உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நிலை வேண்டும்…2
தனிமனித விருப்பு வெறுப்புகள்தான் இன்றளவும் உலகை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கூட்டுக் குடும்பம் என்றால் அதன் அங்கத்தினரிடையே விருப்பு வெறுப்பு எக்கச்சக்கமாக மண்டிக்கிடக்கும். ஒரு தெரு என்றாலும் சரி, ஒரு நகரம் என்றாலும் சரி, ஒரு நாடு என்றாலும் சரி, விருப்பு வெறுப்பு மட்டுமே அவைகளின் இயக்கத்தை நிர்ணயம் செய்யும் காரணிகளாக இருக்கின்றன. சமூகம் என்றால் சாதிகளினால், மதங்களினால் பிளவு. சாதிகளுக்கிடையே என்றால் அந்த அங்கத்தினரிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் வரும் பிளவு. மதம் என்றால் அம்மதத்தில் நிலவும் பலவகைப் பிளவுகள் அதன் இயக்கத்தை நிர்ணயிக்கின்றன. இப்படித்தான் உலகம் விருப்பு வெறுப்புகளினால் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாம் அந்த அமைப்பின் ஒரு அங்கம். குடும்பம் என்றால் நாம் அதில் ஒரு அங்கம். சமூகம் என்றால் நாம் அதில் ஒரு அங்கம். விருப்பு வெறுப்புகளின் அளவு மட்டுமே எங்கெனும் மாறுபடுகிறது. விருப்பையும், வெறுப்பையும் எப்படி சமன் படுத்துவது? விருப்பத்தையும், வெறுப்பையும் சூழ்நிலைக்கேற்ப காட்டிக்கொண்டிருப்பதுதான் மனித உயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கும் கொடை. வெறுப்பதை விட விருப்பம் அதிகமாகும்போது நாம் மேலும் மேலும் மனிதத்தன்மை பெற முயலுகிறோம். வெறுப்பை விருப்பத்தால் வெல்லுவதா அல்லது வெறுப்பால் எதிர்கொள்வதா? மனித சமுதாயம் இக்கேள்வியில்தான் காலம் காலமாக உழன்று கொண்டிருக்கிறது. (09-12-2024)
*****************
அழுவதை கோழைத்தனம் என்றே பலரும் நினைக்கிறார்கள். அழுவதில் பல வகை உண்டு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் – வள்ளுவரின் அழகான வாக்கியம். உலகம் இத்தகைய கன்ணீர்த்துளிகளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் அறிந்த, தான் அன்பு செலுத்துகிற நபர்களிடம் மட்டும் சிந்துகின்ற கண்ணீர் பொதுவானது. எல்லோருக்கும் உரியது. ஆனால், ஒரு குழந்தை, ஒரு சிறுவன் உங்களிடம் யாசகம் கேட்க வரும்போது உங்களுக்குக் கண்ணீர் வரவில்லையென்றால் உங்கள் அன்பு முழுமை பெறவில்லை என்றுதான் அர்த்தம். ஒரு வயதான மூதாட்டி உங்களிடம் வந்து இரந்து யாசகம் பெறுவாரானால் அவருக்கு அதைச் செலுத்திவிட்டு அவர் சென்ற பிறகு உங்கள் கண்கள் குளமாக வேண்டும். ஏன் அப்படி? அதுதான் இந்த உலகின்மீது நாம் செலுத்தக்கூடிய பேரன்பு. இந்த மானுட சமுதாயத்தின் மீது நாம் காட்டும் பேரன்பு.
” அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்? “
பாரதிதாசனின் குடும்பவிளக்கு வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஏதும் அப்படி செய்திருக்கிறோமா? (08-12-24)