வரலாற்றைச் சிதைக்கும் முயற்சி
சமீபத்தில் தமிழ்ப்புலவர் பொ.வேல்சாமி அவர்கள் தமிழறிஞர் கால்டுவெல்லின் 200 வது ஆண்டு விழாவில் பேசும்போது ஒரு தகவலைச் சொன்னார்.தஞ்சைப் பெரியகோவில் யாரால் கட்டப்பட்டது என்னும் விபரம் 1900 வரைக்கும்கூட யாருக்கும் தெரியாதாம்.யாரோ ஒரு சோழமன்னன் கட்டினான் என்னும் தகவலுக்கும் மேல் யாருக்கும் எதுவும் தெரியாது.மன்னர்களின் வரலாறும்,போர்களின் வரலாறும் அவர்கள்,அவைகள் விட்டுச்சென்றிருக்கும் அடையாளங்களின்மீது கனமான தூசிப்படலம் போல காலத்திற்கும் படர்ந்திருக்கும். கதைகள் வரலாறாக மாறுவதற்கு ஆதாரங்கள் வேண்டும்.வரலாற்று ஆதாரங்கள் என்னவென்று வரலாற்றுத்துறைதான் நிர்ணயிக்கமுடியும்.கல்வெட்டுகளும்,பழங்கால காசுகளும்,தொல்பொருள் படிவங்களும்,ஓலைச்சுவடிகளும் இன்னபிறவும்தான் அத்தகைய ஆதாரங்கள்.கோடியக்கரையில் இன்னமும் அழியாமல் எஞ்சி நிற்கும் கலங்கரைவிளக்கம் சோழர்களின் கடல்வாணிபத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.சோழர்களின் ஆட்சித்திறத்தையும்,வணிகத்தையும் வரலாறாக நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். இன்னமும்,இப்பொழுதுவரை ஊர்ப்புறங்களில் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் மூக்குடைந்த,கையுடைந்த புத்தர் சிலைகள் கடந்தகால வரலாறுகளைப் பேசுகின்றன.அம்மா பேசும் குடும்பக் கதைகள் ஒருவிதத்தில் அந்த ஊரின் வரலாறாகவும் மாறிவிடுகிறது.குடும்ப வரலாறு குடும்பத்திற்குள்ளே பகையை ஏற்படுத்தவும்,வெறுப்பை வளர்க்கவும் கூட சில சமயங்களில் துணை செய்துவிடுகிறது.அப்படித்தான் ஊர் வரலாறும்,நாட்டின் வரலாறும்.வரலாற்றைத் தோண்ட தோண்ட சிலபேரின் வண்டவாளங்களும் வெளியே வந்து விழுகின்றன.ஒரு இனத்திற்கு,சமுதாயத்திற்கு,நாட்டிற்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த வரலாறு.இருமுனை கத்தியான வரலாற்றை நமக்கு உபயோகமாக பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானதாகவும்,மனித நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கமுடியும்.பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் அறிவியல் பாடத்தையோ,ஆங்கிலப் பாடத்தையோ,தமிழ் பாடத்தையோ,புவியியல் பாடத்தையோ நீங்கள் மாற்றிவிடமுடியாது.ஆண்டாண்டு காலத்துக்கும் இப்பாடங்கள் மாறாதவை.எதிர்காலங்களில் நடக்கப்போகும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் தற்போதைய சில அறிவியல் உண்மைகள் மாற்றமடையலாம்,சில கணிதப்புதிர்களுக்கு விடையும் கண்டுபிடிக்கப்படலாம்.ஆனால் பள்ளிக்கூட வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் அப்படிப்பட்டதல்ல.
கஜினி முகம்மது இந்தியாவின் மீது பதினெட்டு முறை படையெடுத்ததற்கான முக்கியகாரணம் சோமநாதபுர ஆலயத்திலுள்ள செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதற்காக என்று நாம் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.எல்லா இந்து அரசர்களைப் போலவே அவனும் அக்காலங்களில் கோவிலில் குவிந்துகிடந்த சொத்துகளைக் கொள்ளையிட்டுச் செல்வதற்காகத்தான் படையெடுத்தானே தவிர அதற்கு மதச் சாயம் எதுவும் கிடையாது என வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் (சோமநாதபுரம்:கதையும்,வரலாறும்.ரொமிலா தாப்பர்,NCBH,சென்னை).அப்படியானால் இதுவரை இருந்துவரும் வரலாறு எழுது முறை கேள்விக்குள்ளாகிறது.உள்நோக்கத்தோடு திரித்து எழுதப்படும் சில வரலாற்று வரிகள் எதிர்கால சமுதாயத்தின் நிம்மதியைக் குலைத்துப் போட்டுவிடுகின்றன.இப்படித்தான் அயோத்தியின் பாபர் மசூதிக்குக் கீழே இந்துக் கோவில் இருக்கிறது என்னும் கதையும். கடந்தகாலக் கதைகள் பேசும்போது வரலாற்று உணர்வு கொஞ்சம் இருந்தால்கூட போதும் நாம் உண்மையைத் திரித்து எழுதமாட்டோம். இதுகாறும் இந்நாட்டில் நிலவி வந்திருக்கும் வரலாற்று வரிகளை மாற்றியும்,திரித்தும் எழுதவேண்டும் என்ற பேரவா இந்துத்வாவாதிகளுக்கு எப்போதும் உண்டு. எல்லா மசூதிகளுக்கும்,குருத்வாராக்களுக்கும்,சர்ச்சுகளுக்கும் கீழே ஒரு இந்து கோவில் இருக்கவேண்டும்,இருந்திருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.அதற்கான வரலாற்றுத் தரவுகளை உருவாக்க முனைந்து களமிறங்கினார்கள்.இந்தியாவின் பன்மைத்துவத்தை ஒற்றையாக்க விரும்பினார்கள்.சிந்துச்சமவெளியின் எருதை குதிரையாக்கினார்கள்.இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிடர்களை கொஞ்சம் கொஞ்சமாக விரட்டி அடித்துவிட்டு சமவெளிகளில் குடியேறிய ஆரியர்களின் இடப்பெயர்ச்சி வரலாற்றை திருத்த முனைந்தார்கள். எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கட்டிலிலோ அல்லது அதன் அருகிலோ இந்துத்வாவாதிகள் இருக்கும்போதெல்லாம் இந்திய வரலாற்றைத் திரிக்கும் வேலையையும் தொடங்கிவிடுகிறார்கள்.1977-ல் ஜனதா ஆட்சி செய்தபோது(ஜனசங்கம் இதில் அங்கம்) ஆர்.எஸ்.எஸ்ஸின் தூண்டுதலால் NCERT வரலாற்றுப் புத்தகங்களை மாற்ற முயற்சி செய்தார்கள்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் இப்புத்தகங்கள் இந்துச்சார்பை போதுமான அளவுக்குப் பெற்றிருக்கவில்லை என்பதுதான். சமீபகாலங்களில் பா.ஜ.கட்சி ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம்,டெல்லி மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோது பள்ளிகளில் வரலாற்றுப் பாடப்புத்தகங்களை மாற்றும் வேலைகளில் ஈடுபட்டார்கள்.பா.ஜ.கவின் வாஜ்பாய் காலத்தில் மனிதவளமேம்பாட்டு அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி ICHR எனப்படும் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் தலைவராக இந்துத்வவாதிகளுக்கு சார்பான ஒரு நபரை நியமித்தார். அப்பொழுது NCERT வரலாற்றுப்பாடப்புத்தகங்கள் மீது அவருடைய பார்வை பதிந்தது.அது மட்டுமல்லாமல் ICHR -ன் முக்கியத் திட்டமான “Towards Freedom” தடுத்து நிறுத்தப்பட்டது. கே.என்.பணிக்கரின் இத்திட்டம் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் உண்மையான பங்கை உலகுக்கு உணர்த்தியது. (இந்துத்வாவாதிகள் நாட்டின் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபாடு காட்டாததோடு ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்பது வரலாற்று உண்மை).
முந்தைய பா.ஜ.க அரசின் கல்வித்திட்டங்களை உண்மையான மதச்சார்பின்மைவாதிகளும்,கம்யூனிஸ்டுகளும் மட்டும் எதிர்க்கவில்லை.இந்திய சமூக அறிவியல் ஆய்வுக்கழகத்தின் அப்போதையத் தலைவரும்,பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினருமான பேராசிரியர் எம்.எல்.சோந்தி கூட தனது கட்சியின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார்.
தங்களின் எதிர்காலத் திட்டமிடலுக்கு அவர்கள் மிகச்சரியாக காய்களை நகர்த்தி வந்திருக்கின்றனர்.தற்போது மோடி பிரதமரான பிறகு,முழு பலத்துடன் ஆட்சியில் இருப்பதனால் இத்திசைகளில் அதன் வேகம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பதை நாம் எளிதில் ஊகித்துவிடமுடியும்.சமீபத்தில் ICHR – ன் புதிய தலைவராக சுதர்சன்ராவ் என்னுமொரு பேராசிரியர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.தேசம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் நமது பல்கலைக்கழகங்களில் மிகச்சிறந்த வரலாற்றறிஞர்கள் பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.சாதாரண தமிழகக் கல்லூரிகளின் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள்கூட தங்களது மாணவர்களுடன் கள ஆய்வுக்குச் சென்று புதிய புதிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகளையும்,ஆய்வுகளையும் நிகழ்த்திவருகின்றனர்.வரலாற்று ஆய்வாளர்களுக்கும்,பேராசிரியர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. அப்படி இருந்தும் வரலாற்றாய்வு என்று சொல்லிக்கொள்ளும்படி அல்லாத ஆய்வுகளை நடத்திவிட்டு அதனை மிகச்சிறந்த வரலாற்று ஆய்வேடுகளில் பிரசுரிக்காமல் தனது வலைத்தளங்களில் மட்டும் பிரசுரித்துக்கொண்டு தானும் ஒரு வரலாற்று ஆய்வாளன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒரு பேராசிரியர்தான் இந்தநாட்டின் ஆக மிகச்சிறந்த வரலாற்று ஆய்வு நிறுவனத்துக்கு தலைவராகப் போடப்பட்டிருக்கிறார் என்றால் அதனைத்தான் நாம் Hidden Agenda என்கிறோம்.ஆன்மிகம்,யோகா,இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆன்மிக உறவுகள் இப்படியாக அவர் ஈடுபடும் ஆய்வுத்திட்டங்கள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது வரலாறு அல்லாதவைகளைப் பற்றியும்,இந்த நாட்டின் காப்பியங்களான ராமாயணமும்,மகாபாரதமும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில்தான் நடந்தவை என்று தீர்மானகரமாகத் தெரிவிக்கும் திட்டங்களைப் பற்றியும் அவருக்கு மிகுந்த அக்கறை உண்டு. மோடி அரசாங்கம் தந்த புதிய பதவியை ஏற்ற பிறகு அவர் அளித்த செய்தி மிக முக்கியமானது.அவர் கூறுகிறார்: ” நான் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவன் அல்ல.ஆயினும் எனக்கு இந்த நாட்டின் மீதும் அதன் மிகநீண்ட கலாச்சாரத்தின்மீதும் மிகுந்த அன்பு உண்டு”.இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் நேசிப்பதற்கு ஒருவன் ஆர்.எஸ்.எஸ்-ல் தான் இருந்தாகவேண்டும் என்பதாகத்தான் அவரின் தொனியே இருக்கிறது.தனது புதிய பதவியின் இலக்குகளாக அவர் இரண்டை வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.முதலாவது மகாபாரதம் மற்றும் ராமாயணம் இவ்விரண்டுப் பிரதிகளின் வரலாற்றுத்தன்மையை(உண்மைத்தன்மையை) நிறுவ முயற்சி மேற்கொள்வது.இரண்டாவது இவ்விரண்டு பெரும் காப்பியங்களின் காலத்தையும் அது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இடங்களையும் நிச்சயித்து வரையறை செய்வது.அதாவது மகாபாரதமும்,ராமாயணமும் உண்மையிலேயே இம்மண்ணில் நிகழ்ந்தது.ராமனும்,கிருஷ்ணனும் இருந்தார்கள்.இப்படியாக இவ்விரண்டிலும் வரக்கூடிய எல்லாச் சம்பவங்களையும் உண்மை என்று ICHR வழியே சொல்லுவது.அதனை அப்படியே பாடப்புத்தகங்களில் கொண்டுவருவது.
உண்மையில் சுதர்சனராவுக்கு கனக்கச்சிதமானத் திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுவிட்டன.மீதப்பணிகள் மட்டுமே அவருக்குச் சொந்தம்.அதை அவர் மனப்பூர்வமாகச் செய்யவல்லவர் என்பதுதான் நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டிய ஓர் அம்சம். உண்மையில் பார்க்கப்போனால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படுபவை சம்பந்தமாக கடந்த இரு நூற்றாண்டுகளாக நீண்ட ஆய்வுகள் நடந்து வந்திருக்கின்றன.அதன் காலத்தையும் அதன் உண்மைத்தன்மையையும் நிர்ணயிக்கமுடியாமல் பல்துறை அறிஞர்களும் குழம்பியதுதான் மிச்சம். “புதிய வலுவான ஆதாரம் இல்லாமல் அதை மீண்டும் முன்மொழிவது நல்ல புலமையை வழிமொழிவதாக மட்டுமே இருக்கும்.ஆனால் அது பேராசிரியர் ராவிற்கு புகழ் சேர்க்காது.கி.மு.400 முதல் கி.பி.400 வரையிலான காலக்கட்டத்தில் மகாபாரதம் இயற்றப்பட்டிருக்கலாம்.அதற்கு துல்லியமான காலம் இல்லை என்று 1957ம் ஆண்டு புனேவில் உள்ள பண்டர்கர் கிழக்கத்திய ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த வி.எஸ்.சுக்தன்கர் வெளியிட்டுள்ள மகாபாரத திறனாய்வை ஏராளமான நிபுணர்கள் ஏற்கிறார்கள்” என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் கூறுகிறார்(இந்தியா டுடே,தமிழ்ப்பதிப்பு,23.07.14). ராவின் மற்றுமொரு கூற்றைக்குறித்து நாம் மெய்யாகவே கவனிக்கவும்,அக்கறைப்படவும்,கவலைப்படவும் வேண்டும்.அயோத்தியின் பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்பொருகாலம் ஒரு கோவில் இருந்ததற்கான தொல்லியல்துறை ஆதாரம் இருப்பதாக அவர் கூறுகிறார்.அயோத்தியின் அகழ்வாராய்ச்சி அறிக்கை இன்னும் பொதுப்படையாக பார்வைக்கு வைக்கப்படாத நிலையில் ராவின் இக்கூற்று இந்துத்வவாதிகளின் திட்டங்களை மேலும் ரகசியமாக்குகிறது என்றுதான் நம்மை எண்ண வைக்கிறது.
வேறொன்றுக்காகவும் ராவின் தலைவர் பதவி குறித்து நாம் கவலைப்படவேண்டும்.தான் ஆர்.எஸ்.எஸ்ஸில் தான் இல்லை என்று சொன்னாரே தவிர பாரதிய இதிகாஸ் சங்காலன் சமிதியில் தான் ஒரு அங்கம் என்பதை ராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார். 1960களின் இறுதி அல்லது 1970களின் ஆரம்பத்தில் மராத்தியின் அம்ரித் இதழில் பி.என்.ஓக் என்பவர் ஒரு கட்டுரை எழுதுகிறார்.அதில் அவர் தாஜ்மஹால் குறித்து குறிப்பிட்டு எழுதுகிறார்.Taj Mahal என்பதை அவர் Tejo Maha Aalay என்று குறிப்பிடுகிறார்.அதாவது இந்துக்கடவுளான சிவனின் வசிப்பிடம் அது என்கிறார்.அங்கு ஏற்கனவே இருந்த சிவனின் ஆலயத்தை அழித்துவிட்டு அதன் இடத்தில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது என்று பல்வேறு ஆதாரங்களை(?) அடுக்கும் அவர் தாஜ்மஹாலின் கீழே ஆழத்தோண்டிப்பார்த்தால் உண்மை விளங்கும் என்கிறார்.இன்றைக்கு அயோத்தியின்கீழே தோண்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரங்களின் மனதை அவர் அன்றைக்கே துல்லியமாகக் கணித்திருக்கிறார்.தொடர்ந்து ஓக் இது சம்பந்தமாக எழுதுகிறார்.தில்லியின் செங்கோட்டை உட்பட மத்தியகால இஸ்லாமியக் கட்டடங்கள்,மசூதிகள் அனைத்தும் இந்துசமயக்கோவில்களை இடித்து பின்னர் கட்டப்பட்டவை என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.இந்தியாவின் வேதகால மரபுகளையும்,வரலாறுகளையும் மார்க்சிஸ்ட் வரலாற்றறிஞர்கள் பாழ்படுத்திவிட்டார்கள் என்று ஓக் குற்றம் சாட்டுகிறார்.கிறித்துவமும்,இஸ்லாமும் கூட இந்து மதத்திலிருந்துதான் உருவாக்கப்பட்டவை என்றும் தாஜ்மஹால் மட்டுமல்ல வாட்டிகனும்,காபாவும்,வெஸ்ட்மின்ஸ்டர் அபேவும் கூட ஒரு காலத்தில் இந்துக்கோவில்களாக இருந்தவைதாம் என்றும் கூறுகிறார்.இவரது கூற்றுகளை மிக உன்னிப்பாக கவனிப்போர் வரலாற்றுத் துறைகளில் யாருமில்லை என்றாலும் இந்துத்வவாதிகள் இவரை கவனிக்கத் தொடங்கினர்.பாஜகவின் முதல் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் இவர் ஒரு மனு தாக்கல் செய்தார். தாஜ்மஹால் ஒரு இந்து அரசனால் கட்டப்பட்டது என்று வரலாற்றை மாற்றி எழுத உத்தரவிடவேண்டும் என்னும் கோரிக்கைதான் அது.உச்சநீதிமன்றம் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்பது வேறு விஷயம்.
இந்த ஓக் நிறுவிய அமைப்புதான் பாரதிய இதிகாஸ் சங்காலன் சமிதி.
நாடு முழுவதும் சமிதியின் 400 கிளைகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்தின் வரலாறும் ஓக் உருவாக்கிக் கொடுத்திருக்கிற பாரம்பரியத்திற்கேற்ப உருவாக்கப்படவேண்டும் என்பதுதான் சமிதிக்கு இடப்பட்டிருக்கிற கட்டளை.மத்தியகால கட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற எல்லா கட்டிடங்களும் இந்துமதத்தைச் சார்ந்த கட்டிடங்களே என்பதுதான் ஓக்கின் அடிப்படைப் புரிதல். தானும் சமிதியின் ஒரு பகுதி என்னும் ராவின் கூற்றை இந்தப்பின்னணியில்தான் பார்க்கவேண்டும்.
இந்திய சாதி அமைப்புமுறை:ஒரு மீள்பார்வை என்னும் தலைப்பில் சுதர்சனராவ் 2007ம் ஆண்டில் தனது வலைத்தளத்தில் ஒரு நீண்ட கட்டுரையைப் பிரசுரம் செய்துள்ளார். பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த சமுதாய அமைப்பாக சாதிய அமைப்பு இருந்தது என்றும் மத்தியகாலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பிற்குப் பிறகு அச்சாதி அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்குதலினால்தான் தற்காலத்திய மேலைநாட்டவர்களால் குறிக்கப்படும் சாதியத் தீமைகள் அவ்வமைப்பில் மலிந்ததாகவும்,நாகரிக வளர்ச்சியினாலும்,உலகமயத்தினாலும் அத்தீங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டுவிடும் என்றும் ராவ் எழுதுகிறார்.சாதி அமைப்பு முறை பண்டைய சமுதாய அமைப்பை வலுவாகவும்,திறமையாகவும் வைத்திருக்கும் ஒரு முறையாக அவர் கருதுகிறார்.சாதிக்கலப்பு திருமணங்கள் மகாபாரத காலத்தில் தடைசெய்யப்படவில்லை.அதனால்தான் கி.மு.4ம் நூற்றாண்டு காலத்திலேயே 300க்கும் மேற்பட்ட சாதிகள் இருந்ததாக ராவ் கூறுகிறார்.சாதி என்பதும் வர்ணம் என்பது வேறு வேறானது.ஆனால் இவ்விரண்டும் ஒன்றே என்றுதான் தற்காலத்தில் தவறாகக் கருதப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.பிறந்த சாதியை மாற்றிக்கொள்ள எவருக்கும் சாஸ்திரத்தில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கும் அவர் வர்ணங்களை மாற்றிக்கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது என்கிறார்.இந்துமதத்தில் பிறக்கும் அனைவரும் சூத்திரர்கள் என்னும் ஆரம்ப நிலையிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.அதன்பின் தங்களது செயல்களினால்,பெறும் ஞானத்தால் மட்டுமே அவனுடைய வர்ணங்கள் மாற்றமடைகின்றன என்று ராவ் விளக்குகிறார். வர்ணப்படிநிலையில் சூத்திரன் முதல் பிராமணன் வரை தாங்கள் செய்யும் தொழிலின் மூலம் தங்கள் வர்ணங்களை பிராமணன் வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ராவ் கூறுகிறார். பிறக்கும் எல்லோரும் சூத்திரர்கள் மட்டுமே.சூத்திர வர்ணத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களின்மூலம்,தொழிலின் மூலம்,பெறும் ஞானத்தின் மூலம் சத்திரியராகவோ,வைஷியராகவோ,பிராமணராகவோ மாறிக்கொள்ளமுடியும் என்று ராவ் கூறுகிறார்.இன்று தலித்தாகவோ பிற்பட்ட சாதியிலோ பிறக்கும் ஒருவன் ஞானத்தால்(கல்வியால்)பிராமண வர்ணத்தவராக மாறிவிடமுடியுமா?இன்று இது சாத்தியமா?சாதியை மாற்றிக்கொள்ளமுடியாது என்று தெளிவாகச் சொல்லிவிடும் ராவ்,வர்ணங்களை மாற்றிக்கொள்ளமுடியும் என்று பசப்புகிறார்.வர்ணங்களை மாற்றிக்கொள்ள தர்மசாஸ்திரங்கள் அனுமதி தருகின்றன என்று கதைவிடுகிறார்.தனது கூற்றுக்கு ஆதரவாக மகாபாரதத்தின் மாந்தர்களைத் துணைக்கு அழைக்கிறார். விசுவாமித்திரர் சத்ரியராகப் பிறந்து ஞானம் பெற்று பிரம்மரிஷியாகியிருக்கலாம்.அதன்பிறகு இன்னொரு விசுவாமித்திரரை(சத்ரியரிலிருந்து பிராமணனாகியிருப்பதை)நீங்கள் காண்பிக்கமுடியாது. “சத்திரிய வருணத்தைச்சேர்ந்த விசுவாமித்திரன் தன் தவத்தாலும் சமயசாரத்தாலும் பார்ப்பனன் ஆனான்.முனிவனுமானான்(பிரம்மரிஷி) என்று பழைய புராணக்கதையொன்று கூறுகிறது.ஆயினும் காலப்போக்கில் இவ்வாறு ஒருவன் தனது நிலையை உயர்த்துதல் மேன்மேலும் கடினமாகி,இறுதியில் இயலாத ஒன்றாகிவிட்டது” (வியத்தகு இந்தியா,A.L.பசாம்,அரசகரும மொழித்திணைக்கள வெளியீட்டுப்பிரிவுப் பிரசுரம்,கொழும்பு.பக்கம்-203).
ராவின் கூற்றுப்படியே பார்த்தாலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகிவிடலாம் போலத்தான் தெரியும்.ஆனால் சூத்திரர்கள் காளி கோவிலுக்கும்,வீரன் கோவிலுக்கும்தான் அர்ச்சகர் ஆகலாமே தவிர ஏழுமலையானுக்கு அர்ச்சகர் ஆகி சேவை செய்துவிடமுடியாது. பண்டைய சாதி அமைப்பு முறை தற்காலத்தில் சாதியவாதமாக சிதைந்து போய்விட்டது என்று கவலைப்படும் ராவ்,எல்லாத் தீமைகளுக்கும் இடைக்காலத்தில் ஐந்து நூற்றாண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டுகிறார்.
நான்கு வர்ணத்தவர்கள் பற்றிப் பேசுகிறாரே தவிர ஆரிய அமைப்புக்குள் சேராத ஆரியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஐந்தாம் வகுப்பினர்,பஞ்சமர் என்று அழைக்கப்படுகிறார்களே அந்த அடிநிலை மக்களின் நிலை பற்றி ராவ் மவுனம் சாதிக்கிறார்.அவரது ஆய்வு வரம்புக்குள் வர பஞ்சமருக்கு உரிமையில்லை போலும். அவர்களது நிலை இஸ்லாமியர்கள் வருகைக்கு முன்னர் எப்படி இருந்தது?இருக்கு வேத காலத்திலும்,பின் வேதகாலத்திலும் சூத்திரர்களே இழிந்தநிலையில் இருந்தபோது பஞ்சமர்களின் நிலை பற்றி நாம் எதுவும் சொல்லவேண்டுமா?நான்கு வர்ணத்தவர் மட்டும்தான் இந்தியமக்கள் என்று ராவ் கருதுகிறாரா?இது அவரது பார்வை அல்ல.ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் கருத்தும் அதுதான்.அப்பார்வையைத்தான் ராவ் சாதி பற்றிய கட்டுரையாக வடித்திருக்கிறார்.ஏ.எல்.பாஷ்யம் தனது வியத்தகு இந்தியா நூலில் இப்படி குறிப்பிடுகிறார்: “சூத்திர வர்ணத்தாருக்குக் கீழே தீண்டத்தகாதார்,புறச்சாதியார்,தாழ்ந்த சாதியார்,ஒதுக்கப்பட்ட சாதியார் என்றெல்லாம் பிற்காலத்தில் சொல்லப்பட்ட மக்களின் ஆதிப்பிரதிநிதிகள் இருந்தனர்.அருவருப்பான இழிந்த வேலைகளை ஆரியருக்குச் செய்தவரும்,ஆரியச் சமூக வேலிக்கு அப்பாற்பட்டவரெனக் கருதப்பட்டவருமான பல மக்கட் கூட்டத்தார் கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்தாரெனப் பௌத்த நூல்களும் பண்டைத் தரும சூத்திரங்களும் தெரிவிக்கின்றன.சில வேளைகளில் இவர் ஐந்தாம் வருணத்தார்(பஞ்சமர்) என்று சொல்லப்பட்டனர்;ஆயினும் இவர் ஆரியரின் சமூக ஒழுங்கமைப்புக்கு முற்றாகவே புறம்பானவரென்பதை வலியுறுத்துவார் போன்று அறநூலாசிரியருள் பெரும்பாலானோர் அப்பதத்தை ஒப்புக்கொள்ளாது தள்ளிவிட்டனர்” (வியத்தகு இந்தியா,A.L.பசாம்,அரசகரும மொழித்திணைக்கள வெளியீட்டுப்பிரிவுப் பிரசுரம்,கொழும்பு.பக்கம்-201).
வர்ணம் மாற்றிக்கொள்ளத்தக்கது என்றும் இன்றைய சாதிக்கொடுமைகளும்,தீண்டாமையும்,சாதியவாதமும் இஸ்லாமியர்களின் வருகைக்கு முன்னர் கிடையாது என்றும் தனது கட்டுரையில் கூறியிருக்கும் சுதர்சன்ராவ் ஒரு முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? சவர்க்கார்,கோல்வால்கர் போன்ற மதவாதச்சிற்பிகளின் அடிப்படை போதனைகள் என்ன தெரியுமா? நாட்டின் முழு வரலாற்றையும் இந்து மதச்சாயலோடு மாற்றி அமைத்தால் மட்டுமே எதிர்கால ‘இந்து இந்தியா’ சாத்தியமாகும் என்பதுதான்.ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் இந்துப்பரிவார அமைப்புகளும்,பா.ஜ.கட்சியும் இப்பணியை நிறைவேற்ற இனி முழுமையாகக் களமிறங்குவார்கள்.மதச்சார்பற்ற இந்தியா என்னும் அமைப்பைத் தகர்க்கும் இம்முயற்சிகளுக்கு நாட்டின் மிகச்சிறந்த வரலாற்றறிஞர்கள் என்றுமே தடையாக இருப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும்.நதியின் நீரோட்டத்தை எதிர்த்திசையில் திருப்பிவிடும் வீண்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் சுதர்சன்ராவ்.
(தீராநதி,செப்டம்பர்,2014)