அறச்சீற்றமும் நகைச்சுவையும்
ஊடகங்கள் இன்று அதீதமானப் பணியை செய்து கொண்டிருக்கின்றன.விஷாலுக்கும்,சரத்குமாருக்கும் இடையேயான போட்டியை ஒரு முதலமைச்சர் போட்டிக்கு தேர்தல் நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திய ஊடகங்களின் பணியை அதீதமானது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்?ஒரு சாதாரணமான மனிதனின் சிந்தனையைக் கூட நடிகர் கருணாஸ் பக்கம் திருப்பி விட்டதில் ஊடகங்கள் சாதனை புரிந்திருக்கின்றன. ஆனால் நாட்டின் ஒரு மூலையில் நடக்கும் ஒரு சம்பவத்தை,எடுத்துக்காட்டாக தலித் சிறுவர்கள் இருவர் உயிரோடு கொளுத்தி படுகொலை செய்யப்பட்டதை, ஊடகங்கள்தான் நாடு முழுவதும் எடுத்துச் செல்கின்றன.ஊடகங்களின் உண்மையான அதீதமான பணி என்று இதைத்தான் நாம் சொல்லவேண்டும். நடிகை சச்சுவுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்ததா இல்லையா என்பதில் ஊடகங்கள் காட்டிய தீவிரத்தை ஊடகங்களின் மகத்தான் பணியாக நாம் கருதமுடியாது. நடிகர் சங்கத்திற்குப் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று ரஜினிகாந்த் விடுத்த வேண்டுகோள் தமிழ்த்தேசியவாதிகளை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கும்.ரஜினி என்றாலே உணர்ச்சி மயம் தானே!தமிழர்கள் உணர்ச்சியை வளர்த்த அளவிற்கு சிந்தனையை வளர்க்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? என்ற சிந்தனையும்,அறிவும் தமிழர்களுக்கு மிகக்குறைவுதான்.ஒரு நகரத்தில் ஒரு நகைக்கடையை திறந்து வைக்க நடிகை நயன்தாரா வருகிறார் என்று தெரிந்து வைத்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டத்திற்கு எழுத்தாளர் நயன்தாரா ஷாகல் ஏன் தன்னுடைய சாகித்திய விருதைத் திருப்பி அளித்தார் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை.அதற்கான முயற்சியை தமிழ்ச்சமூகம் எடுத்திருக்கவில்லை.அப்படி எடுத்திருந்தால் இந்நேரம் ஏன் தமிழ் எழுத்தாளர் எவரும் தங்களுடைய சாகித்ய விருதைத் திருப்பி அளிக்கவில்லை என்று கேட்டிருப்பார்கள்.இப்படிப்பட்ட தமிழ்ச்சமூகத்திற்கு இப்படிப்பட்ட எழுத்தாளர்கள்தான் அமைவார்கள்.
தலித் எழுத்தாளர் துரை.குணா தனது ஊரார் வரைந்த ஓவியம் நூலுக்காகத் தாக்கப்பட்டது போல இளம் கன்னட தலித் எழுத்தாளர் ஹூச்சங்கி பிரசாத் இந்துத்வாவாதிகளால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.கல்புர்க்கி கொலை செய்யப்பட்டதை அடுத்து கர்நாடகாவில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்களான கே.எஸ்.பகவான், யோகேஷ் மாஸ்டர்,சேத்தனா தீர்த்தஹல்லி,ஹூச்சங்கி பிரசாத் உள்ளிட்ட எழுத்தாளர்களுக்கும் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்து மதத்தின் சாதிப் படிநிலையை விமர்சனம் செய்து கவிதைப்புத்தகம் எழுதியதற்காகவே ஹூச்சங்கி பிரசாத் தாக்கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாட்டிலும் துரை.குணா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்தான் இருந்திருக்கிறார்.இன்னமும் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.ஆனால் துரை.குணா மீது தொடர்ச்சியாக இன்னமும் வழக்குகள் பாய்ந்துகொண்டேதான் இருக்கின்றன.தனது குடும்பத்தின் நான்கு உறுப்பினர் மீதும் வழக்கு பாய்ந்துள்ள நிலையில் அதற்கான ஜாமீனுக்கு எட்டு நபர்கள் தேவைப்படுவதாகவும்,கையறு நிலையில் நிற்பதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தபோது முற்போக்கு சங்கத்தின் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் என் நினைவுக்கு வந்தது.முற்போக்கு சங்கத்தின் உயர்மட்டத்தலைமையிடம் சாதிப்பாகுபாடு இல்லை என்றாலும் கிளைகளின் அடிமட்டத்தில் நிலவும் கடும் சாதிப்பாகுபாடுகள் குறித்து அச்சங்கத்தின் தலைமைக்கு எதுவும் தெரியுமா?எனக்குத் தெரியவில்லை.இதுவெல்லாம் ஒரு புதுவகையான தீண்டாமையாகத் தான் எனக்குப் படுகிறது. கருத்துத் தளத்தில் காணப்படும் தீண்டாமை இது.
தலித்துகளுக்கு எதிராகவும்,முஸ்லீம்களுக்கு எதிராகவும் தினம் தினம் கக்கப்படும் வெறுப்புணர்வு எங்கிருந்து ஆரம்பமாகிறது?முஸ்லீம்கள்பால் முன்பே ஏற்பட்டிருக்கும் வெறுப்புணர்வு “மோடியின்(எங்களின்) ஆட்சி” தைரியத்தில் வெளிப்படையாக கொட்டப்படுகிறது.அது உள்ளூர் மட்டத்திலும் வெடித்துக் கிளம்புகிறது.தனது உணர்வின் வேர் இந்துத்வாவில் நிலை கொண்டிருக்கும் ஒருவனுக்கு மோடி என்னும் பிம்பம் மிகப்பெரும் தைரியத்தைக் கொடுக்கிறது.மோடியின் மேல் ஏன் இப்படியான பிரம்மாண்டமான பிம்பம் கட்டப்பட்டிருக்கிறது?ஏனென்றால் அவர் குஜராத்திற்கு முன்மாதிரி(குஜராத்தில் நடந்த எல்லாவற்றிற்கும்)!அதனால் அவன் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மிக எளிதாகத் தொடங்கிவிடுகிறான்.மாநிலத்தில் எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. பரீதாபாத்தில் தலித் குழந்தைகள் இருவர் தீ வைத்துக் கொல்லப்பட்டபோது நாய்களின் மீது கல் எறிவதற்கெல்லாம் மத்திய அரசைக் குற்றம் சொல்லக்கூடாது என்று சொன்ன முன்னாள் தளபதி,இந்நாள் அமைச்சர் வி.கே சிங்கிற்கு இந்நிகழ்வின் பின்னாலுள்ள அரசியலும்,சூழ்ச்சியும் தெரியும்.ஆனாலும் அவர் மிக மேலோட்டமாக கருத்து சொல்கிறார்.இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் கொல்லப்படும்போதும்,தாக்குதல் நடத்தப்படும்போதும் ஏன் எந்த இந்துத்வா அமைச்சரும் வெளிப்படையாகக் கண்டிப்பதில்லை? காங்கிரஸ் அரசில் தலித்துகளின் மீதும்,இஸ்லாமியர்களின் மீதும் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று சொல்ல வரவில்லை.ஆனால் காங்கிரஸ் அரசின் அமைச்சர்களும் அதன் பிரதமமந்திரியும் உடனடியாக அந்நிகழ்வுகளைக் கண்டித்தார்கள்.ஆனால் பாஜக அரசின் அமைச்சர்களுக்கு வன்முறையாளர்களைக் கண்டிக்க மனமும் இல்லை,கூடவே வன்முறையை ஏற்படுத்தும் நெருப்பை அவர்களே கக்குகிறார்கள். ஆனால் மோடி தொடர்ந்து மௌனம் சாதிக்கிறார்.எப்பொழுதாவது வாய் திறக்கிறார்.நாட்டில் ஏதேனும் ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் வாய் திறக்கமுடியாதுதான்.ஆனால் பாதிக்கப்படுபவர்கள் தலித்துகளாக,சிறுபான்மையினத்தவராக,பெண்களாக இருக்கும்போது பிரதமரின் பார்வை கண்டிப்பாக இவர்களின் மீது பட்டே ஆகவேண்டும்.அதனைத்தான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புவான்.அறநெறி பட்ட ஆட்சி இப்படியாகத்தான் இருக்கவேண்டும்.
எழுத்தாளர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தலித்துகள்,இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் நேற்று (23.10.15) சாகித்ய அகாடமியின் டெல்லி தலைமை அலுவலகம் முன்பு எழுத்தாளர்கள் வாயில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கையில் பேனா என்னும் ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்?தார்மிகக் கோபம் கொண்ட எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய விருதுகளையும்,பொறுப்புகளையும் எப்போதோ திருப்பி அனுப்பிவிட்டார்கள்.நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் நிலை என்ன என்று அவர்களது வலைப்பக்கங்களில் படிக்கும்போது நிறைய சிரிப்பும்,கொஞ்சம் கோபமும்தான் வருகிறது.ஏன் விருதைத் திருப்பித் தரக்கூடாது என்று பல வியாக்கியானங்களும்,பானிபட் போர் நடந்தபோது நிறைய பேர் இறந்துபோனார்களே,அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதைத் திருப்பித் தரவில்லையே(பாமரன் நக்கல் பாணியில்) என்பது வரை நிறைய ஜோக்குகள் படித்தாகிவிட்டது.ஒருமுறை ஜெயமோகன் வலைப்பக்கத்திற்கு போய் அவருடைய வியாக்கியானத்தைப் படியுங்கள்.இப்படியெல்லாம் ஒரு எழுத்தாளன் இருக்கமுடியுமா என்று நீங்கள் வியந்து போவீர்கள்!.இன்னும் ஒரு படிமேலே போய் அபிலாஷ் என்னும் யுவபுரஷ்கார் விருது வாங்கிய ஒரு எழுத்தாளரின் வியாக்கியானம் என்ன தெரியுமா?ஜெயலலிதாவை எதிர்ப்பதால் அம்மா உணவகத்தில் சாப்பிடாமல் இருக்கமுடியுமா? என்று அவர் மண்டையை உடைத்து சிந்தனை செய்கிறார்.படித்தபோது சிரிப்பு மட்டும்தான் வந்தது. சாகித்ய அகாடமி விருது ஒவ்வொரு இந்திய எழுத்தாளருக்கும் அவருடைய எழுத்தின் அருகதையை நிர்ணயித்து வழங்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் சில சமயங்களில் அவ்வாறு அது கொடுக்கப்படுவதில்லை.ஜெயமோகன் இன்னும் ஒரு படிமேலே போகிறார்.அது பெறப்படும் தன்மையினால்,தான் இனி சாகித்ய அகாடமி விருதுகளையே வாங்கப்போவதில்லை என்றும்,தான் நினைத்தால் அதை எப்போதோ வாங்கியிருக்கமுடியும் என்றும் கூறுகிறார்.இக்கூற்றின் பொருள் விளங்களை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.
விவாதத்தின் மையப்பொருள் இதுதான்.இந்தியா என்ற நாடு மதச்சார்பற்ற(secularism) என்னும் அடிப்படையில் உருவாக்கப்படது.இதன் ஜனநாயகத்தின் அஸ்திவாரமே மதச்சார்பற்ற தன்மையில்தான் உள்ளது.இந்தியா எப்படிப்பட்ட நாடாக இருக்கவேண்டும் என்று நமது முன்னோர்களும்,சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளும் வரையறுத்துச் சென்றிருக்கிறார்கள்.அரசியல் நிர்ணய சபையில் ஏராளமான விவாதங்கள் இது பற்றி நடந்திருக்கின்றன.மதச்சார்பற்ற தன்மை இல்லையெனில் இந்தியா இல்லை என்று உடனடியாக சொல்லிவிடமுடியும்.இந்தியாவின் ஆன்மா என்பது மதச்சார்பற்ற தன்மைதான்.சாதி,இனம்,மொழி,மதம் என்று சொல்லி இந்தியாவின் ஆன்மாவை நீங்கள் குலைத்துப் போட்டுவிடமுடியாது.இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியம் என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டு இங்கு இந்த மதச்சார்பற்ற என்னும் ஆன்மாவின் மேல் நீங்கள் கை வைத்துவிடமுடியாது.மதச்சார்பற்ற தன்மை என்பது எவருக்கும் மதத்தை மறுப்பதல்ல,மாறாக எந்த மதமும்(அல்லது மதத்தின் பெயரால்) ஒரு குடிமகனின் சமூகப் பாத்திரத்தை,அவனது இருப்பை கேள்விக்குள்ளாக்காமல் பார்த்துக்கொள்வது.இன்று இந்தியாவில் மதத்தின் பெயரால்,மூடநம்பிக்கைகளின் பெயரால் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டுக்கொண்டே வருகிறார்கள்.மாட்டிறைச்சி உண்பது என்னும் சமூக இருப்பை மதத்தின் பெயரால் கேள்விக்கு உட்படுத்தி தாத்ரியில் ஒரு படுகொலையையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இந்துத்வா.தலித் குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்துகிறது இந்துத்வா.மேலும் எழுத்தாளர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கையையும் விடுக்கிறது இந்துத்வா.கொல்லப்பட்ட எழுத்தாளர்களுக்காகப் பரிந்து பேசும் எழுத்தாளர்களைக் கிண்டலும்,கேலியும் செய்கிறது இந்துத்வா. மோடி விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் இந்துத்வாவின் கொள்கைத்திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் வடிவம் கொள்ளத் தொடங்கிவிட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவிலும்,வேறு சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் மிக வெளிப்படையாக துப்பாக்கிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.இந்தியாவின் கலாச்சார,பண்பாட்டுக் கேந்திரமான மும்பையில் ஒரு புத்தக நிகழ்வை கூட நிம்மதியாக நடத்துவதற்கு சிவசேனையின் கருணை தேவைப்படுகிறது.அகில இந்தியா முழுவதும் இந்துத்வாவாதிகள் ஒன்றிணைந்து தங்கள் செயல்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் ஆன்மாவான மதச்சார்பற்றத் தன்மையைக் காப்பாற்ற நம்மளவில் ஒரு துரும்பாக இருந்தாலும் அசைத்துப் பார்க்கவேண்டும்.இந்த சிந்தனையின் வழிதான் சாகித்ய விருதுகளை குறைந்தது முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் மட்டுமாவது திருப்பி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. சாகித்ய அகாடமி விருதுகள் ஏன் திருப்பித் தரப்படவேண்டும் என்பதில் உள்ள அற நியாயங்களை ஒவ்வொரு எழுத்தாளனும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எழுத்தாளர்களின் மீதான கொலைகளையும்,தாத்ரி படுகொலைகளையும் சாகித்ய அகாடமி நேற்று(23.10.15) நடந்த கூட்டத்தில் மிக வன்மையாகக் கண்டனம் செய்திருக்கிறது.பிரதமரின் வாயை த் திறக்க வைப்பதற்கும்,சாகித்ய அகாதமி கண்டனம் செய்வதற்கும் அறச்சீற்றம் கொண்ட எழுத்தாளர்கள் தங்களது அங்கீகாரத்தையும்,புகழையும் தியாகம் செய்யவேண்டியிருக்கிறது.இந்த எழுத்தாளர்களின் கோபத்தைத்தான் காலம் அங்கீகரிக்கும்.இவர்களைக் கேலி பேசுபவர்களையும் காலம் நினைவில் வைத்திருக்கும் நகைச்சுவையாளர்களாக…
(உயிர்மை, நவம்பர், 2015)