திமாகி நக்சல்கள்
ஒரு நாடு சிறந்து விளங்குவதற்கு அந்த நாடு சிந்திக்கும் திறன் கொண்ட மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். நாடு என்பது வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல. வேற்று நாட்டு எல்லைகள் சூழ்ந்த ஒரு பகுதி மட்டுமல்ல. அது மக்களால் நிறைந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் GDP யினால் மட்டும் அளவிடப்படுவதன்று. தொழிற்சாலைகள், துறைமுகங்கள், போர் விமானங்கள், எட்டு வழிச்சாலைகள் மட்டுமே ஒரு நாடு அல்ல. அது உயிரும் சதையுமான மக்களால் நிரம்பியிருக்கிறது. நவீன காலத்தில் ஒரு தேசத்தின் வளர்ச்சியும், வரலாறும், அதன் தலைவிதியும் அந்நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்க்கையினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. நவீனகால தேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டின் தேசிய சின்னங்கள் கடவுளுக்கு நிகராக உருமாறிப்போய்விட்டன. உதாரணத்திற்கு நம் நாட்டில் வந்தே மாதரமும், தேசியக் கொடியும். ஒரு நாட்டின் குடிமக்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் வரும்போது, அம்மக்களின் குடியுரிமைகள் நசுக்கப்படும்போது அதை எதிர்த்து எழுப்பப்படும் குரல்கள் தேசபக்திச் சின்னங்களைக் கொண்டு அடக்கி ஒடுக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 அன்று நாடு எண்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பாரம்பரிய முறைப்படி, தில்லியின் செங்கோட்டையிலிருந்து பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அன்றைய அவருடைய முழுக்கத்தில் ஒரு புதுச் சொலும் உருவாக்கப்பட்டது. திமாகி நக்சல் ( Dimagi Naxal) என்னும் சொல்தான் அது. சிந்தனை ரீதியான நக்சல். அதாவது உங்களுக்கு சிந்திக்கும் சக்தி இருக்கும்பட்சத்தில், நீங்களும் நக்சலே.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் காக்ரோஜ் ஜனதாக் கட்சியினரும், இடதுசாரி மாணவர் இயக்கங்களும், GenZ இளைஞர்களும் தில்லியில் மாபெரும் போராட்டங்களை நடத்திக் காட்டினர். நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளை கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் NTA நடத்தி வருகிறது. கடந்த பல்லாண்டுகளாகவே ஏராளமான குளறுபடிகளும், தேர்வு ரத்துகளும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. பிரதமரும், உச்சநீதிமன்றமும் வேடிக்கை பார்க்கும் நபர்களாக மாறிப்போயினர். நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வியமைச்சர் பிரதான் பதவி விலகவேண்டும் என்பது போராட்டக்காரர்களின் மையமானக் கோரிக்கையா இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், பெண்களின் மீது இழைக்கப்படும் பாலியல் ரீதியான சுரண்டல்கள், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதியக் கல்வித்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் போன்றவை அவர்களின் மையமான கோரிக்கையாக இருந்தன. அயோத்தி ராமர் கோயில் ட்ரஸ்டில் நடைபெற்ற மாபெரும் ஊழலினால் இளைஞர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக மோடி அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே கடும் அதிருப்தி நிலவிய சூழலில், நெருக்கடியில் சிக்கித் தவித்து ஆட்டம் கண்ட மோடி இந்துத்துவ அரசு தர்மேந்திர பிரதான் என்னும் வாலை மட்டும் கழற்றி விட்டு தப்பித்துக் கொண்டது.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க போராட்டம் நடத்தினால், கல்வித் துறையின் சீர்கேட்டிற்கு எதிராகக் குரல் கொடுத்தால், தங்களின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் போராடினால் அது தேசவிரோதச் செயலாகப் பார்க்கப்படுகிறது. மோடி அரசு மட்டுமே இந்திய தேசம் அல்ல.
ஜூலை 20 அன்று மாணவர்களின் மீது கொடும் தாக்குதலை தில்லி அரசு மேற்கொண்டது. தில்லியின் பாதுகாப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பொறுப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அமித்ஷா காவல்துறையும், பாதுகாப்புப் படைகளும் காஷ்மீரில் செய்தது போன்று பெல்லட் குண்டுகளைக் கொண்டு தாக்குதலை நடத்தியது. ஆனால் தான் இளைஞர்களை மன்னித்து விட்டதாக மோடி பெருமையாக அறிவித்துக் கொள்கிறார். போராட்டக்காரர்களுக்கும், மத்திய அரசுக்கும் எற்பட்ட ஒப்பந்தத்தை மீறி, போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதாக மாணவர்களின் மீது ஏராளமான வழக்குகளை தில்லி காவல்துறை பதிவு செய்திருக்கிறது. அவை இன்னமும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில்தான் அடிபட்ட பாம்பாக மோடி அரசு, ‘திமாகி நக்சல்’ என்னும் வார்த்தையை உருவாக்கியிருக்கிறது. இனி ஒரு சிறந்த தேசம் உருவாக, இருக்கும் அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைய, அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக எழும் சிந்தனைகள் அனைத்தும் ‘திமாகி நக்சல்கள்’ என வரையறுக்கப்படும்.
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போலவே இப்போது திமாகி நக்சல் பார்ட்டி என்னும் அமைப்பு இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களை திமாகி நக்சல்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நக்சல்பாரி கிராமத்தில் தோன்றி வளர்ச்சி அடைந்து, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகளுக்கு விரைவாகப் பரவி, கிட்டத்தட்ட ஒரு சமயத்தில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கோலோச்சிய தீவிர கம்யூனிச சிந்தனை முறையே நக்சல்பாரி இயக்கம். நாட்டின் கனிம வளங்கள், இயற்கை வளங்கள், காடுகள் அனைத்தும் கார்ப்பொரேட்டுகளால் கொள்ளை கொண்டுபோகப்பட்ட கடந்த அறுபது ஆண்டுகளில் அதைத் தடுப்பதற்காக, பழங்குடி மக்களின் காடுகளையும், அவர்களின் இருப்பையும் காப்பாற்றுவதற்காக தோன்றியதுதான் நக்சல் இயக்கம். கடந்த எண்பது ஆண்டுகளாக காடுகள், அதன் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதோடு, பழங்குடி மக்களும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களைக் காத்து நின்ற ஆயுதம் தாங்கிய நக்சல் இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது என்று இந்த ஆண்டு உள்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நக்சல்பாரி இயக்கத்திற்கு கொள்கை ரீதியாக ஆதரவளித்து வந்த, பழங்குடி மக்களின் வாழ்வுக்குக் குரல் கொடுத்த எழுத்தாளர்கள், மனித உரிமைவாதிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நகர்ப்புற நக்சல்கள்(Urban Naxals) என்னும் சொல்லின் கீழ் வகைப்படுத்தப்பட்டனர்.
மோடி அரசின் இந்த அர்பன் நக்சல்கள் வகைப்பாட்டிற்குப் பிறகுதான் கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற உயரிய சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பீமா கோரேகான் நிகழ்வுக்குப் பிறகு வரவரராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட மனித உரிமைவாதிகள், வழக்கறிஞர்கள்,எழுத்தாளர்கள் என பதினாறு பேர் கைது செய்யப்பட்டு உஃபா சட்டத்தின் கீழ் பல வருடங்களுக்கு ஜாமீனில் வரமுடியாத வகையில் கைது செய்யப்பட்டனர். சிலர் இன்னமும் சிறையில் வாடுகின்றனர்.
அதனால்தான் திமாகி நக்சல் என்னும் சொல் உருவாக்கத்திற்குப் பிறகு மோடி அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி சிந்தித்தால் நீங்களும் ஒரு திமாகி நக்சல்தான்.
இந்த பிரச்னைக்குள்ளாக ஒரு நகைச்சுவையும் இருக்கிறது. ஒரு காலத்தில், தான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், நக்சல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தார் பகுதிகளை ராணுவ விமானங்கள் கொண்டு தாக்க உத்தரவு பிறப்பித்தவர் நம்முடைய ப. சிதம்பரம். விமானப்படையின் அப்போதைய தலைவர் அவ்வாறு செய்ய மறுத்தார் என்பது வேறு செய்தி. ஆனால் இப்போது ப. சிதம்பரம் அவர்கள் தானும் ஒரு திமாகி நக்சல் என்று பிரகடனப்படுத்துகிறார். நகைச்சுவையின் உச்சக்கட்டம் இது.
(சங்கக்குரல், செப்டம்பர் 2026)




