காவியும், அதி மனிதர்களும்
‘அரசன் தவறிழைக்கமாட்டான்’
– மத்தியகால முதுமொழி
நாகசேனர் என்னும் பௌத்ததுறவிக்கும், இந்தோ கிரேக்க அரசன் மிலிந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மாவின் நிலை குறித்த உரையாடல் அது. ஆன்மாவின் நிலையை மிலிந்தருக்கு விளங்க வைப்பதற்காக நாகசேனர் தீவிரமான உரையாடலை நடத்தி வந்தார். அப்போது நாகசேனரின் உடலைக் காட்டி மிலிந்தர் கேட்டார்: ” நாகசேனர் என்பவர் அவரது நகமா? பல்லா? தோலா? சதையா? அல்லது உடலா? அல்லது புலன் உணர்வுகளா? அல்லது புலன் அறிவா? மனநிலைகளா? பிரக்ஞையா?”. இக்கேள்விகளுக்கெல்லாம் நாகசேனர் எதிர்மறையாகவே பதில் தந்தார். மிலிந்தருக்குக் கோபம் வந்தது. ” இதன் பொருள் நாகசேனர் என்பவர் கிடையாது. அது வெறும் பெயர்தான். நீ பொய் சொல்கிறாய். நீ பொய்யான ஒன்றை விளக்குகிறாய்” என்றார் மிலிந்தர். நாகசேனர் மிகவும் சாந்தமாகப் பதில் அளித்தார்: “அரசே அவ்வாறில்லை. பல்வேறு பகுதிகளை ஒன்று சேர்த்துக் காண்பதுதான் நாகசேனர் என்பது”. ஒரு உதாரணத்தின் மூலம் அவரது நிலையை விளக்க நாகசேனர் முற்பட்டார். ஒரு தேரின் பல்வேறு பகுதிகளைக்( சக்கரங்கள், அச்சாணி, தேர்த்தட்டு) குறிப்பிட்டு தேர் எங்கே இருக்கிறது என்று கேட்டார். உண்மையில் தேர் இவற்றில் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட உறவு நிலையில் இவற்றை இணைத்தவுடன் தேர் இடம்பெறுகிறது. இதே போன்றதுதான் நாகசேனர் என்பவரும்.
இந்தியா என்பதும் இப்படியாக உருவாக்கப்பட்டதுதான். ஏன் இந்து மதமும் கூடத்தான். காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் மேற்கோளை நாம் எல்லோரும் வாசித்திருப்போம். இதுதான் உண்மை நிலை. இந்து தேசியத்தைக் கொண்டாடும் இந்துத்வாவாதிகளுக்கும் இது தெரியும். காலனிய, பின்காலனிய இந்திய வரலாற்றை ஆழ்ந்து படித்தோமானால் இந்து தேசியத்திற்கும், இந்திய தேசியத்திற்கும் இடையேயான இடையறாத முரண்பாடுகளின் மொத்த வடிவத்தையும் அதில் நாம் காணலாம். திலகரின் பிள்ளையாரையும், காந்தியடிகளின் ராமையும் கடத்திச் சென்றவர்கள் இந்துத்வாவாதிகளாக இருந்தாலும் அவ்வாறு நேரிட்டதற்காக திலகரையும், காந்தியடிகளையும் நாம் தாராளமாகக் குற்றம் சாட்டலாம். காந்தியின் ராம்/அல்லா ஆன்மிகம் சாதித்ததை விட நேருவின் உறுதியான மதச்சார்பின்மை ஏராளமாக சாதித்திருக்கிறது என்பதை நாம் மறுத்துவிடமுடியாது.
நரேந்திரமோடி ஆட்சிப்பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. அவர் ஆட்சியில் அமர்ந்தபோது என்னென்ன நடக்கும் என்று நினைத்தோமோ அது ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சங்கப்பரிவாரங்களின் அஜெண்டாக்கள் மறைமுகமாக அல்ல, நேரடியாகவே செயல்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. மூன்று வருட ஆட்சியின் முடிவில் நரேந்திரமோடி சாதித்தது என்ன? என்ற கேள்விக்குப் பதிலாக ராஜஸ்தானில் மாடுகள் வாங்கச் சென்று அங்கே ஆர்.எஸ்.எஸ்ஸின் கூலிப் பரிவாரங்களான பசுப் பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழ்நாடு கால்நடைத்துறை அதிகாரிகளின் உடல்நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். நாடெங்கும் விவசாயிகளின் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெறுகின்றன. நிர்வாணமும், மோட்சமும்(துப்பாக்கிச்சூடும்) தான் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள். ராஜஸ்தான் தொடங்கி மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட எல்லா பெரிய மாநிலங்களிலும் விவசாயிகள் தாங்கள் அரும்பாடுபட்டு விளைவித்த விவசாயப் பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் வீதிகளில் கொட்டிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டு விவசாயிகள் கடந்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகளின் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. அகில இந்தியாவையும் தங்கள் மீது கவனப்படுத்திய தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி ஓய்ந்திருக்கின்றனர். போராடிய விவசாயிகளைச் சந்திக்க, செவி மடுக்க அரசு மறுத்ததன் மூலம் மிகவும் அப்பட்டமாகத் தெரிந்தது மோடியின் அரசு யாருக்கானதென்று!. ஆனாலும் முழு நிர்வாணப் போராட்டம் வரை விவசாயிகள் போராடிவிட்டுத்தான் ஊர் திரும்பினார்கள். மல்லையாவுக்கும், அதானிக்கும், அம்பானிகளுக்கும், ஜின்டால்களுக்கும் தரப்படும் பல்லாயிரம் கோடி கடன் தள்ளுபடி, மானியங்களில் ஒரு சிறு அளவைக்கூட கோடிக்கணக்கான விவசாயிகளுக்குக் கொடுக்க மனமில்லாத அரசு இது.
சென்ற நாடாளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பல நடுநிலை நண்பர்கள் மோடியையும், அவரது வாக்குறுதிகளையும் மிகக்கடுமையாக ஆதரித்தார்கள். இன்று அவர்களில் பலரும் மோடிக்கு எதிராக முகநூலில் பதிவுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். அவர் மக்களின் முன் பேசுவதற்கு ஏராளம் இருக்கின்றன. அவர் பதில் சொல்வதற்கு ஏராளமான கேள்விகளை மக்கள் வைத்திருக்கிறார்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் யார் பலனடைந்தார்கள்? நாட்டின் வளர்ச்சியில் அதன் தாக்கம் என்ன? என்று மோடி புள்ளிவிபரங்களுடன் விளக்கவேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் உணவுப் பொருட்களின் தேவை நாட்டில் குறைந்தது என்றும், விவசாயிகளின் தற்போதைய துன்பத்திற்கு இதுவும் காரணம் என்றும் ஸ்வராஜ் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் யோகேந்திர யாதவ் குறிப்பிடுகிறார். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை என்று கூறிக்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் விளைந்த பொருளாதாரப் பலன்கள் என்ன? இதுவரை மத்திய அரசுத்தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. உத்திரப்பிரதேச தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்களிடம் உள்ள பணத்தை உபயோகிக்கவிடக்கூடாது என்ற மத்திய அரசின் திட்டமாகக் கூட இது இருந்திருக்கலாம். தேர்தலுக்கு முன்னர் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ‘கருப்புப்பணத்தை அயல்நாடுகளிலிருந்து மீட்டெடுத்தலும், ஊழலை ஒழித்தலும்’ வெறும் வெற்று வாய்ச்சவாடல்களான பிறகு தன்னுடைய இந்தச் செயல் தனது நம்பகத்தன்மையை நிரூபணம் செய்யும் என்று பாஜக நம்பியும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். அல்லது பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்திய பணத்தைக்கொண்டு வங்கிகளில் குவிந்த பெரும் செல்வத்தை கார்ப்பொரேட்டுகளுக்குக் கடன் வழங்கப் பயன்படுத்தி கார்ப்பொரேட்டுகளின் உண்மையான நண்பன் தான் தான் என்று காட்டுவதற்காகக்கூட இருந்திருக்கலாம். இவை ஒவ்வொன்றிலும் ஓரளவு உண்மை இருந்தாலும்கூட மோடி மட்டுமே இப்படியான, பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தைத் தரவல்ல ஒரு பெரிய முடிவை எடுக்கமுடியும் என்ற பிம்பப்பெருக்கத்திற்காகக் கூட இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்திருக்கிறது என்றும் இம்முடிவு தோல்வியைத் தழுவியிருக்கிறது என்றும் வலதுசாரி இதழான ‘ஸ்வராஜ்யா’ ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. வலதுசாரி முகாமிலிருந்து வெளிவந்துள்ள முதலாவது ஒப்புதல் வாக்குமூலம் இது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களது விளைபொருட்களுக்கான விலை மதிப்பீட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் அக்கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வலதுசாரி முகாமிலிருந்து இதை நாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும் நாம் இக்கட்டுரையை நேர்மையாக வரவேற்றாக வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவசாயிகளை கடுமையானப் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இந்நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையானப் பணத்தட்டுப்பாடும், நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புற மக்களும்கூட வங்கிகளின் முன் திரண்ட சம்பவங்களும் வெறும் கால் வலியை மட்டும் கோரவில்லை. மாறாக விவசாயிகளிடமிருந்து மாபெரும் பொருளாதார இழப்பைக் கோரி நிற்கின்றன. கடுமையான துன்பத்திற்கும் மத்தியில் தங்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் செலுத்திவிட்டு விவசாயச் செலவுகளுக்காக அதிகமான வட்டி விகிதங்களில் பணத்தைத் திரட்டி ஒரு வழியாக விளைச்சலை முழுமை செய்து காட்டிய விவசாயிகளால் அவர்களுக்கு உரிய கட்டுபடியாகக்கூடிய விலையை மட்டும் பொதுமக்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் பெற முடியவில்லை. அதுதான் இந்நாட்டு விவசாயிகளின் சாபம். கடந்த வருடம் மேமாதம் தாங்கள் விளைவித்த உருளைக்கிழங்குக்கு ஒரு குவின்டாலுக்கு 1100 ரூபாய் வரை விலை பெற்ற உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத் விவசாயிகள் இந்த ஆண்டு 350 ரூபாயைத்தான் பெறமுடிந்தது. கடந்த ஆண்டு தக்காளி ஒரு குவின்டாலுக்கு 1600 ரூபாய் வரை விலை பெற்ற கர்நாடகாவின் கோலார் விவசாயிகள் இந்த ஆண்டு பெற்ற விலை அதிகபட்சம் 400 ரூபாய் மட்டுமே. தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் சாலைகளில் கொட்டிவிட்டுப் போன பரிதாபகரமான காட்சிகளை கடந்த சில நாட்களில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் வரும் பருவத்திற்கு விவசாயிகள் ஏதும் விளைவிப்பார்களா? என்ற சந்தேகமும் வருகிறது. அவர்கள் ஏன் உழைக்கவேண்டும்? ஏன் விளைவிக்கவேண்டும்? விவசாயத்திற்கும், விவசாயிக்கும் என்ன மதிப்பு இருக்கிறது அவர்கள் நிர்வாணப்படுத்தப்படுவது தவிர. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம் என ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயக் கடன்கள் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டுவருவதைக் காண்கிறோம். நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் வீழ்ச்சி நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பதை மோடி அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது. விவசாயிகளின் கடன்களை மாநில அரசு விரும்பினால் தள்ளுபடி செய்துகொள்ளலாம். மத்திய அரசு ஏதும் நிதி உதவி செய்யாது என்று மோடி அரசு உறுதியாக அறிவிக்கிறது. ஆனால் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வரும் வழக்கில் உரிய ஆவணங்களை இந்தியா தாக்கல் செய்யவில்லை என்று லண்டன் நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகிறார். அப்படியானால் மோடி அரசு யாருக்கான அரசு?
மோடி அரியணை ஏறிய பிறகு பலத்துடன் இருந்த இந்துத்வா சக்திகள் முழு வீச்சோடு களமிறங்கிவிட்டன. தங்களுடன் இணங்கிப்போகாத மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் சங்கப்பரிவாரங்களுக்கு சகிக்க முடியாதவையாக மாறிப்போய்விட்டன. தமிழ்நாட்டில் இருக்கும் முன்று அதிமுக அணிகளுமே மோடியின் காலடியில். ஆட்சியின் தொடக்கம் முதலே மாட்டுக்கறியை கையில் எடுத்திருக்கும் இந்துத்வாவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி ஒருவரைக் கொன்று தீர்த்தார்கள். ஆனால் அவர் வீட்டில் வைத்திருந்ததோ ஆட்டுக்கறி. அப்படியே மாட்டுக்கறி வைத்திருந்தாலும் கூட ஒரு மனிதனைக் கொல்வதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மாடு விற்பனையை ஒழுங்குபடுத்துகிறேன் என்னும் போர்வையில் மாட்டிறைச்சியின் பயன்பாட்டை நாட்டில் குறைப்பது. ஆனால் ஏற்றுமதிக்கு மட்டும் முழு அனுமதி. மாட்டிறைச்சியின் பயன்பாட்டை குறைப்பதன்மூலம் இஸ்லாமிய மக்களுக்கு மோடி விடுக்கும் மறைமுக செய்தி இதுதான்: “நீங்கள் சங்கப்பரிவாரங்களின் கட்டுப்பா ட்டில்தான் இருந்தாகவேண்டும்”. இஸ்லாமியர்களின், தலித்துகளின், பிற்படுத்தப்பட்ட மக்களின் உணவுக் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நாட்டில் மீண்டும் மீண்டும் பிளவுகளையும், அமைதியின்மையையும் மட்டுமே ஏற்படுத்தும். நரேந்திர மோடியின் ஆட்சிக்காலம் அரசியல் துறையிலும், பண்பாட்டுத் துறையிலும் நாட்டை மிகப்பெரும் பிளவை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது.
இந்துத்வாவின் செயல் தலைவர்களான யோகி ஆதித்யநாத்தும், அமித்ஷாவும் தினம் தினம் ஒரு இந்துத்வா முத்துகளை உதிர்த்து வருகிறார்கள். இக்கட்டுரை எழுதும் சமயத்தில் கூட யோகி ஆதித்யநாத் உதிர்த்த முத்து இது: ” கீதையும், இராமாயணமும்தான் இந்தியாவின் அடையாளங்கள். தாஜ்மஹால் எப்படி இந்தியாவின் அடையாளமாகும்?”. இஸ்லாமியர்களின் மீதும், தலித்துகளின் மீதும் தினம் தினம் அவமரியாதையும், தாக்குதல்களும் நடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்வதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தலித்துகளின் சுய மரியாதையைக் களங்கப்படுத்தும் நிகழ்வு ஒன்று சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நடந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் ஒரு கிராமத்திற்கு வருகை புரிவதற்கு முன்னால் அங்கிருக்கும் தலித்துகளுக்கு சோப்பும், ஷாம்பும் தரப்பட்டது. முதல்வர் வருவதற்கு முன்னால் தலித்துகள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வழங்கப்பட்டது. தலித்துகளின் சுயமரியாதையின் மீதான இத்தாக்குதலைக் கண்டித்து தலித் கவிஞர் அஸங் வாங்கடே ஒரு கவிதை எழுதியுள்ளார். அஸங் வாங்கடே ஒரு கவிஞர், வழக்கறிஞர். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள அம்பேத்கர்-பெரியார்-புலே படிப்பு வட்டத்தை நிறுவியவர்களுள் ஒருவர்.
கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ:
இதோ நான் தருகிறேன்
மனு என்னை அசுத்தமாகப் படைத்தார்.
சாதிப்பெயர்களின் மூலமும் விலக்கி வைப்பதன் மூலமும்
உங்களது பாரபட்சமான மனமே என்னை
நாற்றமடையச் செய்கின்றன.
கோபத்தின் வாசனையோடு நான் ஒளிர்கிறேன்.
ஒடுக்குமுறையால் நாறுகிறேன், உங்களது அசிங்கத்தால் அல்ல.
உங்கள் எசமானை மகிழ்வுறச் செய்ய இன்று எனக்கு
சோப்பும், ஷாம்பும் கொடுத்தீர்கள்.
சிறுபான்மையினர் மீது வல்லுறவுக்கும், வன்முறைக்கும் காரணமான
உங்கள் நாற்றம் பிடித்த நாக்குகளை எப்போதாவது
இதைக் கொண்டு சுத்தம் செய்திருக்கிறீர்களா?
அல்லது மனுதர்மத்தையும், வர்ணாசிரமத்தையும்
போதிக்கும் மூளையை சுத்தம் செய்திருக்கிறீர்களா?
உங்களுடைய செய்கையினால்
என்னுடைய சுய மரியாதையை
கொச்சைப்படுத்தினீர்கள்.
என்னுடைய செய்கையினால்
உங்களின் அகந்தையை கொச்சைப்படுத்துகிறேன்.
பாபாசாகேப்பின் மிகப்பொருத்தமான
வழிகாட்டல்கள் என்னை அவ்வப்போது
சுத்தம் செய்துவருகின்றன.
சாதிய ஒடுக்குமுறையும், சமூக விலக்குதலும்
கொண்ட என்னுடைய காயத்தை
இந்த சோப்பு மேலும் மோசமாக்குகிறது.
நான் உங்களின் அனுதாபத்தைக் கோரவில்லை,
உங்களின் வெறுப்பையே நான் கோருகிறேன்.
எதிர்ப்புகளுக்கும் மத்தியில்
எழுச்சிப் பாடலை நான் பாடுகிறேன்.
இது எனக்கு சுயமரியாதையையும், சுதந்திரத்தையும்,
போராடுவதற்கான சுதந்திரத்தையும் தருகிறது.
இரு வேளை உணவுக்காக
உங்களது மலத்தை நான் சுமக்கிறேன்.
இல்லாவிட்டால்
இந்தக்குடியரசில் பட்டினியாய் நான்
உறங்கவேண்டும்.
சோப்பும், ஷாம்பும் உங்களுடைய
அறியாமைக்குத் தீனியாகலாம்
என் வயிற்றுக்கல்ல.
நாட்டின் பார்வையை தன் மீது திருப்ப
உங்கள் எசமான் இங்கு வருகிறார்.
அழகான பார்வைக்காக நாங்கள்
வெளுக்கப்படுகிறோம்.
உங்களின் சேவகர்கள் போல
நாங்கள் உற்சாகமாக இருக்கவேண்டும்.
என் ஆன்மாவின் அமைதி உடையும்போது
என்னவெல்லாம் நடுக்கமுறுமோ?
எசமானே! என் வீட்டைப் பார்க்க வாருங்கள்!
உங்களுடைய காவித் துண்டின் மடிப்பைவிட
அது சுத்தமாக இருக்கும்.
உங்களின் மனசாட்சி சுத்தமானால்
நீங்கள் பேசலாம்.
உங்களின் இதயத்தில் நடனமாடிடும்
மனுவை நீங்கள் எரித்துவிட்டீர்களானால்
நீங்கள் சிரிக்கலாம்.
என்னுடைய மௌனத்தை உடைப்பதற்கான
விடியல் ஏற்கனவெ தொடங்கிவிட்டது!.
நீங்கள் திரும்பிச் செல்வதற்கு முன்னால்
இதோ நான் உங்களுக்குத் தருகிறேன்.
அம்பேத்கர், புத்தர் என்னும் என்னுடைய
சோப்புகளை நான் உங்களுக்குத் தருகிறேன்.
உங்களின் மன அடிமைத்தனத்தை
சுத்தப்படுத்தப் புறப்படுங்கள்.
உங்களது சிந்தனைக்குள் புகுந்திருக்கும் மனுவையும்
சாதியையும் ஒழிக்கப் புறப்படுங்கள்.
உங்கள் காவித் துண்டை வெளுத்து
வெண்மையாக்குங்கள்.
இந்தப் பக்கத்தில் இரண்டு சூரியன்கள்
எப்போதும் இருக்கப்போவதில்லை
உங்களுடையதை எரித்துப் போட
எங்களிடம் எப்போதும் ஒன்று உண்டு.
(கவிதையின் ஆங்கில வடிவம்:
https://thewire.in/141345/dalit-poet-adityanath-government
இந்தியாவின் சகல பூகோளப்பகுதிகளும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்ற மோடியின் ஆசை குறித்து நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் சமீபத்தில் என்டிடிவி யின் மீதான சிபிஐ நடத்திய சோதனையைக் கண்டித்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் கூடிய நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் மோடியின் ஆதிக்கத்துக்கு எதிராக என்னென்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுத்தார்கள். நெருக்கடிநிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இந்திரா காந்தியின் தாக்குதலையும், பத்திரிகையின் மீதான அவதூறு மசோதா என்னும் ராஜீவ் காந்தியின் தாக்குதலையும் எதிர்கொண்டவர்கள் அவர்கள். அப்போது பேசிய மூத்த பத்திரிகையாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸின் முன்னாள் ஆசிரியருமான அருண் ஷோரி தங்களை இப்படி ஒன்று திரட்டியதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்தார். “கூடவே மோடி ஒரு பாகிஸ்தானியக் கவிதையையும் வாசிக்கவேண்டும்” என்றார். அந்தக் கவிதை இதுதான்:
“உங்களுக்கு முன்னர் இந்த அரியணையில் வீற்றிருந்தவரும் உங்களைப் போலவேதான் நினைத்திருந்தார், தானும் கூட ஒரு கடவுளென்று”. இதற்கு மேல் அவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இந்துத்வா என்னும் ஆக்டோபஸ் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வளைத்துக் கொண்டு மிரட்டுவதை உங்களால் உணரமுடிகிறதா? மோடிக்கு எதிராக, இந்துத்வாவிற்கு எதிராக, காவி மயத்திற்கு எதிராக நீங்கள் பேசும் ஒவ்வொரு சமயமும் நீங்கள் தேசத்துரோகி என முத்திரை குத்தப்படுவீர்கள். சட்டத்தின் ஆட்சியின் கீழ் அவர்கள் இருந்தபோதிலும் அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. இந்தியா என்னும் கதம்பத்தை பிய்த்து எறிய அவர்கள் காத்துக் கிடக்கிறார்கள். மதத்தின் வழியாக அதிகாரத்தைச் சுவைக்க அவர்கள் முயலுகிறார்கள். விவேகானந்தரின் ஆன்மிகத்திற்கும், இந்துத்வாவின் ஆன்மிகத்திற்கும் உள்ள மலையளவு வேறுபாட்டை சாதாரண இந்திய பிரஜை எப்படி அறிவான்? மாண்புக்குரிய பிரதமர் மோடி அவர்கள் ஒரு அதிமனிதனாக மாற எத்தனிக்கும் முயற்சி குறித்து நமக்கு ஏதும் விழிப்புணர்வு உண்டா? “பாசிசம் மதத்திற்குக் காவலாக நிற்கிறது. காரணம் மத நம்பிக்கையானது அறியாமையை உயர்வாகப் போற்றுகிறது. அதனால் மக்களைச் சுரண்டுவது எளிதாகிறது” என்னும் எம்.என்.ராயின் வரிகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா?
————————————
(காலச்சுவடு, ஜூலை, 2017)
.