புத்தனின் நான்காவது மலம்…! – இரா. மோகன்ராஜன்
Posted On November 27, 2021
0
226 Views

கைகளால் மலத்தை
அள்ளுபவனைக்
கண்டபோது
மும்மலங்களை
அடக்கச் சொன்ன
புத்தனுக்கு
நான்காவது
மலத்தை அடக்கும்
ஆசை பிறந்தது.!
ஆத்திரத்தை
அடக்குவது போலல்ல
என்பதை
அறிந்தவன்
எதைத் தடுப்பது
மலம் அள்ளுபவனையா?
மலத்தையா?
அதைக் கழிப்பவனையா?
போராட்டம்
எழுந்தது
புத்தனுக்குள்.
கழிப்பிடத்தை
ஒழித்தால்
கழிவள்ளுபவர்கள்
ஒழிந்துவிடுவார்களா
என்ன..
கழிவள்ளுபவன்
புனிதன்
என்கிறது
தலையில் பிறந்த
சாத்தானின் வேதம்.
கழிவையோ..
கழிபவனையோ
கழிவகற்றுவனையோ
ஒழிக்க முடியாது
ஒழிக்க வேண்டியது
புனிதமென்பதை
மெய்யுணர்ந்தான்
கவுதம புத்தன்.!