இந்திய சுயராஜ்ஜியம் கண்ட காந்தி
காந்தியடிகள் தனது கோட்பாடுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்றபோது உருவான படைப்பே ஹிந்த் ஸ்வராஜ் எனப்படும் இந்திய சுயராஜ்ஜியம் என்னும் சிறுநூல். 1909 நவம்பரில், லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பும் பயணத்தின்போது கப்பலில் காந்தியடிகள் இச்சிறுநூலை பத்தே நாட்களில் எழுதினார். வாசகர் கேள்வி கேட்பது போலவும், காந்தி பதில் சொல்வது போலவும் வடிவமைக்கப்பட்ட இந்நூல் குஜராத்தியில் எழுதப்பட்டது. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகளால் வெளியிடப்பட்ட இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் இது தொடர்ச்சியாக வெளிவந்தது. அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக பலப்பிரயோகம் செய்யலாம் என்ற கருத்துரு இந்தியாவில் தீவிர தேசியவாதிகளிடம் வெகுவாகப் பரவியிருந்த காலக்கட்டம் அது. முக்கியமாக அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இச்சிறுநூல் எழுதப்பட்டது. லண்டனில் தீவிரவாத தேசியவாதிகளையும், மிதவாதிகளையும் சந்தித்துப் பேசியபிறகு இந்நூல் எழுதப்பட்டது என காந்தி குறிப்பிடுகிறார். பம்பாய் அரசாங்கத்தால் இந்நூலின் விநியோகம் தடுக்கப்பட்டது. எனவே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் காந்தி. அக்காலத்தில் மேலை நாட்டின் அறிஞர்களால் இச்சிறுநூல் வெகுவாக வாசிக்கப்பட்டு விமர்சிக்கவும்பட்டது. எதிர்காலத்தில் இந்தியாவில் காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது இந்நூல் உலகின் பெரும்பாலான அறிஞர்களை சென்றடைந்தது.
சுயராஜ்ஜியம் அடைவதற்கு இந்தியர்கள் இன்னும் தகுதி பெறவில்லை என இந்நூலில் காந்தி குறிப்பிடுவார். இந்நூலின் மறுபதிப்பு நடந்தபோது, 1921 ஆம் ஆண்டில் அவர் எழுதிய முன்னுரையிலும்கூட இதே கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தி இருப்பார். இந்தியாவிற்கான சுயராஜ்ஜியம் என்பதை வெறும் அரசியல் உரிமையாக மட்டும் காந்தி பார்க்கவில்லை. இந்தியர்கள் ஒவ்வொருவரும் அதை அடைய தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் சுயராஜ்யம் பெறும்போது ஒட்டுமொத்த நாடும் சுயராஜ்யம் பெறும். சத்தியமும், நேர்மையும் ஒவ்வொரு இந்தியனும் பெறவேண்டியவை. ஆங்கிலேயர்களை இந்தியாவில் நாம்தான் இருத்தி வைத்திருக்கிறோம். நாம் விரும்பாமல் அவர்களால் ஒருபொழுதுகூட இங்கே தங்கிவிடமுடியாது என காந்தி கூறுகிறார். நம்முடைய பேராசையினால், அற்ப காரியங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டதினால் மட்டுமே ஆங்கிலேயர்களை நம்முடன் வைத்திருக்கவும், நம்மீது ஆதிக்கம் செலுத்தவும் அனுமதித்தோம் என கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் அக்காலத்திய மன்னர்கள் சரணடைந்தவிதம் குறித்துக் கூறுகிறார்.
சுயராஜ்ஜியம் அடைவதற்கு தீவிர தேசியவாதிகள் மேற்கொள்ளும் பலாத்காரப் பாதையும், மிதவாதிகள் மேற்கொள்ளும் மனுகொடுக்கும் பாதையும் தவறானது என சொல்லும் காந்தி, தன்னுடைய மூன்றாவது பாதையை இந்நூலில் விளக்குகிறார். சாத்விகப் போராட்டம் மட்டுமே இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் வழங்கும் என்கிறார். சாத்விகப் போராட்டம் அப்போது தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளால் பரிசோதிக்கப்பட்டு வந்தது. அந்நிய ஆட்சியாளர்களிடம் மனு கொடுப்பதும், கெஞ்சுவதும் கோழைத்தனம் எனச் சாடும் காந்தி, ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திடவேண்டும் என்கிறார்.
- இதுவரை எங்களிடம் சுரண்டிச் சென்ற பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இனிமேல் அப்படிச் செய்யாமல் இருங்கள்.
- எங்களிடமிருந்து எந்தவித வர்த்தக லாபங்களையும் அடைவதென்ற கருத்தை விட்டுவிடவேண்டும்.
- உங்கள் நாகரிகத்தைவிட எங்கள் நாகரிகம் எவ்வளவோ மேலானது.
- உங்கள் விருப்பப்படி நடக்கவேண்டியவர்கள் நாங்களல்ல, நீங்கள்தான் எங்கள் விருப்பப்படி நடக்கவேண்டும்.
- கேவலமான சுயநலத்தினாலோ அல்லது பயத்தினாலோ நாங்கள் எங்கள் உணர்ச்சியை வெளியிடவில்லை. ஆனால் தைரியமாக இப்பொழுது சொல்லியாக வேண்டியது எங்கள் கடமையாகிறது.
- உங்கள் பள்ளிக்கூடங்களும், கோர்ட்டுகளும் பயனற்றவை என எண்ணுகிறோம். ஐரோப்பிய துணி எதுவும் எங்களுக்கு வேண்டியதில்லை.
நீதிமன்றங்களும், அந்நியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் நம் நாட்டில் அந்நிய ஆட்சியை உறுதிப்படுத்தும் அவமானச் சின்னங்கள் எனக் கூறும் காந்தி, வக்கீல்களும், நீதிபதிகளும் தங்கள் தொழிலைத் துறக்கவேண்டும். ஆளும் அதிகாரவர்க்கத்திற்கு ஆதரவாக, நாட்டு மக்களுக்கு வாய்ப்பூட்டு போடும் கொடிய சட்டங்களை மக்கள் ஏற்க மறுக்கவேண்டும். அப்படி ஏற்க மறுப்பதன்மூலம் அரசு தரும் தண்டனையை ஏற்கவேண்டும் என்கிறார் காந்தி. பொதுவாழ்வில் சத்தியத்தையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பது மிக அவசியம் எனக்கூறும் காந்தி, ஒவ்வொரு இந்தியனும் அவ்வாறு நடந்துகொள்ளும்போது, மறுநாளே அந்நிய ஆட்சியாளர்கள் காணாமல் போவார்கள் என்கிறார்.
நவீனம் குறித்தும், நாகரிகம் குறித்தும், இயந்திரப் பயன்பாடு குறித்தும் காந்தியின் கருத்துகள் இன்றைய தலைமுறைக்கு அதிர்ச்சி தரலாம். ஆனால் உலகின் அனைத்து துன்பங்களுக்கும், நோய்களுக்கும் காரணமாக இருப்பது நவீனங்களும், இயந்திரங்களுமே என்கிறார் காந்தி. பெருகிவரும் இயந்திரப் பயன்பாடுகள் இளைஞர்களின் வேலை வாய்ப்பை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை இன்றைய தலைமுறை கண்கூடாக உணரமுடியும். இவ்வுலகின் சூழலுக்குத் தீங்கு நேராத பொருளாதாரத்திற்கு காந்தி வழிகாட்டினார். பெரும் தொழில்களை அவர் வெறுத்தார். ஒவ்வொரு மனிதனும் தன் கை கால்களுக்கு முழு வேலை அளிக்கும் விதத்தில் உழைத்தால் போதும் என்கிறார்.
நாகரிகம் என்பதை நாம் எப்படி உள்வாங்கியிருக்கிறோம்? பெரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், விமானப் பயணங்கள், சுற்றுலாக்கள், நவீன உடை, உணவு வகைகள், பெரும் நுகர்வுக் கலாச்சாரம் இவைதான் நாகரிகச்சின்னங்களாக இன்றைய தலைமுறை பார்க்கிறது. ஆனால் காந்தி அப்படிப் பார்க்கவில்லை. சத்தியத்தையும், அன்பையும், மத சகிப்புத்தன்மையையும், போதுமான தனிநபர் உழைப்பையும் ஒரு நாகரிகத்தின் அங்கங்களாக காந்தி பார்த்தார். அதைத்தான் அவர் எழுதினார். பெரு வணிகத்தை அவர் எதிர்த்தார்.அதற்கு முக்கியக் காரணம், அதனால்தான் நம்நாடு சுரண்டலுக்கு உட்பட்டு, இறுதியில் அந்நியர்களின் கைகளுக்குப் போய்ச்சேர்ந்தது என்றார். பெருந்தொழில்கள் வரும் காலத்தில் ஒருசிலரை மட்டுமே பில்லியனராக்கும் என காந்தி அறிந்திருந்தார்.
இந்து முஸ்லீம் ஒற்றுமை குறித்தும் காந்தி நூலில் விளக்குகிறார். எல்லா சமயங்களின் அடிப்படைத் தன்மையும் ஒன்றுதான். எல்லாமும் நதிகளைப்போல கடலில்தான் சங்கமிக்கின்றன. இந்து முஸ்லிம் சச்சரவு ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் கிடையாது. முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் இந்துக்களும், இந்து மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்களும் நிம்மதியாகவே வாழ்ந்தனர். ஆங்கிலேயர்களின் வருகை, சிறுசிறு சச்சரவுகளில் ஆங்கிலேயர்களின் நரித்தனமான பஞ்சாயத்து மட்டுமே இந்து முஸ்லிம் சச்சரவை தீவிரம் கொள்ளவைத்தது என்கிறார் காந்தி.
உலகில் அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருப்பதாலேயே பல்லாயிரம் போர்களைக் கடந்து இன்னும் உலகில் மனித இனம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் காந்தி. மேற்கின் நாகரிகத்தை மிகக் கடுமையாகத் தாக்கும் காந்தி, இந்தியப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார். இந்தியர்கள் ஏழையாக, நவீனம் குறைந்தவர்களாக, எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் அன்பும், சத்தியமும் கொண்டு இந்திய நாகரிகத்தை அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்கிறார். நவீன கல்வி, நவீன வேளாண்மை, நவீன போக்குவரத்து, நவீன இயந்திரங்கள், மொழிக்கொள்கை இவை குறித்து காந்தியடிகள் இந்நூலில் தெரிவித்திருக்கும் கருத்துகள், நூறாண்டுகள் கடந்து இப்போது காலாவதியாகிப் போனவையாகத் தோன்றினாலும், இப்புவி மீதான அக்கறை மானுட சமத்துவம், சகோதரத்துவம் செழிக்கவேண்டும் என்ற பேரவா ஆகியன காந்தியடிகளைத் தூண்டிய அடிப்படையாக இருக்கலாம்.
இந்து முஸ்லிம் ஒற்றுமை, பெரும் தொழில்களை வரைமுறைப்படுத்துவது, இயந்திரப் பயன்பாட்டைக் குறைத்து இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பது, மக்களின் கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவது, இயற்கையைப் பாதுகாப்பது, நாட்டின் குடிமக்களை அச்சுறுத்தும் அதிகாரவர்க்கத்தின் கொடும் சட்டங்களை எதிர்ப்பது போன்றவை, நவீனத்தின் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்நூல் வழங்கும் கொடைகள் எனலாம்.
————————————————-