ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கனவுடன் தொடங்கப்படும். டாடாவின் நிறுவனங்கள் எல்லாம் கனவுடன் தொடங்கப்பட்டவைதான். டாடா நிறுவனங்களில் வேலை பார்க்கவரும் ஊழியர்களும் ஒரு கனவோடுதான் வருவார்கள். ஏனென்றால் டாடாவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும்வரை வேலைக்கு எப்போதும் உத்தரவாதம் உண்டு. மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியங்களை விட சற்றே குறைவான சம்பளம் வழங்கப்பட்டாலும்கூட அங்கு வேலைக்கு உத்தரவாதம் உண்டு. பணிநீக்க பயம் கிடையாது. மருத்துவக் காப்பீடு வசதி உண்டு. எட்டு மணிநேர வேலை உத்தரவாதம். இப்படி நிறைய. ஆனால் அந்த நம்பிக்கை இன்று பறிபோயிருக்கிறது. டாடாவின் நிறுவனங்களிலும் இன்றைய சூழலில் வேலைக்கு உத்தரவாதம் இல்லை.
புனே டிசிஎஸ் அலுவலகத்திற்கு வெளியே ஒரு டி.சிஎஸ் ஊழியர் ஒருவர் நடைபாதையில் படுத்து உறங்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் கடந்த தினங்களில் வைரலாகியது. தனக்கு டிசிஎஸ் நிறுவனம் பல மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்று அவர் படுத்திருந்த பகுதிக்கு வெளியே ஒரு அறிவிப்புப் பலகையையும் அவர் வைத்திருந்தார். வாய் கிழிய கத்தி நடத்தப்படும் போராட்டங்ளைவிட இந்த மௌனப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிசிஎஸ் நிறுவனம் உடனடியாக அவருக்கு சம்பள பாக்கி பட்டுவாடா செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. நீண்ட நாட்கள் அவர் பணிக்கு வரவில்லை என்று டிசிஎஸ் சொன்னாலும் பொதுமனசாட்சி என்பது டிசிஎஸ்க்கு எதிராகவே இப்போது இருக்கிறது. காரணம் கடந்த வாரங்களில் வந்த செய்திகள்தான். டிசிஎஸ் 12000 ஊழியர்களை அதாவது 2 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் செய்திதான் அது. நான் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவில்லை. மைக்ரோசாஃப்ட், இன்போசிஸ், கூகுள், அமேசான் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுமே தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கின்றன என டிசிஎஸ் சொல்லக்கூடும். அது சரியான வாதமாகவும் இருக்கக்கூடும். ஆனால் ஊழியர்களின் நலன் என்பதில் பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் என்பதையும் தாண்டி அந்த ஊழியர்களைச் சார்ந்திருக்கும் குடும்பங்களையும் உள்ளடக்கியது. அந்நிறுவனத்தின் இடைப்பட்ட நிலையில் பணிசெய்துகொண்டிருக்கும் ஊழியர்கள்தான் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். பல வருடங்கள் அனுபவம் மிக்கவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். இதுவரையிலான பணிக்காலத்தில் அவர்கள் ஏராளமான கடன்களை உதாரணமாக வீட்டுக்கடன், கல்விக்கடன் இப்படி வாங்கியிருக்கக்கூடும். அப்படியென்றால் இதுவரை அவர்கள் வாழ்ந்துவந்த அவர்களின் வாழ்க்கைத்தரம் என்னவாகும்?
டிசிஎஸ் ஐ வளர்த்தவர்களில் மிக முக்கியமானவர் அதன் முன்னாள் தலைவர் ராமதுரை அவர்கள். அவர் டிசிஎஸ் இல் 1972 ஆம் ஆண்டில் சேருவதற்கு முன்னால் அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு ஆண்டு சம்பளம் 12000 டாலர்கள். ஆனால் இங்கு அவர் சேர்ந்தபோது அவருடைய ஆண்டு சம்பளம் 1600 டாலர் மட்டுமே. இன்றைக்கு அப்படி யாரேனும் செய்தால் அவரைப் பைத்தியக்காரர் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அன்று ராமதுரைக்கு டிசிஎஸ் மீது அபாரமான ஈர்ப்பு இருந்தது. நாட்டின் வளர்சிக்காக டிசிஎஸ் நடத்திக் கொண்டிருந்த வேள்வியில் பங்கெடுக்க அவர் விரும்பினார். அப்படித்தான் பல முன்னணி டிசிஎஸ் ஊழியர்கள் அன்றைக்கு பணியில் சேர்ந்தார்கள். அன்றைக்கு சில நூறு ஊழியர்கள் மட்டுமே டிசிஎஸ் இல் பணிபுரிந்துகொண்டிருந்தார்கள். நாட்டில் செயல்படும் ஐ.ஐ.டிக்களில் சென்று தனக்கான ஊழியர்களை டிசிஎஸ் பெருமளவு தேர்ந்தெடுத்தது. தனக்கான கம்ப்யூட்டர்கள் பெருமளவு இல்லாத அல்லது அவர்களால் அதை இறக்குமதி செய்ய இயலாத நிலையில்தான் டிசிஎஸ் இருந்தது. டிசிஎஸ் இன் மிகச்சிறு வளத்தையும் கூட அதன் ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டு டிசிஎஸ் ஐ வளர்த்தார்கள். அன்றைக்கு அவர்கள் பெறும் ஒவ்வொரு ப்ரொஜக்ட்டும் ஒட்டுமொத்த ஊழியர்களாலும் கொண்டாடப்படும். மும்பையின் டாடா ஹவுஸில் நிர்மல் பில்டிங்கில் குடியிருந்த டிசிஎஸ் அன்றைய தினம் களைகட்டும். பீர் பார்ட்டி நடக்கும். மதியம் அருகிலிருந்த சினிமா காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இப்படியாகத்தான் டிசிஎஸ் வளர்ந்தது. ராமதுரை அவர்களின் காலத்தில் அது பெரும் பாய்ச்சலை சந்தித்தது. ராமதுரை உள்ளிட்ட ஊழியர்கள் டிசிஎஸ் இல் இரவு பகலாக வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதனால் ராமதுரை அவர்களின் மனைவி மாலா உள்ளிட்ட அவர்களின் மனைவிமார்கள் எல்லாரும் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரவுப் பொழுதுகளில் டிசிஎஸ் அலுவலகம் வந்துவிடுவார்களாம். அப்படியாக ஊழியர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது டிசிஎஸ் நிறுவனம்.
டிசிஎஸ் வளர்ந்தவிதம் அற்புதமானது. நாட்டை ஒரு மென்பொருள் வல்லரசாக மாற்றியதில் டிசிஎஸ் க்கு அதிக பங்குண்டு. ஆனால் அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நாடு அவர்களுக்கு உதவியிருக்கிறது. 1970 களில் கடுமையான அந்நியச்செலாவணி தட்டுப்பாட்டிலும்கூட, நாட்டின் மிக அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்யமட்டுமே அனுமதி என்னும் நிலை இருந்தபோதும் கூட டிசிஎஸ் அமெரிக்காவிலிருந்து கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது இந்திய அரசு. இப்போதும் போல அப்போதுகூட இந்திய அரசு தீவிர சோவியத் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த நேரம். ஆனாலும் டிசிஎஸ் க்காக, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்தியா தன்னிடம் இருந்த சொற்பமான அந்நியச் செலாவணியை கொடுத்தது.
டிசிஎஸ் இன் முதலாவது அமெரிக்க கான்ட்ராக்ட் செய்துகொடுக்கப்பட்டவிதம் சுவாரசியமானது. 24000 டாலருக்கான பரோக்கின் மருத்துவமனை கணக்குப் பதிவேடுகளை நவீனப்படுத்தியதற்காக எழுதப்பட்ட மென்பொருள்தான். அதை விரைந்து பரிசோதிப்பதற்கு அப்போது தேவைப்பட்ட ICL 1903 கம்ப்யூட்டர் டிசிஎஸ் இடம் இல்லை. டிசிஎஸ் இன் நல்வாய்ப்பாக அந்தக் கம்ப்யூட்டரானது, எல்.ஐ.சி வசம் இருந்தது. எல்.ஐ.சி யை நவீனப்படுவதற்காக, ஆட்டோமேசன் என்னும் செயலில் அப்போது எல்.ஐ.சி நிர்வாகம் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஊழியர்களை அப்புறப்படுத்தி கம்ப்யூட்டர்களை நிறுவி வேலை செய்வதே அப்போதைய எல்.ஐ.சி.இன் நோக்கம். அதற்கு எதிராக எல்.ஐ.சி தொழிற்சங்கங்கள் கடுமையாகப் போராடி அந்த ஆட்டோமேசனை முறியடித்தன. எனவே ஆட்டோமேசனுக்காக கல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்ட ICL 1903 கம்ப்யூட்டர் எல்.ஐ.சி இல் பயன்பாடின்றி கிடக்க, அதை டிசிஎஸ் க்கு சொற்ப விலைக்கு விற்றது அரசு. இப்படியாக டிசிஎஸ் இன் தொடக்கக்காலத்தில் இந்திய அரசும் அதன் வளர்ச்சிக்கும் ஏராளம் செய்திருக்கிறது. ஒரு பொதுத்துறை நிறுவனம் என்னென்ன சலுகைகள் பெற்றதோ கிட்டத்தட்ட அதே அளவு முக்கியமான, தேவையான சலுகைகளை டிசிஎஸ் அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. அதனால்தான் டிசிஎஸ் இடமிருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். அது சமூக பொறுப்புணர்ச்சியோடு செயல்படவேண்டும் என்று மிக அதிகம் எதிர்பார்க்கிறோம்.
ஆனால் இன்று டிசிஎஸ் ஒரு பெரும் கார்ப்பொரேட் கம்பெனி. உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு நிறுவனம். அதன் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்துதான் 162000 கோடி சொத்துமதிப்பு கொண்ட ஒரு நிறுவனமாக டிசிஎஸ் ஐ வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் ஒரு புள்ளிவிபரத்தைப் பார்ப்போம். டிசிஎஸ் இன் தலைமை நிர்வாகி கீர்த்திவாசன் கடந்த 24-25 ஆண்டில் பெற்ற மொத்த சம்பளம் 26.5 கோடி ரூபாய். ஒரு சராசரி டிசிஎஸ் ஊழியர் பெறும் சம்பளத்தைப் போன்று இவருடைய சம்பளம் 330 மடங்கு அதிகம். ராமதுரை அவர்கள் காலத்தில் மேல்மட்ட ஊழியர்களும், கீழ்மட்ட ஊழியர்களும் இப்படி தலைகீழ் சம்பளங்களால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அதுபோல இப்போது நிர்வாகம் வறுமையில் இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் ஏனென்றால் கீர்த்திவாசனுக்கான சம்பளம் 4.6 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. பணத்தால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டும் இன்றைய கார்ப்பொரேட் யுகம் கீர்த்திவாசன்களை சீராட்டி வளர்க்கும். ராமதுரைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பது நம்முடைய முட்டாள்தனம். ஆனால் டிசிஎஸ் எப்படி யாரால் வளர்க்கப்பட்டது என்று ராமதுரை எழுதிய புத்தகம் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும். அதை டிசிஎஸ் இன் உயர்மட்டத்தலைவர்கள் ஒவ்வொருவரும் வாசித்துப் பார்க்கவேண்டும்.
டிசிஎஸ் இன் 550000 ஊழியர்களுக்கு AI குறித்து அடிப்படை பயிற்சியும், 100000 ஊழியர்களுக்கு உயர்தரமான பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும் அப்படியும் மூத்த ஊழியர்களின் திறன் மிக்ககுறைவாக இருப்பதகவும் கீர்த்திவாசன் தெரிவிக்கிறார். அதாவது பணி அனுபவம் பெற்றவர்கள் மிகத்திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பது ஐடி துறையில் தலைகீழ். காலம் செல்ல செல்ல அவர்கள் தங்களை நவீனத் தொழில்நுட்பத்தில் முன்னேற்றிக்கொள்ளவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கார்ப்பொரேட்கள் அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் சுழல் ஏற்படும் என்று டிசிஎஸ் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது.
2047 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் என்று கடந்த ஆண்டில் பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அதுவெல்லாம் சாத்தியமா? என்று கேட்கத் தோன்றுகிறது. நாட்டின் வளர்ச்சிவிகிதம் 6 முதல் 7 சதம் என்று அரசு கூறினாலும், உண்மையான வளர்ச்சி வீதம் 4 முதல் 5 சதவிகதம் மட்டுமே என பொருளாதார வல்லுநர் அசோகா மோடி குறிப்பிடுகிறார். உண்மையான வளர்ச்சிவிகிதம் எண்களில் எப்போதும் இருந்தது கிடையாது. உயர்தரமான கல்வியும், சிகிச்சை முறைகளும், வேலையும் எல்லா மக்களுக்கும் கிடைக்குபோது மட்டுமே நாம் உயர்தரமான வளர்ச்சி அடையமுடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
டிசிஎஸ் நிறுவனத்தை திரு ராமதுரை எப்படி சீராட்டி வளர்த்தாரோ அப்படித்தான் அவரது துணைவியாரான மாலா அவர்களும் ஊழியர்களின் நலன்பால் மிகுந்த அக்கறையைச் செலுத்தினார். ஊழியர்களின் நலனுக்காக மைத்ரி எனும் அமைப்பைத் தோற்றுவித்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு. டிசிஎஸ் ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு பணிநிமித்தம் செல்லும்போது, அங்கு அவர்களின் மனைவிமார்கள் அவர்களின் குடும்பத்தை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது, அந்த நாட்டின் கலாச்சாரத்தோடு எப்படி ஒன்றிணைவது, குடும்ப நிர்வாகம் இப்படி ஏராளமான ஆலோசனைகளை மைத்ரி அமைப்புமூலமாக தொடர்ந்து வழங்க மாலா அவர்கள் பல முன்னெடுப்புகளை செய்தார். பணிநிமித்தம் காரணமாக தங்கள் குடும்பங்களைப் பிரிந்து வெகுதூரம் வந்திருக்கும் ஊழியர்களுக்கு மனநல கவுன்சலிங் கொடுத்ததும் மாலாவின் திட்டங்களுள் ஒன்று. இப்போது மாலா இருந்திருப்பாரேயானால் பணிநீக்கம் செய்யப்படவிருக்கிற 12000 ஊழியர்களுக்கும் மனநல கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பார்.
சரி… இனி வரும் AI காலத்தில், டிரம்பின் 50 சத வரிவிகித ஆட்சிக்காலத்தில் ஐடி ஊழியர்களின் நிலை எப்படி இருக்கப்போகிறது? கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 50 சதம் எகிறியிருக்க ஐடி ஊழியர்களின் சம்பளம் கிட்டத்தட்ட குறைக்கப்பட்டிருக்கிறது. 12000 டிசிஎஸ் ஊழியர்கள் வேலை இழப்பு என்றால் நாடெங்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழந்திருப்பார்கள் என்று சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 60 வயது வரை ரிடையர்மென்ட் காலம் இருக்கும் என்று இப்போது யாரும் எதிர்பார்ப்பதில்லை. 40 வயதை எட்டிப்பார்த்திருக்கும் ஐடி ஊழியர்கள் இந்நேரம் பல முன்னேற்பாடுகளை நிச்சயம் செய்துகொண்டிருப்பார்கள். வேலைக்கு வந்ததும் திருமணம், குழந்தைகள், பின்னர் திருமணச்செலவு, கல்விச்செலவு, வீட்டுக் கடன், வாகனக்கடன் இவையெல்லாம் ஒவ்வொன்றாக அணிவகுத்து நிற்கும். கடனை முடித்தாகவேண்டும். வேலை போகும்பட்சத்தில் பாதி சம்பளத்திற்காவது வேலை கிடைக்குமா என்று வேலை தேடுவார்கள். குடும்பத்தை நகரத்திலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு இடம் பெயர்ப்பார்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் குறையும். கடந்த முப்பதாண்டுகள் இந்தியாவிற்கு பெரும் வளம் சேர்த்துக்கொடுத்த ஐடி ஊழியர்கள் தங்களின் நாளைய வாழ்வை எண்ணி எண்ணி இன்றையப் பொழுதை அச்சமுடன் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.





