ஒளிக்கீற்று
Posted On November 10, 2020
0
37 Views
![]()
இரவுப் பணியொன்றின்
நள்யாமத்தில்
சன்னலைத் திறந்து
வெளியே பார்க்கிறேன்.
நோய்க்கரம் தீண்டிய பூமியின் மேலே
கரிய மேகத்தின் அடர்த்தி
என்னை அழுத்துகிறது.
சாரல் மழையும் சூடான தேநீரும்
நினைத்த மாத்திரத்தில்
வாய்ப்பதில்லையே.
விடியலின் பாடலொன்றை
இசைத்தபடி
உலவும் நிலவைக்
கண்டுகொண்டதாய்
மின்னும் தூரத்து நட்சத்திரங்களில்
ஒன்று
நீள்கோடு வெட்டி வீழ்கிறது.
காற்றின் மெளனம் ஒரு புரியாத
மொழி.
அவசர ஊர்தியின் அலறலோடு
மனிதர்களின் கூப்பாடுகள்
மருத்துவமனையின் சுவற்றிற்கு
வெளியேயும் இரைகிறது.
அகதிகளின் குடில்களைப்போல்
வளாகத்தின் சுவரெங்கும் தொங்கும்
குரோட்டன் செடிகளை
துயர்க்காலத்தின் சிறு சலனமின்றி
நேர்த்தியாய் வெட்டியவனின்/ளின்
மரணம் அழகியதாகட்டும்.
நம்பிக்கையின் கண்ணி அறுபடாது
பல தசாப்தங்கள் தாண்டியும்
அகதியாகவே மரணிப்போர் வாழ்வில்
இன்னும் தென்படவில்லை
சுதந்திர ஒளிக்கீற்று.
Trending Now
பிரபஞ்சத்தின் உயிர்சக்தி தாவோ
November 18, 2025
ஞானிகளின் ஆன்மிக ரகசியங்கள் - பால் பிரண்டன்
November 18, 2025





