என் பெயர் ரோஹித் வெமுலா
ரோஹித் வெமுலா.உயிர் வாங்கப்பட்டுவிட்ட ஏகலைவன்.இப்போதெல்லாம் துரோணாச்சாரியார்களுக்கு கட்டைவிரல்கள் அல்ல, ஏகலைவர்களின் உயிர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.நவீன துரோணாச்சாரியார்கள் இவர்கள். சில ஏகலைவர்கள் உயிரைத் தரலாம். ஆனால் அது தொடராது என்பதை நவீன துரோணாச்சாரியார்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.ஆறறிவுள்ள ஒரு மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் அறமற்றச் செயல்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தால் மட்டுமே அது இயல்பற்றதாக இருக்கமுடியும்.தனது உயிரைத் துறக்கும்முன்னர் ரோஹித் எழுதிய கடிதம் கவித்துவம் மிக்கதாக இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக தனது உடலைக் கொடையாகத் தந்த முத்துக்குமாரின் கடைசிக் கடிதமும் இப்படிப்பட்டதுதான்.தங்களது இன்னுயிரை ஈந்து மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தந்திருக்கும் இவர்கள் தான் வரலாற்றின் மகத்தான பிறவிகள். அடக்கப்பட்ட இனங்களின் உயிர்மூச்சை இவர்களே உயிர்ப்பித்திருக்கிறார்கள்.ரோஹித் எழுதிய முதல் கடிதம் இதுவல்ல.ஏற்கெனவே துணைவேந்தர் அப்பாராவுக்கு டிசம்பர் 18ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.அக்கடிதத்தில் “பல்கலைக்கழகத்தில் சேரும் ஒவ்வொரு தலித் மாணவனுக்கும் 10 மில்லிகிராம் சோடியம் அசைடை கொடுத்துவிடுங்கள்.அம்பேத்கரை வாசிக்க எண்ணும்போது இதை உபயோகிக்கவேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள்” என்றும்,”எல்லா தலித் மாணவர்களின் அறைகளுக்கும் ஒரு கயிறையும் கொடுத்துவிடுங்கள்” என்றும் வெதும்பி எழுதியிருக்கிறார் ரோஹித்.
எப்படிப்பட்ட வேதனையில் இக்கடிதத்தை ரோஹித் எழுதியிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளும் பக்குவம் துணைவேந்தருக்குக் கிடையாது.துளி அளவு மனிதாபிமானம் இருந்திருந்தால்கூட வேதனையால் வடிக்கப்பட்டிருந்த டிசம்பர் 18 கடிதத்தைக் கண்டவுடன் ரோஹித் உள்ளிட்ட மாணவர்களுடன் அவர் பேசியிருப்பார்.அது எப்படி பேசமுடியும்?வெறும் துணை வேந்தர்-மாணவர் உறவு மட்டுமா இவர்களுக்குள் இருக்கிறது? இல்லையே!.பிராமணிய அதிகாரத்தின் ஒட்டுமொத்த செலுத்துநராக துணைவேந்தர் திகழ்ந்திருக்கிறார்.அவருக்கான அதிகார ஊற்று சங்கப்பரிவார மத்திய அமைச்சர்களிடமிருந்து பொங்கிப் பிரவாகமாகப் பாய்ந்திருக்கிறது. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின்(ABVP) ஹைதராபாத் பல்கலைகழக மாணவத்தலைவர் சுஷில்குமார்,மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயே,ஸ்மிருதி இரானி என எல்லோருமே துணைவேந்தரின் இந்தப் பார்ப்பனியத் தனமான முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கும்(Ambedkar Students Association),அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்துக்கும்(ABVP) இடையே நடைபெற்ற மோதலின் விளைவாக ரோஹித் மேல் கொடுக்கப்பட்டிருந்த புகார் பொய் என்று பல்கலைக்கழகத்தினால் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழு துணைவேந்தருக்கு அறிக்கை தாக்கல் செய்தபிறகும் ரோஹித் உள்ளிட்ட ஐந்து தலித் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பல்கலைக் கழக நிர்வாகம் அப்பட்டமான காவிமயமாகி இருக்கிறது என்பதை விளக்குவதற்கு இனி எதுவும் சொல்லவேண்டுமோ?
தலித் மாலா பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது கல்வித் தகுதியால் பொதுப்பிரிவிலேயே பல்கலைக்கழகத்தில் தனக்கான இடத்தைப் பிடித்தரோஹித் வெமுலா செய்த குற்றங்கள் என்று பல்கலைக்கழக0 நிர்வாகமும்,சங்கப்பரிவாரங்களும் சுட்டிக்காட்டியிருப்பதைப் பார்ப்போம்.முதலாவதாக மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேனனை தூக்கில் போடக்கூடாது என்று வலியுறுத்தி இயக்கம் நடத்தியது.அதாவது யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம் என்றுதான் ரோஹித் போராடினாரே தவிர யாகூப் மேனனை விடுதலை செய்யவேண்டும் என்று போராடவில்லை.இரண்டாவதாக முஸாபர்நகர் கலவரங்களில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இயக்க நடத்தியது.மூன்றாவதாக முஸாபர்நகர் கலவரம் தொடர்பான “முஸாபர்நகர் பாகி ஹை ” ஆவணப்படத்தை தில்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிட முயற்சி செய்தபோது அதை ABVP அமைப்பினர் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து ரோஹித் இயக்கம் நடத்தியது.. தொகுத்துப் பார்க்கும்போது சங்கப்பரிவார அரசியலை எதிர்த்து செயல்பட்டதுதான் ரோஹித்தின் முதலாவது குற்றம்.குட்டக் குட்ட குனியாமல் எதிர்த்து கேள்வி கேட்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பில் இணைந்து அவர் போராடியது அவருடைய இரண்டாவது குற்றம். உயர் கல்வி நிலையங்களில் நிலவும் பிராமணியவாத சாதிக்கலாச்சாரத்தை எதிர்த்துப் பேசியதும்,எழுதியதும் அவருடைய மூன்றாவது குற்றம். கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை எதிர்த்தும்,தலித்,பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் துன்பங்கள் குறித்தும்,தூக்குதண்டனை என்னும் வடிவத்தில் மனித உரிமைகள் அரசால் பறிக்கப்படுவதை எதிர்த்தும் ரோஹித் பேசியதால் அவர் ஒரு தேச விரோதி,தீவிரவாதி.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் படிக்க வந்தவருக்கு ஏன் அரசியல் வேலை,அரசியல் பிரச்சாரம் என்ற கேள்விகள் சங்கப்பரிவார ஆட்களால் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன.சில நடுத்தரவர்க்க அறிவுஜீவிகளும் கூட இதே சந்தேகத்தையும்,அறிவுரைகளையும்தான் அள்ளி வீசுகின்றனர்.அதே நேரம் சுப்பிரமணியசுவாமியை டெல்லிப் பல்கலைக்கழக சங்பரிவார மாணவ அமைப்பினர் அழைத்து அயோத்தி குறித்து பேசுகின்றனர். ஆனால் ஐ.ஐ.டி சென்னையின் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டமும்,ஹைதரபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் கழகமும் செயல்படாமல் தடுக்கப்படவேண்டும்.அப்படியென்றால் அறிவுரைகளும்,சட்ட ஒழுங்கும் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மட்டும்தானா?ஆமாம்.அதுதான் உண்மை. தலித் மாணவர்களையும்,பிற்படுத்தப்பட்ட மாணவர்களையும் இன்னமும் தீட்டுப்படிந்தவர்களாகத்தான் சங்பரிவார அமைப்புகளும்,பல்கலைக்கழக நிர்வாகங்களும், உயர்சாதி மாணவர்களும் நடத்துகிறார்கள். அதனால்தான் ரோஹித்துக்கு பல்கலைக்கழகம் கொடுத்திருந்த தண்டனையும் கூட தீட்டுத் தண்டனையாகவே அமைந்திருக்கிறது.அதாவது வகுப்பறைக்கு வா,சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் வரக்கூடாது. கடந்த டிசம்பரில் கொடுக்கப்பட்டிருந்த இந்த தண்டனையைத் தொடர்ந்து இவர்கள் பல்கலைக்கழகவெட்டவெளியில்தான் இத்தனை நாட்களாக உறங்கி வந்திருக்கின்றனர் என்பதையும்,அதனை எதிர்த்து அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் மட்டுமே போராட்டம் நடத்தியிருக்கின்றனர் என்பதையும் ஊடகங்கள் ரோஹித்தின் மரணத்தின் பின்னர்தான் விழித்துக் கொண்டன என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும்.
இடஒதுக்கீட்டுக்கு முன்னர் 99 சதவீத இடங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த உயர்சாதியினர்,பார்ப்பனர்கள் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 1990 க்குப் பிந்தைய தலித் எழுச்சி யையும், மண்டலுக்குப் பிறகான பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சியையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் பார்க்கமுடிகிறது.தகுதி அடிப்படையில் ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்க வரும் ஒரு தலித் மற்றும்,பிற்பட்ட வகுப்பு மாணவனை இட ஒதுக்கீட்டின்படி வந்தவன்,தகுதியற்றவன்,கீழ்சாதி என்று வரையறுத்து,அவன் புழங்கும் வெளிகளைக் கட்டுப்படுத்தி,அவனுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து, அம்பேத்கர் படிக்கும்போது மேல் சாதியினர் கொடுத்த நெருக்குதலைவிட பல நூறு மடங்கு அதிக நெருக்குதல் கொடுத்து அவனை ஒன்று தற்கொலைக்குத் தூண்டுகின்றனர் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து விரட்டுவதற்கான வேலைகளை மறைமுகமாகத் தொடங்குகின்றனர். தலித் ஆய்வுமாணவனுக்கு வழிகாட்ட பேராசிரியர் எவரையும் நியமிக்காமல் மறுப்பது,தலித் மாணவர்களுக்கு தனி விடுதிகளையும்,உணவுக்கூடங்களையும் கொடுத்து அம்மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருவது அல்லது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அவனை ஓடச்செய்வது என்ற பல்வேறு செப்படி வித்தைகளைகளையும் நிர்வாகத்தினரும்,சங்பரிவார அமைப்பினரும் உபயோகிக்கின்றனர். படிக்கும் வயதில்,படிக்கும் இடத்தில் அரசியலுக்கு என்ன வேலை என்று காந்திஜி நினைத்திருந்தால் சுதந்திரப் போராட்ட காலத்தில் பள்ளிக்கூடங்களையும்,கல்லூரிகளையும் துறந்துவிட்டுப் போராட வாருங்கள் என்று அவர் அழைத்திருக்கமாட்டார்.மாணவர்களுக்கு ஏன் போராட்டம் என்று எண்ணியிருந்தால் 1965ல் தமிழ்நாட்டில் வீறுடன் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருக்காது.போராட்டம் அவசியமற்றது என்று நினைத்திருந்தால் இந்திராகாந்தி பிறப்பித்த நெருக்கடி நிலைக் கால கட்டத்திற்கு எதிராக செயபிரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் திரண்டிருக்கமாட்டார்கள்.உலகம் முழுவதும் இன்னும் எண்ணற்ற போராட்டங்களில் மாணவர்கள் துடிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தான் கல்வி கற்கும் இடத்தில் நிகழும் சமூக அநீதிக்கு எதிராக ஒரு மாணவன் கண்டிப்பாகக் குரல் கொடுக்கத்தான் வேண்டும்.நம் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் சமூக நீதி இன்னமும் உருவாக்கப்படவில்லை.மக்கள் தொகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ஒரு சில பிரிவினர் மட்டுமே அங்கு 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களையும்,பேராசிரியர் பதவிகளையும் கைப்பற்றி வைத்துக்கொண்டு சமூகத்தின்,உயர்கல்வியின் விளிம்பு நிலையிலிருக்கும் தலித் மற்றும் பிற்பட்ட மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளைப் பொசுக்குகிறார்கள் என்ற நிலையில்,இக்கொடுமையை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் எப்படிப் போராடாமல் இருக்கமுடியும்? சென்னை ஐ.ஐ.டி பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் செயல்பாடுகளைக் கண்ணுற்று,நடுநடுங்கிய சங்பரிவார அமைப்புகள் அந்த அமைப்பைத் தடை செய்ய கடும் முயற்சி எடுத்தனர்.அம்முயற்சி வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.தமிழ்நாட்டில்,பெரியார் பிறந்த மண்ணில் மட்டுமே சமூகநீதிக்கான போராட்டக்களம் இன்னமும் தூர்ந்து போய்விடாமல் அப்படியே இருக்கிறது என்று சொல்லலாம்.
நாடு முழுவதும் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் “Death of Merit”.கடந்த 2007 முதல் 2012 வரை 19 தலித்துகள் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்டதாக அது காட்டுகிறது. இவர்களில் நான்கு பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். டைம்ஸ் ஆப் இந்தியா 2013ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் செய்து கொள்ளப்பட்ட மொத்தம் 9 தற்கொலைகளில் 8 பேர் தலித் மற்றும் பிற்பட்ட வகுப்பு மாணவர்கள்,ஒருவர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்.2014ம் ஆண்டு மும்பை ஐ.ஐ.டியில் அனிகேட் அம்போர் என்னும் மாணவன் சாதிய பாகுபாடு காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டான்.தமிழ்நாட்டின் தலித் மாணவன் செந்தில்குமார் இதே ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கும் முன்னர் தற்கொலை செய்து கொண்டதும் நினைவிருக்கலாம்.அம்மாணவனின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய நீதி விசாரணை நடத்தவேண்டும்,அம்மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அப்போதே பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்துவிட்டதையும் நாம் நினைவுகூரவேண்டும். கடந்த 2002ம் ஆண்டு இதே ஹைதராபாத் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊழலைக் குறித்து கேள்வி கேட்டமைக்காக 10 தலித் ஆய்வு மாணவர்கள் நீக்கப்பட்டதையும்,அப்பொழுது தலைமை விடுதி காப்பாளராக பணிபுரிந்தவர் இப்போழுது துணைவேந்தராக இருக்கும் அப்பாராவ்தான் என்பதையும் காணும்போது பல்கலைக்கழக நிர்வாகம் சாதிய அழுக்குகளில்தான் இன்னமும் நாறிக்கொண்டிருக்கிறது என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்கமுடியும்?.
இன்று நம் கல்வி நிறுவனங்கள் சங்பரிவார அமைப்புகளினாலும்,மனுதர்மவாதிகளாலும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சாதியையும்,இந்துத்வா மனுதர்ம,வர்ணாசிரமத்தையும் தங்களது வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய அம்பேத்கர்,பெரியார்,சாவித்ரி பாய் புலே,ஜோதிராவ் புலே,பகத்சிங் இவர்களைவிட தங்கள் காலம் முழுவதும் இந்து வர்ணாசிரமம் தான் சரி என்று வாதிட்டகாந்தி,விவேகானந்தர்,தயானந்தசரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களே சிறந்த சீர்திருத்தவாதிகளாகவும்,சமூக அறிவியல் அறிஞர்களாகவும் நமது கல்வி நிலையங்களில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சாதியினால் பிளவுண்டுக் கிடக்கும் இந்திய சமுதாயத்திற்குத் தீர்வு என்ன என்று சொல்லிக்கொடுக்காமல் இந்துத்வாவிற்கு எதிரான கருத்துகளையே நமது கல்வி நிலைய இடதுசாரி அறிஞர்களும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்திய இடது சாரிகளின் தத்துவ வறட்சியையும் ரோஹித்வெமுலா கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்.ஆம்.அவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பில் சேருவதற்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) செயல்பட்டிருக்கிறார். கடவுள் நம்பிக்கையற்ற தோழர்கள் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்ததையும்,சாதியின் பெயரால் இழைக்கப்படும் பாகுபாட்டை தானே அனுபவித்தது குறித்தும் வெறுப்புற்ற ரோஹித் இந்திய மாணவர் சங்கத்தை விட்டு வெளியேறி அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைகிறார் என்று அவரது நண்பர் தெரிவிக்கிறார்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத் தலைவர் தீரஜ் பலேரி இத்தகவலை ஒப்புக்கொள்கிறார்.சாதி குறித்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் போதாமையை ரோஹித் அம்பலப்படுத்துகிறார்.இவ்வளவுக்கும் அவன் ஒரு அரசியல் மாணவரோ அல்லது சமூக அறிவியல் மாணவரோ அல்ல.ஒரூ முறை சீத்தாராம் யெச்சூரி ஹைதரபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து மாணவர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.அப்போது இந்திய தனியார் துறையில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றார்.உடனே ரோஹித் தனது முகநூல் பதிவில் ஒரு கேள்வியை கோபமாகக் கேட்டார்: ” இதுவரை கடந்த 51 ஆண்டுகளில் ஒரு தலித்தாவது பொலிட்பீரோ உறுப்பினராக நியமிக்கப்பட்டதுண்டா?”. சங்பரிவாரம் மற்றும் பார்ப்பனிய சக்திகளுக்கு எதிராக மட்டுமே ரோஹித் தனது போராட்டத்தை நடத்தவில்லை.இந்துத்துவாவை மட்டுமே எதிர்த்துக் குரல்கொடுத்துவிட்டு,சாதியின் மூலமான வேதகால இந்துமதத்தைக் குறித்து ஒன்றுமே சொல்லாமல் போய்விடும் இடதுகளுக்கு எதிராக ரோஹித் தொடர்ந்து குரல் கொடுத்ததாக அவரது நண்பர் குறிப்பிடுகிறார். இந்தியக் கம்யூனிஸ்டுகளிடம் தான் அவனுக்கு கொள்கை மாறுபடுகள் இருந்ததே தவிர அவன் என்றைக்கும் கம்யூனிசத்தை விட்டுக் கொடுத்ததில்லை.தன்னை ஒரு தலித் கம்யூனிஸ்ட் என்றே அழைத்துக் கொள்ளும் பழக்கமுடையவன்.
அம்பேத்கரிஸ்டுகளுக்கும்,கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் அம்பேத்கர் காலத்திலிருந்தே தொடங்கியதுதான்.சாதி குறித்த இடதுகளின் போதாமை அம்பேத்கரிஸ்டுகளை மிகக்கடுமையான விமர்சனத்தை வைக்கத் தூண்டுகிறது.ரஷ்யா என்னும் தொழிலுற்பத்தி நாட்டில் கம்யூனிஸப் புரட்சி தொழிலாளர்களால் நடத்தப்பட்டது.விவசாய நாடான சீனாவில் கம்யூனிசப் புரட்சி விவசாயிகளின் புரட்சியாக நடைபெற்றது.பிராமணியத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிற இந்தியாவில் “சாதி ஒழிப்பு” மட்டுமே கம்யூனிசப் புரட்சியை சாத்தியமாக்கியிருக்க முடியும்.கம்யூனிஸ்டுகள்தான் வழி தவறினார்களேயொழிய புரட்சி அல்ல.கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் சென்றிருக்கவேண்டிய புரட்சியை இப்போது அம்பேத்கரிஸ்டுகளும்,பெரியாரிய அமைப்பினரும்தான் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.ரோஹித்தின் உயிர்க்கொடையை இச்சூழலில்தான் நாம் பார்க்கவேண்டும்.
ரோஹித் தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்று சொல்லியிருக்கலாம்.ஆனால் யார் யாரெல்லாம் காரணம் என்று உலகிற்கே தெரிந்துபோய் விட்டது.தனது பிறப்பை (தலித்தாக பிறந்தது) ஒரு விபத்து என்று ஒரு தலித் நினைவு கூர்ந்தால் அது இயற்கைக்கும்,நீதிக்கும்,அறத்துக்கும் எப்படிப்பட்ட அவமானம்?!ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பஞ்சமர்களாக ,சூத்திரர்களாக மனுதர்மம் ஒதுக்கி வைத்திருக்கும் இவர்கள் அப்படியே ஒதுங்கிப்போகத்தான் வேண்டுமா?புத்தர்,பெரியார்,அம்பேத்கர் இவர்களின் வாழ்க்கை வீணாகத்தான் வேண்டுமா?
நட்சத்திரங்களின் மீது மோகம் கொண்ட ரோஹித்துக்கு அறிவியல் எழுத்தாளர் கார்ல் சாஹனைப் போல வரவேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது.”வெட்டவெளியில் நாயைப்போல இங்கு உறங்குகிறோம்.நம்மை யாரும் கவனிக்கவே இல்லை” என்ற அவனுடைய குமுறலும் அவனுடைய தற்கொலைக்கு முன்னரான கடிதமும் நம்மை என்றென்றும் குற்றமுடையவர்களாகவே வைத்திருக்கும்.ஆனாலும் நம்மை மரத்துப்போகச் செய்துதான் இவ்வுலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம். ரோஹித்தின் மரணத்திற்கு பின் மூன்று நாட்கள் கழித்து என்னுடைய நண்பர் மருத்துவர் மருதுதுரை என்னிடம் தொலைபேசியில் ரோஹித் குறித்த ஒரு கவிதையைப் படித்துக் காட்டினார்.ரோஹித்தின் மரணம் என்னிடம் மட்டுமல்ல, சமத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிந்தேன்.
கவிதை வரிகள் இதோ:
ஒரு விபத்து
என் பிறப்பு
பின் எனது இருப்பில்
எங்கிருந்து இத்தனை வெறுப்பு?
சாதி சதி செய்தது
மதம் அப்படித்தான் என்றது
பொருளாதாரம் சுரண்டியது
கல்வி குருடாய் இருக்கச் சொன்னது
இயற்கை தன்னை இழந்து தவித்தது
கடவுள் காணக்கிடைக்கவில்லை
அனைத்தும் சந்தை என்றான பின்
அன்பும் சந்தைக்குச் சென்றது
விலைபோகாத அன்பு
அநாதையாய் நின்றது
மனிதம் அகதியாய் ஓடியது
மனம் ஏங்கித் தவித்தது
அன்பை விதைத்து
அன்பை வளர்த்து
அன்பை பரிமாறி
அன்பின்றி ஏதுமில்லையென
நட்பும் இலக்கியமும் மட்டுமே
கடைசிப் புகலிடமாய் காட்சியளித்தது
எனது இருத்தலின்போதான இழிவுக்கு எப்படி
எவரும் பொறுப்பில்லையோ
நான் இல்லாதிருத்தலின் நிகழ்வுக்கும் அப்படியே
யாரும் பொறுப்பில்லை.
எனக்குள் உண்டான
வெறுமைக்கு விடைகண்டு
“ஜெய்பீம்” என்றேன்
அரசியல் சுருக்கால் இறுக்கியது
என் பெயர் ரோஹித் வெமுலா.
(உயிர்மை,பிப்ரவரி,2016)