ஓங்கி ஒலிக்கும் இந்துத்வா குரல்கள்
நரேந்திரமோடியுடனான இந்திய மக்களின் தேனிலவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.ஐந்து வருடங்களுக்குள் விவாகரத்தும் கூட கிடைத்துவிடும்.விவாகரத்துக்கு யார் காரணமாக இருக்கக்கூடும் என்பது நரேந்திரமோடிக்கு தெரியாததல்ல.நரேந்திரமோடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய மறைமுக வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.அத்தகைய திட்டமிடல்படிதான் நாட்டில் ஒவ்வொரு இந்துத்வா வேலைத் திட்டமும் மத்திய அரசின் முன் ஒப்புதலோடும்,மறைமுக ஆதரவோடும் கொண்டுவரப்படுகின்றன.மோடி ஆட்சிக்கு வந்தபொழுது முதல் இக்கட்டுரை எழுதப்படும் இப்பொழுது வரை அவர்களுடைய வேலைத் திட்டங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுகின்றன.ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன.மதச்சார்பின்மை அரசியல் சட்டம் கொண்டுள்ள இந்தியா தன் கண்களைப் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது.தில்லிக்கலவரங்கள்,ஆசிரியர் தினத்தை குரு உத்ஸவாக கொண்டாடப்படவேண்டும் என்ற உத்தரவு,ஆசிரியர் தினத்தன்று பள்ளி மாணவர்களுடன் மோடி நேரடி உரையை ஏற்பாடு செய்ய பள்ளிகளை நிர்ப்பந்தம் செய்தல்,ஆர்.எஸ்.எஸ் சர்சங்ஜாலக்கான மோகன் பாகவத் அகில இந்திய வானொலியில் உரையாற்றுதல்,கேந்திரிய பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை திணித்தல்,நாடு முழுவதும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுதல்,ஆக்ராவில் அப்பாவி இஸ்லாமியர்களை பொருளாதார காரணங்களுக்காக மத மாற்றம் செய்தல்,அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற பிரவீன் தொகாடியாவின் பேச்சு,தில்லியில் பா.ஜ.கவுக்கு வாக்களிக்காதவர்கள் ராமரின் பிள்ளைகள் அல்ல என்ற அமைச்சர் நிரஞ்சன் தேவியின் வெறுப்பை உமிழும் பேச்சு, பண்பாட்டுக் காவலர்களாக வலம்வரும் பரிவாரங்கள் கொச்சியில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது,கிறிஸ்துமஸ் தினத்தன்று அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு அன்றையதினம் வாஜ்பாயி மற்றும் மாளவியாவின் பிறந்தநாட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக பள்ளிகள் திறந்துவைக்கப்படவேண்டும் என நவோதயா வித்யாலயா பள்ளிகளின் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு,நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியபின்னர் அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று பரிவாரங்கள் பின்வாங்கியது.இப்படியாக ஆர்.எஸ்.எஸ்-ன் வேலைத்திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரசவமாகிக் கொண்டு வருகின்றன.சிறுபான்மை மக்களின்மீது வெறுப்பும்,கோபமும் இவ்வேலைத் திட்டங்களில் மண்டி நிற்கிறது. இவ்வேலைத் திட்டங்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போன்று சங் பரிவார்களின் அடுத்த நகர்வாக பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்துக்களின் புனிதநூலாகக் கருதப்படும் பகவத்கீதையை இந்தியா முழுமைக்குமான புனிதநூலாகக் கொண்டுவர பரிவாரங்கள் எடுக்கும் முயற்சியை மதச்சார்பற்ற தன்மையிலும், மனித உரிமையிலும் நம்பிக்கைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழியான ஹிந்தியை நாட்டின் தேசியமொழியாக அறிவிக்கவேண்டும் என்ற பிரச்னை எழுந்தபோது அறிஞர் அண்ணா கூறினார்:’ அப்படியானால் நாட்டில் அதிகம் வசிக்கும் பறவையான காக்கையைத்தான் தேசியப்பறவையாக அறிவிக்கவேண்டும்,மயிலை அல்ல’ என்றார்.நாட்டின் அதிக மக்களுடைய புனிதநூலாக பகவத்கீதையாக இருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட மத நூலாக இருப்பதனால் அதை நாடு முழுவதற்குமான தேசிய நூலாக அறிவிப்பது சிறுபான்மை மக்களிடையே அச்சத்தையும் சினத்தையும் தோற்றுவிப்பது ஒருபுறமிருக்க,பகவத்கீதை நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்கு தகுதியான நூல்தானா என்னும் கேள்வியும் எழுகிறது.கி.மு.முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக்குள்ளாக எழுதப்பட்டது பகவத்கீதை என்று ஆய்வாளர்கள் பரவலாக ஒப்புக்கொள்கிறார்கள்.எல்லா மதங்களின் புனித நூலைப்போல பகவத்கீதையும் இறைவனால் அருளப்பட்டது என்ற சில இந்துக்களின் நம்பிக்கையைக் குறித்து நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.ஆனால் வரலாற்று ஆய்வுகள் அதை மறுக்கின்றன.பகவத்கீதையை மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவர்தான் எழுதினார் என்ற கூற்றும் உண்டு.இரண்டு முதல் மூன்று பேர் வரை அதை இயற்றினார்கள் என்றுகூட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்நூலில் காணப்படும் பல்வேறு முரண்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொன்டுதான் அதன் ஆசிரியர்கள் மூன்று பேர் வரை இருப்பார்கள் என்றும் கணிக்கிறார்கள்.மகாபாரதத்தின் போர்க்களத்தில் கிருஷ்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடலின் வடிவமாக கீதை இருந்தாலும் உண்மையில் அச்சம்பவங்கள் நடந்ததா என்னும் விவாதத்திற்குள் செல்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.கீதை நிகழ்வின் சமூகப்பின்புலங்களும்,முரண்பாடுகளும் அக்காலக்கட்டத்தில் நிறையவே இருந்தன.புத்தசமயப் புரட்சி நடந்து சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருந்த வைதீக சமயம் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டபின்பு வைதீகபிராமணர்கள் செய்வதறியாது முடங்கிப்போயிருந்தனர்.புத்த சமயத்தில் நாகார்ஜுணன் நுழைந்து மஹாயானப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அப்பிரிவும் வைதீக பிராமண மதத்தின் ஒரு பிரிவு போல ஆகியபின்னர் முடங்கிக் கிடந்த பிராமணர்கள் வீறுகொண்டு எழுந்து எஞ்சியிருந்த புத்தமதத்திற்கும் மரண அடி கொடுத்தனர். புத்தசமயம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்துகொண்டிருந்த அச்சமயத்தில் போர்க்கள அர்ஜுனன் போல சமூகத்தில் தங்களது நிலை பற்றி குழப்பத்துடன் நின்றுகொண்டிருந்த இளைஞர்களுக்காக,அவர்களை வைதீக பிராமண மதத்தில் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற உந்துதலிலும்,சூழ்ச்சியுடனும், வசீகர நடையுடனும் எழுதப்பட்டதுதான் கீதை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.கீதை எழுதப்பட்டதின் பின்னணி ரகசியத்தையும் இதன்வழி புரிந்துகொள்ளலாம். கீதையை தேசிய நூலாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் பரிவாரங்கள் அந்நூல் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதையும் மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்.
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத்கீதைக்கு பல சமயத்தவர்களும் வசிக்கும் ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தேசியநூல் என்ற தகுதியைக் கொடுக்கும் சங்பரிவாரங்களின்,இந்துத்வா அமைப்புகளின் தார்மீக நெறிகளை உணர்வதற்குக் கூட பகவத்கீதை பற்றி அறிந்துகொள்வது அவசியம்.பகவத்கீதை பற்றி அறிந்துகொண்டால் இந்துத்வா பற்றியும்,மோடியையும்,ஆர்.எஸ்.எஸ்காரர்களையும் பற்றி அறிந்துகொண்டால் கீதையின் ரகசியத்தையும் தெளிந்து கொள்ளலாம்.கீதை அடிப்படையில் ஒரு முரண்பாடுகளின் கலவை.இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு சமய ஆய்வாளர்களும் இக்கருத்தை ஒப்புக்கொள்வார்கள்.உயிர்களின் செயல்களை அறவே மறுத்தொதுக்கும் பிரம்மம், கீதையில் மனித உயிர்களை(சத்ரியர்களை) செயல்படவேண்டும் என்கிறது.கீதையின் பிதாமகன் கிருஷ்ணனின் முரண்பாடான போதனைகளைக் கண்டு அர்ஜுணன் வெறுப்படைகிறான்.அர்ஜுணனிடம் கிருஷ்ணன் இவ்வாறு கூறுகிறான்:”மேன்மையான மனிதன் எதைச் செய்கிறானோ அதையே பிறரும் செய்கின்றனர்.அவன் எதைத் தகைமையானது என்று நிறுவுகிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது”.கிருஷ்ணனின் குணநலன்களும் அவன் கடைபிடித்த அறங்களும் அவ்வளவு மேன்மையானவையா?அறம் என்று உலகம் எதைக் கருதியதோ அதை கிருஷ்ணன் செய்தானா?எல்லாக் காலத்துக்குமான அறம் பற்றிய கேள்விகளை விட்டுவிடுவோம்.அவன் காலத்திய (மகாபாரத காலத்திய,கீதை காலத்திய) அறங்களை அவன் பின்பற்றியிருக்கிறானா?கிருஷ்ணனின் அற உணர்வு எப்படிப்பட்டது?இந்துக்கள் இன்று கீதையை பின்பற்றினாலும் அதன் ஆசான் கிருஷ்ணன் பிறர் தன்னை பின்பற்றும் அளவுக்கு ஏதேனும் தகைமையான செயல்களைச் செய்திருகிறானா? இக்கேள்விகளோடு கீதையையும்,மகாபாரதத்தையும் ஆராயப்புகும்போது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கீதை இயற்றப்பட்ட தொடக்கக்காலத்தில் பிராமணர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் புதிதாக தங்களுக்கு இயைந்தவாறு அனுகீதையை இயற்றினர்.அதை மக்கள் ஏற்றுக்கொள்ளாதபோது பகவத்கீதையையே தங்களின் ஆதிக்க விரிவாக்கத்திற்கும்,நலனுக்கும் உகந்த ஒன்றாக மாற்றி அமைத்துக்கொண்டனர்.
பகவத்கீதையின் நாயகன் கிருஷ்ணனின் குணநலன்களைப் பற்றிப் பார்ப்போம்.டி.டி.கோசாம்பி கூறுகிறார்: ” கபட்டுச் சிந்தனையில் கைதேர்ந்த ஒருவன்(கிருஷ்ணன்) காட்டிய வழியில் செயல்பட்டதால் மகாபாரதப்போரில் பாண்டவர்களுக்குத் தோல்வி ஏற்படுத்தக்கூடிய அனைத்துச் சிக்கல்களும் வெற்றிகரமாக முடிகின்றன.ஆனால் அந்தக் கிருஷ்ணனின் உள்ளத்தில் தோன்றிய கபட்டுச் சிந்தனைகள் அறவுணர்வுள்ள வேறொரு மனிதனிடம் தோன்றியிருக்கவே முடியாது.சத்திரிய வீரனான பீஷ்மன் அரவாணியுடன் போரிடமாட்டான் என்பதால் பீஷ்மனைக் கொல்வதற்கு சிகண்டி கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறான்.துரோணனுடைய மகன் இறந்துவிட்டதாகப் பொய்ச்செய்தியைப் பரவவிட்டு துரோணன் போர்க்களத்திலிருந்து விலகுமாறு செய்யப்பட்டான்.கர்ணன் தேரினின்று இறங்கி ஆயுதமின்றி இருக்கும் நிலையில் அர்ஜுனன் போர்க்களத்து அறநெறி அனைத்தையும் மீறி அம்பு எய்து கர்ணனைக் கொன்றான்.துரியோதனன் தண்டாயுதத்தால் தொடையில் தாக்கப்பட்டு நிலை குலைக்கப்பட்டான்.கிருஷ்ணனுடைய அறவுணர்வற்ற செயல்கள் இத்தோடு முடியவில்லை”. கோசாம்பி கூறுவது போல எல்லாம் வல்ல பரமாத்மாவின் வஞ்சக செயல்கள் மகாபாரதம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.இப்படிப்பட்ட அறவுணர்வு கொண்ட ஒரு நாயகனைக் கொண்ட கீதை, இந்நாட்டு மக்களை இதுவரை உய்விக்காத கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட்டபின்னர் எப்படி உய்வித்துவிடும் என்பதுதான் கேள்வியாக தொக்கி நிற்கிறது.
நமது காலத்திலேயே கீதை எப்படிப்பட்ட இரு முரண்பட்ட தீவிர அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறது என்பதற்கு காந்தியும்,அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவும் சிறந்த உதாரணங்கள்.கீதை பற்றி காந்தி கூறுகிறார்:” கீதை எனக்குச் சிறந்த வழிகாட்டி.தினமும் பார்க்கவேண்டிய அகராதி”.ஆனால் காந்தியின் அமைதி வழி இந்து சமுதாயத்திற்குத் தீங்கு செய்கிறது எனச் சொல்லி காந்தியைப் படுகொலை செய்தான் கோட்சே.பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் அவன் விசாரிக்கப்படும்போது பகவத்கீதையின் சுலோகங்களைப் பாடினான்.எப்படிப்பட்ட முரண்பாடு இது!!.கொலை செய்வது பாவமல்ல என்னும் கீதையின் கோட்பாடு மிகமிக ஆபத்தானது.இந்து சமூகத்தின் புனிதநூலாகக் கீதை ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து கொலை செய்வது பாவமல்ல என்னும் கோட்பாடு இந்துக்களின் பல பிரிவு மக்களிடமும் செல்வாக்கு பெற்று திகழ்வதினால் இந்திய வரலாறு முழுவதும் ரத்தக்களறி ஏற்பட்ட சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன.சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட பிரிவினையின்போதும் அதன் பிற்பாடு நடைபெற்ற ஏராளமான வகுப்புக்கலவரங்களிலும் மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ள அக்கிரமமான கொலைகளுக்கு யார் பொறுப்பேற்பது?
புத்தப்புரட்சி தேய்ந்து போனபின் குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களின் செல்வாக்கு புத்துயிர்ப்பு பெற்ற பின் இந்திய மக்கள் படு பிற்போக்குத்தனமான பெரும்குழியில் வீழ்ந்து போனார்கள்.பிறகு அவர்கள் எழ முடியவேயில்லை.வைதீக சமயப் பழக்கவழக்கங்கள் மிகக் கடுமையாயின.சதி உள்ளிட்ட கொடுமைகள் பெண்களின் மீது திணிக்கப்பட்டன.எந்தவொரு காலத்தில் பெண்கள் இழிவுடன் நடத்தப்படுகிறார்களோ அக்காலம் அடிமைகளின் காலமாகவே இருக்கும்.அக்காலத்தை கிருஷ்ணபரமாத்மாவே வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது.ஏனென்றால் இத்தீமைகள் எல்லாம் இந்து சமூக சாஸ்திரங்களிலிருந்துதான் தோண்டி,உருவி எடுக்கப்பட்டு மிகத்தீவிரமாகப் பரப்பப்பட்டது.பகுத்தறிவுவாதிகளும் பார்ப்பனியம் சாராத பிறமதத்தவருமான பௌத்தர்கள்,சமணர்கள்,லோகாயதர்கள்,இறைமறுப்பாளர்கள்,கபில மதத்தினர்,சைவர்கள்,சாக்தர்கள் ஆகியோர் இழிவுபடுத்தப்பட்டார்கள்.கடல்தாண்டி வெளிநாடு பயணம் செய்வது பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டது.வெளிநாடு செல்வது சாதித் தருமத்திற்கு எதிரானது,தூய்மையற்றது என்று பரப்பப்பட்டது.வெளியுலகத் தொடர்பு அற்றுப்போனதால் நம்மிடமிருந்து இந்தியக் கணிதத்தையும்,வானவியலையும்,மருத்துவத்தையும் கற்றுத் தேர்ந்த அராபியர்களிடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளமுடியாமல் போய்விட்டது.அதனால் அரபு மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆற்றலை நாம் பெறத் தவறினோம்.நேர்மையற்ற சாதி அமைப்பும், வெளி உலகத் தொடர்பு அற்றுப்போனதும்தான் இந்த நிலைக்குக் காரணம்.அதாவது பார்ப்பனிய வைதீக சமயமும்,மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட கீதையின் வழிகாட்டுதலும்தான் இதற்குக் காரணம்.பார்ப்பனிய மத மூட நம்பிக்கைகளால் மக்களின் வீரமும் மழுங்கடிக்கப்பட்டது.மக்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும்,முற்போக்கு எண்ணங்களையும் பார்ப்பனர்கள் முடக்கிப்போட்டது ஒருபுறமிருக்க மறுபக்கம் வட இந்தியா முழுவதும் இஸ்லாமிய படையெடுப்புகளால் திணறியது.இந்துக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஈஸ்வரனை மட்டுமே நம்பியிருக்கவேண்டும் என்று கீதை கற்பிதம் செய்தது.அக்கற்பிதத்தைப் பற்றுறுதியுடன் ஒழுகிய இந்துக்கள் இஸ்லாமிய படையெடுப்பை மூடத்தனமாக எதிர்கொண்டார்கள். முக்கியமான போர்களின்போது இந்துக்கள் எப்படியெல்லாம் மூடநம்பிக்கையுடன் எதிர்கொண்டார்கள் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் இந்து சமூகத்தை ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய பின்பே இந்தியர்களிடம் இத்தகைய மனப்பான்மை வளர்ந்தது.முட்டாள்தனமானதும்,மூடநம்பிக்கையுடையதுமான ஒரு நிகழ்ச்சி குஜராத்தின் சோமநாதபுரத்தில் நடந்தது.கி.பி.1025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புகழ்பெற்ற சோமநாதர் ஆலய வாசலில் தனது படைகளுடன் வந்து நின்ற கஜினி முகம்மது,கடற்கரையை ஒட்டி மிகப்பாதுகாப்புடன் நின்ற கோட்டையைக் கண்டு திகைத்துப்போனான்.”இந்துக் கடவுளர்களின் சிலைகளை உடைத்தெறிந்த இஸ்லாமியர்களைத் தண்டித்து அழிப்பதற்காகத்தான் சோமநாதர் அவர்களை அங்கு வரவழைத்திருப்பதாக மூடத்தனமாக நம்பிய இந்துக்கள் கோட்டை மதிலின்மீது நின்று ஆனந்தக்கூத்தாடினார்கள்.சுல்தான் நடத்திய ஆவேசமான தாக்குதலை இந்துக்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.கூட்டங்கூட்டமாகச் சோமநாதரிடம் சென்று வெற்றிக்காக வழிபாடு செய்தார்கள்.அதன்பின் சோமநாதர் காப்பாற்றுவார் என்று துணிவுடன் வெளியே வந்தார்கள்.எதிரிப்படைக்கு இரையானார்கள்.சுல்தான் வெற்றி வீரராகக் கோவிலுக்குள் நுழைந்தார்.சிவலிங்கத்தை உடைத்தெறிந்தார்.20000 திர்கம் மதிப்புள்ள கோவில் சொத்து அவர் கைவசமாயிற்று.கோவில் தரைமட்டமாக்கப்பட்டது.சிவலிங்கத்தின் துண்டுகள் கஜினிக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஜாமியாப் பள்ளி வாசலின் வாயிற்படியில் பதிக்கப்பட்டது.இவை போன்ற படையெடுப்புகளை இந்தியர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை.உழைக்கும் வர்க்கத்தையும் முற்போக்காளர்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கியது,பிரிவினையின் ஊற்றுக்கண்ணான சாதிய முறையை மீண்டும் நிலைநிறுத்தியது,சங்கரரது மாயாவாதத்தை ஒரு தத்துவமாக ஏற்றுக்கொண்டது போன்றவற்றின் பின்விளைவே இஸ்லாமியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டதற்கான காரணங்கள். இந்தியர்களை வழிநடத்திய இத்தத்துவங்கள் இந்தியர்களை எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய மன்னர்களின் அடிமைகளாக்கி வைத்திருந்தது. தங்களது வர்க்க நலத்தைக் காத்துக் கொள்வதற்காக சுதந்திரமான சிந்தனை, அநீதியை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உணர்வு ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டே அழித்தார்கள்.எனவே இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை ‘எல்லாம் ஈஸ்வரன் செயல்’ என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர இந்துக்களுக்கு வேறு வழியில்லை. நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் இடிக்கப்பட்டன.பக்தர்கள் சித்திரவதைக்குட்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.பக்தர்கள் துயருறும்போது அவதாரமெடுத்துக் காப்பாற்றுவதாகக் கீதையில் வாக்குறுதி(IV-8)கொடுத்த பரமாத்மா பக்தர்களை இஸ்லாமியர்களிடமிருந்து காப்பாற்ற வரவில்லை. நாட்டின் மீது படையெடுத்து வந்த இஸ்லாமியப் படையெடுப்புகளைத் தடுக்கத் திராணியற்றவர்களாக அன்றைய இந்து ஆட்சியாளர்கள் இருந்தார்கள். அவர்களின் வாரிசுகள் இன்றைய சுதந்திர இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1969 மற்றும் 2002 கலவரங்களில் அப்பாவி இஸ்லாமியர்களின் மீது மதக்கலவரப்போர்வையில் படுகொலைகளை நடத்திக் காட்டினார்கள்.அப்படுகொலையில் ஈடுபட்டவர்களைக் கொண்டாடினார்கள்.அப்படுகொலைகளைத் தருமம் என்றார்கள்.கீதையின் முரண்பாடு,நிஜ வாழ்வில் எத்தகைய பேரழிவைக் கொணர்ந்திருக்கிறது பார்த்தீர்களா?
பகவத்கீதையில் கிருஷ்ணன் போதித்துள்ளவற்றைப் பின்வரும் நான்கு கூற்றுகளில் சுருக்கிவிடலாம்.
1.”நானே நான்குவகை(பிராமணர்,ஷத்திரியர்,வைசியர்,சூத்திரர்)வருண அமைப்பினை அவரவருடைய செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன்.எனவே நானே இந்த சதுர்வர்ணங்களை உருவாக்கியவனாவேன்” – கீதை 4:13
2.”ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும்,ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்யமுடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச்சிறந்தது.ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது.ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.’ – கீதை 3:35
3.”மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்யவேன்டும் என்று விரும்பும் அறிவாளியானவன்,தம் தொழிலில் பற்றுடைய அறிவீனர்களுக்குப் புத்திக்குழப்பத்தை உண்டாக்கக்கூடாது.அவனவன் தமது வருணத்திற்குரிய தொழிலைச் செய்து மற்றவர்களையும் அவ்வாறே செய்விக்கவேண்டும்.கற்றறிந்தவன் தன் தொழிலில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கலாம்.ஆனால் தம் தொழிலில் ஈடுபாடுடைய கல்லாதோரையும் மந்த புத்தியுள்ளவர்களையும் தம் தொழிலைவிட்டு வேறு தொழிலைச் செய்வதற்குரிய கெட்ட வழியில் செல்வதற்குக் கற்றறிந்தவன் விட்டுவிடக்கூடாது.” – கீதை 3:26,29
4.”அர்ஜுனா!கடமைகளும்,தொழில்களுமான இந்தத் தருமம்(நால்வருண இந்துமதம்)தளர்வுறும்போதெல்லாம்,இந்த இழிவுக்குக் காரணமானவர்களை அழித்துத் தருமத்தை நிலைநாட்டுவதற்காக நானே பிறப்பேன்” – கீதை 4:7,8
இதுதான் கீதையின் நிலை என்னும்போது கீதைக்கும்,மனுஸ்மிருதிக்கும் என்ன வேறுபாட்டை நாம் காணமுடியும்?கீதை மனுவின் சுருக்கமான ஒரு பகுதிதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த வாணியசெட்டியார் சாதிச்சங்கத்தினர் மோடி தங்கள் சாதிக்காரர் என்றும் அவரை வாழ்த்தியும் விளம்பரம் செய்தது நினைவுக்கு வருகிறது.கீதை தேசிய நூலாக அறிவிக்கப்படுமானால் முதலில் மோடி கீதையில் சொல்லியுள்ளபடி தனது ஷத்திரிய பதவியான பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது வருணத்திற்குரிய தொழிலான வணிகம் செய்யப் போவதுதான் கீதைக்கு மரியாதை செய்வதாக அமையும். கீதை தேசிய நூலாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தேசத்தில் நால்வகை வருண அமைப்பு முறை மிகக் கடுமையாக அமல்படுத்தப்படுமானால் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான சூத்திரர்களின்,பஞ்சமர்களின் நிலை என்ன?சமூக நீதி இயக்கங்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டின் நிலை என்ன?இந்துக்கள் அல்லாத சமயத்தவரின் நிலை என்ன?மீண்டும் ஒரு முறை அந்நியர்களுக்கு நாம் அடிமைப்படவேண்டுமா?மீண்டும் ஒருமுறை நமது தோல்கள் மரத்துப்போகவேண்டுமா?கொஞ்சம் நஞ்சமாவது உயிரோடு இருக்கும் பகுத்தறிவு சிந்தனைகள் மீண்டும் படுகுழிக்குள் புதைக்கப்படவேண்டுமா?
(உயிர்மை,ஜனவரி,2015)