தூய்மைப் பணியாளர்களின் போராட்டங்கள் வெல்லட்டும்
துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் சென்னை தவிர இன்று தமிழ்நாட்டின் மேலும் சில முக்கியமான நகரங்களுக்கும் பரவிவிட்டது. இன்று தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள், 21 மநகராட்சிகள், 148 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் 12524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. அவ்வளவு இடத்திலும் குப்பையை நீக்கும் பெரும் பணியை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் செய்து வருகிறார்கள். சுத்தம் செய்வது என்பது ஏதோ ஸ்வச் பாரத் தினத்தன்று நாமெல்லோரும் செய்வது போன்றதல்ல அது. திடக் கழிவுகள், திரவக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காக் குப்பை இப்படி தமிழ்நாட்டின் சுத்தமும், பொது சுகாதரமும் தூய்மைப்பணியாளர்களின் கைகளில்தான் உள்ளது. இதுதவிர கோவில் திருவிழாக்கள், அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் பொது நிகழ்வுகள் அனைத்திலும் சுத்தம் செய்யும் பெரும் பொறுப்பும் இவர்களின் தலையில்தான் விழுகிறது.
சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பாக National Urban Livelihoods Mission (NULM) – பகுதி 5 மற்றும் பகுதி 6 ஐச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் 13 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் பணியானது தனியார் நிறுவனங்களின் மேலாண்மையின் கீழ் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதன் உடனடி விளைவாக சம்பளக்குறைப்பு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி உத்தரவாதம் வேண்டும் என்றும், நிரந்தரமான அரசு வேலை வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து அவர்கள் போராடினர். போக்குவரத்துக்கு இடையூறு என்றும், நீதிமன்ற உத்தரவு என்றும் சொல்லி ஆளும் திமுக அரசு போராடும் தூய்மைப்பணியாளர்களை ஆகஸ்ட் 13 அன்று இரவு குப்பை அள்ளுவதுபோல அப்புறப்படுத்தியது. தொடர்ச்சியாக மதுரை, கோயம்புத்தூர் மற்றும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. போராட்டக்காரர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்ன தெரியுமா?
1. ஒப்பந்தக்கூலி, தினக்கூலி மற்றும் ஒருங்கிணைந்த கூலி என்னும் அடிப்படைகளில் இப்போது பணி செய்துகொண்டிருக்கிற தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
2. தூய்மைப்பணியை தனியார்மயமாக்கும் வேலையைக் கைவிடவேண்டும்.
3. நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்சக் கூலியை உடனே நடைமுறைப்படுத்தவேண்டும்.
4. ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்கவேண்டும்.
5. தூய்மைப்பணியாளர்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வசதிகள் செய்துதரப்படவேண்டும்.
ஆனால் அரசு அதிகாரிகள் இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்குப் பதிலாக சென்னை தூய்மைப் பணியை யார் முதலில் தனியார்மயப்படுத்தினார்கள் என்று விவாதம் செய்கிறார்கள். அதிமுகவா? திமுகவா என்னும் விவாதம் படுஜோராக நடந்துவருகிறது.
சமீபத்திய மதுரைப் போராட்டங்களிலும் இதே கோரிக்கைகள்தான் எழுப்பப்பட்டிருக்கின்றன. மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. Our Land என்னும் தனியார் நிறுவனத்தின் கீழ் 3250 தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஏற்கனவே மாநகராட்சியில் 700 நிரந்தரப் பணியாளர்களும், 550 தினக்கூலிப் பணியாளர்களும், 200 பணியாளர்கள் ஒருங்கிணைந்த சம்பளத்தின் கீழும் வேலை செய்து வருகின்றனர். இதில் 389 தினக்கூலிப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் மாநகராட்சி அதை நிறைவேற்றவில்லை. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு அப்பீல் செய்திருக்கிறது. தொழிலாளர் நலன்களுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது. சாதாரண தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றம் சென்று வழக்காடலாமா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நிரந்தப்பணியாளருக்கு சம்பளம் 48000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அதுவே ஒப்பந்தப் பணியாளருக்கு சம்பளம் 15000 முதல் 17000 வரை மட்டுமே. 389 ஒப்பந்தப்பணியாளர்களும் நிரந்தரம் செய்யப்பட்டால் அவர்களுக்கும் மாத ஊதியம் 48000 கிடைக்கும். அரசு அதைத்தான் தடுக்க நினைக்கிறது.
பிரச்னையை ஆக்கப்பூர்வமாக அணுகுவதற்கு மாறாக அரசு தனியார் மயம் வரலாறு குறித்து வகுப்பெடுக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் 10 மண்டலங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டன. இப்போது திமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு மண்டலங்கள் மட்டுமே தனியாருக்கு விடப்படுகின்றன. விரைவில் எஞ்சிய மூன்று மண்டலங்களும் தனியார்வசம் ஒப்படைக்கப்படும் என்கிறார் சென்னை மேயர். அப்படியானால் முதலில் யார்தான் தனியார்மயத்தைப் புகுத்தியது?
முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக திடக்கழிவு மேலாண்மை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு வசதியாக Contract Labour (Regulation and Abolition) Act, 1970 சட்டங்களிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு விலக்களித்து அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது. மாநகராட்சியின் துப்புரவுப்பணியாளர்களின் போராட்டங்களையும், எதிர்ப்பையும் மீறி, முன்று மண்டலங்களை (6,8,10) Onyx என்னும் தனியார் நிறுவனத்திற்கு ஏழு வருடங்களுக்கு (2000-2007) கொடுத்தது திமுக அரசு. 2007 ஒப்பந்தம் முடிவடைந்தபிறகு மேலும் பல மணடலங்களை Neel Metal Fanalca (NMF) க்கு கொடுத்தது திமுக அரசு. அதற்கு அடுத்த கட்டங்களில் Ramky Enviro Engineers, Urbaser Sumeet போன்ற தனியார் நிறுவனங்கள் களத்திற்கு வந்தன. இப்போது எஞ்சிய மண்டலங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு காலம் காலமாக நிரந்தரப்பணிகளில் இருக்கும் தூய்மைப்பணியாளர்களை இல்லாமலாக்குவதுதான் தற்போதைய அசின் திட்டமாகவும் இருக்கிறது.
2016 ஆம் ஆண்டில் ஒப்பந்தக்கூலிகளாக உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் 37.25 ரூபாய் என dearness allowance (DA) ஐ நிர்ணயம் செய்தது. அது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. திமுக அரசு வந்தபிறகு 2023 ஆம் ஆண்டில் புதிய ஊதிய நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு அது 31 ரூபாய் DA என குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஊதிய நிர்ணயக்குழு கொடுத்த 37.25 ரூபாயைக் கொடுக்கவேண்டும் எனத் தீர்ப்பளித்தது. ஆனால் திமுக அரசு அதையும் அமல்படுத்த மறுக்கிறது. கோவிட் தொற்றுக் காலத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை இன்னும் பல தூய்மைப்பணியாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் கசப்பான உண்மை.
தமிழ்நாடு முழுவதும் தூய்மைப்பணிகளை தனியார்மயப்படுத்தியதில் திமுக அதிமுக அரசுகளுக்கு சம பங்கு உண்டு. அதைக் குறித்து இப்போது விவாதம் செய்யாமல், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும்.
(சங்கக்குரல் – செப்டம்பர் 2025)





