No Kings – ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரானப் போராட்டங்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிரான “No Kings” “மன்னர்கள் வேண்டாம்” என்னும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம், அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியன்று அமெரிக்காவின் எல்லா மாகாணங்களிலும், எல்லா பெரிய சிறிய நகரங்களிலும் மொத்தமாக 2600 இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவில் லண்டன், பாரிஸ், பெர்லின், மாட்ரிட்,ஸ்டாக்ஹோம் மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களிலும் கூட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ட்ரம்ப் உலகின் ஒரு அதிமுக்கியமான ஆசாமி என்னும் ஊடக பிம்பத்தை உடைத்தெறிந்த நாளாகவும் அன்றைய தினம் அமைந்துபோனது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதல்கட்டப் போராட்டங்களில் கலந்துகொண்ட 5 மில்லியன் மக்கள் தொகையை விட இம்முறை நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தில் கூடுதலாக இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சி செலுத்த அதிகாரம் படைத்திட்ட டிரம்ப், அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி மீண்டும் ஒருமுறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் டிரம்ப், ஒரு மன்னரைப் போல எல்லா விவகாரங்களிலும் நடந்து கொள்வதும், அமெரிக்காவில் ஒரு எதேச்சாதிகாரத்தை நிறுவ முயல்வதும் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு குடியேற்ற அதிகாரிகள் என்னும் போர்வையில் ட்ரம்ப் அரசு அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாட்டு மக்களை கொடுமைப்படுத்தும் விதம் நாகரிகமான எல்லா மக்களிடமிருந்தும் பலமான கண்டனங்களை எழுப்பியிருக்கிறது. கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒதுக்கப்பட்டிருக்கும் நிதிகளிலும் ட்ரம்பின் அரசு பலமான வெட்டுகளைச் செய்திருக்கிறது.
அமெரிக்கா என்னும் நாட்டை மட்டுமல்ல, எந்தக் கருத்தியல்களின் மீது அமெரிக்கா என்னும் தேசம் எழுப்பப்பட்டிருக்கிறதோ அக்கருத்தியல்களை, அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை, அதன் பன்மைத்துவத்தைக் காக்க அமெரிக்க மக்கள் ‘மன்னர்கள் வேண்டாம்’ போராட்டத்தில் களம் கண்டனர். அமெரிக்கா என்னும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ட்ரம்ப் தான் பதவியேற்ற நாள் முதல் கொடுத்துவரும் அடிகளுக்கு பதிலடியாக இந்தப் போராட்டங்கள் அமைந்துபோயின. காசாவில் நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதிகரித்துவரும் ஏழை பணக்காரர் பிளவுகளைக் கண்டித்தும், உலகில் பெருகிவரும் போர் மற்றும் சர்வாதிகாரத்தனத்தை எதிர்த்தும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
ட்ரம்ப் மற்றும் அவரது கும்பலை எதிர்த்து ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களை ட்ரம்ப் ஆட்சியாளர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? மிகக்கேவலமான முறையில் இந்தப் போராட்டங்களை அவர்கள் சித்தரித்தார்கள். துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், சபாநாயகர் மைக் ஜோன்சன், வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் ஆகியோர் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தினார்கள். போராடியவர்களை “ஹமாஸ் ஆதரவாளர்கள்”, சட்டவிரோத வெளிநாட்டவர்கள்”, “கடுமையான குற்றவாளிகள்” என அவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே வசைபாடினார்கள். கோபம் கொண்ட மக்கள் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
போராட்டத்திற்கு மறுநாள் ட்ரம்ப் ஒரு கலந்துரையாடலில் இப்படி மிரட்டுகிறார்: ” மறந்துவிடாதீர்கள், நான் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தமுடியும்”. உலகின் ஒரு மகா போக்கிரித்தனமான ஒரு ஆட்சியாளரிடமிருந்து இதைவிட வேறு என்ன பதிலை எதிர்பார்க்கமுடியும்? ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களை கடுமையாக அச்சுறுத்தும் ட்ரம்ப், தேசிய காவல் படைகளை சான்பிரான்சிஸ்கோவுக்குள் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்.
ஆர்ப்பாட்டம் நடந்த நாளில், போராடியவர்களுக்கு AI தொழிற்நுட்பத்துடன் தனது அசுத்தமான சிந்தனையை உபயோகப்படுத்தி பதிலளித்தார் ட்ரம்ப். தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை அவர் பதிந்தார். அவருக்கு விருப்பமான நாஜித் தலைவரின் கிரீடம் அணிந்து, “மன்னர் ட்ரம்ப்” என்ற வார்த்தைகளால் பொறிக்கப்பட்ட ஒரு விமானத்தை இயக்கி, டைம்ஸ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மலத்தை வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. துணை ஜனாதிபதி வான்ஸ் வெளியிட்ட மற்றொரு செயற்கை நுண்ணறிவு வீடியோவில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் அவருக்கு முன்னால் தலைவணங்கும்போது, முடிசூட்டப்பட்ட ட்ரம்ப், வாளை சுழற்றுவதாகச் சித்தரித்தார்.
பாராளுமன்ற சபாநாயகர் மைக் ஜோன்சன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஆழமான அச்சங்களைப் பிரதிபலித்தார். ABC நியூஸின் “இந்த வாரம்” நேர்காணல் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் “மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் ஆபத்துகள் குறித்து உங்களுடன் பேசுவேன்” என்று கூறுகிறார். “இது ஒரு ஆபத்தான சித்தாந்தம், இது அமெரிக்காவுக்கு எதிரானது. இது, நாம் ஆதரிக்கும் அனைத்திற்கும் எதிரானது” என்று அவர் புலம்புகிறார். அமெரிக்க அதிகாரவர்க்கம் அனைத்தும் மார்க்சின் பெயரால் இப்போது அழுது புலம்புகிறார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பேரழிவிற்குள்ளான ஐரோப்பாவும், ஜப்பானும் பிற முதலாளித்துவ அமைப்புகளும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் பலத்தில் உயிர் பிழைத்தது. கடந்த 70 ஆண்டுகளில் உலக முதலாளித்துவ அமைப்புக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளின் காரணமாக அமெரிக்காவின் பொருளாதார பலம் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இன்று அமெரிக்காவின் மொத்தக்கடன் 37 ட்ரில்லியன் டாலர்(ஒரு ட்ரில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 88 லட்சம் கோடி ரூபாய்). அமெரிக்காவில் மோசமான சமூக, பொருளாதார சமத்துவமின்மை இப்போது நிலவுகிறது. பணக்காரர்கள் ஒரு சதம் பேர் அமெரிக்காவின் மொத்த செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை அல்லது 49 ட்ரில்லியன் டாலர்களை தம்வசம் வைத்திருக்கிறார்கள். ட்ரம்ப் இவர்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர்களுக்காகத்தான் அல்லும்பகலும் உழைக்கிறார். இவர்களுக்காகத்தான் உலகம் முழுவதும் போர்களை ஊக்குவித்து வருகிறார். அல்லது தன்னுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சண்டை நிறுத்தம் செய்யவேண்டுமென்கிறார்.
உலகம் முழுவதும் தனக்கு வேண்டாத நாடுகளின் மீது அபரிதமான இறக்குமதி வரி விதிப்பதும், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீது கொடூரமாகத் தாக்குதல் தொடுப்பதும், பேச்சு சுதந்திரத்தை அடக்குவதும், அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதும், நகரங்களுக்கும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் ராணுவத்தை அனுப்புவதும் ட்ரம்பின் உச்சக்கட்ட அராஜக, பாசிச நடவடிக்கைகளாக அமைந்திருக்கின்றன. அதனால்தான் தொடர்ச்சியான “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படுவதன் தேவையும் அதிகரித்துவருகிறது





