மோடித்துவா என்னும் வலை
நரேந்திரமோடியும்,ஆர்.எஸ்.எஸ்ஸும்,பா.ஜ.கவும் கூட கற்பனை செய்யமுடியாத வெற்றியை மோடி பெற்றிருக்கிறார்.இது மோடியின் வெற்றியா,பா.ஜ.கவின் வெற்றியா,இந்துத்வாவின் வெற்றியா,இந்திய மக்களின் வெற்றியா என்னும் விவாதங்கள் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.ஆனால் ஒன்றை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும். இந்திய ஜனநாயகம் நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை தன்னை சுயபரிசோதனை செய்யும் காலக்கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.’ஆதிகாலம் முதல் தொட்டே இப்பரந்த நிலப்பரப்பில் வேரூன்றி வந்திருக்கும் கலாச்சார,பண்பாட்டுக் கூறுகள்தான் இந்துத்வா.மற்றபடி அதுவொரு மதத்தைக் குறிப்பது அல்ல.உச்சநீதிமன்றமே இந்துத்வாவை ஒரு வாழும் முறை என்றுதான் சொல்லியிருக்கிறது’ என்று இந்துத்வா குறித்தும் அதன் செயல்முறைகள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் முதற்கொண்டு நம்மூர் ஜெயமோகன்கள் வரை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இன்று இந்தியாவை நேரடியாக ஆளவும் செய்கிறார்கள்.இந்தியாவின் ஜனநாயகம் அதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.இதே இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனான அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் ஷரத்துகளை(Directive Principles )இப்போது நினைவுகூர முடியுமா முடியாதா என்பது தெரியாது.மத்திய அரசு உருவாக்கும் சட்டங்களுக்கும்,நடைமுறைகளுக்கும் அரசியல் அறமும்,மனிதாபிமானமும் அடிப்படையாக இருக்கவேண்டும் என்பதைத்தான் வழிகாட்டும் ஷரத்துகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அதன் மற்றொரு வழிகாட்டுதலான நாட்டு மக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம்(Uniform Civil Code)மட்டுமே தற்போது பா.ஜ.கவின் கண்களுக்குத் தெரிகிறது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மைத் தொகுதியான இஸ்லாமிய மக்களின் திருமணம்,விவாகரத்து போன்றவை இஸ்லாத்தின் ஷரியா சட்டங்களின் படியே தீர்மானிக்கப்படுகின்றன.தலாக் என்று மூன்று முறை சொல்லி மனைவியை விவாகரத்து செய்யலாம் என்றும் பலதார மணம் புரிந்துகொள்ள இடம் உண்டு என்றும் ஷரியா சொல்கிறது.உண்மைதான்.ஆனால் இஸ்லாமியர்களின் என்ணிக்கையோடு ஒப்பிடும்போது விவாகரத்துகளின் எண்ணிக்கையும்,பலதார மணங்களின் எண்ணிக்கையும் ஒதுக்கிவிடக்கூடிய ஒன்று.
1985ல் இஸ்லாமியப் பெண்ணான ஷாபானு விவகாரம் உச்சநீதிமன்றத்தை அடைந்து,உச்சநீதிமன்றம் ஷாபானுவுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கி, பிரச்னையானது மதரீதியான சாயம் பெற்று போலி மதச்சார்பின்மைவாதிகளான ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இல்லாதொழிக்கும் வகையில் சட்டமும் இயற்றியது.இவ்விவகாரங்களினால் பலனடைந்தவர்கள் இருவர்.ஒன்று பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்வா இயக்கங்கள்.மற்றொன்று இஸ்லாமியப் பழமைவாதிகள்.காங்கிரஸ் அரசு அன்றைய காலக்கட்டத்தில் நேர்மையாக நடந்துகொண்டிருக்குமானால் இஸ்லாமியப் பழமைவாதிகளையும்,இந்துத்வாவாதிகளையும் ஒரு சேர கட்டுக்குள் கொண்டுவந்திருக்கமுடியும்.ஏனென்றால் இஸ்லாமியப் பழமைவாதிகளின் நெருக்குதலுக்குப் பணிந்து சட்டம் இயற்றிய காங்கிரஸ் அரசு அதற்குப் பிரதியுபகாரமாகத்தான் அயோத்தியின் பாபர் மசூதியின் கதவுகளையும் இந்துத்வா சக்திகளுக்குத் திறந்து விட்டது. நடந்து முடிந்த தேர்தலின் மூலம் இந்நாட்டின் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக பல அறிஞர்கள் கூட கருதுகின்றனர்.தேர்தல் சமயத்தில் முல்லாக்களிடம் தாஜா செய்து இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கியபின்னர் இஸ்லாமியர்களை,அவர்களது ஒட்டுமொத்த வளர்ச்சியை புறக்கணித்து வந்திருக்கும் காங்கிரஸ்,சமாஜ்வாதி வகையறாக்கள் பின்பற்றும் அரசியல்தான் மதச்சார்பின்மை என்றால் அம்மதச்சார்பின்மை கண்டிப்பாகத் தோற்கடிக்கப்படவேண்டும்.அதைத் தான் நாம் போலி மதச்சார்பின்மை என்கிறோம்.நமது நிலத்தின் மதச்சார்பின்மை பல்வேறு மதங்களை,அவர்களது பண்பாடுகளை,கலாச்சாரத்தை இதுகாறும் பாதுகாத்துதான் வந்திருக்கிறது.முல்லாக்கள் கூட வெறுக்கும் கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்காளத்திலும்,கேரளாவிலும் ஆட்சி செய்தபோதுகூட பல்வேறு மதங்களின் திருவிழாக்கள் கோலோகலமாக நடந்ததை நாம் அறிவோம்.உலகின் வேறெந்த நாட்டிலும் மதக் கொண்டாட்டங்களுக்கு இவ்வளவு நாள் விடுமுறைகள் கிடையாது.மதங்களின் கொண்டாட்டத்தையும்,மதங்களின் வெறியையும்,மதங்களின் பெயரைக் கொண்டு அரசியல்-எதிர் அரசியல் செய்யும் வித்தைகளையும் புரிந்துகொள்வதில்தான் உண்மையான மதச்சார்பின்மை துலக்கம் பெறுகிறது. மதவாதிகளால் நாடு எப்படியெல்லாம் துன்பங்கள் அடைந்தனவோ அதுபோலவே போலி மதச்சார்பின்மைவாதிகளான காங்கிரஸாலும், முலாயம்,லாலு வகையறாக்களாலும் நாடு பட்ட துன்பங்கள் ஏராளம். மதவாதிகளாலும், போலியாக மதச்சார்பின்மை பேசுபவர்களாலும் நாடு பல்வேறு நெருக்கடிகளையும்,அழிவையும் சந்திக்கவேண்டி வருகிறது.ஜார்ஜ் புஷ் ஒருமுறை கூறினார்.நீங்கள் எங்கள் பக்கம் இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இன்றைய இந்திய அரசியலில் இரண்டு பிரதான பக்கங்களுக்கு இடையே நாம் நிற்கிறோம்.இந்துத்வா மற்றும் போலி மதச்சார்பின்மை. இவ்விரண்டையும் நிராகரிக்கவே நாம் விரும்புவோம்.
நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் இத்தேர்தலில் யார் பக்கம் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.கார்ப்பொரேட்டுகளின் ஊடகங்கள் அறங்களை விற்று ரொம்ப நாட்களாகிவிட்டது. உதிரிகளான இடதுகளும்,ஆம் ஆத்மிகளும் இவ்விரு போலி சக்திகளையும் வெற்றி கொள்ளும் திராணியற்றவையாக இருக்கும்போது மக்களுக்கு காங்கிரஸுக்கு மாற்றாக பா.ஜ.கவைத்தான் தேர்ந்தெடுக்கமுடியும்.வேண்டுமானால் மன்மோகனுக்கும்,ராகுலுக்கும்,சோனியாவுக்கும் மோடி சிறந்த மாற்றாக இருக்கலாம்.ஆனால் இந்திய ஜனநாயகமும் அதன் மக்களும் மோடியைத் தலைவராகப் பெறும் அளவுக்கு மோசமானவர்கள் அல்ல.வேண்டுமானால் துரதிர்ஷ்டமானவர்கள் என்று சொல்லலாம். பா.ஜ.க பெற்ற 282 தொகுதிகளில் கிட்டத்தட்ட 100 இடங்கள் உத்தரப்பிரதேசத்திலும்,பீகாரிலும் இருந்து பெறப்பட்டவை.இவ்விடங்கள் எப்படிப் பெறப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். அமித்ஷாவின் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற ஆத்திரமூட்டும் பேச்சும்,மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிடவேண்டும் என்ற கிரிராஜ்சிங்கின் பேச்சும்,பங்களாதேஷிலிருந்து வந்த இஸ்லாம் அகதிகள் திரும்பச் சென்றுவிடவேண்டும் என்ற மோடியின் பேச்சும்,முஸாபர்நகர் கலவரங்களும் உத்திரப்பிரதேசத்தின் தலித்,இஸ்லாமியர்களின் வாக்குகளைத் தவிர அனைத்து பிற்பட்ட,உயர்சாதி இந்துக்களின் வாக்குகளையும் பா.ஜ.க வசம் கொண்டு வந்து சேர்த்தது. சீட்டுகளை எப்படிப் பெறுவது என்பது பா.ஜ.கவுக்குத் தெரியும்.ராமரும்,இந்து-முஸ்லிம் கலப்புத் திருமணங்களும், சாதியும் இந்துத்வாக்காரர்களுக்கு ஜாக்பாட்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு செதுக்கப்பட்ட மோடியின் வெற்றியில் வெட்டி எறியப்பட்டது இந்தியாவின் உண்மையான மதச்சார்பின்மை.2012 குஜராத் வெற்றிக்கு எப்படி நவீன விளம்பர உத்திகளைப் பயன்படுத்தினாரோ அவ்வழியை மோடி பயன்படுத்திக்கொண்டார்.மோடியின் விளம்பரத்திற்காக மட்டும் ஒரு மதிப்பீட்டின்படி 5000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் ஷாகாக்கள் சொந்த செலவில்தான் நடத்தப்படவேண்டும் என்று தனது விதிகளில் ஷரத்துகளை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.கவுக்கு எப்படி இவ்வளவு தொகை வந்திருக்கும் என்று பார்க்கப்போவதில்லை.பா.ஜ.க.தொண்டர்களிடம் கேட்டால் காங்கிரஸின் ஊழலில் இது 0.04 சதவிகிதம்தான் என்று மிகவும் சர்வ சாதாரணமாக பதில் சொல்வார்கள்.காங்கிரஸை வீழ்த்த இது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்றும் சொல்வார்கள்.ஆனால் இத்தொகையில் இந்தியாவின் 125 கோடி மக்களுக்கு இரண்டு வேளை மதிய உணவு(ஒவ்வொன்றும் 20 ரூபாய் செலவில்) தரலாம்.(ஒரு மதிப்பீடுதான்.நான் இலவசமாக எதையும் தரச்சொல்லவில்லை).
சரி.எதிர்பாராதது நடந்துவிட்டது.நாம் இனி என்ன செய்யவேண்டும்?
இந்திய நாட்டு கலாச்சாரம் என்பது ஒற்றைக் கலாச்சாரம் மட்டுமே,அது மதத்தைக் குறிப்பதல்ல.இஸ்லாமியர்களும்,கிறித்துவர்களும் வேறு மதங்களைக் கடைபிடிப்பவராக இருக்கலாம்.ஆனால் அம்மதங்களைத் தழுவும்முன்னர் அவர்களது மூதாதையர்களும் இந்நிலத்தின் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களே என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை தத்துவம்.இப்படியான ஒற்றைக் கலாசாரத்தை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பைதான் நாம் பாசிசம் என்கிறோம்.
இந்துத்வாவுக்கான வரையறையை செய்வதிலும்கூட ஆர்.எஸ்.எஸ் மூடு மந்திரங்களைச் செய்கிறது.இந்துத்வா என்றால் இந்துயிஸம் என்று அர்த்தம் கொள்ளவேண்டியதில்லை.ஏனென்றால் அதில் இசம் அதாவது அப்படியான கோட்பாடு என்று எதுவும் இல்லை என்று கூறிவிட்டு பின் கூறுகிறது “இந்துத்வா என்ற வார்த்தைக்கு இந்துத்தன்மை என்று பொருள் கொள்ளலாம்” என்று திருப்பிப்போடுகிறது.தனிப்பட்ட அளவில் ஓர் இந்துப்பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறப்பதன்மூலம் ஒருவர் இந்துத்துவப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று சொல்கிறது.எப்படி மரபணுக்கள் மனித உடலின் குணங்களை உருவாக்குகிறதோ,அப்படியே பாரம்பரிய அம்சங்களும் நினைவுகளும் தொடர்ச்சியாக தலைமுறைகளைக் கடந்து கைமாறிவருகின்றன.இதுவே இந்தியர் ஒருவருக்குள் உள்ளார்ந்து இந்துத்துவம் இருக்கிறது என்று சொல்லவைக்கிறது என்றும் இந்துத்துவ உருவாக்கம் விளக்கப்படுகிறது.இந்துத்துவம் பற்றி சாவர்க்கர் இப்படிச் சொல்கிறார்: “இதுநாள் வரை எதையெல்லாம் இந்து இனம் செய்திருக்கிறதோ,நினைத்திருக்கிறதோ,வெளிப்படுத்தியிருக்கிறதோ,சேர்த்து வைத்திருக்கிறதோ அல்லது அளித்து வந்திருக்கிறதோ அவை எல்லாமே இந்துத்வா என்னும் குடையின் கீழ் வந்துவிடுகின்றன”.
மேற்கூறிய வரையறைகளிலிருந்து இந்துத்வா பற்றிய தெளிவான முடிவுகளுக்கு நம்மால் வரமுடியும்.இந்துத்வாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடையாது.பிற மதத்தவர்களின் கலாச்சாரமும்,பண்பாடும் இந்துத்வாவிற்கு ஒவ்வாதது.இந்நிலத்தின் தொடர்ச்சியான பாரம்பரியங்கள் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இந்துத்வா சொல்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக இந்துத்வா என்னும் குடையின் கீழ் என்னென்ன வந்து சேர்கின்றன என்பதையும் சவர்க்கர் வழி அறிகிறோம்.பல நூறு ஆண்டுகளாக இந்நிலத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையும் வர்ணபாகுபாடுகளும், சாதிக் கொடுமைகளும் இந்துத்வத்தில் வந்து ஐக்கியமாகி இருக்கின்றன என்பதை விட வேறு நாம் என்ன அறிந்துகொள்ள முடியும்?
நம்முடைய நிலத்தின் கலாச்சாரம் பன்மைத்துவம் கொண்டது. இந்து என்னும் பெயர் வருவதற்கு முன்னர் பல்வேறு மத,தத்துவங்கள்தான் இந்நிலத்தில் இருந்தன.உலகாயதம்,பௌத்தம்,சமணம்,சாங்கியம்,நியாயம்,வைசேடிகம்,மீமாம்சம்,சங்கர வேதாந்தம்,இராமானுஜ வேதாந்தம்,மத்வ வேதாந்தம்,சைவ வேதாந்தம் இப்படியாக பல்வேறு தரிசனங்கள் தான் இந்தியாவில் இருந்தன. பின்னர் இஸ்லாமும்,கிறித்துவமும் வந்தன.தொல்குடி சமயங்கள் இருந்தன.வெகு மக்களின் ஆன்மிகம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை ஊர் கூடி பொது இடத்தில் பொங்கலிட்டு,உயிரினங்களைப் பலி கொடுத்து கொண்டாடும் கொண்டாட்டமாக இருந்துவிட்டு பின் கலைந்து செல்லுவதாகவே இருந்தது. இந்நிலத்தின் தொல்சமயங்கள் நிறுவனப்படுத்தப்படவில்லை.தொல் பழங்குடிகளும்,இந்நில மக்களும் பசுவின் மாமிசத்தைக்கூட உண்டிருக்கிறார்கள். இவ்வுண்மையை தனது புத்தகம் வாயிலாக வெளிப்படுத்திய வரலாற்று ஆசிரியர் டி.என்.ஜா இந்துத்வாவாதிகளால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இந்நிலத்தின் பன்மைத்துவம் பற்றிப் பேசிவரும் வரலாற்றாசிரியர்கள் ரோமிலா தாப்பார்,கே.என்.பனிக்கர்,பிபன் சந்திரா ஆகியோர் இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மோடி குறித்த தனது ஆவேசக் கருத்துகளுக்காக தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார். பௌத்தமும்,ஜைனமும் இந்நிலத்தின் மதங்களைச் சுத்தப்படுத்தியிருக்கிறது.இந்நிலத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மதம் உண்டு என்று இந்திய தேசத்தின் ஆன்மிகத்தையும்,பன்மைத்துவத்தையும் உயர்த்திச் சொல்லும் பொருட்டு கூறப்படுவது உண்டு.அதுதான் உண்மையும் கூட.இந்நிலத்தின் ஆன்மிகம் எப்போதும் ஒற்றைத்தன்மை கொண்டது கிடையாது.முஸ்லிம் மன்னர்களுள் சிறந்தவர்களான அக்பரும், திப்பு சுல்தானும் இதை உணர்ந்திருந்தார்கள்.உணராமல் போன ஒளரங்கசீப் வெகு விரைவில் முகலாய சாம்ராஜ்யத்தையே அழித்துக் கொண்டான்.இந்தியாவின் பன்மைத்துவத்தை ஒவ்வொரு ஆட்சியாளரும் உணரவேண்டும்.முக்கியமாக இன்றைய ஆர்.எஸ்.எஸ் உணரவேண்டும்.
காந்தி படுகொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.அதன்பின்னர் அத்தடை நீக்கப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் கோல்வால்கர் வல்லபாய் படேலுடன் தொடர்ச்சியாக சந்திப்புகளை நடத்துகிறார்.படேலோ ஆர்.எஸ்.எஸ்ஸை காங்கிரஸுடன் இணைத்துவிடுங்கள்,தடையை நீக்குகிறேன் என்கிறார்.நேரு இம்முயற்சியை எதிர்க்கிறார்.தடையை நீக்க வேண்டுமானால் ஒரு சாசனத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று படேல் வலியுறுத்துகிறார்.அதன்படிதான் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு சாசனம் உருவாக்கப்படுகிறது. சாசனத்தின் ஆர்டிகிள் 4-இ கீழ்க்கண்டவாறு உள்ளது.” சங்கம் அரசியல் நோக்கங்களில் இருந்து விலகியே நிற்கும்.சமூக கலாசாரத் தளங்களிலான செயல்பாடுகளுக்கு மட்டுமே தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும்………பிற சமூகத்தினர் அல்லது பிரிவினர் அல்லது மதத்தினர் மீது வெறுப்பைத் தூண்டவோ, தூண்ட முயற்சி செய்யவோ கூடாது……அத்தகைய வழிமுறைகளுக்கும் சங்கத்தில் இடமே கிடையாது”.இந்த ஷரத்துகள் எப்போதாவது பின்பற்றப்படுகிறதா?குருஜி கோல்வால்கரின் காலத்திற்குப் பின்னர் தேவ்ரஸ் சர்சங்சாலக்காக வந்தபிறகு இந்த ஷரத்துகள் அடியோடு காற்றில் பறக்கவிடப்பட்டன.சங்கத்தின் 99 சதவிகித ஸ்வயம்சேவக்குகளும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே. அப்படியிருக்க அக்கட்சிக்கு கட்டளைகள் வேறு எங்கிருந்து செல்லும்?கோல்வால்கர் காலம் வரை அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த ஆர்.எஸ்.எஸ் தேவ்ரஸின் காலத்தில் வெளிப்படையாக அரசியலை ஆதரித்தது.அரசியல் பற்றி தேவ்ரஸ் கூறிய வார்த்தைகள் இங்கு நினைகூரத்தக்கது: “ஒரு வீட்டில் குளியலறை இருப்பதுபோலத்தான் அது.அங்கே வழுக்கி விழுவதற்கு சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதால் வீட்டில் அதைக் கட்டாமல் இருக்கிறோமா என்ன?”ஆனால் வீடே இப்போது குளியலறை ஆகிவிட்டது பற்றி இப்போது தேவ்ரஸ் இருந்தால் என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை.ஏனென்றால் மோடியின் அமைச்சரவையில் யார் யார் இருக்கவேண்டும் என்பது வரை இன்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புப் பிரிவு 370ஐ நீக்கினால் ஜம்முகாஷ்மீர் மாநிலமே இந்தியாவில் இருக்காது என்ற உமர் அப்துல்லாவின் பதிலுக்கு ஆர்.எஸ்.எஸ் பதில் சொல்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் மாறவேண்டும்.இந்நிலத்தின் பன்மைத்துவத்தை ஒப்புக்கொண்டு தன்னுடைய சாசனத்தைத் திருத்திக்கொள்ளவேண்டும்.அரசியல் அரங்கில் அது தன்னுடைய மூக்கை நுழைக்கக்கூடாது.இஸ்லாமிய மக்களும் கிறித்துவ மக்களும் இந்நிலத்து மக்களே,அவர்களது கலாச்சாரமும்,பண்பாடும் வெவ்வேறானவை.ஒன்றுபட்டுப் போகும் காரணிகளில் வேண்டுமானால் ஒன்றுபடலாம் என்று உணர்ந்து பக்குவப்படவேண்டும்.இன்றைய இந்து மதத்தின் மூலவேரான வைதீகமதத்தின் கொடுமையான சாதிப் பாகுபாடுகளினால்தான் வைதீக,சைவ,வைணவ மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கானவர்கள் வேற்று மதத்திற்குச் சென்றார்கள் என்னும் உண்மையை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும்.திருச்செந்தூர் முருகனை இஸ்லாமியப் படையெடுப்புகளிலிருந்தும்,வடுகர்களிடமிருந்தும் காப்பாற்ற எண்ணித்தான் ஐரோப்பியர்களிடம் கடற்கரைவாழ் பரதவர்கள் சரணடைந்து அதன் தண்டனையாக அல்லது பலனாக கிறித்துவத்தை தழுவினார்கள் என்பது கடந்தகால குமரியின் வரலாறு.இத்தகைய பரந்துபட்ட வரலாறுகளையும் ஆர்.எஸ்.எஸ் புரிந்துகொள்ளவேண்டும். இத்தகையப் புரிதலை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே மோடிக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதல்களை அது வழங்கமுடியும்.தன்னுடைய இந்துத்வா அடிப்படையை அது சுருட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.பலமுறை ஆர்.எஸ்.எஸ் அதைச் செய்திருக்கிறது.ஜனதா-பா.ஜ.சங்கம் கூட்டணி காலத்தில் இது நடந்தது.ஆர்.எஸ்.எஸ் தங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டுமென்று ஜனதா கட்சியிடமிருந்து நெருக்கடி வந்தபோது தேவ்ரஸ் கையெழுத்திட்டு ஒரு கடிதம் கொடுத்தார்.ஆர்.எஸ்.எஸுக்குக் கீழ்படிந்து நடக்கும் எல்லா எம்பிக்களும்,எம்.எல்.ஏக்களும் தினசரி ஷாகா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டியதில்லை என்று விடுவிக்கப்பட்டார்கள்.அப்படிப்பட்ட ஒரு சுயகட்டுப்பாட்டை ஆர்.எஸ்.எஸ் இப்போது கடைபிடிக்கவேண்டும்.பா.ஜ.கவின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். இப்பரந்த தேசத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகிறது. முழுபலத்தோடு இப்போது எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று அது கனவு காணுமானால் வரலாறு ஒருக்காலும் அதை மன்னிக்காது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டும்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு 370 சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸும்,பா.ஜ.கவும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன.பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை அதை உறுதியுடன் தெரிவிக்கிறது.முஸ்லிம்கள் சிறுபான்மைச் சமூகமே அல்ல என்று அபுல்கலாம் ஆசாத்தின் பேத்தியான நஜ்மா ஹெப்துல்லா கூறுகிறார்.இவையனைத்தும் நாட்டில் அமைதியின்மையைத்தான் தோற்றுவிக்கும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களின் கலாசாரத்தோடு தொடர்புடையது என்னும் பொதுப்புரிதலுக்கு நாம் உட்படவேண்டும்.இஸ்லாமியர்களோடு உரையாடலை நடத்தித்தான் இதனைச் சாதிக்கமுடியும்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மூலமாகத்தான் அம்மாநில அரசு இன்னமும் இந்திய யூனியனோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்னும் வரலாற்றுப் புரிதலை இந்துத்வா அமைப்புகள் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.காஷ்மீரின் வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.அவ்வரலாறு மிக ஆழமாக படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படவேண்டும்.
பா.ஜ.க.ஆட்சிக்கும்,காங்கிரஸின் ஆட்சிக்கும் உள்ள ஒரே வேறுபாடு இவர்கள் இருவரும் இந்துத்துவா கோட்பாடுகளை எப்படி கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்து மட்டுமே இருக்கிறது.ஊழல் செய்வதிலோ,பெரும் கார்ப்பொரேட்டு முதலாளிகளை ஆதரிப்பதிலோ,அமெரிக்க வல்லரசை ஆதரிப்பதிலோ,இவ்விருவரும் சளைத்தவர்கள் இல்லை.இங்கும் எடையூரப்பாக்கள் உண்டு,இங்கும் அதானிகள் உண்டு.ராஜபக்சவிடமிருந்து பரிசுப்பொருட்கள் வாங்கி வந்தவர்தான் இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர்.காங்கிரஸின் பரம்பரை ஆட்சியையும்,ஒரு கும்பலின் ஆட்சியையும் மாற்றிக்காட்டிவிட்டோம் என்று பா.ஜ.க. பெருமை பீற்றிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.காங்கிரஸின் அறமற்றக் கொள்கைகளையும் பா.ஜ.க. மாற்றவேண்டும். பொருளாதாரம்,வெளியுறவு என்று எல்லா துறைகளிலும் காங்கிரஸ் செய்த தவறுகளையும்,அநியாயங்களையும் அது வெளிப்படுத்தவேண்டும்.இலங்கையின் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் காவு வாங்கப்பட்டதில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்குள்ள பங்கு என்ன,இந்தியத் தரப்பில் அதில் யார் யார் குற்றவாளிகள் என்று வெளிப்படுத்தவேண்டும்.
குஜராத் மாதிரி வளர்ச்சி என்னும் பிம்பம் ஊடகங்களால் திட்டமிட்டு கட்டப்பட்டு மோடியின் வெற்றிக்கு வழிவகுக்கப்பட்டுவிட்டது.அதே நேரம் குஜராத்தின் வளர்ச்சி எம்மாதிரியான வளர்ச்சி,யாருக்கான வளர்ச்சி என்பதும் தேர்தல் சமயத்தில் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுவிட்டது.இனியும் ‘குஜராத் வளர்ச்சி மாதிரி’ என்னும் போர்வைக்குள் பா.ஜ.க ஒளிந்துகொண்டிருக்கமுடியாது.அது உண்மையிலேயே செயல்பட்டுக் காண்பிக்கவேண்டும்.காங்கிரஸின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடந்த 1991 முதல் கட்டுக்கடங்கா வேகத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் வாஜ்பாயின் ‘இந்தியா ஒளிர்ந்த’ காலமும் அடக்கம்.நரசிம்மராவ்,வாஜ்பாயி மற்றும் மன்மோகனின் கார்ப்பொரேட் பொற்காலங்களில்தான் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.இக்காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கையும் பல மடங்கானது.அதானி போன்ற சாதாரண கோடீஸ்வரர்கள் பெரும் பில்லியனர்களானதும் குஜராத் மாதிரி வளர்ச்சியினால்தான்.இந்த வரலாற்றுப் பின்னணியைக் கணக்கில் கொண்டுதான் மோடியின் ஆட்சி செயல்படவேண்டும்.இந்நிலத்தின் கலாச்சாரம்,பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் நாட்டின் பல்வேறு கல்வி,கலாச்சார,பண்பாட்டு நிறுவனங்களில் முந்தைய பா.ஜ.க ஆட்சி செய்த தலையீடுகளை நாம் மறுக்கமுடியாது.இன்றுள்ள பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள் அம்மாநிலங்களில் கல்வித்துறைகளில் செய்யும் இந்துத்வா குறுக்கீடுகளையும் நாம் ஒதுக்கிவிட்டமுடியாது.நாட்டின் பல்வேறு கலாசார,கல்வி,பண்பாட்டு நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் முன்னர் முரளிமனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்திப்பது இந்த பா.ஜ.க ஆட்சியிலும் தொடரத்தான் போகிறது.நாட்டின் அறிஞர்களும்,எழுத்தாளர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணங்கள்தான் வரக்கூடிய ஐந்து ஆண்டுகளும்.
(தீராநதி,ஜூலை,2014)