உயிர்த்தெழுவாய் மீண்டும்!!!
எழுத்தாளர் பெருமாள்முருகன் செத்துவிட்டான் என்று தொடங்கும் பெருமாள்முருகனின் அறிக்கையை படித்தபோது,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அடுத்த நொடியே தன்னுடைய அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்துவேன் என்று ஒரு போராட்டத்தின்போது எழுத்தாளர் சு.தமிழ்செல்வி ஆவேசமாகப் பேசியது என் நினைவுக்கு வந்தது.ஒரு எழுத்தாளனுக்கு வரும் தார்மீகக் கோபம் அது.எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான் என்னும் பெருமாள்முருகனின் அறிக்கை வாசகத்தை நீங்கள் உற்றுநோக்கி பார்ப்பீர்களென்றால் தமிழ்நாட்டில் கருத்துரிமையும்,எழுத்துரிமையும் நடுச்சந்தியில் யாரும் பாரா அநாதையாய் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடப்பதை அறிவீர்கள்.சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனுக்கு, அதே நேரத்தில் எந்த அரசியல் கண்ணோட்டமும் இல்லாத ஒரு எழுத்தாளனுக்கு நேர்ந்திருக்கிற அவலத்தையும் உணர்வீர்கள்.தமிழகத்தில் ஒரு எழுத்தாளனுக்கு மத அடிப்படைவாதிகளிடமிருந்து, பிற்போக்குவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்களும்,எதிர்ப்புகளும் வருவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே எழுத்தாளர் ரசூல் இத்தகைய வேதனைகளை ஜமாத்திடமிருந்து அனுபவித்திருக்கிறார். பெரியாரிய, திராவிட இயக்கங்கள் தங்களுடைய வீச்சை இழந்துவிட்ட இச்சமயத்தில் மதமும்,சாதியும் தங்கள் ஆட்டத்தைக் கொண்டு செலுத்துவதில் உச்ச வேகம் காட்டுகின்றன.நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட மாதொருபாகன் நாவலைப் பற்றி இச்சமயத்தில் சர்ச்சை கிளப்புவதன் உள்நோக்கத்தை நாம் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும். இடதுகள் வீழ்ச்சியடைந்த பின்னர்,திராவிட இயக்கங்கள் சீரழிந்தபின்னர்,தமிழ்த்தேசிய இயக்கங்களும்,தலித் இயக்கங்களும் பெரியாரை இழிவு செய்தும்,தங்களையும் அறியாமல் பண்பாட்டைப் பேணுகிறேன் என்னும் போர்வையில் மதவாத,சாதிய சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்தும் வரும் இச்சூழலில் தமிழகத்தில் மதவாத, சாதிய,பிற்போக்கு சக்திகள் எழுச்சி பெற்று ஆட்டம் போட்டு வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்கமுடியும்? பெருமாள்முருகன் சர்ச்சை பல்வேறு சிக்கல்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. தமிழக அறிவுச் சூழலில் எழுத்தாளனுக்கும்,பதிப்பகத்துக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது?எழுத்தாளனுக்கு ஒரு துயரம் நேரிடும்போது அவ்வெழுத்துகளைப் பதிப்பித்த ஒரு பதிப்பகம் என்ன எதிர்வினையாற்றியிருக்கவேண்டும்?என்பதற்கான விடைகளும் கிடைத்திருக்கின்றன. பதிப்பாளர் சங்கம் ஏன் கண்மூடி மௌனித்திருக்கிறது? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவேண்டும்.இடது சார்ந்த,திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களும்,இயக்கங்களும்தான் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட எழுத்தாளனுக்கு ஆதரவாகப் போராடுவார்கள்.தங்களது கதைகளிலும்,கட்டுரைகளிலும்,நாவல்களிலும் வீராவேசம் பேசும் எழுத்தாளர்கள் தங்களை இறுக்கப் பொத்திக்கொள்வார்கள்.
பெருமாள்முருகனின் அறிக்கையைப் படிக்கும்போது கமல்ஹாஸனின் விஸ்வரூபம் பட விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கை நினைவுக்கு வருகிறது.தான் நாட்டைவிட்டே வெளியேறிவிடப்போவதாக அதில் அவர் கூறியிருப்பார். அவர் கண்ணீர் விட்ட காட்சிகளைக் கண்டு தமிழ்நாடு மட்டுமல்ல நாடே கொந்தளித்தது.கருத்து சுதந்திரத்தை தூக்கிப் பிடித்தது.மத சிறுபான்மையினருக்கு எதிராக நெருப்பை உமிழ்ந்தது.ஆனால் பெருமாள்முருகன் என்னும் எழுத்தாளன் செத்துவிட்டான் என்ற அவரது அறிக்கையைப் பார்த்து ஒரு சில எழுத்தாளர்கள் வேண்டுமானால் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் வேறு சில எழுத்தாளர்களுக்கு இச்செய்தி பெரும் உவப்பானதாக இருக்கிறது.”பெரியார் பிறந்த மண்ணில் இது நடக்கிறது என்றால் அதற்குக் காரணமே பெரியார்தான்.பெரியார்தான் இத்தகைய ஆதிக்க சாதிகளுக்கு ஆதிக்க வெறியை ஏற்படுத்திக் கொடுத்தார்” என்றெல்லாம் பிதற்றுகிறார்கள். பெருமாள்முருகனுக்கு எதிராகக் கொடிபிடித்துப் போராடிய மதவாத,சாதிய சக்திகளுக்கும் இனிப்பான செய்தியாக அது அமைந்திருக்கும்.தங்களது பலியின் ரத்தத்தை அவர்கள் சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண் – பெண் விஷயங்களும்,மத விஷயங்களும் இன்னமும் தொடர்ந்து நம்மிடையே சர்ச்சையை உருவாக்கிவருகின்றன.ஆதிமனிதனின் உணர்வுகளை இன்னமும் இந்த சமுதாயம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் தனது திருச்செங்கோடு சம்பந்தமான கள ஆய்வில் பெருமாள்முருகன் கண்டடைந்த முடிவுகள்.ராகுல்ஜியின் “வால்கா முதல் கங்கை வரை” நூலும்,எங்கெல்ஸின் “குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலும் மனிதனின் ஆதி உணர்வுகள் தொடங்கி,ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவுகள் எப்படியெல்லாம் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்றெல்லாம் விரிவாக விவாதித்திருக்கும். பெண்ணை மையமாகக் கொண்டு இயங்கிய தாய்வழி இனக்குழு சமுதாயத்தில் அப்பெண் தான் பெற்ற ஆண் மக்களோடுகூட உறவு வைத்துக் கொள்வது பற்றி அந்நூல்களில் படிக்கும்போது நமக்கு அச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடும். ஒரு இனக்குழுவில் வசிக்கும் ஒரு பெண் அக்குழுவின் எந்த ஒரு ஆணுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்னும் செய்தியும் அந்நூலில் இருக்கும்.ஆதி மனிதன் இப்படித்தான் இருந்தான்.அந்த உணர்வுகள் இன்றைய மனிதனிடத்திலும் கட்டாயம் இருக்கும். திருச்செங்கோடு வட்டாரத்தில் தான் அதனைக் கண்டடைந்திருப்பதாக பெருமாள்முருகன் நாவலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். திருச்செங்கோட்டில் மட்டுமல்ல உலகின் எல்லா பகுதியிலும் வாழும் எல்லா மனிதர்களிடத்திலும் மனிதனின் ஆதி உணர்வுகள் அவனது மனத்தின் எங்கோ ஒரு மூலையில் குடி கொண்டு வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.
மகாபாரதம் கதை நமக்குத் தெரியும்.இன்றுவரை அக்கதையை தொடர்ச்சியாக பல்வேறு நாவலாசிரியர்கள் தங்கள் தங்கள் போக்குக்கு புனைவுகளை சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பாஞ்சாலி ஐந்து ஆண்களுக்கு மனைவி என்று மகாபாரதம் சொல்வதால் அதை நாம் எரித்துவிட்டோமா என்ன? ஆதி இனக்குழு சமுதாயம் பெண்ணை மையப்படுத்தி இருந்ததால் பெண் தலைவியாக இருந்தமையால் அவள் ஏராளமான ஆண்களுடன் உறவு வைத்திருந்தாள் என்னும் ஆதி உணர்வைத்தான் மகாபாரதமும் வெளிப்படுத்துகிறது.பெருமாள்முருகனும் அந்த ஆதி உணர்வை மையப்படுத்தித்தான் அந்நாவலை எழுதியிருக்கிறார்.
பெண் என்பவள் இன்று அதிகாரத்தில் இல்லை.அவள் ஒரு போகப்பொருள்.மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து சமூகத்திலும் இதுதான் இன்றைய நிலை.அந்த போகப்பொருளுக்கு, அந்த சொத்துக்கு ஒரு பாதிப்பு ஏற்படும்போது ஆண் பொங்கி எழுகிறான்.அவனுக்கு ஆதரவாக மதமும் சாதியும் சேர்ந்து கொள்கிறது.மனிதனுக்கு குறிப்பாக பெண்ணுக்கு ஆதி உணர்வு என்ற ஒன்று இல்லை என்று நிறுவ அவர்கள் முயற்சிக்கிறார்கள்.பெண் இப்படியெல்லம் இருந்தாள் என்று அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.ஆதி உணர்வை வெளிப்படுத்த ஒரு பெண் முயன்றால் அவள் தீண்டத்தகாதவள் ஆகிறாள்.சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுகிறாள்.திமிர் பிடித்தவள் என்னும் பட்டம் அவளுக்குக் கொடுக்கப்படுகிறது. சமகாலத்திய எழுத்தாளன் இவ்வுணர்வைப் பற்றிப் பேசும்போது அவனது நூல் எரிக்கப்படுகிறது.அவனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.மனிதனின் ஆதி உணர்வு மதநூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.நாத்திக நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.மதவாதிகள் அத்தகைய மதநூல்களை எதுவும் செய்வதில்லை.மதம் சாராத,சாதி சாராத ஒரு எழுத்தாளன் எழுதும் இவ்வெழுத்துகளை அவர்கள் தீயிட்டுப் பொசுக்குகிறார்கள்.
கமல்ஹாஸனுக்குப் பொங்கிய கருத்துரிமை உணர்வு ஏன் பெருமாள்முருகன் விஷயத்தில் எழவில்லை.முதலாவதாக பெருமாள்முருகன் ஒரு நடிகனில்லை.நடிகர் சங்கம் இருப்பதுபோல எழுத்தாளர்களுக்கென்று வலுவான ஒரு கூட்டமைப்பு இல்லை.ஏனென்றால் எழுத்தாளர்களின் சிந்தனைகளும்,அவர்களின் இஸங்களும் அவர்களது ஒற்றுமையை குறுக்குவெட்டாகவும்,நெடுக்குவெட்டாகவும் பிரிக்கின்றன.ஒரு முழுநேர எழுத்தாளன் தனது வயிற்றுப் பிழைப்புக்காகவும்,தனது பழைய புகழை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தினம்தோறும் எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமென்று முடிவு செய்துகொள்கிறான்.அதனால் அவனது அறங்களும்,தார்மீகக் கோபங்களும் எழுத்தில் மட்டுமே நின்றுபோய் விடுகின்றன.தனது சக எழுத்தாளனுக்கு ஏற்படும் இன்னல்களைக் களையவும்,அதனைத் தட்டிக்கேட்கவும்,வீதியில் இறங்கிப் போராடவும் அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை.
பெருமாள்முருகன் சர்ச்சை ஒரு குறியீடு.அவரது எல்லா நாவல்களையும் தடை செய்யவெண்டும் என்ற சாதிய,மதவாத சக்திகளின் கோரிக்கை தமிழகத்தின் எழுத்துரிமைக்கும்,கருத்துரிமைக்கும் விடப்பட்டிருக்கிற சவால்.நாவல் என்னும் புனைவுலகில் எழுத்தாளன் கற்பனை கொண்டு மிதப்பான்.அதில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தையும் குறியீடுகளாக மட்டுமே காணவேண்டும்.உலகின் ஒவ்வொரு நாவலிலும் ஏதோ சில வரிகள் பிற்போக்குவாதிகளால்,மதவாதிகளால் அடையாளம் காட்டப்பட்டுகொண்டே இருக்கும். இலக்கியவாதிகளும்,எழுத்தாளர்களும்தான் பிற்போக்குவாதிகளையும்,மதவாதிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும்.
(தீராநதி, பிப்ரவரி,2015)