புத்தம் வீடு நாவலும் விமர்சன சர்ச்சைகளும்
காதல்தான் படைப்பிலக்கியத்தின் ஆகப் பெரும் உந்துதலாக இருந்து வந்திருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என எந்த வடிவத்திற்கும் இது பொருந்தும். காதலும், சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் பாதிப்புகளும், தாக்கங்களும் என எல்லாமும் அப்படைப்பிலக்கியத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. ஆதாம் ஏவாள் காதல் முதல் இன்றைக்கு தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் நவீன காதல் வரை காதலின் வகைப்பாடுகள் எண்ணிலடங்காதவை. காதல் என்றால் அரிவாள் எடுக்கும் சமூகம் தமிழ்ச்சமுதாயம். அதே நேரத்தில் காதலர்களின் களவு வாழ்க்கையை விதந்தோதி படைப்பக்கப்பட்ட சங்க இலக்கியங்களும் தமிழ்ச் சமுதாயத்தைச் சார்ந்தவைதான். அந்த வரிசையில் வைத்து வாசிக்க வேண்டிய ஒரு படைப்பாக ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ நாவலைக் கொள்ளமுடியும். ஒரு காதல் படைப்பாக, அந்தஸ்தில் வேறுபட்ட இரு குடும்பங்களில் வாழும் காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தொகுப்பாக, ஆண் மைய சமுதாயத்தில் காதல் படும் துயரத்தின் நீட்சியாக இந்த நாவலை நம்மால் காணமுடியும்.
புத்தம் வீடு நாவலுக்கு சி.சு. செல்லப்பா தன் எழுத்து இதழில் கடும் விமர்சனம் ஒன்றை எழுதியிருப்பார். இது ஒரு சாதாரண காதல் கதை, சுமாரான நாவல், பாஸ் மார்க் 35 மட்டுமே இதற்குத் தரமுடியும் என்ற ரீதியில் செல்லப்பா எழுதியிருப்பார். ஒரு விமர்சகன் என்பவன் ஒரு படைப்பிலக்கியத்தை கணிதப் பார்வையில் மட்டுமே நோக்கமுடியும் என்பதை செல்லப்பாவின் விமர்சனத்தைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். ஆனால் புத்தம் வீடு நாவலின் தளம் என்பது காதல் எதிர்கொள்ளும் சமுக அந்தஸ்தின் முரண்பாடுகளாலும், அந்த முரண்பாடுகளின் வழி உருவாகும் ஆண் மையத்தாலும், ஆண் மையம் குடும்பங்களில் ஏற்படுத்தும் பெண்ணடிமைத்தனத்தின் இயலாமையினாலும், அதன் நீட்சியாகக் கிளர்ந்தெழும் பெண் பாத்திரங்களினாலும் உருவாகியிருப்பதை நம்மால் உள்வாங்கிக் கொள்ளமுடியும்.
ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நாவலை வாசிப்பது ஒரு கொண்டாட்ட அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரே நாளில் விறுவிறுப்பாக படித்து முடித்த நாவல். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நாவல். 1961 இல் எழுதப்பட்டு 1964 இல் வெளியான நாவல். தமிழில் நாவல் வடிவம் தோன்றி தவழ்ந்து நடை பயிலத் தொடங்கிய போது உருவான நாவல் இது. ஹெப்ஸிபா ஜேசுதாசன் என்னும் ஆங்கிலப் பேராசிரியை நாவலின் ஆசிரியர். லிஸி என்னும் பெண் நாவலின் மையமான பாத்திரப் படைப்பு. பனைவிளை கிராமம் நாவல் நிகழுமிடம். லில்லி, கண்ணப்பச்சி, கண்ணப்பச்சியின் இரு புதல்வர்கள். லிஸியின் அம்மா, சித்தி. பனையேறிகளான தங்கையன், அன்பையன், தங்கராஜ் ஆகியோர் வேறு முக்கியப் பாத்திரங்கள். சாதியும், அந்தஸ்தும் கால ஓட்டத்தில் அவ்வட்டார மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களைப் படம் பிடிப்பதே நாவலின் குறிக்கோள்.
லிஸி-தங்கராஜ் காதல் என்பது நாவலின் உயிரோட்டமாக இருந்தபோதிலும், காதலின் குறுக்காக நிற்கும் சாதியும், அந்தஸ்தும் மட்டுமே நாவலின் உட்கருவாகக் கொள்ளமுடியும். இளமைக்காலத்தில் ஈர்ப்பாக கருக்கொண்ட ஒரு இனிமையான உறவு, காலம் கனிந்து எப்படி காதலாக மலர்ந்தது என்பதன் சித்திரமே புத்தம் வீடு. வாழ்ந்து கெட்ட வீடுகளில் வசிக்கும் துர்ப்பாக்கிய தேவதைகளின் சொப்பனங்கள் என்றென்றும் இனிமையாகவா இருக்கப்போகின்றது? எதிர்காலம் குறித்த, திருமணம் குறித்த லிஸி தேவதையின் கனவுகளும், கற்பனைகளும் கூட பகற்கனவாகவே மாறிப்போய் விடுகின்றன. பள்ளிப்பருவத்தில் தங்கராஜுவுக்கு லிஸி வாங்கிக் கொடுத்த பிரம்படியும், பதிலுக்கு அவன் லிஸிக்குக் கொடுத்த மயிலிறகும் இளமைப்பருவ நினைவுகளை மீண்டும் காதலாகக் கனிய தங்கராஜ் எடுக்கும் முயற்சிகளும் கதைக்கு இனிமையான வலுவாக அமைந்து போகின்றன.
கடந்த தலைமுறைகளில் சாதியும், அது சார்ந்த வறட்டு அந்தஸ்தும் சமூகத்தின் மீது கோலோச்சியதை யாரும் மறுக்கமுடியாது. இருபத்தோறாம் நூற்றாண்டிலும் கூட கௌரவக் கொலைகள் மிகக் கௌரவமாக நிறைவேற்றி வைக்கப்படும் சூழலில் 1950 களில் தென் மாவட்டங்களில் குறிப்பாக நாஞ்சில் நாடு, குமரிப் பகுதிகளில் சாதியின் வீச்சை நாம் கற்பனை செய்துப் பார்த்திட முடியும். தென் திருவிதாங்கூர் பகுதிகளில் சாணார்களின் மீது சாதி ரீதியாக இழைக்கப்பட்ட கொடுமைகளை யாரும் வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது. லிஸியின் மீது காதல் கொண்டுவிட்ட தங்கராஜ், ஒரேவித யேசுசபையினராக இருந்தபோதிலும் கூட பனையேறியாக மட்டுமே லிஸி வீட்டாரால் எடை போடப்படுகிறான். பனையேறிகள் என்றால் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள் என்னும் பிம்பம் கருங்கல் படிமமாக மாறிப்போயிருந்த காலமது. ஒரு காலத்தில் பைத்தியக்காரர்களின் தேசமாக விவேகானந்தரால் சொல்லப்பட்ட திருவாங்கூர் தேசத்தின் எச்சங்கள் நாஞ்சில் நாடு முழுவதும் படிந்து போயிருந்த காலமும் கூட. வழக்கம் போல லிஸியை மணம் முடிக்கும் தங்கராஜின் நோக்கத்திற்கு சாதியும், பைசாவிற்கு உதவாத பழம் அந்தஸ்தும் தடையாகிவிடுகின்றன.
ஆண்களின் எதேச்சாதிக்கார உலகம் நாவலில் முன் நிறுத்தப்படுகிறது. புத்தம் வீட்டின் கண்ணப்பச்சி தொடங்கி, அவரின் இரு புதல்வர்கள் ( ஒருவர் குடிகாரர், மூத்தவர். இளையவர் தொழில் செய்பவர்), வரை நாவலில் சித்தரிக்கப்படும் விதம் புத்தம் வீட்டை ஒரு ஆண் மைய வீடாக நாவல் வரையறுப்பதை நாம் அவதானிக்கமுடியும். சாதியும், அந்தஸ்தும் புத்தம் வீட்டின் ஆண்களை சமூகத்தின் வறட்சியான மலடு தட்டிப் போனவர்களாக நாவல் உருமாற்றுகிறது. புத்தம் வீட்டுப் பெண்களை அவர்கள் அலட்சியப்படுத்துவதும், பெண்களை மையமாகக் கொண்ட அவச்சொற்களை வீசுவதும், வேலையற்ற வெட்டியாக இருந்துகொண்டு, குடிகாரராகவும் மாறி குடும்பத்தின், பெண்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, அவமானப்படுத்தும் மூத்தவரின் செயல்பாடுகளை இன்றும்கூட நாமறிந்த ஏதோ ஒரு வீட்டின் ஆணோடு நம்மால் பொருத்திப் பார்க்கமுடியும். பிற ஆண்களோடு உரையாடுவதற்கு தங்கள் வீட்டுப் பெண்களை அனுமதிக்க மறுத்து அவமானப்படுத்துவதும், அந்த அவமானத்தால் மனமுடைந்த லிஸி தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போவதும், தொடர்ச்சியாக இனி போராடுவதே சரி என்று அவள் மனம் அவளை அறியாமலேயே முடிவு செய்வதும் கதைக்கு புத்துணர்வை ஊட்டும் அம்சங்கள். பெண்ணின் சுயமரியாதைக்கு 1960 களில் நாவல் தரும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்க ஒன்றாக நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.
புத்தம் வீட்டின் காட்சிகளும், பனைக்காடுகளின் மத்தியில் அதன் அமைவிட வர்ணனையும், புத்தம் வீட்டின் இருப்பை ஒளிரச்செய்யும் சிறுமியான லிஸியின் குழந்தைமையும், லிஸி என்னும் இளம் பெண்ணின் இயல்புகளும், குணங்களும் சித்தரிக்கப்படும் இடங்களும் நாவலின் தொடக்கம். பெரிய வீட்டுப் பெண் பிள்ளைகள் வளரும்போது பள்ளிக்குப் போவதிலிருந்து தடை செய்வதும், வீட்டிற்கு வெளியே அனுப்பாமல் அவர்களை ‘இற்செறிப்பு’ செய்வது என்னும் நடைமுறை பழக்கங்களை புத்தம் வீடும் லிஸியின் மீது சுமத்துகிறது. இளமைப்பருவ நண்பனான தங்கராஜை லிஸி சந்திக்கும் தருணத்தில், லிஸி பூத்துக் குலுங்கும் ஒரு பூமரமாக எப்படி உருமாறுகிறாள் என்பதை நாவல் வாசிக்கும் தருணத்தில் நம்மாலும் உணரமுடியும். பருவம் தாண்டியும் லிஸிக்கு திருமணம் நடக்காததும், அவள் தங்கை லில்லிக்கு முதலில் திருமணம் நடப்பதும் லிஸிக்கும், புத்தம் வீட்டிற்கும் நடக்கும் சோகங்கள். தங்கராஜ் லிஸியிடம் உரையாடும் சில தருணங்கள், லிஸியின் பதைபதைப்பு எல்லாமும் அழகுச் சித்திரங்கள். லில்லியின் திருமணத்திற்குப் பிறகு வீட்டில் நடக்கும் லிஸியின் சித்தப்பா கொலையும், அக்கொலையில் தங்கராஜ் மாட்டிவிடப்படுவதும், பின் விடுதலையாகி லிஸ்ஸியைத் திருமணம் செய்து கொள்வதும் சினிமா பாணியிலான முடிவை நாவல் எய்தியதோ என்னும் அலுப்பைத் தருகிறது.
சி. சு. செல்லப்பாவின் விமர்சனத்தின் மையப்புள்ளியும் இதுவாகத்தான் இருக்கிறது. அதாவது சாதி, அந்தஸ்தை வைத்து கட்டமைக்கப்படும் ஒரு நாவலின் முடிவு சினிமா பாணியிலாக அமைந்து போய்விட்டதே என்பதே அவருடைய ஆதங்கமாகவும் இருக்கிறது.
செல்லப்பா எழுதுகிறார்: ‘இந்த நாவல் நமக்குமுன் காட்டுகிறதென்ன, போடுகிற கேள்வி என்ன என்பதே கேள்வி. ஜாதி, அந்தஸ்து இரண்டும் விளையாடும் விளையாட்டு எப்படி இருக்கும், எதில் முடியும், எந்தவிதமாக முடியும் என்பது ஒரு கோணத்திலிருந்து பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தமிழ் நாவலுக்கு அப்படி ஒன்றும் புதுசு இல்லை. சிறுகதைகளிலும் சில நாவல்களிலும் கையாளப்பட்டிருப்பதுதான். எனவே புதுசான ஒரு கதையாகப் படவில்லை எனக்கு. ஆனால் அந்தஸ்தும் வறட்டு கவுரமும் ஒரு சோக நிகழ்ச்சியாக துன்ப முடிவுக்கு இட்டுச் செல்லாமல், ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னூவின் வாழ்வுபோல் ஆகாமல், லிஸி – தங்கராஜ் உறவு ஓர் இன்பமான முடிவுக்கு உதவியிருக்கிறது’.
நாவலின் முடிவு ஒரு துன்பியலாக இருக்கும் பட்சத்தில் புத்தம் வீடு நாவல் இன்னமும் கொண்டாடப்பட்டிருக்கும் என்பதுதான் செல்லப்பாவின் மறைமுகமான குறிப்பாக இருக்கிறது. யுகம் யுகமாக இலக்கியத்தின் ருசி காதல் தோல்வியிலும், கண்ணீரிலும், துரோகத்தின் நெடியிலுமே முகிழ்த்து வந்திருக்கிறது. சீதையை சிதையிலேற்றிய ராமாயணமும், தங்கள் குழந்தைகளைப் போரில் பலிகொடுத்து, வெறுமையான வெற்றியில் தங்களைத் தொலைத்துக் கொண்டு வாழும் பாண்டவர்களின் மகா பாரதமும் யுகம் யுகமாக இன்னமும் இந்த மண்ணில் போற்றப்படுகிறதே!.
செல்லப்பா எழுதுகிறார்: “அப்பட்டமாகச் சொல்லப்போனால் இது ஒரு காதல் கதைதான். லிஸி-தங்கராஜ் ஆசை நிறைவேற்றம் பற்றிய உத்தேசம்தான் ஆசிரியரின் முதன்மையான, ஏன், ஒரே நோக்கம் என்று சொல்லலாம். எனவே காதல் வழி கரடுமுரடாகத்தானே இருக்கும். இருந்தாக வேண்டும் என்ற சம்பிரதாயமும் இருக்கிறதே. எனவே அதுக்குக் குறுக்கே வருகிறவர்கள், ஏற்படும் நிகழ்ச்சிகள், குரோதம், பொறாமை இதெல்லாம் வந்தாக வேண்டும் இல்லையா? ‘புத்தம் வீடு’ பழம்பெருமை கொண்ட லிஸியின் தாத்தா கண்ணப்பச்சி, அவளுடைய குடிகாரத் தகப்பன், மூர்க்கனான சித்தப்பா, குரோதம் காட்டும் சித்தப்பா பெண் லில்லி, கபடமாக நடந்துகொள்ளும் அவள் கணவர் வைத்தியர் போன்றவர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி அதிகப்படுத்தி விபரீதத்துக்கு கொண்டுவிட்டுவிடுகிறார்கள். பெரியவள் லிஸிக்கு மணம் ஆகாமல் சிற்றப்பா பெண் சிறியவள் லில்லி கல்யாணம், அந்தஸ்து குறைவான தங்கராஜ் லிஸியை மணக்கக் கேட்டல் இரண்டாலும் தந்தையின் ஆத்திரம், சித்தப்பா கொலை, தங்கராஜ் மீது கொலைப்பழி, ஆனால் கொலை செய்தது குடிகார தகப்பன், தந்தையின் தற்கொலை, உபதேசியாரின் ஆதரவான செயல், உண்மை வெளிவருதல், தங்கராஜ்-லிஸி திருமணம், ஓய்ந்த மனம் கொண்ட கண்ணப்பச்சியின் வேறு வழியில்லாத சம்மதம் – இப்படியாகக் கதை முடிகிறது.
நாவலின் கதையம்சம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் இதிலிருந்து. இந்தக் கதை ஏதாவது புதிசாகத் தெரிகிறதா? நம் சினிமாக் கதைபோல இருக்கிறது என்றுகூட நான் சொல்லத் துணிவேன்”.
கோபம் கொண்ட ஹெப்சிபா ஜேசுதாஸின் கணவர் பேராசிரியர் ஜேசுதாஸன் அவர்கள் செல்லப்பாவின் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
செல்லப்பாவின் கடுமையான விமர்சனம், லிஸ்ஸியின் தந்தை தற்கொலை செய்துகொண்டார் என்ற செல்லப்பாவின் புரிதல், நாவலுக்கு பாஸ் மார்க் 35 என செல்லப்பா வழங்கியது, இது ஒரு அப்பட்டமான காதல் கதை மட்டுமே என செல்லப்பா குறிப்பிட்டது, பழவினை என்னும் அத்தியாயம் முழுவதையும் நாவலில் இருந்து நீக்கலாம் என செல்லப்பா குறிப்பிட்டது இப்படி எல்லாவற்றுக்கும் பதிலாக செல்லப்பாவுக்கு ஒரு மறுப்பு மற்றும் எதிர் விமர்சனம் ஒன்றை பேராசிரியர் ஜேசுதாஸன் எழுதி அனுப்பினார்.
“புத்தம் வீடு’ நாவலைப்பற்றித் தாங்கள் எழுதிய ஆய்வு விமர்சனத்தைப் படித்தேன். அதற்கு முப்பத்தைந்து மார்க்கு – பாஸ் மார்க்கு போட்டிருக்கிறீர்கள். விமர்சகருக்கு ஒரு நூலைத் தன் அறிவின் எல்லைக்குள் நின்று ஆராயவும் குறைகளைக் காணவும், பிடித்த அம்சங்களைப் புகழவும் உரிமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மார்க்குப் போடுகிற விஷயம் வரும்போது நான் ஒரு ஆசிரியன் ஆனதால் சொல்லுகிறேன் – நம்மைவிட நம் கலையில் தேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த உரிமை கிடைக்கிறது; அதுவும் நாம் அனுமதிக்கும்போது மட்டும். இல்லாவிட்டால், அது ஆசிரியருக்கு மாணாக்கன் மார்க்குப் போடும் கதையாகிவிடும். விமர்சகர் கலைக்கு வெளியில் நின்றுகொண்டு கலையை அலசி ஆராயும்போது அவருக்குச் சிறிது அச்சம் இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். கலையையும் மனித இயல்பையும் கணித ரீதிப்படி அளந்து கூறிவிட்டதாக இன்று சிலர் சொல்லிக்கொள்ளுகிறார்கள். அது எவ்வளவு தப்பு என்பதற்குத் தங்கள் விமர்சனம் ஒரு சான்று.
‘புத்தம் வீடு’ ஆசிரியர் எழுதிய முதல் நாவல் என்பதற்காக அதற்கு அனுதாபம் தேவையில்லை என்று நினைக்கிறேன். இது அவருடைய முதல் நாவலாக இருக்கட்டும், கடைசி நாவலாக இருக்கட்டும், ஏதாவது சிறப்பிருந்தால் இருக்கிறது என்று சொல்லுங்கள். இல்லையென்றால் பள்ளிக்கூட ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் சிறுமியின் முதல் படைப்பாகக் கருதி அந்தக் காரணத்தால் இதைச் சிறப்பிக்க வேண்டியதில்லை.”
செல்லப்பாவும் விடவில்லை. பேராசிரியரின் மறுப்புக்கு எதிர்மறுப்பு ஒன்றை எழுதினார். அதுவும் சுவாரசியமாக இருந்த மறுப்புரை. பேராசிரியர் ஜேசுதாஸனின் எல்லா மறுப்புகளுக்கும் எதிர் மறுப்பு தெரிவித்து விட்டு இறுதியாக செல்லப்பா இப்படி எழுதுகிறார்:
” இலக்கிய விமர்சனம் ஒரு அறிவுபூர்வமான அணுகுதல். நூலில் இருக்கிற தகவல்களைக் கொண்டு பொருத்திப் பார்க்கிற காரியம். நீங்களே எழுதி இருப்பதுபோல அறிவின் எல்லைக்குள் நின்று ஆராய்கிற வேலை. இதில் படைப்பின் தரத்தை மதிப்பதில் சுமார் என்று சொல்வதை மார்க் விகிதத்தில் வேறொருவிதமாகச் சொல்லி இருக்கிறேன். மாணவர்கள் எழுத்துக்கு மார்க் போடும் பேராசிரியரின் எழுத்துக்கு மார்க் போட்டுக் காட்டுவது பொருத்தமே. இதை நீங்கள் ஏற்காமல் என்னைக் குத்திக் காட்டும் நினைப்பில் சில வரிகளை எழுதி இருக்கிறீர்கள். அவசியமில்லாதவை, பண்பு காட்டாதவை. ‘நம்மைவிட நம் கலையில் தேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த உரிமை கிடைக்கிறது, அதுவும் நாம் அனுமதிக்கும்போது மட்டும்’ என்கிறீர்கள். யார் யாரைவிடத் தேர்ந்தவர். யாருக்கு யார் உரிமையை அனுமதிப்பது. இதெல்லாம் அப்படி நிர்ணயித்துவிட முடியாது.
இதைவிட நீங்கள் இன்னும் பெரிய போடாக ‘விமர்சகர் கலைக்கு வெளியில் நின்றுகொண்டு கலையை அலசி ஆராயும்போது அவருக்கு சிறிது அச்சம் இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்’ என்கிறீர்கள். இதில் நான் ஆட்சேபிப்பதுக்கோ இப்படிச் சொல்வதால் வருத்தப்படுவதுக்கோ, கோபப்படுவதுக்கோ எதுவும் இல்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். புத்தம் வீடு நாவலை விமர்சிக்கும் ஒரு விமர்சகனுக்கு ஒரு நல்ல குணம் இருக்கவேண்டும் என்று தாங்கள் சொல்வதில் தவறில்லை.
முதல் நாவல் என்பதற்காக அனுதாபம் தேவையில்லை என்று விசிறி அடிக்கிறீர்கள். அனுதாபத்துடன் பார்ப்பது என்றால் முன்கூட்டிய வெறுப்பும் அலட்சியமும் காட்டாமல் பார்ப்பது என்றும் நான் விளக்கி இருக்கிறேனே. அதைப் படித்துவிட்ட பிறகுமா இப்படி எழுதுகிறீர்கள்? அனுதாபம் ஆளுக்கல்ல, நூலுக்கு. இலக்கியத் தரம் அதில் ஆரம்பத்திலேயே தென்பட்டிராவிட்டால் நிச்சயமாக அதை மூடி வைத்திருப்பேன்”.
செல்லப்பாவும் நாவலை முழுமையாக நிராகரிக்கவில்லை. நாவலை விதந்தோதியிருக்கிறார். நாவலாசிரியருக்கு முதல் நாவல் என்னும் அக்கறையிலும் கூட தன்னுடைய விமர்சனத்தை வைத்திருக்கிறார். விமர்சகன் என்னும் தளத்தில் மார்க்கும் போட்டிருக்கிறார். ஆனாலும் விமர்சனமும், எதிர் விமர்சனமும் சூடாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. பழைய ‘எழுத்து’ இதழ்களை வாசிக்கும்போது சுவாரசியமான பல இலக்கியச் சர்ச்சைகளை இப்போதும்கூட வாசித்து அனுபவிக்க முடியும்.
(அம்ருதா, அக்டோபர் 2026)




