்களில் பேசியவர் ட்ரம்ப். ஆனால் அவை அனைத்தும் ஆஸ்கர் நடிப்பு என்பதும், நேட்டன்யாகுவை உள்ளங்கை நெல்லிக்கனியாக பொத்திப் பாதுகாத்தவர் இந்த ட்ரம்ப் என்பதும் ஊரறிந்த ரகசியம். காஸாவின் மருத்துவமனைகளில், பள்ளிக்கூடங்களில் கொத்துக் குண்டுகளை அள்ளி வீசியவர் நேட்டன்யாகு. அதற்கு உறுதுணையாக இருந்தவர் ட்ரம்ப்.
இஸ்ரேல் நடத்திய காஸா இனப் படுகொலையை உலகம் அறியச் செய்து, இஸ்ரேல் பிரதமர் மீதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மீதும் குற்ற விசாரணைக்கு வித்திட்டவர் நவி பிள்ளை. காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் செயல்படுத்திக் காட்டியவர் நேட்டன்யாகு என்று நிரூபித்தவர் நவி பிள்ளை. முழு அம்மணமாக பிடிபட்ட நேட்டன்யாகுவை கையும் களவுமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றியவர் நவி பிள்ளை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் நாஜிக்கள் எதிர்கொண்ட நியூரம்பர்க் குற்ற விசாரணைகள் போல, நேட்டன்யாகுவுக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் எதிர்காலத்தில் காத்திருக்கிறது சர்வதேச குற்ற விசாரணைகளும், தண்டனைகளும். அதனால்தான் நவி பிள்ளை மீது அவ்வளவு வெறுப்பையும், காட்டத்தையும் காட்டுகிறார்கள் நேட்டன்யாகும், ட்ரம்பும்.
இரண்டாம் உலகப் போர் காலக் கட்டம். எங்கும் அழிவு. நாஜிக்களின் படுகொலைகள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரம். உலகம் அப்போது பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தை தொட்டிருந்தது. நாஜிக்களால் லட்சக்கணக்கான யூதர்களும், சோவியத் மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இறுதியாக அமெரிக்கா நிகழ்த்திய அணுகுண்டு வன்முறையில் பல்லாயிரக்கணக்கான ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் முடிவில் ஐ. நா சபை உருவாக்கப்பட்டது. நாஜிக்களின் போர்க்குற்றங்களை விசாரிக்க நியூரம்பர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. எஞ்சிய நாஜிக் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கித் தரப்பட்ட போதுதான் உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. இனி உலக நாடுகளால் தங்கள் நாட்டின் குடிமக்களுக்கோ, அல்லது வேறு நாட்டின் மக்களுக்கோ வன்முறை இழைக்கப்படும்போது ஐ. நா விசாரணை நடத்தி, தண்டனை வாங்கித்தரும் என்னும் நம்பிக்கை மக்களிடம் உருவானது.
ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஏராளமான சிறு சிறு போர்களும், வளைகுடா போர் உள்ளிட்ட பெரும் போர்களும் நடந்து முடிந்திருக்கின்றன. பல நாடுகள் தங்கள் நாட்டின் குடி மக்களின் மீது கொடும் தாக்குதல் நடத்தி, இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் தங்கள் நாட்டின் மக்களையே இனப் படுகொலை செய்திருக்கின்றன. அப்போதெல்லாம் ஐ.நா. வால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததே தவிர, நியூரம்பர்க் விசாரணை போல எதையும் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர இயலவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான சூழலில் உலகம் இரு பெரும் அணிகளாக உருமாறின. அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அவ்விரு அணிகளின் நாட்டாமைத் தலைகள். நாட்டாமைத் தலையை அண்டிய எவரும் தங்கள் நாட்டின் குடிமக்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சர்வதேச சட்டம் குறித்தும், நீதி குறித்தும் அவை கவலைப்பட தேவையில்லை. இவர்களுக்கு ஏதும் நேராமல் ஐ. நா மன்றத்தில் வீட்டோ நாட்டாமைகள் பார்த்துக் கொள்ளும்.
இப்படியாக தென்னாப்பிரிக்கா, வடகொரியா, சீனா, இந்தோனேசியா, கம்போடியா, சிரியா, பல ஆப்பிரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள், இலங்கை, ருவாண்டா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இங்கெல்லாம் மனித உரிமைகள் காலில் போட்டு பலமாக மிதிக்கப்பட்டன. நியூரம்பர்க் விசாரணை ஆணையம் போன்று எதுவும் இதற்கெல்லாம் ஏற்படுத்தப்படவில்லை. வளைகுடாப் போரின் முடிவில் பெரிய தண்டல்காரர் அமெரிக்கா, ஈராக்கின் அதிபர் சதாம் உசேனை தூக்கில் ஏற்றியது. 9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டை அமெரிக்கப் படைகள் துவம்சம் செய்தது. ஏதும் கேள்வி இல்லை.
இரண்டாம் உலகப் போருக்கு இணையான மோசமான படுகொலைகள் ருவாண்டாவில் டுட்சி இன மக்களுக்கு எதிராக ஹூட்டு இன மக்களால், அதன் அரசால் அரங்கேற்றப்பட்டபோதுதான் உலகம் சிறிது விழித்துக் கொண்டது. ருவாண்டா படுகொலைகளை விசாரிக்கும் ஆணையராக ஐ. நா சார்பில் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். கூட்டு பாலியல் வன்முறை செய்வது ‘இனப்படுகொலை’ என்னும் வரையறைக்குள் பொருந்தும் என்று நவி பிள்ளை முதன்முறையாக வரையறுத்தார். சர்வதேச குற்ற விசாரணைகளில் கூட்டு பாலியல் வன்முறை என்பதும் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகில், இனியொரு இனப்படுகொலை உலகில் நடக்கக்கூடாது என்னும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் இனப்படுகொலை ஒப்பந்தம் ( Genocide Convention). 1949 இல் உருவாக்கப்பட்டு, 1951 முதல் அமலுக்கு வந்த இந்த சர்வதேசச் சட்டத்தின்படி, எல்லா நாடுகளும் இச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். எந்த நாடும் இந்தச் சட்டத்திலிருந்து தன்னிச்சையாக விலகமுடியாது. ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த அல்லது மதம்சார்ந்த மக்கள் குழுவை, முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அழிக்கும் நோக்கத்துடன் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு செயலை செய்வது இனப்படுகொலை என வரையறுக்கப்படுகிறது.
- அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தல்.
- குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ கடுமையான பாதிப்பை ஏற்படுத்துதல்.
- அந்தக் குழுவுக்கு ஒட்டுமொத்தமாக அல்லது பகுதி அளவில் அழிவை உண்டாக்கும் நோக்கில், அதன் வாழ்வாதார நிலைமைகளில் தேவையான மாற்றங்களை வேண்டுமென்றே உருவாக்குதல்.
- அந்தக் குழுவில் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் நோக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- அந்தக் குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு குழுவுக்கு மாற்றுதல்.
மேற்கண்ட வரையறையில் கூடுதலாக, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளும் இனப்படுகொலையை செய்வதற்கு ஒப்பான ஒரு செயல் என ருவாண்டா நாட்டின் டுட்சி இன மக்களுக்கு எதிராக ஹூட்டு இன அரசு நிகழ்த்திய இனப் படுகொலையை விசாரித்த ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் நவி பிள்ளையின் பங்கு மிக முக்கியமானது.
காஸாவில் 7 அக்டோபர் 2023 க்குப் பிறகு இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை நவி பிள்ளை தலைமையிலான கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அதன் அறிக்கையை நவி பிள்ளை செப்டம்பர் 2025 இல் வெளியிட்டார்.
நவி பிள்ளையின் அறிக்கை இப்படி கூறுகிறது: “கடந்த இரண்டு ஆண்டுகளாக, 7 அக்டோபர் 2023 அன்று மற்றும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை இந்த ஆணையம் விசாரித்து வருகிறது. 1948 ஆம் ஆண்டின் இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டிப்பதற்கான மாநாட்டால் (Genocide Convention) வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு செயல்களை இஸ்ரேலிய அதிகாரிகளும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் செய்துள்ளனர் என்று அது முடிவு செய்துள்ளது. அவை: கொலை செய்தல், கடுமையான உடல் அல்லது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துதல், பாலஸ்தீனர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு வாழ்வாதாரச் சூழல்களைச் சீர்குலைத்தல் மற்றும் பிறப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளைத் திணித்தல் ஆகியவையாகும்.
இஸ்ரேலிய சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வெளிப்படையான அறிக்கைகளும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டு வடிவமும், இந்த இனப்படுகொலைச் செயல்கள் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களை ஒரு குழுவாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
காசாவில் இனப்படுகொலை நடந்ததற்கு இஸ்ரேலே பொறுப்பு என்று ஆணையம் கண்டறிந்துள்ளது”.
இஸ்ரேலை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதே நவி பிள்ளையின் சமீபத்திய பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. நோபல் கமிட்டியும் அப்படித்தான் பார்த்திருக்கிறது. நவி பிள்ளைக்கு நோபல் விருதை அளித்ததன் மூலம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப் படுகொலையை உலகமே கண்டிக்கிறது என நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியும்.
உலகம் மிக முக்கியமான சூழலை கடந்து கொண்டும், எதிர் நோக்கியும் உள்ளது. சர்வதேச சட்டத்தின் மிக முக்கிய மனசாட்சியாக நவி பிள்ளை இப்போது உருமாறியிருக்கிறார். ஐ. நாவின் மனித உரிமை ஆணையராக அவர் பதவி வகித்த காலத்தில் தன்னால் இயன்ற அளவிற்கு சர்வதேச சமூகத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் ஐ. நா சபை என்ன செய்தது? என்ற மிக முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பப்பட்டது. 2009 ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை ஏன் நிறுத்த முடியவில்லை என்னும் கேள்வி நவி பிள்ளையின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். இது போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் ஐ. நா அவை உடனடி நடவடிக்கை எடுத்து இனப் படுகொலையை தடுத்து நிறுத்தவேண்டும் என்னும் சட்ட விதிகள் ஐ. நா பாதுகாப்பு சபையின் அன்றாட அலுவல் நடைமுறைகளில் உருவாக்கப்பட்டன. இதற்காக நவி பிள்ளை பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார்.
மனித உரிமையை சர்வதேச அளவில் கோட்பாடாக உருவமைத்ததில் நவி பிள்ளைக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. உலக நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை உற்றுப் பார்த்து அதைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துதல் ஐ. நா மனித உரிமை ஆணையத்தின் இப்போதைய மிக உறுதியான கொள்கையாக மாறியிருக்கிறது. தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற கரப்பான் பூச்சி இயக்கத்தின் போராட்டங்களில் தில்லி காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்ததை நாம் அறிவோம். காவல் துறையின் இந்த அத்துமீறல்களுக்கு ஐ. நா மனித உரிமை ஆணையம் உடனடி கண்டனத்தைத் தெரிவித்ததோடு இது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் கோரியது. ஒரு நாட்டின் உரிமைகளில் இது தலையிடுவது ஆகாதா என்று வாதம் செய்யாமல், சர்வதேச சமூகத்தில் இந்தியாவும் ஒரு அங்கம் என்னும் உண்மையை நாம் உணர்ந்தாகவேண்டும்.
ஐ. நா அவையின், சர்வதேச சமூகத்தின் கட்டுப்பாட்டையும் மீறி உலக நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மனித உரிமை ஆணையம் எப்படி கையாள்வது, அப்படி நடக்கும் மனித உரிமை மீறல்களை எப்படி ஆவணப்படுத்துவது என்பதில் மனித உரிமை ஆணையத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் கூட நவி பிள்ளையின் வழிகாட்டல்கள் மிக முக்கியமானது. ஆவணப்படுத்தப்பட்ட பின்னர், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உள் நாட்டு சட்டத்தின்படி தண்டிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை அந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நவி பிள்ளை வலியுறுத்துகிறார். மனித உரிமை மீறல்களை அரங்கேற்றும் அதிகாரிகளை தப்பவிடும் உலக நாடுகளை அவர் வன்மையாகக் கண்டனம் செய்கிறார். அப்படி தப்பிக்கும் பட்சத்தில் ஐ. நா அவை அல்லது பாதுகாப்பு சபை உரிய நடவடிக்கையை எப்படி எடுப்பது என்றும் அவர் வழிகாட்டல்களைச் செய்துள்ளார். மனித உரிமை மீறல்களைத் தடுப்பது, கண்காணிப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளை அந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு ஏற்கச் செய்வது, குற்றம் இழைத்த தனி நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது, அது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தருவது…இப்படியாக நவி பிள்ளை தலைமையில் ஐ. நா மனித உரிமை ஆணையம் சாதித்திருப்பது ஏராளம்.
ஒரு நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவது முதல் பெரும் சவாலாக அமைந்துவிடுகிறது. மனித உரிமை மீறல்களை எதிர்கொண்ட அந்தச் சமூகம் எதிர்காலத்தில் உறுதியாக நிமிர்ந்து நிற்க முதலில், அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்கள் நடதிருக்கின்றன என வெளியுலகம் அறிந்துகொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என நவி பிள்ளை தெரிவிக்கிறார். 1993 முதல் 2003 வரை காங்கோ குடியரசில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியதில் நவி பிள்ளையின் பங்கு மிக முக்கியமானது. சிரியாவின் உள் நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, அங்கு நடத்திய நூற்றுக்கணக்கான நேர்காணல்கள், கள ஆய்வுகள் மூலம் நவி பிள்ளை ஆவணப்படுத்தியிருக்கிறார். அதன் மூலம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் யார் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
‘இன்று எந்த ஒரு நாட்டிலும் நிகழும் மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கான வாய்ப்பேதும் இல்லாமல் ஐ. நா மனித உரிமை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பல்வேறு அமைப்புகள், மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்திட்டங்கள், குறிப்பிட்ட குற்றங்களுக்காக அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள், எனது அலுவலகம் மற்றும் உலகெங்கிலும் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் 58 மனித உரிமைக் கள அலுவலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட சுயாதீன மனித உரிமை அமைப்புகளின் உலகளாவிய கட்டமைப்புகளால் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் மிக அரிது’ என நவி பிள்ளை குறிப்பிடுகிறார்.
சாத்தான்குளம் காவல் நிலைய லாக்கப்பில் நடைபெற்ற இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஐ. நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை விட்டது நம் நினைவுக்கு வரலாம்.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவை ஒட்டுமொத்தச் சமூகத்தின் அடித்தளத்தையே சிதைத்துப் போடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது நாடுகள் மட்டுமல்ல, முழு உலகமும் போர்ச்சுழலையும், அமைதியின்மையையும் சந்திப்பதை சமீப காலங்களில் நாம் கண்டு வருகிறோம். இவை நடந்து முடிந்தபிறகு ஆழமாகிப் போன காயங்களை ஆற்றுவதற்கு வெகுகாலம் தேவைப்படுகிறது.
நவி பிள்ளை எழுதுகிறார்: ‘ இது எளிதான செயல்முறை அல்ல; இதற்குக் காலம் தேவைப்படலாம். எனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவில் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தலுக்குப் பிறகு, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தலைமையிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் 18 மாதங்கள் நடைபெற்றன. இந்த நீண்டகாலச் செயல்முறை, அந்த ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்து நாடாளுமன்றத்திலும் தென்னாப்பிரிக்கச் சமூகத்திலும் விரிவான விவாதம் நடைபெறுவதற்கு வாய்ப்பளித்தது. அதன் மூலம் அந்த ஆணையம் நீண்டகாலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான அடித்தளம் அமைந்தது’.
ஈழப்போருக்குப் பிறகான சூழலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை என்று நவி பிள்ளை உறுதியாக நம்புகிறார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு நவி பிள்ளை இலங்கைக்கு பயணம் செய்ததுடன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கும் சென்று உண்மை உணர்ந்தார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவரை சந்திக்க விடாமல் செய்ய இலங்கை அரசு பல தகிடுதத்தங்களை செய்து பார்த்தது. புத்த பிக்குகள் அவர் சென்றவிடமெல்லாம போராட்டங்களை நடத்தினர். நவி பிள்ளையை நான் திருமணம் செய்துகொள்வேன் என அப்போதைய இலங்கை அமைச்சர் ஒருவர் பேசினார். நவி பிள்ளையும் ஒரு தமிழர் என்பதற்காக அவர் மீது சேற்றை வாரி இறைத்தன சிங்களக் கட்சிகள். ஆனாலும் அவர் உறுதியுடன் இருந்து, தமிழ் மக்களின் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். நவி பிள்ளைக்குப் பிறகான ஐ. நா மனித உரிமை ஆணையத்தின் இலங்கை சார்ந்த செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுத்தப்பட்டது என நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஈழத்தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச சமூகம் இன்னமும் நியாயம் செய்யவில்லை. நவி பிள்ளையின் எண்ணமும் நிச்சயமாக இப்படியாகத்தான் இருக்கும்.
ஒரு எளிய தமிழ் வம்சாவளிப் பெண்மணி, ஏழைக்குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று, தனக்கு சுற்றியுள்ள ஒரு சமூகத்தால் சட்டக்கல்வி பயிலும் வாய்ப்பு பெற்று, நிறவெறி கோலோச்சிய தென்னாப்பிரிக்காவில், சிறையிலடைக்கப்பட்டிருந்த மண்டேலாவுக்காக வாதாடி, நிறவெறி நீங்கிய பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின் ஐ. நா அவையில் மனித உரிமைக் களத்தில் பல்வேறு சமாதானப் பணிகள் ஆற்றி… நவி பிள்ளையின் வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாசித்து அசைபோட வேண்டிய தருணம் இது. நோபல் கமிட்டிக்கும் கூட இது ஒரு நிறைவான முடிவாகவே இருக்கும்.
***********************************
(அம்ருதா, நவம்பர் 2026)




