தோழர் வி.எஸ் : மக்களின் நாயகன்
ஒரு சிதை எரிந்துகொண்டிருக்கிறது. அதை நோக்கி கூட்டம் கூட்டமாக செங்கொடி ஏந்திய தொண்டர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எரியும் சிதையை நோக்கி தங்கள் முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்கிறார்கள். பார்ப்பவர்களை சிலிர்க்கச் செய்யும் காட்சி அது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் இறுதி நிகழ்வில் நடந்த காட்சி அது. உலகின் மிக வயதான கம்யூனிஸ்ட்கள் இருவர் நம்மிடம் இருந்தார்கள். ஒருவர் வி.எஸ். இன்னொருவர் தோழர் நல்லக்கண்ணு. இப்போது வி.எஸ் நம்மிடையே இல்லை. 101 வயதில் சமீபத்தில் காலமானார் வி.எஸ். திருவனந்தபுரத்திலிருந்த அவரின் உடல் இறுதி மரியாதைக்காக அவரின் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 150 கிமீ தூரத்தைக் கடக்க அவரின் உடல் தாங்கிய வாகனம் 22 மணிநேரம் எடுத்துக் கொண்டது. வழி நெடுக கடும் மழையையும் பொருட்படுத்தாமல் தேசிய நெடுப்ஞ்சாலையிம் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க தோழர் வி.எஸ் க்கு பிரியாவிடை கொடுத்தனர். வழிநெடுக, கால்கடுக்க, இரவு முழுவதும் காத்துக்கிடந்தவர்களி பெரும்பாலோர் பெண்களும், இளைஞர்களும்தான். தோழருக்கு செவ்வணக்கம் என்னும் மரபான வாசகத்தை விட, எங்கள் கண்ணே, கண்மணியே வி. எஸ்.. ஸே என்னும் உணர்ச்சி மிகு வாசகம்தான் இறுதிவரை ஒலித்தது.
புன்னப்பரா வயலார் தியாகிகள் எங்கு உறங்கிக் கொண்டிருக்கிறார்களோ அதே வலியசுடுகாட்டு நிலத்தில்தான் இப்போது வி.எஸ்.ம் ஓய்வெடுக்க சென்றிருக்கிறார். வி.எஸ் ஐ கட்சிப்பணிகளில் செதுக்கிய தோழர் பி. கிருஷ்ணபிள்ளை அங்கே உறங்குகிறார். உழைக்கும் மக்களின் விடிவெள்ளிகளாகத் திகழ்ந்த தோழர்கள் பி.கே. சந்திரசேகரன், கே. ஆர். கௌரிஅம்மா, பி.கே. குஞ்சச்சன். என். சிறீதரன், பி.கே. விஜயன், சைமன் அசன், சுகதன், டி.வி தாமஸ், சி.கே சந்திரப்பன் வரை இந்த நிலத்தில்தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாத நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கூட வி.எஸ் தொடர்ச்சியாக புன்னப்பரா வயலார் நினைவு தினங்களில் இங்கு வந்து அஞ்சலி செலுத்தத் தவறியதில்லை.
வி.எஸ் மீதான மக்களின் பேரன்புக்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? தோழர் வி.எஸ் ஐ ஒவ்வொருவரும் தங்களின் வீட்டுப் பிள்ளையாகக் கருதக்காரணம் என்ன? காரணம் நிறைய இருக்கிறது. எளிய மக்களுக்காக வாழ்ந்தவர் அவர். கர்ம வீரர் காமராஜரையும், பேரறிஞர் அண்ணாவையும் வி.எஸ் ஸோடு பொருத்திப் பார்க்கலாம். படிக்காத மேதையாக, சிறந்த ஆட்சி நிர்வாகத்திற்காக காமராஜரோடு பொருத்தலாம். போராட்ட குணத்திற்கு அண்ணாவோடு ஒப்புமைப்படுத்தலாம். பெரும் தலைவர்களும், ஆளுமைகளும் இசங்களினால் வழிநடத்தப்படவில்லை. இவர்களின் வழியில் இசங்கள் தங்களை மீள்தகவமைப்பு செய்துகொண்டன. ஒரு மக்கள் தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் காமராஜரும், அண்ணாவும் இருந்தார்கள். அந்த வரிசையின் மற்றொரு அடையாளம் தான் தோழர் வி.எஸ்.
எந்த எளிய மக்களுக்காக வி.எஸ் போராடினாரோ அந்த எளிய மக்களை ஆளும் வாய்ப்பைப் பெறுவதற்கு அவருக்கு நீண்ட காலம் பிடித்தது. 82 வயதில்தான் அவர் முதலமைச்சரானார். நல்ல வேளையாக 75 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்னும் விதி அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை எட்டிப்பார்க்கவில்லை. அப்படி இருந்திருக்குமானால், வி.எஸ். எப்போதோ கழித்துக் கட்டப்பட்டிருப்பார். அந்த முதிர்ந்த வயதில்தான் அரசு நிலங்களையும், மலைகளையும், காடுகளையும் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக அவர் போராடினார். லாட்டரி மாஃபியாக்களுக்கு எதிராகவும் களம் கண்டார். முத்தங்கா ஆதிவாசிகளின் போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தார். மூணார் பெண் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திலும், பிளாச்சிமடாவில், நடைபெற்ற தண்ணீர் காக்கும் போராட்டத்திலும், காசர்கோட்டின் ரசாயனக் கழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திலும் அவர் பங்குகொண்டார். இப்போராட்டங்களில் அவர் வெற்றி பெறவும் செய்தார். தண்ணீர், நிலம், காற்று இவை அனைத்தும் பொதுவானவை. எவர் ஒருவருக்கும் சொந்தமில்லை என்பதே வி.எஸ் இன் கட்சிக் கொள்கையாகவும், அவருடைய அரசின் கொள்கையாகவும் இருந்தது. அவர் சமூக நீதிக்காகவும், அனைத்து எளிய மக்களின் நலனுக்காகவும், பெண்களுக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருந்தார். அவரது போராட்டத்தில் கட்சி நலனையும் மீறி ஒரு அற உணர்வு குடிகொண்டிருந்தது. அதனால்தான் சில போராட்டங்களைக் கட்சிக் கடுப்பாட்டையும் மீறி நடத்த அவரால் முடிந்தது. கூடங்குளம் அணு உலையை ஆதரித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருந்தபோது, அணு உலைக்கு எதிராக கூடங்குளம் போராட்டத்தில் பங்குகொண்டார். இந்தப் போராட்டங்களே அவரை கேரள மக்களின் கதாநாயகனாக்கியது. நமக்கும் அவர் கதாநாயகன்தான்.
கடந்த ஆறு ஆண்டுகாலமாக அவர் வாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். தன் மகனின் வீட்டில் அடைபட்டுக் கிடக்கவேண்டியிருந்தது. பினராய் விஜயன் சற்றே நிம்மதியாக இருக்கமுடிந்தது இந்த ஆறு ஆண்டுகாலத்தில்தான். தொடக்கத்தில் வி.எஸ் குரு. பினராய் விஜயன் சீடர். காலப்போக்கில் கேரள மார்க்சிஸ்ட் கட்சிக்களம் என்பது இவ்விருவரின் மல்யுத்தக் களம் போல மாறியது. இருவரும் கட்சியின் பொலிட்பீரோ உத்தரவுகளை மீறியதால் இவ்விருவரையும் பொலிட்பீரோவிலிருந்தே விலக்கி வைத்தது மார்க்சிஸ்ட் மேலிடம். பிரகாஷ் காரத்துக்கு பினராய் விஜயனிடம் ஒரு பாசம் உண்டு. யெச்சூரிக்கு வி.எஸ் இடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் வி.எஸ் எக்காலத்திலும் கட்சிக் கொள்கையை பிறருக்காக தாரை வார்த்தது கிடையாது. எளிய மக்களின் நலனை எதற்காகவும் விட்டுக்கொடுத்தது கிடையாது. பெண்களின் நலனுக்காகவும், சாதிய மேலாதிக்கத்தை எதிர்த்தும், சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவதற்காகவும் அவர் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோதும் சரி, முதலமைச்சராக இருந்தபோதும் சரி தொடர்ச்சியாகப் போராடிக்கொன்டிருந்தார்.
மிகச்சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பாக அது நடந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. 1962 ஆம் ஆண்டின் சீனப் படையெடுப்பை ஓட்டி நிகழ்ந்த சித்தாந்த வேறுபாடுகள் இப்பிளவுக்குக் காரணமாகியது. 1964 ஆம் ஆண்டில் வி.எஸ் உள்ளிட்ட 34 தோழர்கள் சி.பி.எம் கட்சியைப் பிரசவித்தார்கள். வி.எஸ் பெற்றெடுத்த குழந்தைதான் கட்சி. அதனால்தான் அக்குழந்தை தன்னை எட்டி உதைத்தபோதெல்லாம் அதை ஒரு சுகமாக அவரால் தாங்கிக்கொள்ளமுடிந்தது. மீண்டும் மீண்டும் அதைத் தனது வழிக்குள்ளாகவேக் கொண்டுவரவும் முடிந்தது. 2006 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் அவருக்கு போட்டியிட கட்சி டிக்கெட் கொடுக்காதபோது தொண்டர்கள் கொதித்தெழுந்தார்கள். அந்தக் கொதிப்பில் பொலிட்பீரோமுடிவுகள் அடங்கித்தான் போயின. 2006 இல் முதலமைச்சரானார். 2011 இல் எதிர்க்கட்சித் தலைவராக வெற்றிகரமாகப் பணியாற்றினார். அவையெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மட்டுமல்ல, கேரளாவின் வரலாறு மட்டுமல்ல, எளிய மக்கள் தலைவன் வி.எஸ் என்பவரின் வரலாறாகவும் அமைந்துபோனது.
வி.எஸ் ஐ இந்த அளவுக்கு ஒரு அரசியல் தலைவனாக மாற்றியது ஒரே ஒரு போராட்டம்தான். அதுதான் புன்னப்பரா வயலார் எழுச்சி. திருவாங்கூர் காட்டாட்சிக்கு எதிராக, குறிப்பாக திவான் ராமஸ்வாமி ஐயருக்கு எதிராக நிலமற்ற ஏழை விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் நடத்திய எழுச்சிமிக்கப் போராட்டம் கேரளாவின் அரசியல் வரலாற்றை அடியோடு மாற்றியது. இரண்டாம் உலகபோரின் விளைவாக திருவாங்கூர் சமஸ்தானத்து மக்களின் வறுமை உச்சத்தை எட்டியிருந்த போதுதான் திவான் சி.பி. ராமஸ்வாமி ஐயர் திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணையாது என்றும், அதற்கென்று தனியான அரசியல் சாசனம் இருக்கும் என்றும், 25 அக்டோபர் 1946 அன்று திருவாங்கூர் விடுதலை பெறும் என்றும் அறிவிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. அக்டோபர் 22 அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்களும், கயிறுத் தொழிற்சாலைத் தொழிலாளர்களும் அரசுக்கெதிரானப் போராட்டத்தில் முன்னணிப் படைவீரர்களாக மாறுகிறார்கள். மறுபுறம் திருவாங்கூர் அரசுக்கு நிலச்சுவந்தார்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான் தொழிலாளர்கள் விடுதலை வேண்டி புன்னப்பரா காவல் முகாம் நோக்கி முன்னேறுகிறார்கள். போராட்டக்காரர்களை நோக்கி திருவாங்கூர் படைகள் துப்பாகிச்சூடு நடத்துகிறார்கள். ஏராளமானவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
கோபமுற்ற கம்யூனிஸ்ட்கள் 1000 பேர் வயலார் பகுதியில் அணி திரள்கிறார்கள். பாக்கு மரத்தின் தண்டிலிருந்து வரிகுந்தம் என்னும் ஈட்டிகளைத் தயார் செய்கிறார்கள். திருவாங்கூர் படைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஏராளமான போலீஸ்காரர்கள் கொல்லப்படுகிறார்கள். திவான் ராணுவச்சட்டத்தை பிரகடனப்படுத்துகிறார். அக்டோபர் 27 வாக்கில் திருவாங்கூர் தரைப் படைகள் கப்பல் படைகளின் உதவியோடு வயலாரை முற்றுகையிடுகிறார்கள். கம்யூனிஸ்ட்களும் வீரத்துடன் போராடுகிறார்கள். இருப்பினும் கம்யூனிஸ்ட்களின் எழுச்சி ஒடுக்கப்படுகிறது. இறுதியில் பல நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் கொல்லப்படுகிறார்கள். வி.எஸ் இன் கோட்டையான ஆலப்புழாக் கடற்கரை நெடுக குறிப்பாக புன்னப்பரா வயலார் கிராமங்கள் அனைத்திலும் எழுச்சி உச்சக்கட்டமாக இருந்தது. இந்த எழுச்சியின்போது வி.எஸ் 23 வயதேயான கயிறுத்தொழிற்சாலைத் தொழிலாளி. புதிதாக வார்க்கப்பட்ட கம்யூனிஸ்ட். இந்த எழுச்சியை வடிவமைத்ததில், தொழிலாளிகளை ஒருங்கிணைத்ததில் வி.எஸ் க்கு முக்கியப் பங்குண்டு. எழுச்சிக்கு முன்பே வி. எஸ் கைது செய்யப்பட்டுவிட்டாலும்கூட, எழுச்சியின்முடிவில் அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டு கொடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு காட்டுப்பகுதிக்குள் வீசப்பட்டார். மரணமடைந்துவிட்டார் என மக்கள் கருத, உயிர் பிழைத்து திரும்பிவந்தார். சிகிச்சைக்குப் பின்னர் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். புன்னப்புரா வயலார் எழுச்சி ஒடுக்கப்பட்டாலும், எளிய கேரள மக்கள் வர்க்க உணர்வு கொண்டவர்களாக மாறினர். கேரளம் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக மாறியதும் இப்படித்தான். வி.எஸ் கேரள மக்களின் கண்மணியாக மாறியதும் இப்படித்தான்.
4 வயதில் அம்மாவை இழந்து 12 வயதில் அப்பாவை இழந்து, 7 ஆம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்திலிருந்து விலகி, சகோதரரின் தையற்கடையில் சிறார்த் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்து, பின்னர் கயிறுத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே இளம் கம்யூனிஸ்ட்டாக உருமாறி, புன்னப்புரா வயலாறு எழுச்சியில் போலீசாரின் கொடிய சித்திரவதைக்கு உள்ளாகி ….வி.எஸ் கடந்துவந்த இளமைப்பருவ வாழ்க்கை மிக மிகக் கொடியது. 92 வயதில் வி.எஸ் இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் எப்போது, ஏன் கடவுள் நம்பிக்கையை இழந்தீர்கள்? சற்றே ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வி.எஸ் சொன்னார்: ” அம்மா, அப்பா, நான், சகோதரர்கள் என மகிழ்ச்சியான குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தது. ஒரு நாள் அம்மாவுக்கு பெரியம்மை நோய் வந்தது. அப்போதெல்லாம் பெரியம்மை வந்தவர்களை வீட்டிற்கு வெளியே யாரும் நடமாடாத ஒதுக்குப்புறத்தில் பனையோலை வேயப்பட்ட ஒரு சிறு குடிசையில் தனித்து விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு உணவும், குடிநீரும், மருந்தும் தரப்படும். ஆனால் அவர்கள் தனியேதான் இருக்கவேண்டும். அக்குடிசையில் தொலைதூரத்தில் அவர்கள் அழும் குரலை நீங்கள் கேட்கமுடியும். அவர்கள் அங்கேயே இறந்துவிட்டால் அவர்களை அங்கேயே எரித்துவிடுவார்கள். என் அம்மாவையும் அப்படியாக ஒரு சிறு குடிசையில் வைத்தார்கள். அப்போது எனக்கு வயது 4. அம்மாவைப் பார்க்கவேண்டும் என அப்பாவிடம் நான் அடம் பிடிப்பேன். தொலைதூரத்திலிருந்த அக்குடிசையை எனக்குக் காட்டுவார். ஒருவேளை அக்குடிசையின் ஓட்டைகளில் இருந்து என் அம்மா எங்களைப் பார்த்திருக்கக்கூடும். அம்மா அதற்குள் இருக்கிறார் என என்னிடம் சொல்லி நான் அழுதுகொண்டிருக்கும்போதே என்னை அழைத்துச் சென்றுவிடுவார். சிறுது நேர அமைதிக்குப் பிறகு வி.எஸ் சொல்லுவார்: அம்மாவுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். அம்மா திரும்பிவரவேண்டும் என பிரார்த்தனை செய்வேன். சில நாட்களுக்குப் பின்னர் அம்மா போய்விட்டதாக அப்பா சொன்னார். அதன்பிறகு என் அப்பாதான் எனக்கு எல்லாமே. அம்மா இல்லா குறையை அப்பா போக்கினார். ஒரு நாள் காய்ச்சல் கண்டு என் அப்பாவும் படுக்கையில் வீழ்ந்தார். அதன்பிறகு ஒவ்வொரு நாளும் தூங்கமுடியாமல் படுக்கையிலேயே அழுது அழுது புரண்டு கடவுளிடம் வேண்டினேன். என் அப்பாவையாவது எனக்குத் தந்துவிடு. கடவுளே என் அப்பாவைக் குண்மாக்கு என்று என்று கடவுளிடம் மன்றாடினேன். ஆனால் ஒருநாள் அப்பாவும் என்னை விட்டுப் போய்விட்டார். குழந்தைகளாக நாங்கள் அநாதைகளானோம். அப்போது நான் முடிவெடுத்தேன். எங்களின் வேண்டுதல்களுக்கு செவிமடுக்காத கடவுள்களை மீண்டுமொருமுறை இனி அழைப்பதில்லை”.
வி.எஸ் தனது கேரளத்தை இயற்கை மணம் மாறாமல் நவீனப்படுத்த விரும்பினார். நீர்வழிகளை நவீனபடுத்தினார். காடுகளை அழித்து சாலைகள் இடும் திட்டத்தை அவர் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் மென்பொருள் துறையில் கேரளத்தின் பங்கை உயர்த்தினார். அதற்கான திறவுகோலாக இலவசமான மென்பொருள் எல்லோருக்கும் அவசியம் என்பதை உணர்ந்து அதை ஊக்கப்படுத்தினார். ஆண் பெண் சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும், ஊழலுக்கு எதிரானப் போராட்டங்களையும் அவர் உயர்த்திப் பிடித்தார். தனிப்பட்ட முறையில் மிக நேர்மையான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையை அவர் பெரிதும் நேசித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், காடுகளையும் பாதுகாக்க அவர் பல திட்டங்களைக் கொணர்ந்தார். மலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களிடமிருந்து மலைகளை அவர் காப்பாற்றினார். மதிகெட்டான் சோலையை தேசியப் பூங்காவாக அறிவித்தார். காலம் மாற மாற வி.எஸ் ஐ நாம் மறந்துபோக நேரிடலாம். ஆனால் இந்த இயற்கை என்றுமே வி.எஸ். ஐ நினைவில் வைத்திருக்கப்போகும் காரியம் ஒன்றை கேரள தாவரவியல் அறிஞர்கள் செய்தனர். 2021 ஆம் ஆண்டில் கல்லார் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காசித்தும்பை பூவின் ஒரு புதிய பூ இனத்துக்கு வி.எஸ் இன் பெயரைச் சூட்டினர். சர்வதேச தாவரவியல் வல்லுநர்களிடம் அதற்கான அங்கீகாரத்தையும் அவர்கல் பெற்றார்கள். Impatiens achudanandanii என்பது இப்போது அதன் தாவரவியல் பெயர். எளிய மக்களின் சேவகர்கள் பிரபஞ்சம் முழுவதும் தன் அதிர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.





