அன்பின் முத்தமும்,பெண்ணின் தளைகளும்
கலாச்சாரக் காவலர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள்ளும் புகுந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.இனி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய கலாச்சார உடைகள் அவசியம்.ஆண்களுக்கு வேட்டி,சட்டை.பெண்களுக்கு புடவை,சுடிதார் அவசியமாக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன.கலாச்சார உடை என்றால் யாருடைய கலாச்சாரம்?ஏழுமலையானின் கலாச்சாரமா? அல்லது பக்தர்களின் கலாச்சாரமா?.தெரியவில்லை.இந்தியாவின் கலாச்சாரம் என்றால் பிரிட்டிஷார் வருகைக்குமுன்பு வேட்டி சட்டை இல்லை.கோவணமும்,இடுப்பில் ஒரு முழத் துண்டும்தான் 99 சதவீத இந்தியர்களின் கலாச்சார உடை.ரவிக்கையில்லா சேலைதான் 99 சதவீத இந்தியப்பெண்களின் கலாச்சார உடை.மோடியின் வருகைக்குப் பிறகான இந்துத்வா எழுச்சியில் பல்வேறு கலாச்சார தடல்புடல்கள் நடந்துவருகின்றன.தடி எடுத்தவர்கள் இப்போது நிஜமாகவே இந்தியாவின் தண்டல்காரர்கள் ஆகிவிட்டார்கள்.
பொது இடங்களில் ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து இருந்தால் அவர்கள் என்ன மாதிரியான உறவுக்காரர்களாக இருக்கவேண்டும் என்பது தொடங்கி காதலர் தினங்கள்,கல்லூரி விழாக்கள்,காஃபி கடைகள் வரை பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும்,யாருடன் சேர்ந்து அமரவேண்டும்,காஃபி குடிக்கவேண்டும் என்பது வரை கலாச்சார வரையறைகள் சமூகத்தில் வகுக்கப்படுகின்றன.முதலில் இது அவரவர் குடும்பத்திலிருந்து தொடங்கி,பின்னர் கலாச்சாரக் காவலர்களின் எல்லை வரை நீளுகிறது.ஒன்றை நாம் யோசித்துப் பார்த்தால் நகைத்துவிடுவோம்.இனக்குழு சமுதாயங்கள் தோன்றி வளர்வதற்கு முன்னர் வாழ்ந்த நாடோடி மக்களினங்கள் தங்கள் ஆடைகளாக இலைகள் முதலான பொருட்களை கட்டி தங்கள் பிறப்புறுப்புகளை மறைத்தனர்.மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற,அறிவுப் பாய்ச்சல் வேகம் எடுக்க எடுக்க இன்று ஜீன்ஸ் மாட்டிக்கொண்டு மனிதர்கள் வாழ்கிறார்கள்.இலைகளாலான ஆடைகள் காட்டுமிராண்டிகள் உடுத்தும் உடை என்றோ,ஜீன்ஸ் உடைகள் மேலை கலாச்சார உடை என்றோ, அக்மார்க் இந்தியக் கலாச்சார உடை வேட்டியும் சட்டையும் என்றோ நீங்கள் வரையறுத்தீர்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம்,பிற்போக்குத்தனம் வேறு என்ன இருக்கமுடியும்?
காதலர் தினங்களில் சேர்ந்து போகும் ஆணையும்,பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது,கல்லூரி காஃபி ஷாப்களில் புகுந்து தகராறு செய்வது இவையெல்லாம் கலாச்சாரக் காவலர்களின் பொழுதுபோக்குகள்.பெண் என்பவள் ஆணின் போகப்பொருள்.அவனின் சொத்து.அவனின் தனி உடைமை என்னும் உளுத்துப்போன,கெட்டித்தட்டிப்போன தந்தை வழி சமூகக் கருத்துகள் சாதாரண ஒரு மனிதனின் மூளையில் ஏறிவிட்டாலே நிகழும் கொடுமைகளை சொல்லி மாளாது.இக்கருத்துகள் கலாச்சாரக் காவலர்களின் ஆன்மாவில் உள்நுழைந்துவிட்டால் கேட்கவாவேண்டும்?சமீபத்தில் கொச்சியின் காஃபி ஷாப் ஒன்றில் உள்நுழைந்து கலாச்சாரக் காவலர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆனால் மாணவர்கள் அதற்கு எதிர்வினையாக “kiss of love” என்னும் முத்தப்போராட்டத்தை நடத்திக்காட்டினார்கள்.அப்போராட்ட வடிவம் இந்தியாமுழுவதிலும் உள்ள மெட்ரோ நகரங்களின் உயர் கல்வி நிலையங்களுக்குப் பரவி தீவிரமடைந்தது.நவம்பர் 10 அன்று தில்லியின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் எதிரில் திரண்ட 300க்கும் மேற்பட்ட இளைஞர்களும்,யுவதிகளும் முத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐ.ஐ.டியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காறித்துப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்துத்வாவாதிகள். கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக மாணவர்கள் போராடுவது தவறில்லை.போராடத்தான் வேண்டும்.ஆனால் அக்காவலர்களின் கருத்து நிலையை எதிர்த்தப் போராட்டமாக அது இருக்கவேண்டும்.கலாச்சாரக் காவலர்களுக்கு பெண் என்றால் ஒரு போகப்பொருள்.ஆணுக்கு அடங்கிப் போகவேண்டிய ஒரு போதை வஸ்து.அது ஒரு ஆணின் அங்கம்.அவனின் சொத்து.நிலவுடைமைச் சமுதாயத்தின் கருத்துகள் தான் இவை.தந்தைவழி சமூகக் கருத்துகள் தான் இவை.இக்கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளைப் பரப்பவல்ல ஒரு போராட்டவடிவமாக மாணவர்களின் போராட்டம் அமையவேண்டும்.மாறாக இவர்கள் நடத்தும் முத்தப்போராட்டம் பெண் ஒரு போகப்பொருள் என்ற கலாச்சாரக் காவலர்களின் கருத்துகளைத்தான் மறுபடியும் முன்னிறுத்துகிறது.
பொது இடத்தில் ஒரு ஆண் கொடுக்கும் ஒரு முத்தம் அவளது அடிமைநிலையை மீட்க உதவாது.உடல் அங்கங்கள் பிதுங்க அவள் அணியும் உடைகள் அவளது நிலையை மீட்க உதவாது.அழகு நிலையங்கள் அவளுக்கு உதவப்போவதில்லை. கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக முத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் எத்தனை பேர் இந்த உண்மைநிலையை உணருவார்கள்? கல்லூரி மாணவர்களின் முத்தப்போராட்டத்தினால் பரவசமடைந்திருப்பவர்கள் ஊடகக்காரர்கள்தான்.கொச்சி மாணவர்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த போராட்டத் தலைவரைப் பார்த்து ஊடகக்காரர்கள் கேட்டார்களாம்:”இன்று நீங்கள் எத்தனைப் பெண்களுக்கு முத்தம் கொடுக்கப் போகிறீர்கள்?”. இது ஆணும்,பெண்ணும் சேர்ந்து செல்வதை,சேர்ந்து இருப்பதை,சேர்ந்து படிப்பதைத் தடை செய்யும் தலிபானிஸம் மட்டுமல்ல(சமீபத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தனது புகழ்மிக்க நூலகத்தில் மாணவிகள் படிப்பதைத் தடுத்து நிறுத்தியது.நிர்வாகம் சொன்ன நகைப்புக்குரிய காரணம் என்ன தெரியுமா?மாணவிகள் படிக்க வருவதினால் மாணவர்களின் கூட்டம் அதிகமாகிவிடுகிறது). பெண்ணின் வெளியை இல்லாமலாக்குவது.பல நூறு ஆண்டுகள் போராடி அவள் பெற்ற கொஞ்சம் சுதந்திரத்தையும் பறித்து எடுப்பது.சமூகத்தில் அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்க்கும் தாய்வழி இனச்சமூகக்கூறுகளை இல்லாதொழிப்பது. இந்துத்வாவதிகளுக்கு எதிராக தங்களுடைய போராட்டங்களை அவர்கள் வேறு எப்படி வடிவமைப்பது?சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் உள்ள பாசிசத்திற்கு எதிரான சக்திகளை அவர்கள் ஒன்றிணைக்கவேண்டும்.”பாசிசத்திற்கு எதிராக முத்தமிடுங்கள்” என்னும் முழக்கத்தை வைத்து அல்ல,மாறாக இந்துத்வா பாசிசம் அகற்றப்படவேண்டும் என்னும் தீவிர முழக்கத்தோடு.அப்போராட்டத்தளம் மட்டுமே மிகப்பெரும் தளமாக இந்துத்வாவிற்கு எதிரான மிகப்பெரும் தளமாக மாறமுடியும்.அதோடு பெண்ணிற்கு எதிராக இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராக அவர்கள் போர்க்குரல் எழுப்பமுடியும்.பெண் சிசுப் படுகொலை,ஊட்டச்சத்துக் குறைவினால் தினமும் பலநூறு பெண்கள் இறந்துபோதல்,தினமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் மானபங்கப்படுத்தப்படுதல் இப்படி இன்னமும் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே போகும் அளவுக்குப் பல்கிப் பெருகும் பெண்ணுக்கு எதிரான அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராகவும் போராட அத்தளம் மிகச்சிறந்த வாய்ப்பாக அவர்களுக்கு அமையும். ஆனால் இதையெல்லாம் போராட்டக்கருத்துகளாக எடுத்துக் கொண்டால் ஊடகங்களின் கவனம் கிடைத்துவிடுமா என்ன? முத்தப்போராட்டத்திற்குக் கிடைக்குமளவிற்கு?