உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நிலை வேண்டும்…
சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீடு விழா
நீதியரசர் சந்துருவும், அர்பன் நக்சல்களில் முக்கியமானவருமான ஆனந்த டெல்டும்டேவும் சிறப்பான உரைகளை நிகழ்த்தினார்கள். அரசியல் சட்டத்திற்கும், நம்முடைய ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தனர். அவசியம் எல்லோரும் கேட்கவேண்டிய உரை. இப்புத்தக வெளியீட்டு விழா ஒரு அரசியல் நிகழ்வாகத்தான் நடந்தேறியது. தமிழ்நாட்டில் நடப்பது மன்னராட்சி என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல். இனி ஒரு முதல்வர் பிறப்பால் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என அவர் கூறியதும் பலத்த கைத்தட்டல். உதயநிதியிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, தான் சினிமா நிகழ்வுகளைப் பார்ப்பதில்லை என்று கோபமாகப் பதிலளித்தார். ஆனாலும் அது ஒரு சினிமா நிகழ்வு என கடந்துபோய்விட முடியவில்லை. தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். பிறப்பால் பாகுபாடு பார்ப்பதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம். அப்படியானால் முதல்வர் என்பவர் பிறப்பால் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்பதும் நியாயம்தானே. அப்படி பிறப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதுவும் ஒருவகை பார்ப்பனியம்தானே. (07-12-2024)
*******************
நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோமா? ஒருவருக்கொருவர் புன்னகை புரிந்துகொள்கிறோமா? அன்பைப் பகிர்ந்து கொள்கிறோமா? இவ்வியற்கை நமக்களித்துள்ள மனித உணர்வுகளை நாம் உபயோகப்படுத்துகிறோமா? நம்முடைய மிருக குணங்கள் ஏன் அடிக்கடி தலை தூக்கித் திரிகிறது? நம்முடைய உணர்ச்சிகளை ஏன் நம்மால் கட்டுப்படுத்தமுடியாமல் போய்விடுகிறது? ஏன் நம்முடைய வார்த்தைகள் பல சமயங்களில் எல்லை மீறுகின்றன? இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம் மனவிசாரணை. மனத்தின் ஆழத்திற்குள் சென்று நடத்தப்படும் விசாரணை. மனத்தின் அந்த அடியாழத்தில் மட்டுமே நம் உணர்ச்சிகளின் வேர்களை நாம் கண்டறியவும், அதை உற்று நோக்கவும் முடியும். அப்போதுதான் நம் வார்த்தைகள் நம் சொற்படி வெளிப்படும். (07-12-2024)
*********************