சுத்தத்தின் அரசியல்
காந்தி பிறந்ததினத்தன்று இந்தியாவை தூய்மை செய்யும் இயக்கத்தை தொடக்கி வைத்து பிரதமர் மோடி குப்பை வாரும் புகைப்படங்களை பத்திரிகைகளில் பார்த்தபோது பள்ளி நாட்களின் என்.எஸ்.எஸ் நினைவுகள் வந்து போயின. மாணவர்கள் மத்தியில் சேவை மனப்பான்மை உருவாகும் பொருட்டு இத்தகைய சேவை அமைப்புகள் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை அறிவோம். ஆனால் மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்னும் வேறொரு அமைப்பில் இளமைப்பருவத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறார்.அரைக்கால் காக்கி கால்சட்டையுடனும், ஒரு கம்பை எடுத்துக்கொண்டும் அவர் நிறைய பயிற்சிகளும் எடுத்திருக்கிறார். வருடம் 100 மணிநேரம் அல்லது வாரம் இரண்டு மணிநேரம் அரசு ஊழியர்கள் தூய்மை இயக்கத்திற்குப் பங்களிக்கவேண்டும் என்ற அவரது உத்தரவு ஏதோ ஒரு ஷாகாவில் பிறப்பிக்கப்படும் உத்தரவு போலத்தான் இருக்கிறது. நாட்டின் சுற்றுப்புற தூய்மைக்கு அவர் அளித்திருக்கும் என்.எஸ்.எஸ் மாதிரியான திட்டங்கள் எல்லாம் அவர் காட்டும் வித்தைகளாக முடிந்துபோகும். கிட்டத்தட்ட 62000 கோடி ரூபாய் அளவுக்கு செலவுபிடிக்கவல்ல இந்த தூய்மை இயக்கத்தை காந்தி ஜெயந்தியன்று தொடங்கி வைத்த மோடி மாணவர்களுக்கும்,அதிகாரிகளுக்கும்,தொழிலதிபர்களுக்கும்,அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நாட்டைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்திருக்கிறார். நாட்டின் தூய்மை என்பது அவர் நினைப்பது போல ஏதோ காகிதக் குப்பைகளைப் பொறுக்கிப்போடும் விஷயமல்ல. இந்தியாவின் மாநகராட்சிகளில் தினம்தோறும் உருவாகும் பல லட்சம் டன் திடக்கழிவுகளை நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதில் இருக்கிறது இந்தியாவின் தூய்மை.பல நூறு நதிகளையும், அதன் கிளையாறுகளையும் கழிவுநீர் கால்வாய்களாகக் கருதிக்கொண்டிருக்கும் சாயப்பட்டறைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை என்ன செய்யப்போகிறோம் என்பதில் இருக்கிறது இந்தியாவின் தூய்மை.இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு கதிர்வீச்சைத் தரப்போகும் இந்திய அணு உலைகளை என்ன செய்யப்போகிறோம் என்பதில் இருக்கிறது இந்தியாவின் தூய்மை.வெறும் நிலத்தை தூய்மை செய்வது மட்டுமல்ல,காற்று தூய்மைப்படவேண்டும்,நீர் தூய்மைப்படவேண்டும்,கடல் தூய்மைப்படவேண்டும்.இதுவெல்லாம் நடக்குமா? என்று சிரித்துக்கொண்டே நீங்கள் கேட்பது புரிகிறது.அப்படியானால் மோடி சொல்லும்போது மட்டும் எப்படி அம்பானி முதல் கமல்ஹாசன்,டெண்டுல்கர் வரை சிரித்துக் கொண்டே குப்பையைப் பெருக்கிப் போடமுடிகிறது?.
மோடியின் தூய்மை இந்தியா இயக்கம் இந்தியர்களுக்குப் புதிதாக இருக்கலாம்.ஆனால் குஜராத்திகளுக்கு அது புதிதல்ல.2007ல் நிர்மல் குஜராத் என்ற இதே போன்ற ஒரு திட்டத்தை பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் தொடங்கிய மோடி இன்று அஹமதாபாத்தின் சபர்மதி நதியின் அருகில் உள்ள கியாஸ்பூர் – பிரானா குப்பை மேட்டைப் பார்த்தால் அதிர்ந்து போவார்.மோடிக்கு இன்னொரு புள்ளி விபரத்தையும் சொல்லவேண்டும்.அது திட்டக்கமிஷனின் புள்ளிவிபரம்.மோடி திட்டக்கமிஷனை ஒழித்துக்கட்ட நினைத்தாலும் அது தரும் புள்ளிவிபரங்களை அவர் மறுக்கமுடியாது.இந்தியாவின் நகர்ப்புறப்பகுதிகளில் மட்டும் ஒரு நாளைக்கு 1,33,760 டன் திடக்கழிவுகள் உருவாக்கப்படுவதாகவும்,இதில் 25,884 டன்கள் மட்டுமே தரம்பிரிக்கப்பட்டு அதன் தன்மைக்கேற்றாற்போல அழிக்கப்படுவதாகவும் திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுகிறது.அப்படியானால் மீதமுள்ள குப்பைகளை போட்டுமூட ஒரு வருடத்திற்கு 1240 ஹெக்டேர் நிலம் வேண்டும் என்றும் 2030ம் ஆண்டு வாக்கில் 66000 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகவும் இது இந்தியா போன்ற ஒரு நாடு தாங்கிக்கொள்ளமுடியாத நிலவள இழப்பு ஆகும் என்றும் திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுகிறது. 32 சதவீத மக்கள் வசிக்கும் நகர்ப்புறத்தின் நிலை இதுவென்றால் மீதமுள்ள கிராமப்புற மக்கள் உருவாக்கும் திடக்கழிவுகள் நிலை பற்றி மோடியின் சிந்தனைக்கு விட்டுவிடுவோம். இன்னொரு புள்ளிவிபரமும் மோடிக்கு தெரியப்படுத்தியாக வேண்டும்.2009 முதல் இன்று வரை குஜராத்தின் அங்க்லேஸ்வர் மற்றும் வாபி தொழில்பேட்டைகள்தான் நாட்டிலேயே மிக மோசமாக சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் இடங்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அப்படியானால் இந்தியாவின் தூய்மை இயக்கம் உள்ளீடற்ற கூட்டோடுதான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை சிறு குழந்தைகூட அறியும்.நாட்டின் மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களான வேதாந்தாவையும் இன்னும் பல கார்ப்பொரேட் முதலாளிகளையும் தூய்மை இந்தியா இயக்கம் ஒன்றும் செய்துவிடாது. செய்துவிடவும் முடியாது.அக்கார்ப்பொரேட்டுகளின் டெல்லி அலுவலகங்கள் பசுமையாகவும்,தூய்மையாகவும் இருக்கும். அக்கார்ப்பொரேட்டுகள் சுரண்டிய இடங்களில் வாழ்ந்த நாட்டின் பூர்வகுடிகள் தங்கள் காட்டை இழந்து,மலைகளை இழந்து,தண்ணீரை இழந்து,உணவை இழந்து நகரத்தை சுத்தம் செய்ய ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனத்தில் சேர்ந்து இராப்பகலாக நகரத்தின் கழிவுகளைச் சேகரிப்பார்கள்.
மோடியின் தூய்மை இந்தியா இயக்கம் கி.பி.2019ல் காந்தியின் 150வது பிறந்ததினத்தன்று தூய்மையான இந்தியாவை காந்திக்கு அர்ப்பணிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இங்கு காந்தியின் அரசியலையும்,மோடியின் அரசியலையும் நாம் நினைவு கூர்ந்தே ஆகவேண்டும்.எப்போதெல்லாம் காந்தியின் நிலைப்பாடு தலித்துகளுக்கு எதிராகவோ அல்லது தலித்துகளின் நலன்களுக்கு முரணாகவோ இருக்கும்போதெல்லாம் அவர் தாழ்த்தப்பட்டவர்களை முன்னிறுத்தி சில அரசியல் காய்களை நகர்த்தியிருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்காக நான் போராடுகிறேன் என்ற காந்தி,தாழ்த்தப்பட்டவர்கள் எதனை விரும்பினார்களோ,அவர்களது தலைவரான அம்பேத்கரின் தலைமையேற்று எதற்காகப் போராடினார்களோ அந்த அரசியல் உரிமையை ஒப்புக்கொள்ள மறுத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்குரிமையை எதிர்த்து மிகப்பெரும் பிரச்சாரத்தை நடத்தி வந்தார் காந்தி.அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் தனக்கான பிம்பம் சரிந்துபோய்விடக்கூடாது என்று எண்ணிய காந்தி டெல்லியின் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வால்மீகிக் குடியிருப்பில் சில நாட்கள் தங்கப்போவதாக அறிவிக்கிறார்.அதுபோலவே தங்குகிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான உண்மையான அரசியல் உரிமையை மறுத்த காந்தி அவர்களின் குடியிருப்பில் தங்கியது,அங்கு சுத்தம் செய்தது எல்லாம் அவருக்கே உரித்தான அரசியல்.மோடி அதைவிட பல படிகள் மேலேறிச் சென்று ,சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி தங்கியிருந்த தலித் குடியிருப்பை சுத்தம் செய்ததன் மூலம் காந்தியின் பெயராலேயே ஆகச்சிறந்த அற்புதமான அரசியலைச் செய்திருக்கிறார். காந்தியும் சரி,மோடியும் சரி தூய்மைக் குறித்த பிரச்சாரத்திற்கு ஏன் தலித்துகளின் குடியிருப்பை நோக்கிச் செல்லவேண்டும்? வர்ணாசிரம தர்மத்தை அறியும் எவரும் காந்திக்கும்,மோடிக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு திகைக்கமாட்டார்கள். “ஒரு பூசாரி கடவுளின் சிலையை சுத்தம் செய்வது போலவே நீங்களும்(தோட்டிகள்) இந்த நகரம் என்னும் கோவிலை சுத்தம் செய்கிறீர்கள்” என்று ஒருமுறை மோடி குறிப்பிட்டார். தீண்டப்படாதோர் மாநாட்டில் காந்தி பேசும்போது இப்படி கூறுகிறார்: “இதே போன்று நீங்கள் இந்து சமுதாயத்தை மாசு துடைத்துத் துப்புரவு செய்து வருகிறீர்கள் என்பதை உணரவேண்டும்”.காந்திக்கு எதிர்வினையாக அம்பேத்கர் இப்படி கூறுகிறார் : ” திரு.காந்தி ஒருவரால்தான் இத்தகைய திருப்பணியை எத்தகைய கூச்ச நாச்சமுமின்றி,விளைவுகளைப்பற்றி அணுவளவும் கவலைப்படாமல் செய்யமுடியும்” (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி -16.பக்கம் 469,470,471).காந்திக்கான விமர்சனம்தான் மோடிக்கும்.தூய்மை இந்தியா இயக்கத்தைத் துவங்கும் நீங்கள் அதற்கு ஏன் தலித் குடியிருப்பைத் தேர்ந்தெடுக்கவேண்டும்?. தலித்துகள் வாழும் பகுதிதான் மிகவும் அழுக்காக இருக்கும் என்ற பொதுப்புத்தியா? அல்லது நீங்கள்தான் இதனைச் செய்து முடிக்கவேண்டும் என்ற சூசகக் குறிப்பா? அவரது தொகுதியும்,இந்துக்களின் புனிதத்தலமுமான வாரணாசியின் பல இடங்கள் மிக மோசமாக அசுத்தமடைந்திருக்கின்றன.மோடி தனது தூய்மை இந்தியா இயக்கத்தை அங்குதான் தொடங்கியிருக்கவேண்டும்.
சுத்தம் என்பதில் வேறு சில அரசியலும் உள்ளன.ஒரு இடத்தை சுத்தம் செய்து அங்கு உள்ள குப்பைகளையும்,அசுத்தங்களையும் சேகரித்து அதனை எங்குக் கொண்டுபோய் போடுகிறோம் என்பதில் நுண் அரசியல் ஒளிந்திருக்கிறது.ஒரு ஊரின் குப்பையை சுத்தம் செய்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் சுடுகாட்டுப்பக்கத்திலோ அல்லது தலித்துகள் குடியிருக்கும் சேரிக்கு அருகிலோ போடும் வழக்கம் அதிகாரிகளின் எழுதப்படாத சட்டமாகிவிட்டது.கடந்த 2000 வருட சாதி அழுக்கு சமுதாயத்தில் எந்த வர்ணத்திலும் சேராத ஆகக்கீழான மக்களாகக் கருதப்பட்டுவரும் தலித்துகளின் குடியிருப்புதான் அசுத்தமாக இருக்கும் என்பது உயர்சாதிமக்களின், அதிகாரவர்க்கத்தினரின் தலையில் படிந்துபோய்விட்ட ஒரு படிமம்.எந்த இடத்தை சுத்தம் செய்யப்போகிறோம் என்பதும் இக்குப்பையை எங்கு கொட்டப்போகிறோம் என்பதும் ஒரு அரசியல்.அது அதிகாரத்தின் அரசியல்.அந்த அரசியலில் யாரும் தலையிடமுடியாது. அதனால்தான் சென்னையின் முன்னாள் மேயர் ஸ்டாலின் ஒருமுறை சொன்னார் : “நம் ஒவ்வொரு வீட்டிற்கும் எப்படி ஒரு கழிப்பறை தேவைப்படுகிறதோ அதுபோலவே சென்னைக்கும் ஒரு கழிப்பறை தேவைப்படுகிறது.சென்னையின் இத்தேவையை நிறைவு செய்யும் கொடுங்கையூர் மக்கள் இதற்காகப் பெருமைப்படவேண்டும். கொடுங்கையூரின் குடியிருப்புக்காரர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதிலும்,கொடுங்கையூர் தொகுதி ஒரு ரிசர்வ் தொகுதி என்பதிலும் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?.
இப்போது சுத்தம் குறித்த சொல்லாடல்கள் மோடி முதல் உள்ளூர் நகராட்சித்தலைவர்கள்வரை அவர்களது நாவில் சரளமாக விளையாடுகிறது.அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை அசுத்தமாகவே தெரிகிறது.எந்த கலர் கண்ணாடி கொண்டு பார்க்கிறீர்களோ அந்த கலரில்தான் கண்ணாடிக்கு அப்புறமான பொருள்கள் உங்கள் கண்களை வந்தடையும்.அசுத்தம் என்ற கண்ணாடியின் வழியாக நீங்கள் உலகைப் பார்த்தால் உலகமும் அசுத்தமாகவே தெரியும்.நாளிதழ் ஒன்றின் புகைப்படம் மூலம் ஒரு அம்பானி நடத்திய கூத்தைக் கண்ணுற்றேன்.மும்பையின் சர்ச்கேட் புகைவண்டி நிலையம் முன்னர் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சில காகிதக்குப்பைகளை வாரிக்கொண்டிருக்கிறார்.அப்படியே அம்பானியை மும்பையின் தேவ்நார் குப்பை மேட்டிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள திடக் கழிவுகளை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்தியாவை தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கி வைத்து தான் குப்பை பெருக்கியதை ஒரு சாதனையாகக் கருதும் மோடி, இந்தியாவை சுத்தப்படுத்தமுடியுமா என்று கேட்டு வேறு சில பிரபலங்களுக்கு தனது டுவிட்டரில் சவால் விடுக்கிறார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு அம்பானிதான் இப்படியாக குப்பை பெருக்குகிறார்.இந்தியாவை சுத்தப்படுத்த உண்மையில் அம்பானிக்கு விருப்பம் இருக்குமானால் மும்பையின் குப்பைகளை தினம்தோறும் மறுசுழற்சி செய்யும் பல ஆயிரக்கணக்கான குப்பைப் பொறுக்கும் சிறுவர்களுக்கு,பெண்களுக்கு,மனிதர்களுக்கு கால்களில் மாட்டிக்கொள்ள காலணிகளோ,கையுறைகளோ,சீருடைகளோ,அவர்களது குடும்பத்திற்கு ஏதாவது உதவியோ செய்ய தன்னுடைய மலை போன்ற கஜானாவிலிருந்து சில கோடிகளைத் தரலாம். மும்பை மாநகராட்சியின் சுத்தப்படுத்தும் இயக்கத்துக்கு தனது தந்தை திருபாய் அம்பானியின் பெயரைச்சூட்டச் செய்து மாநகராட்சிக்கு சில கோடிகளை நன்கொடை தரலாம்.பணம் சுத்தத்தைத் தருமா என நீங்கள் வினவலாம்.இந்தியாவின் வறுமைக்கு முழுமுதல் காரணமே இங்கு வளங்கள் முறையாக பங்கிடப்படவில்லை என்பதுதான்.ஊர் ஏன் குப்பை மேடாகிறது?.குப்பையை முறையாக சுத்திகரிப்பு செய்ய இங்கு வசதிகள் இல்லை. பணமில்லை.அரசு,பணத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்குவதில்லை.அரசிடம் பணமில்லை.இந்த ஊரை நாசம் செய்து பணம் சம்பாதிக்கும் பணமுதலைகள்,முதலாளிகள்,தொழிலதிபர்கள் தூய்மை இந்தியா கோஷத்தில் தங்களை மறைத்துக் கொண்டு மிக வசதியாக குளிர் காய்கிறார்கள்.
சுத்தம் என்னும் கோஷம் மிகவும் அபாயகரமானது. அது சிலவற்றை மட்டும் பாகுபடுத்திக் காட்டுகிறது. அதனால்தான் சிங்கார சென்னை சமைக்க,கூவத்தை சுத்தம் செய்ய சென்னையின் பூர்விகக் குடிகளான முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குப்பத்து மக்கள் சென்னையை விட்டு வெகு தொலைவில் துரத்தப்பட்டார்கள். அதனால்தான் சுத்தம் என்பதும்,தூய்மை என்பதும் விளிம்புநிலை மக்களுக்கும்,ஏழை எளிய மக்களுக்கும்,தலித்துகளுக்கும் ஆகப்பெரும் ஆபத்தாக முடியக்கூடியது என நாம் சொல்கிறோம்.
சுத்தம் என்னும் கோஷம் வேறு வகையிலும் அபாயகரமானது.இப்போது குப்பையைப் பெருக்கிப் போடுவதில் ஆரம்பித்துள்ள இந்தியாவுக்கான தூய்மை இயக்கம் மயிலாப்பூரின் லஸ் சாலையில் பெரும் குப்பை மேட்டைப் போல பிய்த்தெறியப்பட்டுள்ள ஆழ்வார் புத்தகக்கடையையும் வழித்தெறிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.ஒரு அறிவுக்கோயிலை சாலையோர குப்பையாக்கிவிட்டுப் போன மாநகராட்சி நிர்வாகம் தூய்மை இந்தியா என்னும் கோஷத்தை கையில் எடுத்தால்! பயமாக இருக்கிறது.சுத்த இந்தியா சாலையோர கடைகளையும்,அவர்களது பிழைப்பையும் விட்டு வைக்குமா?குடித்துவிட்டு இரவு நேரங்களில் இந்திய சாலையோரங்களில் மயங்கிக்கிடக்கும் இந்தியக் ‘குடி’மகன்களையும் குப்பைகளாக நினைத்து பெருக்கித் தள்ளிவிடுவார்களோ? சுத்தப்படுத்தல் என்பது ஒரு குறியீடு.ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,அம்பானி இவர்களெல்லாம் நாட்டின் தெருக்களை கூட்டவேண்டும் என இந்தநாடு எதிர்பார்க்கவில்லை. இவர்கள் தெருவைப் பெருக்கித்தான் மக்களுக்கு தூய்மை உணர்வை வரவழைக்கமுடியும் என்ற அவசியமும் இல்லை.தங்கள் துறைகளின்மூலமாக இவர்கள் ஈட்டும் செல்வத்திற்கு உண்மையான வரியையும்,உபரி வருமானத்தையும் அரசுக்கு செலுத்தினால் போதுமானது.அத்தொகை மாநகராட்சிகளின் தூய்மைப்படுத்தும் இயக்கத்திற்கு மிகவும் பயன்படும்.
ஆனந்த் பட்வர்த்தனின் ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் பார்த்திருக்கிறீர்களா?மும்பையின் மிகப்பெரிய குப்பை மேடான தேவ்நார் குப்பை மேடு மும்பை ரமாபாய் காலனிக்கு அருகில் உள்ளது.அங்கு ஒப்பந்தக்கூலிகளாகப் பணிபுரியும் தலித்துகளின் வேதனையை அப்படம் காட்டும்.அந்த ஊழியர்களுக்கு செருப்பு கிடையாது,தொப்பி கிடையாது.மலக்குவியல்கள் குவிந்திருக்கும் மும்பையின் ‘ஹவுஸ் கல்லி”.அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முகமூடி கிடையாது.தங்கள் உடலில் விழும் அசுத்தங்களை கழுவிக்கொள்ள தண்ணீர் கிடையாது.பேருந்துகளில் அவர்களுக்கு இடம் கிடையாது.செருப்பு,முகமூடி,தொப்பி,மழை கோட் ஆகியன ஒப்பந்ததாரர்களால் ஊழியர்களுக்குத் தரப்படவேண்டும்.ஒப்பந்ததாரர் தவறும்பட்சத்தில் மும்பை மாநகராட்சி தரவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபிறகும் அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மும்பை மாநகராட்சி. மும்பை மாநகராட்சியின் அப்பட்டமான சாதிவெறியையும்,கழிவுகளை சுத்தப்படுத்துவதில் எல்லாவித துன்பங்களையும்,அவலங்களையும் சகித்துக் கொள்ளவேண்டும்,ஏனென்றால் அது உங்கள் கடமை என்று சொல்லாமல் சொன்ன அதன் அதிகாரச் செருக்கையும் மோடியின் தூய்மை இயக்கம் என்ன செய்துவிடமுடியும்? இந்த நாட்டில் இந்த சாதிக்காரன் தான் சுத்தம் செய்யவேண்டும் என்னும் பிம்பம் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.அதனை வலியுறுத்தியே காந்தி முதல் மோடி வரை பேசியும் எழுதியும் வந்துள்ளனர்.மோடி முதலில் செய்யவேண்டியது குப்பையை பெருக்குவது அல்ல,இந்த நாட்டை சுத்தமாக்கும் பொறுப்பில் ஏற்கனவே பல லட்சம் தொழிலாளர்களும் பல தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தொழிலாளர்களுக்கு சரியான பணிச்சூழலையும்,அத்தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் நாடு முழுவதும் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளை சுத்தப்படுத்துவதுதான். உள்ளாட்சி அமைப்புகள் இப்பணிகளில் உரிய கவனம் செலுத்தும்போது,இதற்குரிய பணத்தை அது பெறும்போது நம் தெருக்கள் சுத்தமாகும். சுற்றுச்சூழல் விதிகள் கார்ப்பொரேட்டுகளுக்கு தலைகுனியாமல் இருக்குமானால் இந்நாட்டின் வளங்கள் காப்பாற்றப்படுவதோடு நாடு மாசு படுவதும் குறையும். நாட்டை தூய்மைப்படுத்தும் செயல் யாரோ ஒரு சிலரால் மட்டுமே செய்யப்படவேண்டும்,அதுவும் சாதி ரீதியாக என்னும் பொதுப்புத்தியை அகற்ற மோடி அவரது தளத்தில் ஏதாவது முயற்சிகள் செய்தால் நாம் அவரைப் பாராட்டலாம்.
(உயிர்மை,நவம்பர்,2014)