குறியீடுகளும், சமிக்ஞைகளும்
மொழிதான் மனிதனை அவனுடைய வளர்ச்சியின் மேலான கட்டத்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. மொழி உருவானதற்கு முன்னர் குறியீடுகளும், சமிக்ஞைகளும் கருத்துப் பரிமாற்றத்திற்கு முக்கியமான பங்கை வகித்திருக்கின்றன. மனிதனின் எந்தக் கட்டத்தில் மொழி தோன்றியது என்னும் ஆராய்ச்சியில் நாம் இறங்கப் போவதில்லை. ஆனால் மொழி தோன்றுவதற்கு முன்னர் உருவான குறியீடுகளும், சமிக்ஞைகளும் இன்று நம் கருத்துப் பரிமாற்றத்தில் முக்கியமான பங்கை மீண்டும் வகிக்க ஆரம்பித்திருக்கின்றன. மனிதர்களுக்கிடையே இன்று மொழி வழியிலான கருத்துப் பரிமாற்றங்கள் பெருமளவு குறைந்து போயிருக்கின்றன. பொது வெளியில் தொன தொனவென்று பேசுபவர்களின் எண்ணிக்கை அரிதாகிப் போய்விட்டது. தொன தொனப்பவர்கள் எல்லோரும் இப்போது தொலைக்காட்சி விவாத மேடைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். முன்பெல்லாம் டீக்கடைகளில், சலூன்களில் பெரும் விவாதங்கள் களை கட்டும். கோர்பச்சேவ் இப்படி செய்திருக்கக் கூடாது என்று பாமரனும் கூட கருத்து தெரிவித்த காலம் ஒன்று உண்டு. இன்று டீக்கடைகளில் அவர்கள் இனிப்பை அள்ளிப் போட்டாலும் அல்லது வெந்நீரில் டீ போட்டாலும் அதற்காக ஒரு சின்ன முணுமுணுப்பைக் கூட செய்வதில்லை. சலூன் கடைகள் இன்று தலையில் கருப்பு ஓவியம் வரையும் கூடங்களாக உருமாறிப்போய் விட்டன. உருப்படியான விவாதங்கள் எங்கும் காணப்படுவதில்லை.
ஏன் பேச்சு மொழி இன்று தடைப்பட்டிருக்கிறது? ஏன் ஒருவருக்கொருவர் பேசத் தயங்குகிறோம்?. மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் உருப்படியான கருத்துப் பரிமாற்றம் இருக்கிறதா?. இன்று கருத்துப் பரிமாற்றங்களில் மொழியின் இடத்தை குறியீடுகள் பிடித்துவிட்டன. சமூக ஊடகங்களில் இதயக் குறியீடும், கட்டைவிரல் குறியீடும், முகத்தை ஆயிரம் கோணங்களில் வைத்துக் கொண்டிருக்கும் குறியீடுகளும் மொத்தக் கருத்துப் பரிமாற்றத்தையும் தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தியிருக்கின்றன. சாலைகளில் நமக்கு வழிவிடுபவர்களுக்கு நாம் வைக்கும் ஒரு சல்யூட் குறியீடு ஆயிரம் வார்த்தைகளை அவர்களுக்கு உணர்த்தி விடுகிறது. வெகு நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் வீதிகளில், சாலைகளில் சந்திக்க நேரும்போது அவர்கள் உதிர்க்கும் முதல் புன்னகை அவர்களுக்கிடையே அவ்வளவு அன்பைப் பரிமாறிக் கொள்ளும். வேறு சொற்கள் எதுவும் அவர்களுக்கு தேவையில்லை.
இன்று தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற ஒரு குறியீடு நிறைந்திருக்கிறது. தினமும் அதை நம்மால் சந்திக்காமல் இருக்கமுடியவில்லை. கடைத்தெருக்களில், சாலையோரங்களில், கல்லூரிகளில், மைதானங்களில், அலுவலகங்களில் இப்படி எங்கு பார்த்தாலும் அது நீக்கமற நிறைந்திருக்கிறது. அந்தக் குறியீடு வெற்றியின் சின்னமா அல்லது நீண்ட நாள் நிறைவேறாமல் இழுத்தடித்த ஒரு செயல் நிறைவேறியிருக்கிறது என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடா அல்லது தன் எதிரிக்கு விடுக்கும் சவாலா அல்லது என்னை மிஞ்சியவன் இங்கு எவனுமில்லை என்னும் வெற்று வீராப்பா.. தெரியவில்லை அல்லது இவையெல்லாமும் சரி என்றும் கொள்ளமுடியும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முடியாமல் திமுக தவித்தது. எண்ணிக்கை முடிவு செய்வதில் இழுபறி. திமுக தலைவர் ஸ்டாலின் தலையிட்டு, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் ஒருவழியாக காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. தொகுதி உடன்பாட்டை முடித்த கையோடு அன்றைய முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் செய்த குறியீடே அது. அன்றைக்கு ஸ்டாலின் சாதித்த பெரும் வெற்றி அது. அப்படி அவர் எண்ணிக் கொண்டார். அப்படி சமிக்ஞை செய்தார். அன்றிலிருந்து அது பேசுபொருளானது. பின்னர் முதல்வர் விஜய் சட்டசபையில் ‘அப்பாவைக் காணோம்’ என்று ஸ்டாலினை கிண்டல் கேலி செய்ததும், உரையின் இறுதியில் இந்த சமிக்ஞையைக் காண்பித்ததும் வரலாறு.
இன்று தமிழ்ச் சமூகத்தில் இந்தக் குறியீடு இல்லா போஸ்டர்களை காண்பது அரிதாகப் போய்விட்டது. பிறந்த நாள் விழா, காதணி விழா, திருமண விழா போஸ்டர்கள் இப்படி எங்கு பார்த்தாலும் இந்தக் குறியீடுதான். எல்லாக் கல்லூரி விழாக்களிலும் இந்த குறியீடுகள் மட்டுமே இப்போது ஆட்சி செய்கின்றன. நாம் முன்பே குறிப்பிட்டது போல குறியீடுகள் மட்டுமே இன்றைக்கு மொழிக்கு மாற்றாக சமூகத்தில் உலவி வருகின்றன.
மொழிக்கு முந்தைய வடிவம் குறியீடுகள். மொழியின் தோற்றமும், மனித நாகரிக வளர்ச்சியில் அதன் பங்கும் அதிசயிக்கத்தக்கது. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மொழியை நேசிக்க, பரிமாறிக் கொள்ள முனையும்போது அங்கே உயிர் நேசிப்பும் சாத்தியமாகிறது. அந்த நேசிப்பு நம்மை வேறு உலகிற்கு இட்டுச் செல்கிறது. வெறும் குறியீடுகளை மட்டும் கொண்டு காதலர்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்ளமுடியுமா? ஆனால் இன்றைய இளம் தலைமுறை வெறும் குறியீடுகள் மட்டுமே போதும் என்கிறது. எல்லோரும் சந்தித்து இன்புற்று இருக்கும் நேரங்களில் கூட கழுத்திலிருந்து புறப்படும் அவர்களின் கைகள் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள் என்கிறது.
இன்றைய குறியீடுகள் வரமா…சாபமா…தெரியவில்லை.


