தில்லி அதிகார பீடங்களை உலுக்கிய GenZ போராட்டம்
நாட்டின் கல்விச்சூழலை, குறிப்பாக நீட் தேர்வு முறைகளில் காணப்படும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான் ஜனதாக் கட்சியினர் தலைமையில் மாணவர்களும், பல்வேறு இளைஞர் அமைப்புகளும் இணைந்து புதுதில்லியில் ஜந்தர்மந்தரில் நடத்தியப் போராட்டங்கள் அமைச்சர் பிரதானின் ராஜினாமாவோடு முடிவுக்கு வந்தது. கற்சிலையாக வீற்றிருந்த பிரதான் அதன் பீடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அந்த பீடத்தில் இன்னொரு அமைச்சர் தற்போது அமர்ந்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்புகளில் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் கொலு பொம்மைகள் மட்டுமே. பாஜக அரசின் கல்விக் கொள்கைகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைப் பண்பாட்டுக்கேற்பவும், கூடுதலாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இயங்கு தளமாக அமைந்திருக்கும் கார்ப்பொரேட் பனியா அதிகாரவர்க்கத்திற்கு ஏற்பவும் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படியாகத்தான் கல்வி என்பது மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொன்டுவரப்பட்டது. அதன்பின்னர்தான் மும்மொழிக்கொள்கை, நீட் தேர்வு என்று இந்தியா முழுமைக்கும் ஒற்றைக் கல்விமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து தில்லியில் மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டில் சென்னையில் பாலன் இல்லத்தில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மாணவர்களின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. நீட் தேர்விலிருந்து நாம் ஏன் விலக்கு கோருகிறோம்? குறைந்தபட்சம் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், தனியார் கல்லூரிகளில் அரசின் 85 சதவிகித இடங்களுக்காகவும் மட்டும் ஏன் விலக்கு கோருகிறோம்? ஏனென்றால் இப்போது நடத்தப்படும் நீட் பொது நுழைவுத் தேர்வு முறை மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் மட்டுமே நடத்தப்படும் தேர்வாகும். அந்தப் புத்தகங்களிலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் இயல்பாக நீட் தேர்விலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள். அல்லது கூடுதலாக படிக்கவும், பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து சேர்ந்து படிக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். விளைவாக மாநிலப்பாடத்திட்டம் கேள்விக்குறியாக்கப்பட்டு, கேலிகுரியதாக மாறிப்போகிறது.
நீட் தேர்வு முதன்முதலில் கொண்டுவரப்பட்டபோது, அரியலூர் மாணவி அனிதா அத்தேர்வில் தோல்வி அடைந்தார். ஆனால் மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் அவர் 196.75 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தார். உச்சநீதிமன்றப் படிகள் ஏறினார் அனிதா. உச்சநீதிமன்றத்தின் முன்னால் அனிதா எடுத்துக் கொண்ட புகைப்பட்டம் இன்னமும் நம்மை என்னவோ செய்யும். ஆனால் உச்சநீதிமன்றம் அனிதா என்னும் மாணவியை ஒரு கரப்பான் பூச்சி என நினைத்து உதாசீனம் செய்தது. ஆனால் இன்று அதே கரப்பான்பூச்சிகள் முதற்கட்டமாக துருப்பிடித்த பிரதானின் பீடத்தை சாய்த்திருக்கிறார்கள். நீட் தேர்வு முறையை ரத்து செய்யவேன்டும் என்ற கோரிக்கையையும் கரப்பான் ஜனதாக் கட்சியினர் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலப் போராட்டம் நீட் தேர்வு ரத்தை மையமாக வைத்து அமையவேண்டும் என்பது நமது விருப்பம்.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாட்டின் சில பயிற்சி நிறுவனங்கள் மட்டுமே அதனால் பயனடைந்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவில் உள்ள சில பயிற்சி நிறுவனங்களை நாம் அதற்கு உதாரணங்களாகக் காட்டமுடியும். நீட் வினாத்தாள்கள் கசிவதோ அல்லது தேர்வின் வினாக்கள் கடைசி நேரங்களில் இதுபோன்ற பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்படுவதோ இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகள் இப்போது சமூக ஊடகங்களின் பெருக்கம் காரணமாக நாடு முழுமைக்குமான கவனம் பெற்றிருக்கிறது.
வழக்கம் போல உச்சநீதிமன்றம் மௌனம் சாதித்தது. ஒரு நிகழ்வில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நாட்டின் வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என அர்ஜிக்க, நாட்டின் நல்ல காலம் இனிதாக துவங்கி வைக்கப்பட்டது. மற்ற நிகழ்வுகள் நீங்கள் அறிந்ததே.
கல்வி அமைச்சரின் பதவி விலகல் வேண்டி நாட்டின் இளைஞர்கள் போராட முனைந்தபோது பாஜக அதிகார வர்க்கம் அதிர்ச்சி அடைந்தது. போராட்டக் களத்தில் கரப்பான் ஜனதாக் கட்சியின் தீப்கே, சௌரவ் தாஸ் ஆகியோர் மிகுந்த முதிர்ச்சியை காட்டியபோதிலும், போராட்டங்களை ஒருங்கிணைப்பதில், கொண்டு செலுத்தியதில் சிற்சில பின்னடைவுகள் ஏற்படவே செய்தன. நாட்டின் இடதுசாரி இளைஞர் அமைப்புகளின் தலைவர்களும் இளம் போராட்ட மாணவர்களுக்கு பக்க பலமாகவும், அவர்களை வழிநடத்தியும் போராட்டத்தைக் கொண்டு சென்றனர்.
கரப்பான் ஜனதாக் கட்சியினர் தங்களின் போராட்டத்தை ஜூன் மாதமே தொடங்கி விட்டபோதிலும், சோனம் வாங்சுக் போராட்டத்தில் இணைந்து, காலவரையறையற்ற உன்ணா நோன்பைத் தொடங்கிய பின்னர்தான் அது சூடு பிடித்தது. இளைஞர்கள், மாணவர்கள் சாரை சாரையாக ஜந்தர் மந்தரை நோக்கிப் படையெடுத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தில்லியின் கூர்கானில் கூலி உயர்வுப் போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தி, கார்ப்பொரேட்டுகளுக்கும், அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாணவர்களின் நினைவில் நிழலாடியது. போராட்டம் மட்டுமே தங்களுக்கான எதிர்காலத்தை நிச்சயப்படுத்தும் என்று அவர்கள் உறுதியோடு இருந்தார்கள். மாணவர்களும், இளைஞர்களும் போராட நிறைய காரணங்கள் எப்போதும் இருக்கின்றன. நகர்ப்புற இளைஞர்களின் வேலையில்லா சதவிகிதம் 6.6 சதவிகிதத்தை தொட்டுவிட்டது. இது அரசின் புள்ளி விபரம் மட்டுமே. உண்மையில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். அரசின் பணவீக்கத்திற்கும் நாட்டில் விற்கும் விலைவாசிக்கும் ஒரு சம்பந்தமும் எப்போதும் இருந்ததில்லை. ஒரு புறம் வேலையில்லாத் திண்டாட்டம். மற்றொருபுறம் பெருகும் விலைவாசி உயர்வு. மறுபுறம் வளைகுடாப் போர் ஏற்படுத்தும் பெட்ரோலியப் பொருட்களின் விலைவாசி உயர்வு.
சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார். போராட்டம் சூடுபிடிக்கிறது. ஜூலை 20 ஆம் தேதி பாராளுமன்ற முற்றுகையை அறிவிக்கிறார்கள் கரப்பான்கட்சியினர். தில்லி நகரம் முழுவதும் படையை இறக்குகிறது மத்திய அரசு. ஜந்தர்மந்தர் பகுதி முழுவதும் அரசுப்படைகளால் முற்றுகையிடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட கலவரம் பாதித்த பகுதிகளில் மட்டும் பயன்படுத்தப்படும் Rapid Action Force இன் நீலநிறப்படைகளை தில்லிக்குப் பொறுப்பான அமித்ஷாவின் உள்துறை களம் இறக்குகிறது. கூடவே லாரி நிறைய கற்களும் கொண்டுவரப்படுகிறது. ஜந்தர்மந்தர் பகுதிகளிலிருந்து ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்ட மாணவர்களை படைகள் தடுத்து நிறுத்தி தாக்குகிறார்கள். நிராயுதபாணியான மாணவர்கள் ஆணிகள் பொறுத்தப்பட்ட லத்திகளாலும், கற்களாலும், கண்ணீர் புகைக்குண்டுகளாலும், பெல்லட் குண்டுகளாலும் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். செல்போனின் சேவைகள் நிறுத்தப்பட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இளம் பெண்களின் மீதான படைகளின் முகம் சுழிக்கும் செயல்களால் நாடு அதிர்ச்சி அடைகிறது. தங்களிடம் உள்ள கைபேசிகளின் உதவியால் போராட்டத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மாணவர்கள் பதிவு செய்கிறார்கள். அன்றைய தினம் இரவே ஜந்தர்மந்தரில் மீண்டும் மாணவர்கள் ஒன்றிணைகிறார்கள். போராட்டம் அடுத்த சில தினங்களில் மேலும் தீவிரமடைகிறது. பிரதான் பதவி விலகமறுத்தால், பிரதான் மந்திரியின் பதவி விலகல் தங்களின் கோரிக்கையாக உருமாறும் என்று கரப்பான் கட்சியினர் அறிவித்த பிறகு, பீதியடைந்த மத்திய பாஜக அரசு, பிரதானை பதவி விலகப் பணித்தது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கணக்கில் பிரதானின் ராஜினாமா அறிக்கை அமைகிறது.
இந்த ஒட்டுமொத்தப் போராட்டத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா? நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒரு அறிக்கை விட்டாரே பாருங்க. “நீட் மறுதேர்வு காரணமாக முந்தைய தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மறுதேர்வில் அதிகமான மதிப்பெண்களை எடுத்திருக்கிறார்கள்”. பெருமைமிகு நிர்மலா சீத்தாராமனின் அறிக்கையைப் பார்த்தவுடன், “அதனால் கறை நல்லது” விளம்பரம்தான் நினைவுக்கு வந்தது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டவுடன் பல மாணவர்கள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டார்கள். மன உளைச்சலில் பல லட்சம் மாணவர்கள் எதிர்காலம் குறித்து சோர்ந்து போய் முடங்கி இருந்தார்கள். இந்தச் சூழலில் நீட் தேர்வின் முறைகேடுகள் குறித்து சிறு குற்ற உணர்ச்சிகூட இல்லாமல், அதற்கு வக்காலத்து வாங்கும் இதுபோன்ற அமைச்சர்கள்தான் பாஜகவின் பீடங்களை அலங்கரிக்கிறார்கள். பீகாரின் இடைத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. தில்லிப் போராட்டங்களின் விளைவாக ஆர்.எஸ்.எஸ் – பாஜக பீடங்கள் ஒவ்வொன்றாகக் கழன்று உதிர்ந்து போகும் நம்பிக்கை எழுகிறது.





