உருமாறும் ஆணவப்படுகொலைகள்
ஆணவப்படுகொலை என்பது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றம் என கடந்த ஏப்ரல் 8 2025 அன்றுதான் உச்சநீதிமன்றம் கண்ணகி முருகேசன் ஆணவப்படுகொலை வழக்கில் முழங்கியது. ஆனால் அதற்குப்பிறகு வரிசையாக கவினின் ஆணவக்கொலை. இப்போது மயிலாடுதுறையில் DYFI தோழர் வைரமுத்துவின் ஆணவக்கொலை. இதுவரை நடந்தேறிய ஆணவப்படுகொலைக்கும், மாயவரம் படுகொலைக்கும் என்ன வித்தியாசம் என்றால், வைரமுத்து காதலித்த மாலினியின் பெற்றோர் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். மாலினியின் தாய் விஜயா ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பவர்களில் விஜயா தவிர மற்ற அனைவரும் தலித்துகள். மிகவும் சிக்கலான ஒரு வழக்காக இது உருமாறியிருக்கிறது. வைரமுத்து – மாலினி காதல் பத்து வருடக் காதலாக இருந்திருக்கிறது. வைரமுத்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும், இது குறித்து ஏற்கனவே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், வைரமுத்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கும் பட்சத்தில் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் போராட்டம் நடத்திய DYFI இயக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது ஆணவப்படுகொலை தொடர்கதையாகிவிட்டது. அப்படியானால் தமிழ் மக்கள் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்துவிட்டது. தனியார் வாகனங்களில் தங்கள் பெயர்களோடு தங்கள் சாதிகளின் பெயரையும் சேர்த்து போட்டுக்கொள்வது இப்போது நாகரிகமாகப் போய்விட்டது. அந்த அநாகரிகத்தை நாகரிகமாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், தன் பெண்ணும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கிறாள் என்று மகிழ்ச்சிதான் அடையவேண்டுமேயொழிய, மாறாக தன் மகளின் காதலனைக் கொலை செய்யத்துணிகிறாள் என்றால் சாதி எப்படியெல்லாம் தன்னை நுட்பமாக நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் ஆராயவேண்டியுள்ளது. அகமணமுறையை ஒழித்தால் மட்டுமே சாதி ஒழியும் என்று அம்பேத்கர் கூறுவார். ஆனால் அகமணமுறையை ஒழித்துக்கட்டிய இடத்திலும் கூட சாதி கிளைத்துப் பரவியிருக்கிறதே என்று சிந்திக்கத்தான் தோன்றுகிறது. அப்படியானால் சாதியை ஒழிப்பதற்கு அகமணமுறையை ஒழிப்பது மட்டும் போதாது…என்றுதான் சிந்திக்கத் தோன்றுகிறது. கொரோனா தொற்றுக்கிருமிகள் போல புதுப்புது சாதித் தொற்றுக்கிருமிகளும் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன.
ஆணவப்படுகொலைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? என்று சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் வருங்காலங்களில் கேள்விகள் கேட்கப்படக்கூடும். மிரட்டியும், உருட்டியும் காதல் ஜோடிகளைப் பிரித்துவிடுவது முதல் வகை. தருமபுரி இளவரசன் – திவ்யா இணையருக்கு இதுதான் நிகழ்ந்தது. தலித்துகளின் சொத்துகள் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. இளவரசன் (தற்)கொலையில்தான் இறுதிக்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது. இடையில் திவ்யாவின் தந்தை தன் சாதிக்காரர்களின் தூற்றுதல்களால் தற்கொலை செய்துகொண்டார். திவ்யாவின் தந்தையும் இறந்தார். காதலனும் இறந்தார். இரு பெண்கள் விதவைகளானார்கள். இப்போது தங்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது தொலைந்துபோன ஒன்று.
காதல் ஜோடிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவது. இருவரின் உயிரையும் எடுத்துவிடுவது ஆணவப்படுகொலையின் இரண்டாவது வகை. சங்கர் – கௌசல்யா இணையருக்கு இதுதான் நடந்தது. சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கவுசல்யா தப்பித்துக்கொண்டார். தன் குடும்பத்தாரிடமிருந்து தப்பித்து சங்கரின் வீட்டில் அடைக்கலமானார். மிகவும் துணிச்சலான பெண். தன் குடும்பத்தார் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவர்களுக்கு மீண்டும் தண்டனை வாங்கித்தர சளைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறார். சங்கரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். மீண்டும் திருமணம் செய்துகொண்டார். தொடர்ச்சியாக சாதி எதிர்ப்பு இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
காதலிக்காமல் வெறுமனே பேசிக்கொண்டிருந்தால்கூட சாதி வெறியர்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை. கோகுல்ராஜ் கொலை இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு. சாதி விட்டு சாதி பேசுவதும், படிநிலைகளைத் தாண்டி நண்பர்களாக ஆணும் பெண்ணும் பழகுவதும்கூட தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைக்கு உள்ளாக நேரிடும். இது மூன்றாவது வகை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிறசாதிப்பெண்களோடு பேசிக்கொண்டிருந்த தலித் இளைஞர்கள் வட இந்தியாவில் கூட கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் தப்பித்து வெளியூர் செல்லும்பட்சத்தில், கிராமங்களில் அவ்விளைஞனின் சகோதரிகள் கொடும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இப்போது மயிலாடுதுறையில் நடந்திருக்கும் ஆணவப்படுகொலையை நீங்கள் நான்காவது என்றே வகைப்படுத்தமுடியும். இதில் மற்றுமொரு பரிமாணம் உண்டு. கொலையுண்டவர் மார்க்சிஸ்ட் கட்சியின் DYFI தோழர். காதலுக்குத் துணைநிற்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி சவாலாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். இப்படுகொலையில் மாலினியின் தாய் தவிர குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தலித்துகள். மாலினியின் தாய் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்பச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சாதி ஆணவப்படுகொலைகளுக்கு என்னதான் தீர்வு? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால அளவில் இந்தியாவில் சாதி கெட்டித்தட்டிப் போயிருக்கிறது. அது இன்னமும் இறுகிக்கொண்டேதான் வருகிறது. அந்த இறுக்கத்தை தளர்த்தும் முயற்சிகளாகத்தான் சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. 2006 ஆம் ஆண்டில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, வயது வந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நட்பு கொள்வதும், திருமணம் செய்துகொள்வதும் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தார். அடிப்படை உரிமை என்னும் பட்சத்தில் அந்த உரிமையானது அரசியல் சட்டத்தின் அனைத்து பிரிவுகளின் கீழும் எப்பாடுபட்டாவது பாதுகாக்கப்படவேண்டும் என்றுதான் பொருள். இதற்குச் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் ஜூலை 8, 2003 அன்று கண்ணகியையும், முருகேசனையும் சுடுகாட்டிலேயே வைத்து ஆணவக்கொலை செய்தது கண்ணகியின் சாதி. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகாவது ஆணவக்கொலைகள் தடுக்கப்பட்டதா என்றால் இல்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. இன்று ஆணவக்கொலையை ஆதரிப்பவர்கள் சாதி வெறியர்கள் மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்
விரோதமானவர்களும்கூட. ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் மட்டுமே இப்போதைய உடனடித் தீர்வாக இருக்கமுடியும்.
(சங்கக்குரல் அக்டோபர் 2025)





