கு.ப.ரா சிறுகதைகள் குறித்து…
எழுத்தாளர் கு.ப.ரா.. கும்பகோணம் பட்டாபிராமய்யர் ராஜகோபாலன்..தமிழ் எழுத்துலகின் முக்கியமான ஜாம்பவான். புதுமைப்பித்தனின் சமகாலத்தவர். நவீன தமிழ்ச்சிறுகதைகளை ஆக்கித்தந்தவர்களில் முன்னோடி. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சிறப்பான பங்களித்தவர். நாடகங்களையும், ஏராளமானக் கட்டுரைகளையும் எழுதியவர். முற்றுப்பெறாத நாவல் ஒன்றையும் எழுதியவர். எழுத்தை மட்டுமே தன் முழுநேரமாகப் பணியாகக் கொண்டவர். 1902 இல் பிறந்தவர் 1944 ஆம் ஆண்டில் இறந்துபோகிறார். கும்பகோணத்தில் பிறந்து, திருச்சியில் வளர்ந்து, சென்னைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் பத்திரிகை ஆசிரியர் பணிநிமித்தமாக துறையூருக்குச் சென்று பின்னர் மீண்டும் கும்பகோணத்திற்கே வந்து தன் இறுதிக்காலம் வரை அங்கே வசிக்கிறார். குபரா கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியம், சமஸ்கிருத இலக்கியம், வங்க இலக்கியம் குறிப்பாக தாகூர்- ஆகியவற்றை வாசித்திருக்கிறார். 18 ஆம் வயதில் தந்தையை இழந்தவர். பி அரசுப்பணியில் சேர்ந்து பின் அதிலிருந்து விலகுகிறார். 1930 களில் கண் பார்வையை இழக்கிறார். பின்னர் மீண்டும் 1937 வாக்கில் கண் பார்வையைப் பெறுகிறார். பார்வை இழந்திருந்த காலங்களில், குபரா சொல்ல சொல்ல அவருடைய சகோதரியான சேது அம்மாள் எழுதுகிறார்.
இவருடைய எழுத்துக்காலம் என்பது 1934 தொடங்கி 1944 இல் முடிவடைகிறது. அவருடைய காலத்தின் அனைத்து இதழ்களிலும் அவர் எழுதியிருக்கிறார். சுதந்திரச் சங்கு, மணிக்கொடி, கலைமகள், பாரததேவி, சூறாவளி, ஊழியன், பாரதமணி, கல்கி, ஆனந்தவிகடன், தினமணி, கலாமோகினி, ஜோதி, காவேரி, வசந்தம், நவசக்தி, குமரிமலர், ஹனுமான், ஹிந்துஸ்தான், ஜெயபாரதி, லோகோபகாரி, கிராம ஊழியன் இப்படி எல்லா இதழ்களிலும் அவர் தன் கதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவர் உயிரோடி இருந்த காலத்தில் மூன்று கதைத் தொகுப்புகளே வெளிவந்திருந்தன. கனகாம்பரம் முதலிய கதைகள், காணாமலே காதல், புனர் ஜென்மம் என்பன அவை. அதன் பின்னர் வந்தவை எல்லாம் அவர் இறந்தபிறகு வெளிவந்தவைதாம். அவருடைய கதைகள் முழுவதும் இப்போது தொகுக்கப்பட்டிருக்கின்றன தமிழ்ப்பேராசிரியர் சதீஷ் என்பவர் குபராவின் எழுத்துகள் முழுவதையும் தொகுத்திருக்கிறார். அடையாளம் பதிப்பகம் அதை வெளியிட்டிருக்கிறது.
கு.ப.ரா எழுத்துகள் பற்றி ஏராளமான விமர்சனங்கள் வெளி வந்திருக்கின்றன. முக்கியமாக அவருடைய சிறுகதைகள் பற்றி ஏராளம் வந்திருக்கின்றன. தன் வாழ்நாளில் நவீன சிறுகதைத் தளத்தில் நூறுக்கும் மேற்பட்ட கதைகளை அவர் படைத்திருக்கிறார். அவருடைய எழுத்து என்ன வகைப்பட்டது? நவீனத்துவம் கொண்டதா? யதார்த்த வகைமையில் அது அடங்குமா? இப்படி நிறைய. ஆமாம். குபரா வாழ்ந்த காலம் நாட்டின் மிகக் கொந்தளிப்பான காலம். நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் திருப்புமுனை காலமாகவும் அமைந்துபோன வருடங்கள். 1930 களும், 1940 களும் போராட்டங்களும், சமூக சீர்திருத்தங்களும் நிறைந்த காலக்கட்டங்களும் கூட. குபரா தனது கதைகளில் தான் வாழ்ந்த காலத்தை பிரதிபலித்திருக்கிறாரா? என்னும் கேள்வி எழுகிறது. அப்படியானால் அவர் காலத்தின் அரசியலை அவர் பிரதிபலித்திருக்கிறாரா? சமூகத்தை பிரதிபலித்திருக்கிறாரா? சுயமரியாதை இயக்கம் துளிர்த்து முளைவிட்ட அக்காலத்தில் அது குறித்து ஏதும் எழுதியிருக்கிறாரா? இந்த எதிர்பார்ப்பு எழுவது இயல்பானதே.
நவீன சிறுகதையைத் தோற்றுவித்தவர்களில் புதுமைப்பித்தனையும், குபராவையும் இரட்டையர்கள் என்று சொல்லமுடியுமா? கட்டாயம் சொல்லமுடியும். இவ்விருவருக்கும், இவ்விருவரின் படைப்புகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தபோதிலும் இருவரையும் இரட்டையர்கள் என்று சொல்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் குபராவையும், ந. பிச்சமூர்த்தியையும் தான் இரட்டையர்கள் என அழைக்கும் வழமை உண்டு. ஆனால் குபராவை வாசிக்கும்போது புதுமைப்பித்தனை நினைவுக்குக்கொண்டுவராமல் இருக்கமுடியாது என்ற பேராசிரியர் வீ.அரசு அவர்களின் கருத்தை நாம் மறுக்கமுடியாது. புதுமைப்பித்தனை நீங்கள் வாசிக்கமுடியும், அதே நேரத்தில் அது நமக்குள் கிளர்த்தும் சமூகச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நாம் திணறவேண்டியிருக்கும். அதனோடு பயணிக்க நாம் கடும் முயற்சிகள் எடுக்கவேண்டியிருக்கும். ஆனால் குபராவின் எழுத்துகள் சமூகச் சிக்கல்களை பெரும்பாலும் கண்டுகொண்டதில்லை. அவருடைய கதைகள் எல்லாம் யதார்த்தக் கதைகள். Slice of Life என்று சொல்வார்கள். வாழ்வில் அவர் பார்த்தது, அவர் உணர்ந்தது, அவர் தேடியடைந்தது எல்லாவற்றையும் அதே அளவு உண்மைத்தன்மையோடு அவர் எழுதியிருப்பார். இன்றைய பின்நவீனத்துவ சூழலில் குபராவின் எழுத்துகளை வாசிப்பவர்களுக்கு அது வித்தியாசமானவையாகத்தான் இருக்கும்.
ஆண் பெண் உறவுகளுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பார். பெண்ணின் மனவெழுச்சி, அவளுடைய காமம், காமத்தின்வழி அவள் கண்டடையும் உண்மைகள் இப்படி சொல்லலாம். ஆனால் பெண்களின் மனவெழுச்சிகளை அந்தக்காலத்தில், பெண்களை கட்டுப்பெட்டிகளாக வளர்த்த, ஆச்சாரமிக்க சூழலில் வளர்த்த அந்தக் காலத்தை மனத்தில் கொண்டு குபராவின் பெண் பாத்திரங்களை நாம் உற்றுநோக்கவேண்டும். குபராவின் எழுத்துகள் குறித்து அவருடைய சிநேகிதரான ந. பிச்சமூர்த்தி இப்படிச் சொல்லுவார்: ” அநேகமாக அவனுடைய எழுத்துக்கு ஆண் பெண் உறவுதான் அடிப்படையான விஷயமாயிருக்கும். இவ்விஷயத்தைத் தவிர்த்து அவன் கதையோ கவிதையோ எழுதவில்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். நிழலைப் போல் பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும் கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும் வெகு நுட்பமாகவும் அநாயாசமாகவும் படம்பிடிப்பதில் நிகரற்றவன். பெண்ணின் மனத்தைச் சித்தரிப்பதில் வல்லவன்… ஆண் பெண் உறவையே முக்கியமான விஷயமாகக் கையாண்டதால் அவன் எழுத்தில் ஏதோ பச்சையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பெண் மனம் இப்படியாக இருக்கிறதென்று நினைக்க இஷ்டப்படாதவர்கள் – உண்மையைப் பார்க்க, பேசப் பயந்தவர்கள் -கூறும் பேச்சு இது, அவர்கள் மறுப்பதே அவன் எழுத்தின் உண்மைக்கு அத்தாட்சி பச்சையாக இருந்தால் அது அவன் குற்றமன்று. ஆண் – பெண் உறவு இப்பொழுது நிலவிவரும் முறையின் குற்றம். உண்மையை மறைப்பது கதையாகாது. கீறி ஆற்றுவதே வைத்தியம். (கலைமகள், மே. 1944, மே-ள். தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும், கிட்டி; சோ. சிவபாதசுந்தரம்). பேராசிரியர் வீ. அரசு அவர்கள் தன்னுடைய முன்னுரையில் ந. பிச்சமூர்த்தியின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டியிருப்பார்.
“ஆற்றாமை” என்னும் கதையை தமிழில் இதுவரை எழுதப்பட்ட முக்கியமான கதைகளுள் ஒன்றாகக் கருதமுடியும். பெண்ணின் காமத்தின்வழி அவளின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி அவளின் பேய்த்தனத்தையும் விரட்ட குபராவின் எழுத்து முயற்சிக்கிறது. அழுத்தி வைக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ள காமம் எந்த எல்லைக்கும் செல்லும் வல்லமை பெற்றது. இன்றைய பின்நவீன யுகத்தில் அது ஒன்றுமே அல்ல என்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் குபரா யுகத்தில் இது மிக முக்கியமான சித்தரிப்பாக எனக்குப்படுகிறது.
சிறிதுவெளிச்சம் கதையும் குபராவின் கதை சொல்லும் திறனை உச்சத்திற்குக் கொண்டுசென்ற ஒன்று. பெண்ணின் அகத்தைத் திறந்து காட்டிய குபரா, அதன்பிறகான அவளின் பயணத்தை துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்லமுடியாமல் தடுமாறும் குபராவையும் வாசகர்கள் நிச்சயம் உணர்ந்துகொள்வார்கள். குபராவின் புனைவின் வீச்சானது, பெண்ணின் காமத்தை, அவளின் மனக்குகையில் அடைந்துகிடக்கும் வெளிச்சத்தை வெளிக்கொண்டுவருவதில் வெற்றி பெற்றதாக எனக்குத் தெரியவில்லை. அக்குகையை சித்தரிப்பதில் வேண்டுமானால் குபரா வெற்றி பெற்றுள்ளார் எனச் சொல்லலாம். இந்த இடத்தில் புதுமைப்பித்தன் குபராவை நிச்சயமாக முந்திச் செல்கிறார் என்றே எனக்குப்படுகிறது.
குபராவின் வெற்றியாக அவருடைய கதை சொல்லலின் வடிவம்தான் என பல முக்கியமான விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்மையின் எல்லா பலகீனங்களையும் நுட்பமாகச் சித்தரிக்கும் குபரா அதிலிருந்து மீள முடியாமல் பெண்கள் படும் பாடுகளை வேதனை பொங்க தனது கதைகளில் வடித்திருக்கிறார். புனர் ஜன்மம் போன்ற சில கதைகளில் மட்டுமே அவர்களின் மீயெழுச்சியை அவர் கட்டமைத்திருக்கிறார். ஸ்டுடியோக் கதையில் அவளின் பலஹீனத்தை அப்படியே ஒப்புக்கொள்ளுவதைத் தவிர குபராவுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை. பெண்ணை ஒரு போகப்பொருளாக, கொலு பொமையாக கருதிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு மத்தியில், கனகாம்பரத்தின் சாரதாவும், பெண்மனம் கனகமும் ஆணின் சுயத்தைச் சுட்டுப்பொசுக்கும் பெண்மையாகத் திகழ்கிறார்கள்.
குபரா எழுதிய 1933 முதல் 1944 கட்டம் என்பது நாட்டில் விடுதலைப் போராட்டம் கனன்று கொண்டிருந்த கட்டம். அதோடு காந்தியடிகள் சமூகச் சீர்திருத்தத்துக்கும், கிராமப் புனரமைப்புக்கும் முன்னுரிமை கொடுத்த காலக்கட்டமும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டில் அந்தக் காலம் என்பது சுயமரியாதை இயக்கம் வேரூன்றிய காலக்கட்டம். அதற்கும் மேலாக நாட்டில் கம்யூனிச இயக்கம் நாட்டில் வீறுகொண்டு எழுந்த காலக்கட்டம் அது. நாட்டின் விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்த காங்கிரஸ் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும், கம்யூனிச இயக்கமும் ஊட்டிய உணர்வுகள் மக்களை எப்போதும் அரசியல் உணர்வுள்ளவர்களாக வைத்திருந்தது. அப்படிப்பட்ட உணர்வுகளை குபரா தன்னுடைய கதைகளில் வடித்திருக்கிறாரா?. நூருன்னிஸா, மனக்கோட்டை போன்ற கதைகளில் சுதந்திரப் போராட்டங்கள் குறித்த சிலத் தெறிப்புகள் இருக்கின்றன.
சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் சனாதனத்தின் மீதும் அதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த பிராமணர்கள் மத்தியிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலம் படித்த தென்னாட்டு பிராமணர்களின் திரிசங்கு நிலையை குபரா தன்னுடைய தாயாரின் திருப்தி கதையிலும், ஸம ஆராதனைக் கதையிலும் வெளிப்படுத்துகிறார். தான் சனாதன தர்மத்தை ஆதரிப்பவனுமல்ல, எதிர்ப்பவனுமல்ல என்னும் குபராவின் நிலைப்பாடு குபராவினுடைய திரிசங்கு நிலையையும் தெளிவாக்குகிறது. தித்திப்பு கதையில் வரும் கம்யூனிஸ்ட் புரட்சி வீரன் பாலகிருஷ்ணனை இறுதியில் காதலில் வீழ்ந்து போகும் ஒரு சாதாரண மனிதனாகக் காண்பிக்கிறார் குபரா. குபராவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஒரு வீரதீரமான கட்சி அவ்வளவே. அதன் பின்னால் இருந்த நிலவுடமை எதிர்ப்பையும், சுயமரியாதை இயக்கத்தின் பின்னால் இருந்த சமூகநீதிக் கருத்தாக்கத்தையும் குபரா தான் வாழ்ந்த காலத்தில் எப்படி எதிர்கொண்டார் என்பதை அவருடைய கதைகளே நமக்கு காட்டி நிற்கின்றன.
குபரா மரபைப் போற்றியவர். சமஸ்கிருதம், வங்க மொழி பயின்றவர். அதனால் குபரா மீது வங்க மொழியும், வங்க மொழி இலக்கியமும் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. வங்க மொழி இலக்கியத்தின் தாக்கம் குறிப்பாக தாகூரின் தாக்கம் குபராவின் எழுத்துகளில் மிகுதியாக இருந்தது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். தனது வாதத்தை நிலைநிறுத்த அவர் குபராவின் பல்வேறு கதைளை மேற்கோள் காட்டுகிறார். புனர் ஜன்மம் ஒரு அப்பட்டமான வங்கக்கதை, ஒரு பிரம்ம சமாஜக் கதை என ஜெயமோகன் கூறுகிறார். இந்த பிரம்ம சமாஜப் பெண்களை கும்பகோணத்தில் உட்கார்ந்து தன் பகற்கனவின் துணையுடன் உருவாக்கி புனைகதைகளை நிரப்பியிருக்கிறார் குபரா என்கிறார் ஜெயமோகன்.
பேராசிரியர் வீ. அரசு அவர்கள் குபரா எழுத்துகள் குறித்து வேறு மாதிரியான விமர்சனக் கருத்துகளை முன்வைக்கிறார். 1930 கள் தொடங்கி 1980 கள் வரை பல எழுத்தாளர்கள் கும்பகோணத்தில் இணைந்தும் தனித்தும் செயல்பட்டிருக்கிறார்கள். குபரா, ந.பிச்சமூர்த்தி, க. நா. சுப்ரமணியம், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, இந்திரா பார்த்தசாரதி இவர்களை கும்பகோணம் குழு என்று அழைப்பார்கள். சனாதன வைதீக மரபுகளை விமர்சனம் செய்யாத பலர் இருந்த இந்தக் குழுவில், குபரா சநாதனம் குறித்த விமர்சனமுடையவராக இருந்திருக்கிறார். சமூகத்தின் மீது தீராக்காதல் கொண்ட பொறுப்புணர்வு அவரது எழுத்துகளின் அடிப்படையாக இருக்கிறது. மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்று பேராசிரியர் வீ. அரசு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்திட்ட ஏராளமான கதைகளை குபரா படைத்திருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ‘ விடியுமா? ‘ என்னும் கதை. தனது கணவன் இறந்துபோய்விட்டாரா இல்லையா என்னும் நிச்சயமற்ற சூழலில் இரவு நேர ரயிலில் பயணம் செய்யும் ஒரு பெண், தனது கடந்த கால திருமணவாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறாள். ‘உங்க அத்திம்பேர கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகத்த கண்டேன்’ என தன் சகோதரனிடம் தனது மனத்தின் நிராசையை கொட்டுகிறாள் அவள். காலை பொழுது புலர்ந்ததும் தன்னுடைய கணவனின் இறப்பு உறுதியானதும் அவளின் பயமும் தீர்ந்தது, திகிலும் தீர்ந்தது…விடிந்தும் விட்டது என்று குபரா முடிக்கிறார். படித்து முடித்த வாசகனுக்கு விவரிக்கமுடியாத அனுபவத்தை கொடுத்திட்ட கதை இது.
ஆணின் அடக்குமுறைகளை எதிர்த்தும், சமூகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்தும், துருப்பிடித்த பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த ஏராளமான பெண்களை குபரா படைத்திருக்கிறார். தாய் கதையில் வரும் பாலம் என்னும் பெண்ணாகட்டும், வைரமோதிரம் கதையில் வரும் பெண்ணாகட்டும், சோகத்தின் முன்னிலையில் கதையில் வரும் சாவித்திரியாகட்டும், தவறுகளோ தன்மைகளோ கதையின் ஜானகியாகட்டும், சந்திப்பு கதையில் டாக்டர் ருக்மணி ஆகட்டும், சிறிது வெளிச்சம் கதையில் வரும் சாவித்திரியாகட்டும், யார் மேல் பிசகு கதையில் வரும் ராஜமாகட்டும்…அடக்குமுறைகளின் மீது பெண் கொள்ளும் கோபத்தை அற்புதமாக வடித்திருக்கிறார் குபரா. அப்பெண்களை மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்க்காமல் நம்மால் அக்கதைகளைக் கடந்து செல்லமுடியவில்லை.
இந்திய காவிய மரபு சார்ந்த பல கதைகளை குபரா ஆக்கித்தந்திருக்கிறார். எளிமையான சரித்திரக் கதைகள் அவை. இந்திய சுதந்திரப் போராட்டக்கால எழுத்தாளர்கள் அனைவரும் இந்தியக் காவிய மரபை தேசியத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். குபராவும் இதற்கு விதிவிலக்கல்ல.
விசாலாஷி கதையை மாமியார்களும், மருமகள்களும் வாசித்தார்களேயானால் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளவே மாட்டார்கள். பண்ணையடிமை முறை இருந்துவந்த தஞ்சை மண்ணில் குபராவின் கதைகளில் சில அதையும் தொட்டுச் செல்கிறது. அடிமைப்பயல் கதையில் அதன் வீச்சை நீங்கள் கண்டுணரமுடியும். பண்ணைச் செங்கான் கதையில் நிலத்தில் தன் வாழ்நாள் முழுவதும் வேறொருவர் நிலத்தில் பாடுபட்டு உழைத்து அந்நிலத்தை பொன்னாக்கியதின் பின், திடீரென்று தன்னைவிட்டு அந்த நிலம் பறிபோகும் என்ற நிலையில் அவன் என்ன செய்யக்கூடும் என்பதை கதை பேசுகிறது. இந்துக்கூட்டுக்குடும்ப முறையிலும், சமூகப் பழக்கவழக்கங்களிலும் சாரத்தை மறந்து வெறும் சக்கையை வைத்துக்கொண்டு உயிரை வாங்கும் கோஷ்டியைச் சேர்ந்தவளான அலமுவின் பாட்டி, அமங்கலியாகிப்போன தன்னுடைய பேத்தியான அலமுவை சமூகத்தின் பெயரால், மத ஆச்சாரங்களின் பெயரால் படுத்தும் பாடுகளை உயிரின் அழைப்பு கதையில் குபரா போட்டுடைக்கிறார்.
தனது கதைகளுக்கான விமர்சனங்களுக்கு தக்க எதிர்வினையையும் அவர் பதிவு செய்திருக்கிறார். குபரா எழுதுகிறார்: ‘ என் கதைப் புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் – இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதியது ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்தவரையில் என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில்படுகின்றன. கண்டதை எழுதுவதானா கதை என்று கேட்கலாம். கதை உருவாகும்போது கண்டதை மட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செப்பு சேருவதுபோல சேருகின்றன. அந்த அனுபவம், காந்தத்துண்டு போல. தான் இழுக்கக்கூடிய பல சிறு இரும்புத் தூள்களைப் போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக்கொள்ளுகிறது. தத்துவங்கள், ஆசிரியனுடைய அனுபவம் என்ற நிலையில் அடிபட்டு, பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன (கதையின் கதை ).
குபரா எழுதியுள்ள காவியக் கதைகள் குறித்தும், புத்தரை உருவகப்படுத்தி எழுதியுள்ள கதைகள் குறித்தும் நாம் கட்டாயம் பார்க்கவேண்டும். குபரா எழுத்துகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனம் என்ன, பேராசிரியர் வீ. அரசு அவர்கள் குபரா குறித்து என்ன கூறுகிறார். அடுத்த பகுதியில் பார்ப்போம்.





