பஞ்சம் போக்கிய விடுதலைக் கீற்று
சுதந்திரமும், ஜனநாயகமும், மானுட உரிமைகளும் காக்கப்படும் ஒரு தேசத்தில் பொருளாதார வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மக்கள் நிம்மதியாக, மனநிறைவோடு, அச்சமின்றி வாழ்க்கை நடத்துவார்கள் என்பதற்கு நாம் பல உதாரணங்களைக் காட்ட முடியும். குடிமக்களின் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் பாதிக்கப்படும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்காதபோது காலப்போக்கில் அச்சமுதாயம் மிகப்பெரும் துன்பத்தைச் சந்திக்கும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
நம் நாட்டில் 1757 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி தொடங்கியது. அது முதல் நாடு விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டுக்குள் ஏராளமான பஞ்சங்கள் நம் தேசத்தை சீர்குலைத்தன. ஒவ்வொரு பஞ்சமும் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. நாடு விடுதலை பெறுவதற்கு நான்காண்டுகளுக்கு முன்னர் வரை கூட, 1943 இல் வங்கத்தில் கொடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. வங்கத்தின் தெருக்களில் மக்கள் பட்டினியால் செத்து மடிந்தார்கள். அது இரண்டாம் உலகப்போர் காலம். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்புப் போர் இந்தியாவை நெருங்கியிருந்த சமயம்.
இரண்டாம் உலகப்போருக்கும், வங்கப் பஞ்சத்துக்கும் நெருங்கிய பிணைப்பு இருந்தது. பஞ்சத்துக்கான காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்? விளைச்சல் தோல்வியடைந்திருக்கவேண்டும். உணவுப்பொருட்கள் சரியான முறையில் விநியோக்கிக்க முடியாமல் இருந்திருக்கவேண்டும். வங்கத்தில் விளைச்சல் பாதிக்கப்படவில்லை. எப்போதும் போல இருந்தது. விநியோக முறையில் கோளாறு ஏற்பட்டது. போர் நடந்து கொண்டிருந்த சூழலில், வங்கத்தில் போர்ப்படைகள் குவிக்கப்பட்டன. போர் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. போர்த் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பதற்காக போர்த்தொழில் முடுக்கி விடப்பட்டது. வங்கத்தில் விளைந்த உணவு வங்கத்தின் மக்களுக்கு மட்டும் என்றால் பரவாயில்லை. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உணவு தேவைப்பட்டது. இந்த உண்மை நிலவரத்தை வங்க மாகாணத்தின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் மேலிடத்திற்குத் தெரியாமல் மறைத்தனர்.
கூடுதலாக இன்னொன்றும் நடந்தது. மாகாணங்களுக்கிடையே வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையற்ற வர்த்தகம் அனுமதிக்கப்பட்டிருக்குமானால், பிற மாகாணங்களிலிருந்து உணவுப்பொருட்கள் வங்கத்திற்கு வந்திருக்கும். இன்னொரு மோசமான நிகழ்வும் நடந்தது. வங்கத்தில் என்ன நிலைமை வேண்டுமானாலும் இருக்கட்டும், இலங்கைக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை பிரிட்டிஷ் அரசு பிறப்பித்தது.
கல்கத்தாவில் உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வங்கத்தின் கிராமப்புறத்திலிருந்து கூடுதலான விலைக்கு உணவுப்பொருட்கள் வாங்கப்பட்டு கல்கத்தாவில் குறைவான விலையில் விற்கப்பட்டது. ஏனென்றால் போர்ச்சூழலில் கல்கத்தா நகர மக்கள் கிளர்ச்சி ஏதும் செய்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு உறுதியாக இருந்தது. எனவே வங்கத்தின் கிராமப்புறங்களில் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது. விலை உயர்ந்து போன உணவுப்பொருட்களை வாங்கும் சக்தியற்றவர்களாக மக்கள் இருந்தனர். எனவேதான் பட்டினிச் சாவு பல லட்சத்தைத் தொட்டது. மனசாட்சியற்ற பிரிட்டிஷ் ஊடகங்கள் வங்கத்தின் விபரீதமான நிலையை லண்டன் மேலிட அதிகார வர்க்கத்திற்குத் தெரியவிடாமல் மௌனம் காத்தன. காரணம் ஜப்பானிய யுத்தம் காலனிய இந்தியாவை நெருங்குவதால் எல்லா மட்டங்களிலும் ஆங்கிலேயர் அச்சம் கொண்டிருந்தனர்.

வங்கத்தின் மோசமான நிலையை எடுத்துக் கூற இந்தியாவில் நாடாளுமன்றமோ, எதிர்க்கட்சியோ, பத்திரிகை சுதந்திரமோ இல்லை. இந்த நிலையில்தான் 1943, அக்டோபர் 16 ஆம் தேதியிட்ட கல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை வங்கப் பஞ்சத்தின் உண்மை நிலையை எடுத்துக் கூறி தலையங்கம் எழுதியது. ஸ்டேட்ஸ்மேன் அப்போது ஒரு பிரிட்டிஷ்காரரின் பத்திரிகையாக இருந்தது என்பது இங்கே முக்கியமானது. வாரத்திற்கு 26000 உயிர்கள் பஞ்சத்தில் பலியாகும் சூழலில், பலி எண்ணிக்கை அரசு கூறுவது போல ஆயிரமா, இரண்டாயிரமா அல்லது வேறொரு எண்ணிக்கையா என்று அது எழுதியது. விழித்துக் கொண்ட லண்டன் தலைமையகம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. வங்கத்தின் பஞ்ச நிவாரணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உணவுப் பொருட்கள் வங்கத்தின் கிராமப்புறங்களுக்கு அனுப்பப்பட்டன. அடுத்தடுத்த விளைச்சலும், பஞ்ச நிவாரணமும் இணைந்து பஞ்சத்தின் கொடுமையைத் தடுத்தன. அடுத்த சில வாரங்களில் பஞ்சத்தினால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. இவை எல்லாமும் அந்த ஒரே ஒரு பத்திரிகை தலையங்கத்தினால் மட்டுமே சாத்தியமானது.
பத்திரிகைகளின் மீதான தணிக்கை வங்கப் பஞ்சத்தின் உண்மை நிலையை வெளியுலகம் அறியாதவாறு பார்த்துக் கொண்டது. வங்கத்தில் நல்ல விளைச்சல் என்று தொடர்ச்சியாக வங்கத்தின் ஆளுநர் சொல்லி வந்தார். அவர் சொல்லியது சரிதான். ஆனால் போர்ப் படைகளுக்கான கூடுதல் உணவுத் தேவையை வங்க ஆளுநர் மறைத்தார். விளைவு வங்கப் பஞ்சம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் எந்த இடத்திலும் பஞ்சம் என்ற ஒன்று நிகழவே இல்லை. அதற்கான முக்கியமான காரணம் உணவு தேவைப்படும் இடங்களும், விளைச்சல் குறைவான இடங்களும் விரைந்து கண்டறியப்பட்டு அங்கு உணவுப்பொருட்களும், நிவாரணப்பொருட்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் பத்திரிகை சுதந்திரமும், கருத்து சுதந்திரமும், எதிர்க்கட்சிகளின் இருப்பும் பிரிட்டிஷ் காலத்திய பஞ்சம் ஒன்று சுதந்திர இந்தியாவில் மீண்டும் நிகழ்ந்து விடாமல் பாதுகாத்தன.
ஆனால் சீனாவில் அப்படி இல்லை. சீனாவில் 1949 இல் புரட்சி நடைபெற்று மக்கள் விடுதலை உணர்வு பெற்றபோதிலும்கூட, பத்திரிகை சுதந்திரமும், ஜனநாயகமும், எதிர்க்கட்சி என்னும் ஒரு அமைப்பும் அங்கே மறுக்கப்பட்டன. 1958 இல் மாவோ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை தொடங்கினார். ‘Great Leap Forward’ – ‘முன்னோக்கியப் பெரும் பாய்ச்சல்’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது. சீனாவை தன்னிறைவு கொண்ட ஒரு கம்யூனிச சமுதாயமாக மாற்றியாக வேண்டும் என்னும் தீவிர வெறி மாவோவிடம் இருந்தது. அவருடைய மற்ற இரண்டு பேராசைகள் என்ன தெரியுமா? இரும்பு உருக்கு உற்பத்தியில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னணி பெறவேண்டும். மற்றொன்று தனது அண்ணனான சோவியத் யூனியனை விட வெகு விரைவாக தனது தேசத்தில் கம்யூனிசத்தை நிலைகொள்ளச் செய்யவேண்டும். விளைவு என்ன தெரியுமா? இதுவரை சீனா காணாத பெரும் பஞ்சத்தையும், பெரும் உயிரிழப்பையும் அடுத்த சில மாதங்களில் மாவோ காண நேர்ந்தது.
உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், விளைச்சல் பன்மடங்குப் பெருகி விட்டதாகவும் கம்யூன்கள் கொடுத்த பொய்த்தகவலை உண்மை என நம்பியது சீன கம்யூனிஸ்ட் கட்சி. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட முடிவான 1962 வாக்கில் சீனாவின் உருக்கு உற்பத்தி 100 மில்லியன் டன்களை எட்டவேண்டும். அதன் மூலம் அமெரிக்காவையே மிஞ்ச வேண்டும் என்று மாவோ கனவு கண்டார். அதாவது ஐந்து வருடத்திற்குள் 2000 சதவிகித உற்பத்தி உயர்வை எட்டவேண்டும். மாவோவின் இலக்கு வேத வாக்கானது. இப்படிப்பட்ட எட்டமுடியாத இலக்கை எப்படி எட்டுவது என்னும் கேள்வியை எவரும் கேட்டால் அவர் தீவிர வலதுசாரி, கம்யூனிசத்துக்கு எதிரானவர் என்று முத்திரைக் குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்கள். அதனால் ஒவ்வொரு கம்யூனும் உற்பத்தியை மிகைப்படுத்திக் கூறினர். முடிவில் கம்யூன்கள் கொடுத்த கணக்கை கூட்டிப் பார்த்தால் உணவு உற்பத்தி மிகையாக உள்ளதாகக் கூறி உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர். சில இடங்களில் உணவுப் பயிர்களுக்குப் பதிலாக பணப்பயிர்களான தேயிலை, பருத்தி பயிரிட்டார்கள். கம்யூன்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியை 20 இலிருந்து 28 சதவீதமாக உயர்த்தினார்கள். ஆனால் உண்மைச் சூழல் என்ன தெரியுமா? நாட்டின் ஒட்டு மொத்த விளைச்சல் 1958 லிருந்து 1960 க்குள் 30 சதம் குறைந்து போனது.

நிலைமையை மாவோவுக்கு எடுத்துரைப்பதற்கு யாருமே இல்லையா? இல்லை. எதிர்க்கட்சி இல்லை. சுதந்திரமான பத்திரிகைகள் இல்லை. கருத்து சுதந்திரம் இல்லை. ஆனால் மாவோவின் உற்ற தோழர் ஒருவர் இருந்தார். பெங் தேஹூவாய் என்பவர்தான் அவர். பாதுகாப்புத் துறை அமைச்சர். 1959 ஆம் ஆண்டில், இவ்வளவு களேபரத்திற்கு மத்தியில் லுஷானில் கூட்டப்பட்ட கட்சி மாநாட்டில் பெங், மாவோவிடம் நாட்டின் உணவு உற்பத்தியின் உண்மை நிலை குறித்து ஒரு தனிப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் தெரியப்படுத்தினார். ஆனால் பெங்கின் கடிதத்தின் உண்மைத் தன்மையை சோதித்தறியாமால் பெங்கின் மீது அதிருப்தி அடைந்தார் மாவோ. பெங், தன்மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தியதாக மாவோ தவறாகப் புரிந்துகொண்டார். தான் வேண்டுமா அல்லது பெங் வேண்டுமா என்று கட்சியிடம் உணர்ச்சிப்பூர்வமாக பிளாக்மெயில் செய்தார் மாவோ. பெங் ஒரு தீவிர வலது திருத்தல்வாதி என்று கட்சி குற்றம் சுமத்தியது. முன்னோக்கியப் பாய்ச்சல் நடவடிக்கையின் எஞ்சிய காலத்திற்கும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1959 அறுவடைக்குப் பிறகு நிலைமை இன்னமும் மோசமானது. கம்யூனை வழிநடத்திய கட்சித் தலைவர்கள் விளைச்சலின் உண்மை நிலையை மேலிடத்திற்குத் தர பயந்தனர். பதிலாக, கம்யூனிலிருந்த மக்களின் மீது குற்றம் சுமத்தினர். உணவுப் பொருட்களை அவர்கள் மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தினர். மக்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உட்பட்டார்கள். 1960 வாக்கில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உணவு இருப்பு நிலைமை மிகவும் மோசமானது. நகர்ப்புறங்களில் உணவு வழங்குதலில் ரேஷன் முறை அமலுக்கு வந்தது. ஏழு மாதங்கள் வரை இறைச்சி எதுவும் மாவோ எடுத்துக்கொள்ளவில்லை. கிராமப்புறங்களில் 1960ன் கோடைக்காலத்தில் நிலைமை மிக மோசமானது. மக்கள் எல்லா இடங்களிலும் பட்டினியால் சுருண்டு விழத்தொடங்கினர். இறந்து போனவர்களின் உடலை அப்புறப்படுத்துவதற்குக் கூட போதிய சக்தி இல்லாமல் மக்கள் இருந்தனர். தங்கள் வீடுகளில் இறந்து போனவர்களின் உடல்களை வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்து, அவர்களுக்கும் சேர்த்து உணவுப் பொருள் ரேஷனை பெற்றுக் கொண்டார்கள்.

பசியின் கொடுமையால் மரப்பட்டைகளை, மண்ணை, இலைகளை, விதைகளை மக்கள் உட்கொண்டனர். இறந்து போனவர்களின் உடல்களைத் தேடிச் சென்று புசித்தனர். உணவுக்காக குழந்தைகள் கொலை செய்யப்பட்டார்கள். தங்களின் குழந்தைகளை தாங்களே கொல்லக்கூடாது என்பதற்காக தங்கள் குழந்தைகளை மற்றவர்களிடம் பரிமாறிக்கொண்டு அதைச் செய்தனர். 30 மில்லியன் மக்கள் அதாவது மூன்று கோடி மக்கள் இந்தப் பஞ்சத்தில் உயிரிழந்தனர். இந்த நவீன யுகத்தில், கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பட்டினியால் 3 கோடி மக்கள் உயிரிழந்தனர் என்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? சீன ஆட்சியாளர்களின் இந்த மாபெரும் தவறுக்கு ஒரே ஒரு காரணத்தைத் தான் நாம் திரும்பத் திரும்ப சொல்லமுடியும். சுதந்திரமும், ஜனநாயகமும் அங்கு இல்லாமல் போனதுதான் இவ்வளவு அவலத்திற்கும் காரணம். கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் அப்பஞ்சத்தில் உயிரிழந்த பிறகு, தனது தவற்றை உணர்ந்த மாவோ, ‘ஜனநாயகம் இல்லாவிட்டால் , கீழே என்ன நடக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது’ என்று கட்சி மாநாடு ஒன்றில் அறிவித்தார். ஜனநாயகத்தின் அருமையை மாவோ கடைசியில் உணர்ந்துகொண்டார்.
நவீன காலங்களில், அமைதிக் காலங்களில் ஏற்பட்ட மிகக் கொடுமையான பஞ்சங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்காத ஆட்சிகளின் கீழேயே நிகழ்ந்திருக்கின்றன என்பதை நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும். 1932-33 சோவியத் பஞ்சத்தில் 60 லட்சம் பேரும், 1995 வடகொரியப் பஞ்சத்தில் அந்நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பேரும் உயிரிழந்ததையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூரமுடியும்.
ஒரு சட்டசபை விவாதத்திற்கும், ஒரு பத்திரிகை தலையங்கத்திற்கும் ஒரு நாட்டில் எதிர்காலத்தில் விளையப்போகும் கேடுகளைத் தடுக்கும் வல்லமை என்றென்றைக்கும் உண்டு.
******************************
(அம்ருதா, செப்டம்பர் 2026)




