மூர்ச்சையாகும் மொழி
Posted On August 26, 2020
0
118 Views

பாட்டாளி
முதலில்
கடவுள்களை நம்பினோம்
அவர்களோ
பெரும் பூட்டாய்ப் போட்டுப்
பூட்டிக்கொண்டு விட்டார்கள்.
வெளியே வராதே
ஊரடங்கில் இரு
அறிவித்த அரசுகளோ
கை தட்டச் சொன்னது
விளக்குப் பிடிக்கச் சொன்னது
கடைசிவரை
வயிற்றுப்பாட்டிற்கு
வழி சொல்லாமல்
காகிதத்தில்
சர்க்கரை என்றெழுதி
நக்கிக் கொள்ளச் சொன்னது.
ஆகா…
பேரினிப்பு…
என்று
சப்புக் கொட்டி
வெற்று நாவுகளைச் சுழற்றின
ஊடகங்கள்.
பசி பட்டினிக்
கொடுமை தாளாது
தூக்குக் கயிற்றைத்
துளாவும் கரங்களுக்கிடையில்
மூர்ச்சையாகிறது
எம் மொழி.