25 கோடி மக்களின் வறுமை உண்மையில் காணாமல் போய்விட்டதா?
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக வுக்குக் கிடைத்த சில எதிர்பாராத வெற்றியும், மோடிக்கு பட்டாபிஷேகம் போல நடத்தப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவும் வரும் பொதுத்தேர்தலை வீறுகொண்டு சந்திக்க ஒன்றிய பாஜக அரசை தயார்படுத்தியுள்ளது. இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கான மற்றுமொரு ஆயுதத்தையும் பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. தங்களது கடந்த பத்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டை கடந்து மேலே வந்திருக்கிறார்கள் என்னும் பொருளாதார அஸ்திரம்தான் அது. முக்கியமாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோடிக்கணக்கிலான மக்கள் வறுமையிலிருந்து தப்பித்திருக்கிறார்கள் என்பது அரசின் பிரச்சாரம். ராமர் கோயில் பிரச்சாரமும், அதன் திறப்பு விழா கொண்டாட்டங்களும் மட்டுமே இனி தேர்தல் பிரச்சாரஙக்ளுக்குப் பயன்படப்போவதில்லை என்பதை பாஜக மிகச் சரியாகவே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் 25 கோடி மக்களின் வறுமையை ஒழித்திருக்கிறோம் என்னும் புதிய உத்தியை பாஜக அரசு கையில் எடுத்திருக்கிறது. நிதி ஆயோக் அமைப்பின் ஒரு ஆய்வறிக்கைதான் பாஜக மோடி அரசின் இப்படியான சாதனைகளை பட்டியலிட்டிருக்கிறது.
2023 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பு, Multi Dimensional Poverty – MDP ( பல பரிமாண வறுமை ) குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. 1 அதன்படி வறுமையின் அளவு 2013-14 ஆம் ஆண்டின் 29.1 சதவீதத்திலிருந்து, 2022-23 ஆம் ஆண்டில் 11.28 சதவீதமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கும் அறிக்கை, எண்ணிக்கையில் 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து தப்பித்திருப்பதாகவும் கணக்கு காட்டுகிறது. அதாவது மோடியின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்திருப்பதாக நிதி ஆயோக் தெரிவிக்கிறது. மேற்கண்ட அறிக்கையைப் படித்த பின்பு நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சிதான் வந்திருக்கமுடியும். ஆனால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட விதமும், அதன் புள்ளி விபரக் குறிப்புகளும் இந்த அறிக்கை மீது நமக்கு சந்தேகத்தை வரவழைப்பதாக அமைந்துள்ளது.
Multi Dimensional Poverty ( பல பரிமாண வறுமை) என்பதை நாம் எப்படி வரையறுக்கிறோம்? கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் என்னும் மூன்று அளவுகோல்கள் சமமான அளவில் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சுகாதாரத்தில் சரிவிகித சத்துணவு, குழந்தைகள் நலன் மற்றும் இளையோர் நலன், இறப்பு விகிதம் ஆகியனவும் அடங்கும். கல்வியில் பள்ளிக்கூட வருகைப்பதிவு முக்கியம். வாழ்க்கைத்தரத்தில் வீட்டு வசதியும், எரிவாயு பயன்பாடும், கழிப்பறைகளும், சுகாதாரமான குடிநீரும், அனைவருக்கும் மின்சாரமும் மிக முக்கியம். மேற்சொன்னவற்றுள் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் அவர் வறுமையில் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
காலத்திற்கு காலமும், இடத்திற்கு இடமும் வறுமைக்கோட்டின் அளவீடும், வரையறையும் மாறிக்கொண்டே இருக்கிறது. 1962 ஆம் ஆண்டில் ஒரு வரையறையும், 1995 இல் ஒரு வரையறையும், 2010 இல் வேறு மாதிரியான வரையறையும் இருக்கத்தான் செய்யும். லடாக்கில் வாழும் மக்களுக்கு குளிர்காலத்தில் தற்காத்துக் கொள்ள நல்ல கம்பளி உடையும், நல்ல வசிப்பிடமும், நல்ல உணவும் தேவைப்படும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு குளிர்காலத்தை சமாளிக்க அப்படி ஒன்றும் பொருள் செலவு செய்ய அவசியமில்லை. அறுபதுகளில் தனிநபர் கலோரி நுகர்வு மட்டுமே வறுமைக்கோட்டு வரையறைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இப்போது கல்வியும், சுகாதாரமும் மக்களின் நுகர்வுப் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கின்றன. அமர்தியாசென்னின் Human Development Index என்னும் மனித வளக்குறியீடு இப்போதைய வறுமைக்கோட்டு கணக்கீட்டில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இதன்படி வறுமைக்கோட்டுக் கணக்கீட்டில் தனிநபர் நுகர்வு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
மத்திய அரசு இதுவரை அமல்படுத்தியிருக்கும் திட்டங்கள், உதாரணமாக போஷன் அபியான், இரத்த சோகையைத் தடுக்கும் திட்டமான முக்த் பாரத் மற்றும் உஜ்வாலா யோஜனா போன்றவை வறுமையை ஒழிக்க மிக முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் வளர்ச்சி சார்ந்து ஆராயும் பொருளாதார வல்லுநர்கள் இப்புள்ளி விபரங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். ஏனென்றால் அரசிடம் வலுவான புள்ளிவிபரக் குறிப்புகள் இல்லை என்பதுதான் அவர்களுடையக் குற்றச்சாட்டு. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளிவந்திருப்பார்களேயானால் உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா ஏன் மிகவும் பின்தங்கியிருந்தது என்ற இயல்பானக் கேள்வியும் தொக்கி நிற்கிறது. வளர்ச்சி என்பது நாட்டின் மொத்த வருமானத்தின் அதிகரிப்பைக் குறிக்கும். தனிநபர் வருமானத்தைக் குறிப்பதல்ல. வளர்ச்சி என்பதை பரந்துபட்ட மக்களின் வளர்ச்சியாக என்றைக்கும் கொள்ளமுடியாது . அடித்தட்டு மக்களின் வருமானம் என்றைக்கும் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் வளர்ச்சியின் விகிதம் எப்போதும் பாரபட்சமாகவே பங்கிடப்பட்டு வருகிறது. உலகில் மூன்றாவது அதிகமான பில்லியனர்கள் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் தனிநபர் வருமானத்தில் உலகில் 137 வது நாடாக இருக்கிறது. பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல, அடித்தட்டு மக்களின் வருமானம் குறைந்துகொண்டே செல்கிறது.
முறைசாராத் தொழிலாளர்களுக்கான E-Shram வலைத்தளத் தகவலின்படி, அதில் பதிவு செய்திருக்கும் 28 கோடித் தொழிலாளர்களில் 94 சதவிகிதத்தினர் மாதம் ரூ. 10000 க்கும் குறைவாகவே பெறுகிறார்கள். உலகவங்கியின் அளவீடுகளின்படி ஒரு தனிநபர் 2.15 டாலர்(/தனிநபர்/ ஒரு நாள்) தொகை வருமானம் ஈட்டவேண்டும். அதாவது 5 நபர்கள் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 26500 வருமானம் ஈட்டவேண்டும். Purchasing Power Parity (PPP) கணக்கீடுகளின்படி இத்தொகையை 2.5 அல்லது மூன்றால் வகுத்தாலும் கூட 5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 9600 ரூபாய் வருமானம் வந்தாகவேண்டும். E-Shram வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிற 28 கோடி மக்களில் 94 சதவிகிதம் பேர் 10000 க்கும் குறைவாகவே வருமானம் பெறுவதாகத் தெரிவித்துள்ள நிலையில், உலக வங்கியின் வரையறையின்படியே 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசித்துவருகின்றனர். வறுமைக் குறைப்பு என்பது நாட்டின் ஒட்டுமொத்த பணவரவையும், பில்லியனர்களின் வளர்ச்சியையும் பொறுத்ததல்ல. மாறாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்நிலை மேம்பட்டாகவேண்டும்.
MDP என்பது எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது? எப்படி கணக்கிட்டால் அது மிகவும் துல்லியமானதாக இருக்கும்? நாட்டில் மிகச்சீரான இடைவெளிகளில் எடுக்கப்படும் “தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப ஆய்வுத் தரவுகள்தான் (National health and family survey data – NHFS) வறுமைக் கோடு உள்ளிட்ட அனைத்துக்கும் அடிப்படை. 2015-16 ஆம் ஆண்டின் தரவுகளை 2019-21 ஆம் ஆண்டின் தரவுகளோடு ஒப்பிட்டு வந்த முடிவுகளைக் கொண்டே நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளதாக ஒன்றிய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. 2015-16 என்கிற ஒரு ஆண்டின் தரவுகளை, 2019-21 என்னும் இரு ஆண்டுத்தரவுகளோடு ஒப்பிடுவதுதான் பிரச்னையே. இந்த ஒப்பீட்டைத்தான் பொருளாதார வல்லுநர்கள் எதிர்க்கிறார்கள். 2019-20 என்பது சரியான தரவுகளைக் கொண்ட ஆண்டு. ஆனால் 2020-21 என்பது கொரோனா ஆண்டு. 2019-21 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட NFHS – 5 சர்வே என்பது கொரோனாவுக்கும் முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் கொரோனா என்னும் கொடிய நோய் இந்திய மக்களின் மீது ஏற்படுத்திய கொடும் தாக்கம் இந்த சர்வேயில் இடம்பெற்றிருக்காது. 2020-21 ஆம் ஆண்டு முறைசாராத் தொழில்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்த காலம். 94 சதவிகித வேலைவாய்ப்புகள் முறைசாராத் தொழில்மூலம்தான் கிடைக்கும் நிலையில், இப்புள்ளி விபரம் அரசின் எந்தக் கணக்கெடுப்பிலும் இடம் பெறப்போவதில்லை. நாடு முழுவதும் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி, தொழிலாளர்களின் கூலி ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் போனது, கல்விக்கூடங்கள் மூடப்பட்டது, அரசின் திட்டங்கள் முடங்கியது, தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவித்தது, கொரோனா பாதித்த மக்களுக்கான மருத்துவ வசதிகள் பற்றாக்குறை, கணக்கில் வராத கொரோனா இறப்பு. இப்படி கொரோனா தாக்கம் கொஞ்சமும் இல்லாத NFHS – 5 சர்வே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டுதாம் வறுமைக்கோட்டு கணக்கீடுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கணக்கெடுப்பில் கொரோனா பாதிப்புகள் இடம்பெற்றிருக்கவில்லை என்னும் உண்மையை 410 பக்க ஆய்வறிக்கையின் ஒரு பத்தியில் மட்டும் சுட்டிக்காட்டி நிதி ஆயோக் ஒப்புக்கொண்டிருக்கிறது.
கணக்கீடுகளின் முதல் பிழை கொரோனா வருடம் விடுபட்டிருக்கிறது எனப் பார்த்தோம். இரண்டாவது பிழை மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் பலன்கள் எப்படி தவறுதலாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்பது குறித்தது. Multi Dimensional Poverty – பல பரிமாண வறுமைக்கோடு என்பது MDP Index என்னும் கணக்கீட்டிலிருந்து எடுக்கப்படுகிறது. வறுமை ஒழிப்புக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதை தொடக்கத்தில் பார்த்தோம். ஒவ்வொரு திட்டத்தின் உள்ளீட்டுத் தரவுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து வறுமைக்கோட்டு அளவீடு கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கீட்டு முறையும் பிழையானது எனப் பொருளாதார அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாறாக அத்திட்டத்தின் பயன்பாட்டு அளவு என்ன(outcome rather than input) என்பதை கணக்கில் கொள்ளவில்லையென்றால், உள்ளீடுகளை மட்டும் கொண்டு MDP Index ஐ அளவீடு செய்தோமானால் வறுமை குறைந்திருக்கிறது என்று தவறாகக் காட்டவே செய்யும். திட்டங்களின் உள்ளீட்டு தரவுகளை மட்டும் கணக்கில் கொள்வதால் MDP index என்பது தவறுதலாகவே முடியும். உதாரணமாக எல்லோருக்குமான எரிவாயு சிலிண்டர் திட்டத்தின்படி எல்லோருக்கும் எரிவாயு சிலிண்டர் தரப்பட்டிருக்கும். ஆனால் அதை பயன்படுத்தும் வசதி எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்பதுதான் பயன்பாட்டு நிலை. பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் பள்ளிக்குச் சென்று பயிலும் வசதியைப் பெற்றிருக்கமாட்டார்கள். உள்ளீட்டு கணக்கீடுகளைக் காண்பித்து MDP index ஐ வரையறை செய்வதன் மூலம் அரசு மிக எளிதாக வறுமைக் கோட்டு கணக்கீட்டை திரித்து பிரச்சாரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலைமை வேறானது.
மூன்றாவது பிழையாக 2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீடு இன்னும் செய்து முடிக்கப்படவில்லை.
நான்காவது பிழையாக MDP கணக்கீடு செய்வதற்கு கூடுதலாக வங்கிக் கணக்கு எண்ணையும், மகப்பேறு அடைந்த தாயின் ஆரோக்கியமும் இணைக்கப்பட்டது. இது வேறு எந்த நாட்டிலும் இல்லாதது. காரணம் மோடி அரசினால் துவக்கப்பட்ட கோடிக்கணக்கான ஜன்தன் வங்கிக் கணக்குகளைக் காண்பித்து நாட்டில் வறுமை ஒழிந்தது எனக் காண்பிக்கவேண்டும். பெரும்பாலான ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பணமே இல்லை என்பதும், ஏனெனில் ஏழை மக்களின் தினப்படி வாழ்வாதாரத்திற்கே அவர்கள் போராடும்போது, வங்கிக் கணக்கில் சேமிப்பாக பணம் எப்படி இருக்கமுடியும் என்பதும்தான் எல்லோரும் அறிந்த உண்மை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 70000 கோடி பணம் இருந்தது பற்றியும், வறுமையில் வாடும் மக்கள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை சேமித்திருக்க முடியும் என்பதும் அப்போதைய விடுகதையாகத்தான் இருந்தது.
ஐந்தாவது பிழையாக வேலைவாய்ப்பு புள்ளிவிபரம் இக்கணக்கீடுகளில் சேர்க்கப்படவில்லை. வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கு வகிப்பது வேலைவாய்ப்புதான். பணமதிப்பிழப்பு, GST வரிகளினால் மோசமாக நசுக்கப்பட்டது முறைசாராத் தொழில்கள்தான். வேலைவாய்ப்புகளை பெருமளவில் வழங்குவதும் இத்தொழில்கள்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டின் மிகப்பெரும் மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டிருப்பது உண்மையானால், இம்மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களின் இடப்பெயர்வு ஏன் நடக்கிறது என்பதையும் அரசு விளக்கவேண்டும்.
தேர்தல் காலமிது. அலங்கார வார்த்தைகளையும், புள்ளி விபரங்களையும் வாரி இறைக்க அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் தயாராக இருக்கிறது.
ஏமாறாமல் இருக்கவேண்டியது நம் கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட.
தரவுகள்:
https://www.niti.gov.in/sites/default/files/2023-08/India-National-Multidimentional-Poverty-Index-2023.pdf (accessed on 23.02.2024)
https://www.thehindu.com/podcast/multidimensional-poverty-in-india-decoding-the-niti-aayog-report-in-focus-podcast/article67755875.ece (accessed on 23.02.2024)
(Over 94 per cent of 27.69 crore informal sector workers registered on the e-Shram portal have a monthly income of Rs 10,000 or below and over 74 per cent of the enrolled workforce belongs to scheduled castes (SC), scheduled tribes (SC) and other backward classes (OBC), according to the latest data)
https://www.businesstoday.in/latest/economy/story/income-of-94-registered-informal-workers-at-rs-10000-or-below-74-belong-to-sc-st-obc-335562-2022-05-29 – Accessed on 10.03.2024.
https://www.business-standard.com/article/economy-policy/income-of-94-11-registered-informal-workers-at-rs-10-000-or-below-122052900203_1.html – Accessed on 10.03.2024
- https://www.niti.gov.in/sites/default/files/2023-08/India-National-Multidimentional-Poverty-Index-2023.pdf