அரசியல் பித்தர்களும்,மதக்கலவரங்களும்
ஊடகவியலாளர் சன்டிவி வீரபாண்டியன் சில நாட்களுக்குமுன்பு முஸாபர் நகர் வன்முறை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை பற்றி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நரேந்திரமோடியைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசியது அனைவருக்கும் தெரியும்.அதன் தொடர்ச்சியாக அவர் நடத்தும் நேர்காணல் நிகழ்ச்சியை சன்டிவி ரத்து செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.சமீபகாலங்களில் ஊடக அதிபர்கள் மோடிக்கு ஆதரவாகக் களம் கண்டுவருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். மோடி என்னும் பலூனை ஊதி ஊதிப் பெருக்கும் வே லையை ஊடகங்கள் இப்போது செய்து வருகின்றன.ஆனால் மோடிக்கு மிகப்பெரும் பக்கபலமாகவும்,அவரைத் தீவிரமாக ஆதரிப்பவராகவும் இருந்து கொண்டிருக்கிற துக்ளக் சோ தன்னுடைய “நமோ நமோ” பிரச்சாரத்திலிருந்து சற்று விலகி ‘ஜெய ஜெய” என்று கோஷமிட்டிருக்கிறார்.நமோ அல்லது ஜெய என்கிறார்.தேர்தல்கள் வந்துவிட்டால் இப்படியெல்லாம் கேலிக்கூத்துகள் நடப்பது சகஜம்தானே!!.ஆனால் மதவாதிகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் ஏன் போகக்கூடாது என்பதற்கான வாதங்கள் நாள்தோறும் பலப்பட்டுக்கொண்டே வருகின்றன.குஜராத் கலவரங்களுக்குப் பின்னரான மிக மோசமான கலவரமான சமீபத்திய முஸாபர் நகர் கலவரங்கள் நம்மைப் பலவிதங்களில் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
இந்துக்களுக்கும்,இஸ்லாமியர்களுக்குமிடையேயான திருமணங்கள் இந்நாட்டில் எப்போதும் மிகப்பெரும் களேபரங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு சமூகத்தில் சேர்ந்து,அருகருகே வாழ்ந்துகொண்டிருக்கும்போது,பொதுவில் நடக்கும் பண்பாட்டு நிகழ்வுகள் இரு சமூக மக்களையும் சமமாகப் பாதிக்கும்போது,இரு சமயமக்களும் ஒரேவிதமான கல்வியையும்,பொருளாதாரத்தையும்,அரசையும் சார்ந்திருக்கும்போது எப்படி அவர்களுக்கிடையே திருமணபந்தங்கள் ஏற்படாமல் போகும்? ஒரு சமூகத்திற்குள் இந்துக்களும்,இஸ்லாமியர்களும்,கிறிஸ்துவர்களும் வேலியிட்டுக்கொண்டுதான் பழகவேண்டுமா? சமீபத்திய முஸாபர்நகர் கலவரங்கள் ஜாட் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கேலி செய்தான் என்பதற்காக ஏற்பட்டவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.(காரணம் அதுவல்ல என்று மறுப்போரும் உள்ளனர்). பெண்களை ஒரு விலங்காக,ஒரு போகப்பொருளாக,ஒரு அடிமைப்பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள் முளைவிட்டுப் பலயுகங்களாகிவிட்டன.பெண் என்பவள் ஒரு போகப்பொருள் என எண்ணும் சிந்தனைதான் இன்றைய முதலாளித்துவ யுக ஆண்களின் மூளையை ஆக்கிரமித்திருக்கிறது.அவர் இந்து ஆணா,இஸ்லாமிய ஆணா,கிறிஸ்துவ ஆணா என்பதெல்லாம் விதாண்டவாதமாகத்தான் படும்.எவ்வளவு யோக்கியமானவனாக ஒரு ஆண் இருந்தாலும் பெண்கள் சம்பந்தமான சிந்தனைகளில் அவனது மூளை கொஞ்சம் அழுகித்தான் கிடக்கிறது. சென்னையில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம் இங்கு பெண்கள் முழுமையாக ஆடை அணிவதும்,அவர்கள் கோவிலுக்குச் செல்வதும்தான் என்று மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் பாபுலால் கௌர் கூறுகிறார். தமிழக மக்களின் பகுத்தறிவுச் சிந்தனையும்,பெண்களின் எழுத்தறிவும்தான் இதற்குக் காரணம் என அவரால் துணிந்து கூறமுடியாது.இங்கு காதல் திருமணங்கள் மிக அதிகம் என்னும் உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாது.பெண்கள் மீதான குற்றங்களுக்கு பெண்கள் காரணமல்ல என்னும் மிகப்பெரும் உண்மையையும் அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்கால யுகத்தில் பெண்ணுக்குச் சற்று ஆசுவாசமான விடுதலையை காதல்தான் தருகிறது.ஆணும் தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிற அக்காதலில்தான் பெண்ணின் விடுதலையும் இருக்கிறது.காவல்நிலையத்தில் திருமணம் செய்துகொண்டு ஒருவாரம் கழித்து அப்பெண்ணுடன் ஆண் என்னும் கர்வத்துடன் சண்டை பிடிக்கும் காதலை நான் சொல்லவில்லை. உயர்ந்த காதல் அனுபவம் பெற்றோர் செய்விக்கும் திருமண பந்தங்களிலும்கூட இருக்கும்.
இனக்குழு சமுதாயத்திற்குப் பின்னர் அடிமைப்பட்டுப்போன பெண் இன்னமும் தன்னுடைய விடுதலையைத் தேடிக்கொண்டே இருக்கிறாள்.காதல் திருமணங்களில் அவள் தன்னுடைய விடுதலை கிடைத்துவிடுமா என்று தேடுகிறாள். முஸாபர்நகர் கலவரங்கள் ஒரு பெண்ணைக் கேலி செய்ததினால் மட்டும் நிகழ்ந்துவிடவில்லை.சில மாதங்களுக்கு முன்னரே இரு ஜாட் சாதிப்பெண்கள் இருவேறு நிகழ்வுகளில் இரு இஸ்லாமிய இளைஞர்களைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.அவ்வன்மங்கள் ஜாட் ஆதிக்கசாதி ஆண்களிடம் வெடித்துக்கிளம்ப முஸாபர்நகர் மற்றும் சுற்றுவட்டங்கள் பற்றி எரிந்தன.சமீப காலங்களில் காப் பஞ்சாயத்துகள் இதுபோன்ற சாதிக் கட்டுப்பாட்டை மீறிய திருமணங்களைத் தடை செய்திருப்பதுடன்,அதில் ஈடுபடும் தங்கள் சாதிப் பெண்களைக் கொலை செய்யவும் தயங்குவதில்லை.அதற்கு கௌரவக்கொலைகள் என்று பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.அதாவது ஆணின் சொத்தான பெண்ணைக் கவர்ந்தால் கவர்ந்தவனுக்குத் தண்டனை.பெண் என்ன நினைக்கிறாள் என்று கௌரவக்காரர்களுக்குக் கவலையில்லை.கேலி கிண்டல்கள் நிச்சயமாக மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் கிடைத்திருக்கும்.அப்படி கிடைக்காமல் போனால் இருக்கவே இருக்கிறது கலவரங்களின்போதானக் கற்பழிப்புகள். மாற்று மதத்தைச் சேர்ந்தவள் என்னும் ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை வன்முறைச் சூழலில் வலுக்கட்டாயமாக உறவுகொள்வது,பாலியல் வன்முறை செய்வது சரியா?இதற்கான பதில் மதவெறிபிடித்த,சாதிவெறி பிடித்த,ஆணாதிக்கவெறி பிடித்த இந்த சமுதாயத்தின் மனசாட்சியிலிருந்து வெளிவரப்போவதில்லை.
13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய சூஃபி ஞானிகளான ஷேக் ஃபரிடுதின் கஞ்ச் ஷகர் மற்றும் பாகா அல் ஹக் ஜகிரியா இவர்களின் தாக்கத்தால் மேற்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜாட் சாதியைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள்.ஆனாலும் இவர்களுக்குள்ளும் சாதிய உபபிரிவுகள் உண்டு. இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்னர் தாங்கள் கடைபிடித்த பழக்கவழக்கங்களை 1980 வரையும்கூட தொடர்ந்து இவர்கள் கடைபிடித்திருக்கின்றனர். அயோத்திப் பிரச்னைகளுக்குப்பிறகுதான் இவர்கள் தங்களை முற்றாக இஸ்லாத்திற்குள் ஐக்கியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.பாபர் மசூதிப் பிரச்னையிலும்கூட இங்கு கலவரங்கள் வெடித்ததில்லை.ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் கேலி செய்தான் என்பதற்காக இவ்வளவு பெரிய கலவரங்கள் வெடிக்குமா?நிச்சயமாகக் கிடையாது.ஜாட் சாதிப் பெண்ணை கேலி செய்த இஸ்லாமிய இளைஞனை அப்பெண்ணின் சகோதரனும்,உறவினனும் கொலைசெய்கிறார்கள்.இவ்விரு இளைஞர்களையும் இஸ்லாமியக்கும்பல் கொலை செய்துவிடுகிறது.அரசு நினைத்திருந்தால் இப்பிரச்னையை அத்தோடு முடித்துவிட்டிருக்கலாம்.ஆனால் சமாஜ்வாதி அரசு வேறுவிதமாக நினைத்தது.இளைஞர்களின் கொலைகளுக்குப் பின்னர் , 20000 இஸ்லாமியர்களைத் திரட்டி வன்மஎண்ணங்களை இஸ்லாமியர்களின் மனதில் பதிக்கவேண்டும் என்னும் இஸ்லாமிய மதவெறியர்களின் ஆசைக்கு சமாஜ்வாதி அரசு தீனி போட்டது.அப்பெரும் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வித்தியாசம் பார்க்காமல் சுயநல அரசியல்வாதிகள்,மதத்தைக் கொண்டு ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகள் வன்முறைப்பேச்சுகளைக் கொட்டித்தீர்த்தனர்.அரசியல் என்னும் முகமூடியில் ஒளிந்துகொண்டு காங்கிரஸைச் சேர்ந்த சையதுஸ்மான்,சமாஜ்வாதியைச் சேர்ந்த ரஷீத் சித்திக்கி போன்றோர் கொடும் வன்மம் பரப்பினர். இதன் உடனடி விளைவு ஜாட் சாதியினர் 150000 பேர் திரண்டு நடத்திய பேரணி(செப்.7).அப்பேரணியின் முடிவில் நடைபெற்ற வன்முறைச் சொற்பொழிவில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஹுகும் சிங்,சங்கத் சிங் சோம்,சுரேஷ் ராணா,குன்வர்,முன்னாள் காங்.எம்.பி.ஹரேந்திரா மாலிக்,பாரதீய கிஸான் சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் திகாயத்,நரேஷ் திகாயத் இவர்கள் எல்லோரும் பங்குபெற்றனர்.தங்கள் பங்குக்கு வேண்டியதைச் செய்தனர்.ஜாட்டுகளின் இந்த மஹாபஞ்சாயத்திலிருந்து திரும்பி வருபவர்களைத் திட்டமிட்டு தாக்கத்தொடங்கினர் எதிர்த்தரப்பினர்.இப்படியாக உயிர்ப்பலிகள் தொடர்ச்சியாக விழத்தொடங்கின.இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கும் சரி,அதற்கு எதிர்வினையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜாட்டுகளின் மஹாபஞ்சாயத்துக்கும் சரி, அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்றுதான் தெரியவில்லை.
முஸாபர்நகர் கலவரங்களைக் கூர்ந்து கவனித்தால் அது ஒரு மதக்கலவரமல்ல,மாறாக வரும் மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்ட வாக்குப்பிரிப்பு முயற்சி என்பது தெரியவரும்.மேற்கு உ.பியில் இந்து மற்றும் இஸ்லாமிய ஜாட்டுகளுக்கிடையே செல்வாக்கு செலுத்தும் கட்சியாக அஜீத் சிங்கின் கட்சிதான் இருக்கிறது. நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.அவரது நம்பிக்கைக்குரிய தளபதியான அமித்ஷா உத்திரப்பிரதேச பா.ஜ.கவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.கவின் தலைவர் ராஜ்நாத்சிங்கும்கூட கலவரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு காப் பஞ்சாயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இந்துக்களின் ஓட்டுகள் எனக்கு,இஸ்லாமியர்களின் ஓட்டு உனக்கு என்பதாகக்கூட இரு பிரதான மதவாதக் கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏதேனும் செய்யப்பட்டிருந்தால்கூட ஆச்சரியமடைய வேண்டியதில்லை.
முஸாபர்நகர் கலவரங்கள் இந்து-முஸ்லீம் கலவரங்கள் என்று சொல்வதைவிட ஜாட்-முஸ்லீம் கலவரங்கள் என்று சொல்வதே பொருத்தமானது.ஜாட் சாதியினர் மிகுதியாக வசிக்கும் கிராமங்களில் இஸ்லாமியர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு அம்மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக ஓடிப்போன சமயத்தில், இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் கிராமங்களில் இருந்த இந்துக்களின்மீது எவ்விதத் தாகுதலும் நடைபெறவில்லை. அங்கிருந்த கோவில்கள் இஸ்லாமியர்களால் பாதுகாக்கப்பட்டன.இஸ்லாமிய அகதிகள் தங்கியிருந்த கூடாரங்களில் அடிப்படை வசதிகள்கூட அதிகாரிகளால் மறுக்கப்பட்ட சமயத்தில் கலவரத்தால் இடம்பெயர்ந்த அகதி இந்துக்கள்(இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்) வசிக்கும் இடங்களில் அவர்களுக்கு எல்லா வசதிகளும் அரசால்,இந்துமத இயக்கங்களால் செய்துதரப்பட்டன.உண்மை அறியும் குழு சென்ற தினங்களில் இனிப்புப் பண்டங்கள்கூட அவர்களுக்கு வழங்கப்பட்டன.
முஸாபர்நகர் கலவரங்களை மதக்கலவரங்கள் என்னும் பதத்தைப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து சாதிக்கலவரங்கள் என்றுகூட அழைக்கலாம்.ஜாட் சாதியினர் தங்களது கிராமங்களில் வசிக்கும் நிலமற்ற,கைவினைஞர்களான முஸ்லீம்களைத் தாக்கி அவர்களை அகதிகளாக்கினார்கள்.வர்க்கப்போராட்டமாகக்கூட அதைப்பார்க்கலாம்!.நிலமற்ற ஏழைக்கூலித் தொழிலாளர்களையும்,கைவினைஞர்களையும் அவர்கள் தாக்கி அகதிகளாக்கினார்கள்.வசதியான நிலமுள்ள இஸ்லாமிய ஜாட்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் அகதிகளாகவில்லை.அதுபோல இஸ்லாமியகிராமங்களில் ஏழை தலித்துகள் தாங்களும் தாக்கப்படுவோம் என்னும் பயம் காரணமாக அகதிகளானார்கள்.எப்பொழுதுமே இந்து-முஸ்லீம் கலவரங்களின்போது மட்டுமே தலித்துகள்,பழங்குடிகள் இந்துக்களாகக் கருதப்படுவார்கள் அல்லது மதிக்கப்படுவார்கள்.தங்களுக்கான படைபலமாக தலித்துகளை சாதி இந்துக்கள் கருதுவார்கள்.அதனால்தான் கலவரத்தின் காரணமாக அகதிகளான தலித்துகளுக்கு இந்து இயக்கங்கள் மிகவும் தாராளமாக உதவின.ஜாட் சாதிக்காரர்களின் வேலைக்காரர்கள் போல ஜாட் சாதி அல்லாதவர்கள் செயல்பட்டனர்.இஸ்லாமியர்களின் மீதான தாக்குதலின்போது இத்தகைய அதிகாரப்படிநிலை தெளிவாகக் காணப்பட்டது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இக்கருத்தை வலியுறுத்திக்கூறினர்.
இரண்டு பக்கமும் என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்கள் அக்குவேறு,ஆணிவேறாக பிய்த்தெறிந்துவிட்டன.அரசு எப்படி ஒருமதம் சார்ந்தவர்களின் சார்பாக நடந்துகொண்டது பற்றி Headlines Today என்னும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் துப்பறிந்து சொல்லியிருக்கிறது.மிகுதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிற இஸ்லாமியர்களின் அகதிவாழ்வு பற்றியும்,சொந்த ஊருக்குத் திரும்பமாட்டேன் என்று உறுதிப்பத்திரம் எழுதிக்கொடுத்து அரசின் நிவாரணம் 5 லட்சத்தை பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வாங்கிக்கொண்டு முஸாபர்நகரிலோ அல்லது ஊரைவிட்டு வெகுதூரத்திலோ,ஜாட்டுகளின்,அரசாங்கத்தின் கண்களுக்கு மீண்டும் படாதவாறு சென்றுகொண்டிருக்கும் அவலம் பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,தில்லிப் பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த பேராசிரியர்களின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் சொல்லியிருக்கிறது (Communalism and the Role of the State : An Investigation into the communal Violence in Muzaffarnagar and its Aftermath. A report,December,2013.Prof.Mohan Rao(JNU) and others).இது மதக்கலவரமாகத்தெரியவில்லை.தங்கள் அருகாமையில் வசிக்கும் நாதியற்ற நிலமற்றவர்களையும்,ஏழைக் கைவினைஞர்களையும் ‘இஸ்லாமுக்கு எதிராக’ என்னும் பெயரால் அடித்துத் துரத்துவதுதான் நடந்திருக்கிறது.நிலமற்ற சாதிகள்தான் அகதிகளாகியிருக்கிறார்கள்,மீண்டும் ஊர் வரக்கூடாது என்று அரசால் தூர,தூரத்திற்குத் துரத்தப்படுகிறார்கள்.பயத்தினால் அகதிகளாகியிருக்கும் இந்து அகதிகள்(தலித்துகள்) அவ்வூர் இஸ்லாமியர்களால் மீண்டும் ஊருக்குத் திரும்பவேண்டும் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.இது மதக்கலவரமா,சாதிக்கலவரமா,வர்க்கப்போரா,அரசியல் கட்சிகளின் பொழுதுபோக்கா?!இவை எல்லாமுமாக முஸாபர்நகர் மாவட்டமும்,ஷாம்லி மாவட்டமும் வெந்துபோய் கிடக்கிறது.
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட ராஜஸ்தானில் பிரதாப்கார் மாவட்டத்தில் கொடாடி என்னும் இடத்தில் முஸ்லீம்களின் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அவ்வூரில் இருந்த 80 இஸ்லாமியர்களின் வீடுகளில் 40 வீடுகள் கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டன. சமீபத்தில்தான் அங்கு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்திருந்தது.மக்களுக்கிடையே நடக்கும் சாதாரண வாக்குவாதங்களும்கூட மதசாயம் பூசப்பட்டு பலி தீர்க்கப்படுகிறது.இஸ்லாமியனோ,இந்துவோ ஒரு குற்றத்தை செய்யும்போது அது ஏன் ஒரு சட்ட-ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கப்படாமல் மதப்பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது?கலவரம் நடைபெறும் இடங்களில் இருக்கும் நடுநிலை மனிதர்கள் எங்கு செல்கிறார்கள்?அவர்களுக்கு என்ன நேர்கிறது?இந்து-முஸ்லீம்களுக்கிடையிலான பாரம்பரிய,கலாச்சார பிணைப்புகள் எங்கே சென்றன?
எந்த வல்லபாய்பட்டேல் இன்று மோடிக்கு கடவுளாக மாறியிருக்கிறாரோ,எவருக்கு உலகத்திலேயே மிகப்பெரிய சிலை வைப்பதற்காக நாடுமுழுவதிலுமிருந்து வீடு வீடாக இரும்பு சேகரிக்கப்படுகிறதோ,அந்த பட்டேலிடம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சத்தியப்பிரமாணம் செய்துகொடுத்திருக்கிறது.நாங்கள் இனிமேல் நாட்டின் அரசியலில் தலையிடமாட்டோம்.கலாச்சார,பண்பாட்டு இயக்கமாக மட்டுமே இருப்போம்.காந்தி படுகொலைகளுக்குப் பின்னரான எங்கள்மீதான தடையை ரத்து செய்யுங்கள் என ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் மன்றாடிக்கேட்டது.அதன்பின்னர் அதன்மீதான தடையும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தனது வாக்குறுதியை ஆர்.எஸ்.எஸ் நிறைவேற்றி வந்திருக்கிறதா?.
வகுப்புக் கலவரங்களின்போது இருமதங்களையும் சார்ந்த அப்பாவி மக்கள் பாதிக்கப்படும்போது , நாடுபிரிவினை பட்டபோது நடந்த துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. நாடு பிரிவினை அடைவதற்கு முன்னர் 1947 மே மாதங்களில் நடைபெற்ற வகுப்புக்கலவரங்களைக் கண்டு காந்தி மிகவும் வேதனையடைந்தார்.வங்காளம் மற்றும் பீகாரில் நடைபெற்ற வகுப்புக்கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டுபோனதையடுத்து காந்தி அவ்விடங்களுக்குச் சுற்றுப்பிரயாணம் செய்தார்.பீகார் மாநிலத்திற்குச் சென்றபோது அவர் கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்: “பயந்தோடிப்போன முஸ்லிம்களை இந்துக்கள் திருப்பி அழைக்கவேண்டும்.அவர்களுடைய வீடுகளைப் புதுப்பித்துக் கட்டிக்கொடுக்கவேண்டும்.அவர்களுடைய வியாபாரங்களை மீண்டும் அமைத்துத் தரவேண்டும்.குற்றங்கள் இழைத்த இந்துக்கள் தாங்களாகவே வெளிவந்து சரணடையவேண்டும்”. காந்தியடிகள் வேண்டியபடியே காரியங்கள் நடைபெற்றன.வகுப்புக் கலவரத்தில் ஈடுபட்டு இஸ்லாமியர்களுக்கு சேதம் விளைவித்த இந்துக்குற்றவாளிகள் போலீஸாரிடம் சரணடைந்தனர். இன்று ஜாட்டுகளுக்குப் பயந்து பல ஆயிரக்கணக்கான இஸ்லாமிய அகதிகள் இன்னமும் பனியிலும்,குளிரிலும் அகதிகளாக முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களது பிஞ்சுக் குழந்தைகள் பனியிலும்,குளிரிலும் செத்து விழுகின்றன.அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டுவிட்டன.வீடுகள் எரிக்கப்பட்டுவிட்டன.ஏழை இஸ்லாமியர்களது உற்பத்திக்கருவிகள் நாசமாக்கப்பட்டுவிட்டன.இந்து ஜாட்கள் அவ்வகதி முகாம்களுக்கு சென்று அவர்களை ஏன் தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லக்கூடாது? கொலை,தீவைப்பு,பாலியல் வன்முறை முதலியக்குற்றங்களைச் செய்துவிட்டு இன்னமும் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் குற்றவாளிகள் ஏன் தாங்களாகவே சரணடையக்கூடாது? நவீன காந்தியவாதியவாதியாக வலம்வரும்,காந்தியின் எண்ணங்களையெல்லாம் செயலுக்குக் கொண்டுவரும் நரேந்திரமோடி போன்றவர்கள் இஸ்லாமிய அகதிமக்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக ஏன் அங்கு ஓடோடிச் செல்லக்கூடாது?
சுதந்திரத்தையொட்டிய இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடைபெற்ற படுகொலைகள்,அதன்பிறகான நவீன இந்தியாவில் நடைபெற்றுவரும் வகுப்புவாத வன்முறைகள்,இந்திராகாந்திப் படுகொலைகளுக்குப்பிறகான சீக்கியர்களின்மீதான வன்முறைகள்,பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறைகள்,குஜராத் படுகொலைகள்,காஷ்மீர் படுகொலைகள்,சமீபத்திய முஸாபர்நகர் வன்முறைகள்.இவை அனைத்தையும் கடந்தகால எச்சங்கள் என்று எப்படி மறந்துபோகமுடியும்?.அவ்வன்முறையின் சிதிலங்கள் பாதிக்கப்பட்ட மனங்களின் நினைவுகளில் அழியாமல் இருக்கும்போது இந்திய அரசியல்வாதிகள் புதுப்புது வன்முறைகளை உருவாக்கிக்கொண்டே இருந்தால் அச்செயலின் வன்மத்தை இந்த சமுதாயம் தாங்குமா? 500 ரூபாய் வரி கட்டாமல் இருந்தால் சிறைத்தண்டனை, 500 கோடி ரூபாய் ஏமாற்றினால் தள்ளுபடி என்னும் உயரிய ‘அறத்தை’ பின்பற்றும் இந்த தேசத்தில் ஒரு கொலை செய்தால் மரணதண்டனை,நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரையும் சேர்த்து மாற்று மதத்தினர் நூற்றுக்கணக்கானோரை உலகத்தில் இருக்கும் அத்தனைக் கொடூரமுறைகளையும் பயன்படுத்தி ஒரு கும்பல் கொலை செய்தால் மன்னிப்பு என்பதுதானே நடைமுறையாக இருக்கமுடியும்!.
(உயிர்மை,பிப்ரவரி,2014)