ஜேன் ஸ்ட்ரீட் முறைகேடுகளும், பங்குச்சந்தையின் நிலையாமையும்
திருட்டில் பலவகை உண்டு. பிக்பாக்கெட் ஒரு வகை. வீடு புகுந்து திருடுவது இன்னொரு வகை. சூதாட்டம் ஆடுவதும் ஒருவகை திருட்டு போன்றதுதான். நாமே ஒப்புக்கொண்டு அவர்களை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளச் செய்வது. சூதாட்டத்தில் நாமே சிலநேரம் மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வதும் நடக்கும். ருஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி மிகப்பெரும் சூதாடி. தன்னுடைய சூதாட்ட அனுபவங்களை சூதாடி என்னும் நாவலாகவே எழுதியிருப்பார். பெரும்பாலான விளையாட்டுகள் எல்லாம் வட்டமாக சுழற்றிவிடப்படும் சுழலும் தட்டுகளில் பல வண்ணங்களும், எண்களும் கொண்டவையாக இருக்கும். அங்கெல்லாம் நீங்கள் யாரையும் ஏமாற்றிவிட முடியாது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் வெல்லமுடியும். தஸ்தயேவ்ஸ்கி சிலமுறை வென்றிருக்கிறார். பலமுறை தோற்றுத்தான் போவார். தன்னுடைய சொத்துகளை இழப்பார். நவீன காலங்களில் இப்போது பங்குச்சந்தைகளும் சூதாட்டக் களங்களாக மாறிப்போய்விட்டன. இப்போதெல்லாம் நம் இளைஞர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பங்குச்சந்தையில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். டிரேடிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிரில் விளையாடுபவர்கள் யார் யார் தெரியுமா? பல்லாயிரம் கோடிகளை கையில் வைத்துக்கொண்டு விளையாடும் பன்னாட்டு பகாசுர நிதி நிறுவனங்கள்.
கடந்த தலைமுறை வரை சேமிக்கும் பழக்கம் நம் நாட்டில் அதிகமாக இருந்தது. நாட்டின் சேமிப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகள் முன்புவரை 23 சதவிகிதம் இருந்தது. வட்டி விகிதம் அதிகமாக இருந்த காரணங்களினால் வங்கிகளில் நீண்ட காலத்திற்கு சேமிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது வட்டிவிகிதம் குறைந்து போய்விட்டதினால், வங்கிகளில் டெபாசிட் செய்யும் பழக்கம் அரிதாகிப்போய்விட்டது. சேமிக்கும் பழக்கத்தை அடியோடு மறந்தது இந்தத் தலைமுறை. சிறுக சிறுக சேமித்து வாங்கியப் பொருட்கள் இன்றைக்கு கடனிலும், EMI முறையில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. வங்கிகளின் சேமிப்பு பாஸ்புத்தகங்கள் போய் இப்போது கைநிறைய கடன் அட்டைகளை வைத்திருக்கிறார்கள். கடனில் மாட்டிய அவர்கள் விரைவாக சம்பாதிக்கத் துடிக்கிறார்கள். தங்களின் பணம் விரைவில் பெருகவேண்டும் என நினைத்து பங்குச்சந்தையில் போய் தங்களிடம் இருக்கும் சொற்பப் பணத்தை கொண்டுகூட டிரேடிங்கில் ஈடுபடுகிறார்கள். பங்குச்சந்தையில் எளிதில் சம்பாதிக்கலாம் என்று சொல்லிக்கொடுக்க ஆயிரம் யூடியூபர்கள் இருக்கிறார்கள். தினம் தினம் அதை எப்படி செய்வது என்று வழிநடத்தி உங்களைப் பெரும் பள்ளத்தில் தள்ள பல ஆயிரம் வாட்ஸப் ஆட்கள் இருக்கிறார்கள்.
இன்றைக்கு பங்குச்சந்தை பல ஆயிரம் கோடிகள் புரளும் ஒரு பெரும் கார்ப்பொரேட் நிறுவனமாக மாறிவிட்டது. பல ஆயிரம் கம்பெனிகளின் பங்குகள் அங்கு தினமும் விற்கப்படுகின்றன, வாங்கப்படுகின்றன. அதோடு முடிந்தால் பரவாயில்லை. வாங்கிய பங்குகள் விலை இறங்கினால் என்ன செய்வது? நாமெல்லாம் பங்குச்சந்தையில் சில பங்குகளை சில ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் வைத்திருப்போம். ஆனால் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு தினமும் பங்கு வர்த்தகம் செய்கின்றன. அதனால் அதுபோன்ற பகாசுர நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அப்போது பங்கின் விலை குறைந்து போனால் அவர்களுக்கு நட்டம் ஏற்படும் அல்லவா? அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுதான் ஹெட்ஜிங் – எனப்படும் எஃப் அன்ட் ஒ ( ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ்). மிக அதிகமானப் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் நிதி நிறுவனங்கள் பங்குகளின் விலை இறக்கத்தை சமாளிக்கும் பொருட்டு ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் ஹெட்ஜிங் செய்வார்கள்.
பங்குசந்தை சார்ந்த சில சொற்களை நான் இங்கே உங்களுக்குச் சொல்லியாகவேண்டும்.
பங்குச்சந்தை காலை 9.15 மணிக்கு தொடங்கும். மாலை 3.30 மணிக்கு நிறைவுறும். நிஃப்டியும், பேங்க் நிஃப்டியும் ஏறியும், இறங்கியும் சென்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு வாரமும் புதன் அன்று பேங்க் நிஃப்டியின் வாராந்திர வர்த்தகம் நிறைவுறும். வியாழனன்று நிஃப்டியின் வாராந்திர வர்த்தகம் நிறைவுறும்.
பங்குச்சந்தையில் உள்ள இரு முக்கியப் பிரிவுகள் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி. பங்குச்சந்தையில் வணிகமாகும் மொத்தம் 1600 பங்குகளில் முதன்மையான 50 பங்குகளை நிஃப்டி 50 என்று அழைக்கிறார்கள். பேங்க் நிஃப்டியில் மொத்தம் 12 பெரிய வங்கிப்பங்குகள் உள்ளன. இன்னும் சில சொற்கள் உள்ளன. ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் புட் மற்றும் கால் என்று இரண்டு வர்த்தகம் உண்டு. நிஃப்டி குறியீடு ஏறுகிறது என்றால் அதில் உள்ள 50 பங்குகளின் விலை ஏறுகிறது என்று அர்த்தம். அப்படியானால் நிஃப்டி கால் விலை ஏறுகிறது, புட் விலை குறைகிறது என அர்த்தம். பங்குகளின் விலை குறைகிறது என்றால் குறியீடு குறைகிறது என அர்த்தம். அப்போது புட் விலை ஏறுகிறது, கால் விலை குறைகிறது. ஜானி ஸ்ட்ரீட் மோசடியை விளங்கிக்கொள்ள இந்தச் சொற்கள் போதும் என நினைக்கிறேன்.
இப்போது களத்திற்கு வருவோம்.
கொரோனா காலத்தில் பங்குச்சந்தை அதலபாதாளத்தில் விழுந்தது அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் அது விரைந்து மேலெழுந்தது. 2021 ஆம் ஆண்டில் உயரத் தொடங்கிய பங்குச்சந்தை 2024 ஆம் ஆண்டில் உச்சம் சென்றது. கொரோனா காலத்தில் வீடுகளிலிருந்து வேலை செய்த டெக் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்குச்சந்தையில் நுழைந்தனர். அவர்கள் எல்லோருக்கும் அப்போது வேலை இருந்தது. பங்குச்சந்தையில் அவர்கள் நுழைந்தது பங்குகளை வாங்கி நீண்ட காலத்திற்கு சேமிக்க அல்ல. மாறாக, அவர்கள் உடனடியாக பெரும் லாபம் பார்த்துவிடலாம் என்று களத்தில் இறங்கினர். தனிப்பட்ட பங்குகளில் அவர்களால் உடனடியாக லாபம் பார்த்துவிடமுடியாது. அதனால் அவர்கள் ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் நுழைந்தார்கள். ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் என்றால் என்ன என்று முதலிலேயே சொல்லியிருப்பேன். ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் உள்ள வர்த்தகம் அனைத்தும் ஹெட்ஜிங் அதாவது பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக உள்ளது. இப்படி விளங்கிக்கொள்ளலாம். ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட் என்பது சர்வதேச ஆட்டக்காரர்கள் ஆடக்கூடிய டி-20 போன்றது. அவர்களோடு நம் பள்ளிக்கூட மைதானங்களில் ஆடிக்கொண்டிருக்கும் லோக்கல் ஆட்டக்காரர்களை ஆடவிட்டால் என்ன ஆகும்?
2021 முதல் 2024 மார்ச் முடிய நம்முடைய சில்லரை வர்த்தகர்கள் ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் மட்டும் 21 பில்லியன் டாலர்களை இழந்ததாக செபியின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்தது. அதாவது 178500 கோடி ரூபாய் இழப்பு. இந்தக் காலக்கட்டதில்தான் உலகின் மிகப்பெரிய ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட்டாக இந்தியா மாறியது. விளக்கொளி ஈர்த்த ஈசல்களைப் போல ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட்டை நோக்கி சாரை சாரையாக மக்கள் படையெடுத்தார்கள். தங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் கூட இவர்கள் ஆட்டத்தில் போய் இழந்தார்கள்.
ஒரு நிறுவனத்தினுடைய பங்கின் விலை என்பது சில கணக்கீடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் உள்காரணிகள் மட்டும்தான் அதன் விலை நிர்ணயத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும். ஆனால் அந்தக் காரணிகளோடு கூட நாட்டின் பொருளாதார, அரசியல் சூழல் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் நிகழ்வுகளும்கூட அந்தப் பங்கின் விலையை நிர்ணயம் செய்கின்றன. டிரம்ப் 50 சதவிகித வரி விதிக்கும்போது அச்செய்தி கேட்டு பங்குச்சந்தைகள் சரிந்து விழுகின்றன. அரசியல் மாற்றங்களும், பட்ஜெட் சமர்ப்பிக்கும்போதும் பங்குச்சந்தை தாறுமாறாக ஏற்ற இறக்கம் பெறுகின்றன. அப்போது அது சூறாவளியாக மாறிப்போகிறது. அந்தச் சூறாவளியில் நம்முடைய சில்லறை வர்த்தகர்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால் எப்போதாவது அடிக்கும் இந்தச் சூறாவளிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அடிக்கடி நடந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
கடந்த மூன்று வருடங்களில் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டு 5 பில்லியன் டாலர் அளவுக்கு லாபம் பார்த்ததாக செபியால் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவின் பங்கு வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் குறித்து இப்போது பார்ப்போம். ஜேன் ஸ்ட்ரீட் என்பது அமெரிக்காவின் ஒரு பங்கு வர்த்தக நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகளில் தீவிர வர்த்தகத்தில் இது ஈடுபடுகிறது. தலைமை அலுவலகம் நியூயார்க். லண்டன் ஆம்ஸ்டர்டம், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் அலுவலகங்கள் உள்ளன. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலத்தில் ஜேன் ஸ்ட்ரீட்டின் செயல்பாடுகள் குறித்து செபி ஆய்வு செய்து, ஜூலை 3 அன்று ஜேன் நிறுவனத்தின் மீது தனது குற்றச்சாட்டை செபி பதிவு செய்தது. Bank Nifty Index இல் வார இறுதி நாள் வர்த்தகத்தை (Closing Day Trading) ஜேன் ஸ்ட்ரீட்டின் 4 கிளை நிறுவனங்களும் திரித்து தங்களின் லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டதாக செபி தெரிவித்தது. ஜனவரி 2023 முதல் மார்ச் 2025 வரை மொத்தம் 18 வார இறுதி வர்த்தகங்களில் ஜேன் ஸ்ட்ரீட் தனது முறைகேட்டை நிகழ்த்தியிருக்கிறது. சட்டவிரோதமான லாபமான ரூ. 4844 கோடியை ஒரு வங்கிக்கிளையில் செலுத்தவேண்டும் என்றும், அதுவரை டிரெடிங்கில் அது ஈடுபட தடையும் விதிக்கப்படுவதாகவும் செபி தெரிவித்தது. செபியின் உத்தரவுக்கு இணங்கிய ஜேன் ஸ்ட்ரீட் உடனடியாக அந்தப்பணத்தை ஒரு வங்கிக்கிளையில் ஜூலை 14 அன்று டெபாசிட் செய்தது. உடனே செபியும் ஜூலை 21 அன்று ஜேன் ஸ்ட்ரீட்டின் மீது விதித்திருந்த வர்த்தகத் தடையை நீக்கம் செய்தது. ஜேன் ஸ்ட்ரீட்டின் மீதான விசாரணை தொடரும் என்றும் செபி அறிவித்துள்ளது.
முறைகேட்டின் வடிவம்; காலை 9.15 முதல் 11.46 வரை பேங்க் இன்டெக்ஸ் இல் உள்ள 12 பங்குகளை அப்போது விற்பனையாகும் விலைக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்கிக் குவிப்பது. அந்தப் பங்குகளின் பியுச்சர்ஸ் ஐயும் வாங்குவது. அதே நேரத்தில் பேங்க் இன்டெக்சில் அதிகமான அளவு சார்ட் செய்வது. அதாவது பேங்க் நிஃஃப்டியில் அதிகமான கால் விற்பனை செய்வது மற்றும் புட் வாங்கிக்குவிப்பது. இதன்மூலம் எப்போது வேண்டுமானாலும் பேங்க் இன்டெக்ஸ் கீழே விழலாம் என்னும் நிலையை ஏற்படுத்துவது.
இரண்டாவது நிலையில், 11.49 முதல் 3.30 வரை காலையில் செய்ததை அப்படியே இப்போது மாற்றிச் செய்வது. வாங்கி வைத்திருக்கும் வங்கிப்பங்குகளை விற்பது, பியூச்சர்ஸ் ஐ விற்பது. இதன் காரணமாக பேங்க் இன்டெக்ஸ் தடலடியாக கீழே விழும். வார இறுதி நாட்கள் வர்த்தகம் என்பதினால் நிலைமை இன்னும் மோசமாகும். இப்போது ஜேன் ஸ்ட்ரீட் கொழுத்த லாபத்தில் இருக்கும்.
இப்படியாக 2023 முதல் 2025 வரை ஜேன் ஸ்ட்ரீட் 36671 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருக்கிறது. இதில் 4844 கோடி ரூபாய் மோசடியான முறையில் லாபமீட்டியிருக்கிறது என்று செபியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என ஜேன் ஸ்ட்ரீட்டை செபி பிப்ரவரி 2025 ஆம் ஆண்டில் எச்சரிக்கை செய்தும்கூட அது தனது முறைகேடான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக ஜேன் ஸ்ட்ரீட் இந்தியப் பங்குச்சந்தையை கபளீகரம் செய்துகொண்டிருக்க, செபியோ சில்லறை வர்த்தகர்களை ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் ஈடுபடவேண்டாம் என எச்சரித்துக் கொண்டிருந்தது. கொள்ளையர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக எல்லோரும் வீட்டை பூட்டிக் கொள்ளுங்கள். கொள்ளையர்கள் வரலாம் என்பதே செபியின் அணுகுமுறையாக இருந்தது.
ஜேன் ஸ்ட்ரீட் இப்படி விளையாடிக் கொண்டிருப்பதை செபி கண்டுபிடித்ததா? அல்லது அதைத் தடுத்ததா? இந்தக் காலக்கட்டத்தில் பங்குச்சந்தை மிக மோசமான முறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெரும் பகாசுர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தின் புள்ளிவிபரங்களும் செபி வசம் இருந்திருக்கும். ஆனால் செபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? செபி எப்போது நடவடிக்கை எடுத்தது தெரியுமா?
ஜேன் ஸ்ட்ரீட் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டில் மில்லினியம் வர்த்தக நிறுவனத்திற்கு எதிராகவும், அதன் இரண்டு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராகவும் நியூயார்க் மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கு என்ன தெரியுமா? இந்தியாவில் ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு எங்களுக்கு கொழுத்த லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்த எங்களுடைய இரண்டு ஊழியர்களை மில்லினியம் வர்த்தக நிறுவனம் தங்கள் வசம் ஈர்த்துவிட்டார்கள். அவர்கள் மூலமாக நாங்கள் இந்தியாவில் இதுவரை ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட்டில் செய்துவந்த வணிகமுறைகளை-அதாவது எப்படி கொள்ளையடித்தோம் என்பதை – அவர்களும் தெரிந்துகொண்டுவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த இருவரும் எங்களைவிட்டு நீங்கியபிறகு, இந்தியாவில் எங்கள் லாபம் மிகக்கடுமையாகக் குறைந்துபோய்விட்டது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று ஜேன் ஸ்ட்ரீட் சொல்லிக்கொண்டது. அப்படியும் செபி விழித்துக்கொண்டு ஜேன் ஸ்ட்ரீட் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுத்ததா? அதுதான் இல்லை.
வழக்கு டிசம்பர் 2024 இல் சமரசமாக தீர்த்துவைக்கப்பட்டது. ‘யாருக்கும் தெரியாமல் இந்தியாவைச் சுரண்டவும். நம்மவர்தானே சுரண்டுகிறோம்’ என்பதாக அந்த சமரசம் இருக்கலாம். இந்த வழக்கு நடந்துவந்த ஒன்பது மாதகாலத்தில்கூட செபி ஜேன் ஸ்ட்ரீட்டின் மீது கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அப்போதும்கூட இந்திய சில்லறை வர்த்தகர்கள் பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் மார்க்கெட்டைவிட்டு விலகியே இருங்கள் என்று மட்டுமே எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தது. ஆனால் ஜேன் ஸ்ட்ரீட்டினால் மேலும் பல கோடீஸ்வர இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் செபி விழித்துக்கொண்டது. அதன்மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.
ஆனால் இன்னமும்கூட ஜேன் ஸ்ட்ரீட் தான் செய்தது சரிதான் என்றது. செபியின் விதிகளை தான் மீறவில்லை என்றது. அப்படியானால் செபியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே எந்த அந்நிய நிதி நிறுவனங்களும் நம்மை கொள்ளையிடலாம் என்றுதானே அர்த்தம். அப்படியானால் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், நம்முடைய நாட்டின் பங்கு வர்த்தகத்தைப் பாதுகாக்கவும் நாம் செபி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் வணிகத்தில் சில்லறை வர்த்தகர்கள் ஈடுபடுவது அபாயகரமான ஒன்று. அவர்களைக் காப்பாற்ற செபியும் கூட வராது என்பதுதான் நமக்குத் தெரிந்த அப்பட்டமான உண்மை. செபியின் கடுமையான கட்டுப்பாடுகளினால் சில்லறை வர்த்தகர்களை டிரேடிங் செய்வதிலிருந்து தடுத்துவிடமுடியும். ஆனால் நம் நாட்டு மக்களின் சேமிப்பான பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் இன்னமும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம்தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றன. நம் நாட்டின் காப்பீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அனைத்தும் பங்குச்சந்தையில்தான் உள்ளன. எனவேதான் நாம் இதுகுறித்தும் கவலையும், அச்சமும் கொள்ளவேண்டியதாக இருக்கிறது.





